நாவல் விஸ்வரூபம் – வாசகர் மதிப்புரை

விஸ்வரூபம் நாவல் குறித்து சிங்கப்பூர் வாசகர் ஹேமா எழுதியிருக்கிறார் –

உங்கள் கதையை நான் சிங்கப்பூர் வாசகர் வட்டம் அமைப்பின் படித்ததில் பிடித்தது அங்கத்திற்காக வாசித்தேன். அங்கே நான் பேசியது இது தான்.

பொதுவாய் நான் படிக்கும் கதைகளை இரண்டு வகைகளாய் பிரிக்கலாம்.
1. நான் வாசிக்கும் கதைகள்
2. என்னை வாசிக்க வைக்கும் கதைகள்.

இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த கதைகள் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கும்.

வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து என்னைக் கடத்திச் சென்று வேறொரு இடத்திற்கு, வேறொரு காலத்திற்கு அழைத்துச் சென்று விடும்.
அதில் ஒன்று தான் நான் இன்று பேசப் போகும் புதினம்.

இங்கே பேசுவதற்கான கதையைப்பற்றி யோசித்துக் கொண்டே நூலக புத்தக அடுக்குகளைத் பார்வையல் துழாவிய போது நீல அட்டையுடன் ஒரு குட்டி தலையணை அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது இந்த விஸ்வரூபம். அது தான் நாவலின் பெயர். எழுதியவர். இரா முருகன்.
இதை நான் எடுத்துக்கொண்டதற்கான காரணத்தை யோசித்துப் பார்க்கிறேன்.

முதல் காரணம் இதை எழுதியவர்.

இரண்டு இந்த புத்தகத்தின் அளவு. பொதுவாய் விடுமுறைக்கு வெகேஷன் செல்வோம். பெண்களைப் பொறுத்தவரை vacation என்பது just change of location, அவ்வளவே! (நன்றி இணையம்). அதனால் எங்களைப் பொறுத்தவரை உண்மையான வெகேஷன் என்பது புத்தகம் வாசிக்கும் நேரமே, சிறிய புத்தகம் short vacation, பெரிய புத்தகம் long vacation, இந்த புத்தகம் லாங் வெகேஷன்.

இரா முருகனின் கதைக் களங்கள் வித்தியாசமானவை.
பெரும்பாலானவை மேஜிகல் ரியாலிசம் வகையைச் சேர்ந்தவை. இந்த நாவலும் இந்த வகையைச் சேர்ந்ததே. மேஜிக்கல் ரியாலிஸ கதையை எழுதுவது சோப்பு நுரைக்கும் தரையின் மீது நடப்பதற்கு சமம்.
கவனமின்றி கையாண்டோமென்றால் காலை வாரி விட்டுவிடும்.
சொம்பில் இருக்கும் விசாலாட்சியின் இரண்டு எலும்புத் துண்டுகள் கங்கையில் கரைக்கப் படுவதற்காக பல்வேறு கைகளில் மாறி மாறிச் செல்வது தான் கதை. இக்கதை 1889லும் 1938லும் மாறி மாறிச் செல்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு திருக்கழுகுன்றம், சென்னை, எடின்பரோவை வார்த்தைகளைக் கொண்டு நம் முன் படமாய் தீட்டி வைத்திருக்கிறார் இரா. முருகன். கதாபாத்திரங்கள் பேசும் மொழியும் அந்த காலத்திற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

முதல் சில அத்தியாயங்கள் ஒரு ப்ராமணக் குடும்பம், பிராமணத்திலிருந்து கிருஸ்துவத்திற்கு மாறிய குடும்பம் மற்றும் லண்டனில் இருக்கும் வேதத்திலேறிய திரேஸா என்று மாறி மாறிச் செல்கிறது. இவற்றிற்கு இடையே மகாலிங்க ஐயர் தன் கதையை தன் மனைவிக்கு எழுதும் கடிதத்தின் வழியாகச் சொல்கிறார். இப்படி தனித் தனி கிளைகளாக செல்லும் கதை, காலங்களில் முன்னும் பின்னுமாய் நகர்ந்து, ஒரு புதிர் போல் மெல்ல மெல்ல, தன்னை விடுவித்துக் கொள்கிறது.

இக்கதையின் கதாநாயகர்கள் மூதாதையர்களின் ஆவிகள். மகாதேவனின் அம்மா இரண்டு எலும்புத் துண்டங்களாக இருந்துக் கொண்டு மகன் குடும்பத்தை வழி நடத்துகிறாள். குழந்தையின் சொப்பனத்தில் வௌவால் துரத்துவதைச் சொல்லி அவள் தன் சித்தாடையை நனைப்பதற்குள் வெள்ளம் கொடுக்கச் சொல்கிறாள்.
சூடான அன்னத்தில் தைரைப் பிசைந்து சாப்பிடாதேடா குழந்தை! ரோகம் உண்டாகும்.’ என்கிறாள்.

1899ல் மாட்டுவண்டியில் செல்லும் மேற்சொன்ன மகாதேவன் குடும்பம் திடீரென்று நான்கு அத்தியாயங்கள் கழித்து 1939ல் சினிமா கொட்டகையில் திரையிடப்பட்டிருக்கும் கிருஷ்ணலீலா படத்திலிருந்து இறங்கி வருகிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் நடேசனிடம் உணவும் தண்ணீரும் கேட்கிறது. தன் தாயாரின் அஸ்தி குடம் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொல்கிறது.

இவ்வண்டியில் பயணம் செய்த பர்வதவர்தினி குழந்தையுடன் எடின்பரொ ரயிலில் செல்லும் திரேசாவின் முன் தோன்றி ரொட்டி வாங்கி சாப்பிடுகிறாள்.

தீ விபத்திலிருந்து திரேசாவைக் காப்பாற்றுகிறாள்.

இப்படி மூதாதையர்கள் எதிர்பாரா இடங்களில் வெளிப்பட்டு தங்கள் சந்ததியினருக்கு வழிகாட்டுகிறார்கள்.

உற்று கவனித்திருந்தால் நம் முன்னோர்களின் குரல் நமக்கு கேட்டிருக்குமோ! நாம் தான் தவறவிட்டு விட்டோமோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது அவரது எழுத்து.

இந்நாவலின் எந்தவொரு அத்தியாயத்தையும் எளிதாய் கடந்து போக முடிவதில்லை. சில அத்தியாயங்களைத் திரும்ப வந்து படிக்க வைக்கிறது பின்னால் வரும் சம்பவங்கள். முதல் முறை படிக்கும் போது ஒரு விதமாய் தோன்றும் கதை, இரண்டாம் முறை படிக்கும் போது வெறு விதமாய் தோன்றுகிறது.

விசாலாட்சியின் அஸ்தி கங்கையைச் சேரும் நாளை எதிர்நோக்கி நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன