New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 23 இரா.முருகன்


.

வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து

இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும். அதற்கப்புறம் நீங்கள் உங்களையே புணரப் போகலாம். இப்போது நிற்கவோ, நடக்கவோ யத்தனிக்க வேண்டாம். தயை கூர்ந்து இருக்கையில் அமர்ந்திருங்கள். என் மார்பு வளப்பத்தை முன்னால் உட்கார்ந்து கண் கொட்டாமல் ரசிக்கிற சகல ஆண்களுக்கும் குறி அழுகிச் சொட்டி இற்று வீழட்டும். வாழ்வில் இதுவரை முலை பார்த்திராத ஜன்மங்களா நீங்கள்? எந்தக் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட விலங்குகள்?. சந்தர்ப்பம் கிடைத்தால் என் இடுப்புக்குக் கீழே பிய்த்தும் தின்பீர்கள். உங்கள் இருக்கையின் பட்டைகளை இறுக்கமாகப் பூட்டி வசதியாக அமருங்கள். டாய்லெட்டில் இருந்து வரும்போது கால்சராயை நேராக்காமல் வந்து, சிறுநீர் ஊறிய உள்ளுடுப்பைக் காட்டிக் குமட்ட வைக்க வேண்டாம். உங்கள் பயணம் மகிழ்ச்சியும், பாதுகாப்பும், சுகமானதும் ஆகட்டும். அதன்பின் நாட்பட்ட மலக்குழியில் நீங்கள் தலை குப்புற விழுந்தாலும் நன்றே. உங்களுக்கு சேவை செய்யவே பணி புரிகிறோம். உங்கள் வாய் போல மனமும் நாறுகிறது. நன்றி. செத்துப் போங்கள்.

விமான உபசரிணிப் பெண் புன்னகையோடு ப்யணிகளுக்கு அன்பும் ஆதரவுமான வார்த்தை சொல்லி வைத்தாஸும் வீராவாலியும் இருந்த இருக்கைகளுக்கு அருகே அமர்ந்தாள். சற்றே முன்னால் நகர்ந்து பட்டையை முடிந்து கொண்டாள். அவளுடைய மார்புக்கு வெகு அருகே தலை இருந்த வைத்தாஸ் கண்களைத் தாழ்த்திக் கொண்டதை அவள் ரசிக்கவில்லை என்பதை அவளுடைய கிண்டலான புன்னகை வைத்தாஸுக்குச் சொன்னது.

எக்சிக்யூட்டிவ் இருக்கையில் இருப்பதால் என் மேல் அக்கறை இல்லையென்று காட்டுகிறாயா நபும்சகனே? அல்லது பக்கத்தில் அழகும் திடமுமான பெண் இருப்பதால் பயந்து ஆசையை மறைத்துக் கொண்டாயா?

உங்களுடைய கைத்தறிப் புடவை மிக நேர்த்தியானது.

அவள் வீராவாலியைப் பார்த்து நட்பாகச் சிரித்தபடி நல்ல ஆங்கிலத்தில் சொல்ல வீராவாலி இடியோசை கேட்ட நாகமோ, மின்னலைக் கண்ட மானோ, இன்னும் வடமொழி இலக்கியத்தில் வைத்தாஸ் படித்த வேறேதோ உபமானம் போலவோ மிரண்டு வைத்தாஸின் தோளை அவசரமாகப் பற்றிப் படர்ந்து விமானப் பணிப் பெண்ணைக் கூர்ந்து நோக்கினாள். விமானப் பணிப்பெண்ணின் விரோதமான பார்வை சொன்னது –

உருண்ட தோளும் சிறுத்த இடுப்புமாக, ஈரத் தரையில் உருண்டு கலவி விற்றுக் காசாக்குகிற கஷ்கம் நாறும் தேவடியாளே, என் உடலின் வாடையை அனுபவிக்க இவனை நான் அனுமதித்தால் உன்னைப் பின் சீண்டுவானோ?

மன்னிக்கவும், என் காதலிக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அன் ஃப்ரான்ஸே.

ஓ, அருமை. மூத்திரத்தில் பிரஞ்சு கசியும் தட்டுவாணியை எங்கே பிடித்தாய்?

அவள் சிரித்தபடி விமான ஓட்டிகளின் குகைக்குப் போனாள். தொடர்ந்து வைத்தாஸிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. பதட்டமான ஆண் குரல்.

நான் இங்கே உட்காரலாமா?

சந்தனமும் மற்றும் ஏதுமோ மணக்கும் குரல். அளவாக நறுக்கிச் சீராக்கிய நரைத் தாடி வைத்த மனுஷர் ஒருத்தர் வைத்தாஸின் இருக்கைக்கு அருகே எதிர்பார்ப்போடு இடுப்பு வளைத்து நின்று நைச்சியமாக அவனைக் கேட்டார்.

தாராளமாக உட்காரலாம்.

விமானப் பணிப் பெண் ஒழித்துப் போன இருக்கையில் அமர்ந்தவர் இரு கண்ணும் மூடி ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தார். உடனே கண் திறந்து திருவனந்தபுரம் தானே போகிறீர்கள் என்று வைத்தாஸை விசாரித்தார்.

தில்லியில் புறப்பட்ட விமானம் நாக்பூரில் இறங்கிப் புறப்படும் என்பது நினைவுக்கு வந்த வைத்தாஸ் திருவனந்தபுரம் போவதாகச் சொன்னான்.

வந்து அமர்ந்தவரை வீராவாலி புது மிரட்சியோடு பார்த்தாள். விமானப் பயணம் அசௌகரியமானதும் பயத்தை உண்டாக்குவதுமாக அவளுக்கு அமைந்து போனது. யாரைக் கண்டாலும், புதிதாக யார் குரலைக் கேட்டாலும் படபடப்பும் பயமுமாக அவள் இருந்தாள்.

நான் இருந்த இருக்கைக்கு அடுத்து ஒரு மலேயாக்காரி நடு வயசுப் பெண் இருந்து கொண்டு, கூடவே வந்த சீனப் பெண் பிசாசுகளோடு பேசுகிறாள். அதுகளும் கெக்கெக்கென்று சிரித்துக் களேபரமாகக் கும்மாளம் போடுவதால் நான் தொழில் அபிவிருத்தியைப் பற்றி யோசிக்க ஒட்டாமல் போனது. விமானத்தில் வருவதே எல்லாத் தொந்தரவும் ஒருசேரக் களையத் தானே?

வந்தவர் நேசமாக வினவ, ஆதரித்துச் சிரித்தான் வைத்தாஸ். ரோகியான யாசகனுக்குக் கடமை கருதி முகம் சுளித்துத் தருவது போல் தேநீரும் காப்பியும் எல்லோருக்கும் விளம்பி விட்டு விமானப் பணிப்பெண் போனாள். சாயா குடித்து முடிக்கும் வரை பேச்சு எழாமல் நிசத்மாக இருந்தது விமானம்.

அருகருகே அமர்ந்து தேநீர் பருகியது இறுக்கம் தளர்விக்க முகங்கள் புன்னகை அணிந்தன. கூடப் பறக்கும் போது அரும்பும் நேசம் குரல்களானது

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற தாடிக்காரரின் கேள்விக்கு வெளிநாட்டு அரசாங்கத் தூதர் என்று சொல்லலாமா என்று யோசித்து, வேண்டாம் என்று ஒதுக்கி, நான் இங்கிலாந்தில் இருந்து வரும் ஒரு எழுத்தாளன், ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதுகிறேன் என்று தெரிவித்தான்.

அற்புதம், நானும் எழுத்து சம்பந்தமான தொழிலில் தான் உள்ளேன்.

அவர் உற்சாகமாகத் தெரிவித்தார். புத்தகங்களைப் பதிப்பிக்கும் உன்னதமாக பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் அறிவித்தபடி விமானத்தைச் சுற்றிப் பார்வையை ஓட விட, பெரிய பிளாஸ்டிக் தட்டோடு வந்த விமானப் பணிப் பெண் மரியாதையோடு சிரித்து, நழுவும் முந்தானையை பெருமையோடு நகர்த்திக் கொண்டு அவர் முன்னால் குனிந்து இனிமையாகக் கேட்டாள்.

உங்களுக்கு மேலே வைத்த உங்கள் ட்ரங்க் பெட்டியில் இருந்து ஏதும் எடுத்துத் தர வேணுமா? இவ்வளவு அசிங்கமான மூஞ்சியோடு தானா நீ புத்தகம் விற்பதும் படுத்துச் சுகிப்பதும்? குளிர்ந்த துவாலை தரட்டுமா? உனக்குப் பிறந்ததெல்லாம் மலவாடை அடிக்கிறவைகள் தானே? ஐயா, நீங்கள் தேநீர் குடித்து முடித்திருந்தால், குவளையைத் தருகிறீர்களா? புழு நீ.

அவள் போகும் போது வீராவாலியை ஒரு வினாடி நோக்கிப் போனாள். கலவி உச்சத்தில் வீராவாலி மயில் போல் அகவுவது அவளுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது என்று வைத்தாஸ் நம்பினான். வீராவாலி ஆங்கிலத்தில் காதலும் பிரஞ்சு மொழியில் காமமும் பரிமாறுவாள் என்று விமானப் பணிப்பெண் நினைத்தால் நன்றாக இருக்கும். பெய்ஸ ஃப்ரான்ஸெ எ ஆங்க்லே பெய்ஸே.

நேற்று வீராவாலியைத் தேடி அலைய வேண்டியில்லாமல், பழைய தில்லித் தெருவில் வைத்தாஸ் காலடி எடுத்து வைத்ததுமே கிடைத்தாள். சாந்தினிசௌக் கண்டேவாலா மிட்டாய்க் கடையை அடுத்து நீண்ட வீதியில் கழைக் கூத்து நடந்து கொண்டிருந்த சாயங்கால நேரம் அது. கூட்டம் விலக்கி நடந்து மிட்டாய்க்கடை வாசலில் வேடிக்கை பார்த்தபடி தோளில் குரங்குக் குட்டியோடு வீராவாலி வைத்தாஸுக்குத் தட்டுப்பட்ட இனிய பொழுது.

அவனை எதிர்பார்த்திருந்தாள். எப்படியோ அவன் வருகை தெரிந்திருந்தது. விலகி நின்றிருந்ததே விட்டு விலகி வெகு தூரம் போக ஆயத்தமாகத் தான்.

போகலாமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் வைத்தாஸ். மெழுகு நாறும் அழகான காது. அவன் காமத்தில் அந்த வாடைக்கும் இடம் உண்டு.. மிட்டாய்க் கடை இனிப்புகளைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாலோ என்னமோ அவளுடைய உமிழ்நீர் அவன் தோளில் படிய, வைத்தாஸ் கைக்குட்டை எடுத்து அவள் வாயைத் துடைத்து விட்டான். யாரும் பார்க்கவில்லை. மற்றவர்கள் ஏதும் பார்க்காமல் ஏதும் கேட்காமல் ஏதும் பேசாமல் சூழலை உருவாக்கித் தத்தம் போக்கில் உறைந்து நிற்கப் பணிக்கப் பட்டவர்கள்.

வைத்தாஸ் வாங்கி வந்த ஒரு இனிபபைக் கவ்வி எடுத்துக் கொண்டு குரங்குக் குட்டி வீராவாலியின் தோளில் இருந்து குதித்து ஓட ஒரு சுமை விலகிய நிம்மதி வைத்தாஸ் முகத்தில்.

குழந்தையோடு வந்தவளைக் காமுற்று அந்த சிசுவை விலக்கி அவளைக் கவர்ந்து வந்து மடியில் முகம் நோக்கிக் கிடத்திக் கால் பரப்பிச் சதா சுகிக்கும் கழிசடை தானே நீ?

யாருக்கோ குவளையில் குளிர்ந்த நீர் எடுத்துப் போன விமானப் பணிப்பெண் கேட்டபடி போனாள். ஆமா, அதுக்கென்ன என்று வெட்கமே இல்லாமல் சொன்னான் வைத்தாஸ். அவன் தோளில் வாடை உயர்த்திக் கோழை புரளும் கட்டி தட்டிய எச்சில் வழிய வீராவாலி தூங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் மெல்லக் கனைக்கும் ஒலி. அடுத்த உரையாடலுக்கு ஆயத்தம் அது.

அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்தாஸிடம் ஏமாற்றம் தொனிக்கும் குரலில் சொன்னார் – என்ன மாதிரியான புத்தகங்களை நான் பதிப்பிக்கிறேன் என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன்.

அவன் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து நின்று மேலே வைத்திருந்த டிரங்குப் பெட்டியைத் திறக்க உள்ளே அடைத்து வைத்திருந்த புத்தகங்கள் வைத்தாஸ் தலையில் ஒன்றிரண்டாக விழுந்தன. குயில் சத்தமும் குருவிகள் திணை பொறுக்கும் போது அமர்த்திய குரலில் விவாதிக்கும் ஒலியுமாக நிறைந்தது.

ஒரு புத்தகத்தைத் தரையில் விழும் முன் தாங்கிப் பிடித்து வைத்தாஸ் புரட்டிப் பார்த்தான். கெட்டித் தாளில் நர்ஸரி ரைம்கள் ஆன குழந்தைப் பாட்டுகள் அச்சடித்துப் பிள்ளைகளுக்கான ஓவியங்களும் பளிச்சிட்ட புத்தகங்கள் அவை. குதித்தாடுகிற குழந்தைகளும் மிருகங்களும் சிரித்தன.

ஏனோ வைத்தாஸுக்கு ஏமாற்றமாகப் போனது. அவன் எதிர்பார்த்தது குழந்தைகளை இல்லை. என்றாலும் மரியாதைக்காக அந்தப் புத்தகங்களின் விற்பனை பற்றிக் கேட்டு வைத்தான். விமானத்தில் போகிற பப்ளிஷர். நிச்சயம் நன்றாகத் தான் விற்கும். வீடு வீடாக, பள்ளிக் கூடத்தில் வாங்கச் சொல்லிக் கட்டாயப் படுத்தி, சினிமா நட்சத்திரங்கள் கையில் பிடித்துக் கொண்டு பத்திரிகையில் புகைப்படம் போட்டு., ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் இலவசம் என்று அறிவித்து, குலுக்கல் நட்த்தி பரிசு கொடுத்து. எப்படியோ இந்தப் புத்தகங்கள் விற்பனையில் பிய்த்துக் கொண்டு போகும்

இந்தப் புத்தகங்களில் ஒரு புதுமை இருக்கிறதே, கவனித்தீர்களா என்று கேட்டார் பக்கத்து இருக்கை தாடிக்கார பப்ளிஷர்.

பக்கங்கள் கொஞ்சம் கூடுதல் கனத்தோடு இருக்கின்றன. படங்கள் அடர்த்தியான வர்ண மசியில் அச்சடிக்கப் பட்டு இன்னும் அக்ரலிக் வாடை பலமாக மூக்கில் முட்டிக் கொண்டிருக்கிறது. சற்று பிசுபிசுப்பும் படத்தில் உண்டு. மற்றப்படி வேறுபட்டு எதுவும் இல்லையே?

நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், தெரியுமே.

தொலைந்து போன பொம்மை கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கும் குழந்தை போலச் சொன்னார் பப்ளிஷர். அவர் வைத்தாஸின் கையில் இருந்த குழந்தைப் பாட்டுகள் அச்சடித்த புத்தகத்தைப் பிடுங்கிப் புரட்டி, கேலண்டர் படம் போட்டிருந்த பக்கத்தின் நடுவில் கை வைத்து அழுத்தினார்.

புத்தகத்தில் இருந்து குயில் கூவும் சத்தம் எழுந்தது. செப்டம்பர், ஏப்ரல், ஜூன், நவம்பர் மாதங்களில் முப்பது நாட்கள் உண்டு என்ற உண்மையைத் தெரிவிக்கும் பாடலின் முதல் அடியைச் சற்றே நகல் எடுத்த குயில் குரல்.

இந்தப் பாட்டுகளோடு ஓவியங்களையும் பார்த்தபடி எழுத்தைக் கவனமாகப் படிக்கும் குழந்தைகள் விரைவில் மாதங்களின் பெயரையும் நாள் கணக்கையும் தெரிந்து மனதில் இருத்திக் கொள்வார்கள். அது தானே?

சுவாரசியமின்றி தனக்குள் முனகினான் வைத்தாஸ்.

எங்கிருந்து தான் இப்படியான ஆட்கள் கிளம்பி உலகைச் சித்தரவதைப் படுத்த வருகிறார்கள் என்று வைத்தாஸுக்கு வியப்பாக இருந்தது. அவன் வாழ்நாளில் முதல் முறையாக இப்படி நர்சரி பாட்டுப் புத்தகங்களைப் பற்றி ஆர ஆமரக் கலந்து பேசி மிகையாக, வெகு மிகையாகப் பாராட்ட வேண்டி வந்திருக்கிறது. மூச்சுக் காற்றில் சந்தனமும், மற்றதும் மணக்கும் பப்ளிஷர் இந்த நிமிடம் மூச்சை நிறுத்திக் கொண்டால் கர்த்தருக்கு தோத்திரம் பல.

குழந்தைப் பாடல்கள் பற்றி ஒரு குழந்தையிடம் மகிழ்ச்சியோடு நிகழ்த்த வேண்டிய உரையாடலை, சித்தம் தடுமாறிய முதியவரோடு அன்பும் நட்பும் செயற்கையாகக் காட்டித் தொடர வேண்டிப் போனது துரதிருஷ்டம். அந்நிய நாட்டின் நல்லெண்ணத் தூதரான தன்னால் கடைப்பிடிக்க வேண்டிய கடமை அது. நினைவுகூர, வைத்தாஸை மரக்கட்டையாகப் பாவித்துக் கடந்து போன விமானப் பணிப்பெண் அவனை அலட்சியமாகப் பார்த்துச் சொன்னாள் –

அந்தச் சிறுக்கியை எழுப்பி உட்கார்த்தடா கழுவேறி. இன்னும் பத்து நிமிடத்தில் சுவையான உணவு பரிமாறப்பட இருக்கிறது. நாய் மாதிரி தின்னுட்டு அபான வாயு விட்டபடி இங்கேயே புரளு. அசைவ உணவு தானே உங்களுக்கு? நினைவில் வைத்திருக்கிறேன் ஐயா. நாலு மணிநேரம் பொருத்திக் களைந்த என் ஈர நாப்கின் உறிஞ்சிய உதிரத்தில் புரட்டிய கோழி மாமிசத்தை நீ ரசித்துச் சாப்பிட எடுத்து வருகிறேன். உண்டு தூங்கி இறங்கு.

அசைந்து போகும் அவள் பின்புறங்களையே பார்த்தபடி இருந்தான் வைத்தாஸ். மிக அழகான பிருஷ்டங்கள் என்று அவன் காதில் சந்தனம் மணக்கச் சொல்லிச் சிரித்தார் பப்ளிஷர். அவர் வாயில் வீசிய மற்ற வாடை கிராம்பு மெல்லுவதால் வந்தது என்பது வைத்தாஸுக்குப் புலப்பட்டது.

அடங்காத குதிரை போல மதர்த்த குஜராத்தி இவள். இவளை நிற்க வைத்து.

அடுத்த இருக்கை பப்ளிஷர், அவர் வயதுக்குப் பொருந்தாத விடலைத் தனத்தோடு. குறிப்பிட்டார்.

குஜராத் மாகாணத்தில் கிராமப் புறங்களில் இம்மாதிரி பின்புறம் பெருத்த பெண்கள் ஏராளம் உண்டு. அவர்களுக்குக் கிளர்ச்சி தருவது எது தெரியுமா? அவர் விடாமல் கேட்டார். வைத்தாஸ் வீராவாலியைப் பார்த்தான். இன்னும் உறக்கம் தீரவில்லை.

எதிர்பார்க்காத விதமாக தன் மடியில் வைத்திருந்த நர்சரிப் பாடல்கள் புத்தகத்தைச் சுட்டிக் காட்டி, இதுதான் கிளர்ச்சியடையச் செய்வது என்றார். வைத்தாஸ் புரியாமல் பார்த்தான்.

ஆமாம், குழந்தைகளுக்கு நர்சரிப் பாடல் கற்பிக்கத்தான் இதை அச்சிட்டுக் கொண்டு வந்தது. ஆனாலும், வாங்கிய யாரோ பெற்றோர் தலையணக்கு அடியில் வைத்துப் படுத்துக் கலவி செய்த போது இந்தச் சத்தங்கள் எழுந்து அவர்களின் இன்பத்தைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்து வெகுவாக, ஒரு மணி, இரண்டு மணி நேர அளவு நீடித்ததாகத் தகவல். அது பரவ், எல்லாக் கிராமங்களிலும் சிறு பட்டணஙக்ளிலும் இந்தப் புத்தகங்களுக்கு நிறைய கிராக்கி. குழந்தைகள் படிக்க வாங்கித் தர நினைப்பவர்களுக்குப் பிரதிகள் கிடைக்காமல் போகத்துக்குத் துணை போகின்றன இவை எல்லாம். விலையை முதலில் வைத்து விற்றதற்கு மேல் பத்து மடங்கு ஏற்றினாலும் இன்னும் விற்பனை சூடு பிடித்தே இருக்கிறது.

வைத்தாஸ் ஏதும் பேசாமல் அவருடைய கையைப் பற்றிக் குலுக்கினான். விமானம் இறங்கப் போகிறது என்று அறிவித்த விமானப் பணிப்பெண் தொடர்ந்தாள் –

உங்கள் நாள் நல்லதாக இருக்கட்டும். அட்டுப் பிடித்த பிருஷ்டங்களோடு இனியும் இந்த விமானத்தில் வந்து விடாதே நாறப் பிணமே. உங்களை மிக விரைவில் அடுத்த பயணத்தில் எதிர்பார்க்கிறோம். இந்தா, கடைசி முறையாக பார்த்துக் கொள். வனப்பான முலை இப்படித்தான் இருக்கும். தரையில் கால் பட்டதும் தேடிப் போய் அழுக்கு பஞ்சும் நைந்த கச்சும் கிட்டட்டும் பன்றிகளே.

பப்ளிஷர் விமானத்தில் இருந்து இறங்கும் போது வைத்தாஸிடம் சொன்னார்-

பாடல்களை ஆண் பெண் குரல்களில் பாடி, புத்தகத்தில் ஓவியங்களுக்குள் பொதிந்து வைக்க வேலை நடக்கிறது.

இங்க்லீஷில் பாடிக் காமம் செய். ராத்திரி அத்தாழம் அப்புறம் தான்.

ஓட்டல் அறைக்குப் போனதும் வைத்தாஸைக் கட்டிலில் வீழ்த்தி மேலே படர்ந்து கீழுதட்டைக் கவ்வியபடி வீராவாலி அவனுக்கு உத்தரவிட்டாள். அவன் தலையணைக்கு அடியில், சந்தன நெடிக் கிழவன் அன்பளித்துப் போன பாட்டுப் புத்தகம் நசுங்கிக் கிடந்தது.

பாட்டு பாடணுமா? என் குரல். நல்லா இருக்காதே.

பரவாயில்லே. இங்கிலீஷ்லே பாடு. இங்கிலீஷ்லே சுகம். அதான் வேண்டியது.

அவனும் சரி என்று சொல்லி, ஷேக்ஸ்பியரின் நான்காம் சொனட்டை உரக்கப் பாடியபடி அவளை அணைத்து ஊடுருவி வருடினான். அவளிடம் நர்சரிப் பாடல் புத்தகம் பற்றிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று பட்டது.

இது இன்னும் உலர வைக்குது. உலர்ந்தால் காமம் இல்லை என்றாள் அவள் கால்கள் சேர்த்து.

வேறே பாட்டு பாடறேன்.

இதே மாதிரின்னா வேணாம்.

அர்த்தம் சொல்றேன். உலராது.

நான் கேக்கறது வேறே பாட்டு.

ஏய் வலிக்குது கையோட வந்துடும். விடு. நீ கேட்ட படிக்கே பாடறேன்..

அவன் என்ன பாட என்று யோசித்தபடியே கண் மூஉடி இந்த அபத்தமான நிமிடத்தின் இனிமையை அனுபவித்தான்.

பாட மாட்டியா?

அவள் மேலே திரும்ப அடர்ந்து மிரட்டினாள்.

எனக்குத் தூக்கம் வருது. ரெண்டு நாளா முழிச்சிருந்த களைப்பு. பிரயாணக் களைப்பு.

சொல்லியபடி வைத்தாஸ் கண் மூடிக் கிடக்க முற்பட, பிசாசு போல அவனை உருட்டிச் சீரழித்துக் தாழக் கை நீட்டிக் குவித்து இறுகப் பற்றிக் கொண்டு சிரித்தாள். அவள் விரல்களின் வலிமையில் திணறிப் போனான் வைத்தாஸ். இதுவும் வேண்டித்தான் இருக்கிறது. எழுந்திருக்க மாட்டேன் என ஒரு அடம்.

அவள் குதித்துத் தரைக்கு வந்தாள். கொண்டு வந்திருந்த சுருக்குப் பையில் இருந்து அட்ரந்த பச்சை நிறத்தில் திரவம் நிரப்பி இருந்த குப்பியை எடுத்துத் திறந்தாள். மழை ஈரம் உலராத மயில் இறக்கை வாடை அறையெங்கும் பரவியது.

வைத்தாஸ் சங்கடமாக முகத்தைச் சுளித்தபடி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான்.

நாற்றமும் காம ரசம் அனுபவிக்க அவசியம் தான். எனில் நாற்றம் மட்டுமா முயங்கி இணை சேர்தலாகும்?

இல்லை.

தன் போக்கில் அவன் தலை ஆட, கை நிறையக் குவித்து எடுத்து வந்த அடர் பச்சைத் திரவத்தை வைத்தாஸின் அரைக்கட்டில் சூடு பறக்க அழுந்தத் தேய்த்தாள் வீராவாலி.

இனி நீ அடங்கப் போறதில்லே.

அவன் கன்னத்தில் முத்தமிட்டு வசீகரமாகச் சிரித்தாள்.

கண் இருண்டு வந்தது வைத்தாஸுக்கு. படுக்கைக்குப் பக்கத்தில் நிற்கிறான் அவன். தரையில் மண்டியிட்டு அமர்ந்து பக்கத்தில் தைல சீசா தலை குப்புறக் கவிழ்ந்து அடர் பச்சை எண்ணெய் தரையில் படர, யாரோ எங்கோ யாரோடோ படுக்கையில் படுத்திருக்கிறான். வைத்தாஸின் அப்பன் வரதராஜ ரெட்டி இல்லையோ அவன்? மகாலிங்க அய்யன் அந்த ஆள் என்கிறாள் வீராவாலி. ரெண்டும் ஒண்ணு தான் என்கிறான் மகாலிங்க அய்யன். கொண்டித்தோப்பு வைத்தியன் காய்ச்சிக் கொடுத்த மயில் றக்கைத் தைலம் இது என்று தரையில் படர்ந்திருந்த பச்சைத் திரவத்தைக் காட்டுகிறாள். இறந்த மயில்களின் வாடையும் சாவின் வாடையும் அதீதமாக வீசுகிறது. சுக்கிலம் அடர்ந்து, வீட்டுக்காரியோடு போகம் செய்து வம்சம் விருத்தி செய்ய வழி வகுப்பது மயில் றக்கைத் தைலம் என்று முணுமுணுத்தபடி மகாலிங்க அய்யன் படுக்கையில் இருந்து இறங்கி வருகிறான். கௌபீனம் முழுக்க எண்ணெய் வழியத் தரையில் கொட்டிய அந்த மயில் றெக்கைத் தைலத்தை வழித்து அரைக் கட்டில் பூசிக கொள்கிறான். அடே வைத்தாஸே, நீயும் இந்த ஸ்திரியும் இங்கே இருக்க வேணாம். வாசல் திண்ணையில் படுத்து நித்திரை போங்கள் என்றபடி கட்டிலில் மறுபடி ஆரோகணிக்கிறான். பக்கத்தில் படுத்திருந்த சாது ஸ்திரியை ஆலிங்கனம் செய்ய அவள் எழுந்து உட்கார்கிறாள். தீபத்தைத் திரும்பப் பெருக்கி அவன் அரைக்கட்டை உற்றுப் பார்க்கிறாள்.

செத்து அழுகிக் கொண்டிருக்கும் ஏதோ ஜந்துவை உம் இடுப்பில் கட்டி வைத்திருக்கிறீரா? இந்த துர்வாடையை நான் எப்படி சகித்துக் கொள்வது. இடுப்புத் துணி அங்கேயே இருக்கட்டும். உருவ வேண்டாம். தற்போது எனக்கு உடம்பு முழுக்க வலியெடுப்பதால் என்னை சிரமப்படுத்தாதீர்.

அந்த ஸ்திரி கோரைப் பாயைச் சுருட்டிக் கொண்டு போய், கரப்பான் ஊரும் மூலையில் அடுத்து நித்திரை போக வைத்த கண் வாங்காமல் தரையில் அம்ர்நது பார்க்கிறான் வைத்தாஸ். வீராவாலி மோகம் ஏறி மிதந்து வரும் குரலில் சிரிக்க அவளை மடியில் சரிக்கிறான் குறி விரைத்த வைத்தாஸ்.

கண்ணயர வைக்கும் அசதி. கைகள் வீராவாலியின் உடலெங்கும் ஊர்ந்து கொண்டிருக்க, அவன் மகாலிங்க அய்யனாகிறான். வீராவாலி மெலிந்து கருத்து, ஸ்தனங்கள் அபாரமாகப் பெருத்த கன்யகை ஆகிறாள். சிமிட்டித் தரை குன்றுப் பிரதேசத்துப் பாறையாகச் சூடேறிக் காய்ந்து தகிக்கிறது.

தெருவில் போகும் பார வண்டிகளின் லாந்தர் வெளிச்சம் சன்னமான வெளிச்ச நறுக்கை உள்ளே பூசிப் போகிறது. வெளிச்சத்தில் அந்தக் கன்யகையை ஒரு வினாடி உற்றுப் பார்க்கிறான். சதைப் பிடிப்பு இல்லாத முகமும் குச்சி குச்சியான கையுமாக இருந்தாலும் அவளுக்கு வேண்டிய தசையை எல்லாம் உருட்டி மார்பில் வைத்துத் திணித்திருக்கிறது. இவ்வளவு பெரிய ஸ்தனங்களோடு யாரையும் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம் என்பதும் நிச்சயம் இல்லை.

அவளைத் திரும்பக் கீழே கிடத்தி உதட்டில் வலுக்கட்டாயமாக முத்துகிறான். அந்த ஸ்தனங்களையும் ஒருசேர அணைத்து அழுந்த முத்தமிடுகிறான்.. அவள் திமிறத் திமிற, அவள் காலுக்கு வெகுமேலே சேலையை வழித்து உயர்த்துகிறான். தன் வஸ்திரத்தையும் களையத் தொடங்குகிறான். அதற்குள் அந்த ஸ்தனங்களை இன்னொரு முறை சேர்த்து அணைத்துக் கொள்ள வேணுமென்ற வெறி கட்டுக்கடங்காமல் போகிறது.

கைகளை விரித்தபடி குனிந்து அவற்றை நெருங்கும்போது தாழப் பறக்கும் றெக்கைகளின் சத்தமும் மயில் றெக்கை எண்ணெய் வாடையுமாக அந்த இடமே மாறிப் போகிறது. அழுக்கான கறுத்த சிறகுகளோடு ரெண்டு கழுகுகள் அங்கே இங்கே என்று சுற்றும் பறந்து அவள் தோளில் வந்து அமர்கின்றன. அவனுடைய கண்களை அவை குறி வைக்க, அலறி எழுந்து அந்தாண்டை ஓடுகிறான்.

அறை வாசலில் நின்று திரும்பிப் பார்க்கிறான். அந்த ஸ்திரியின் மார்பில் ஸ்தனங்களுக்கு பதிலாக இரண்டு கறுத்த கழுகுகள் முளைத்திருக்கின்றன.. அவை அங்கே புடைத்துக் கொழுத்து அமர்ந்து அவனையே நோக்குகின்றன. சுட்டெரித்துக் கொல்கிற கனலை அந்த விழிகளில் காண்கிறான்.. மனதை ஆக்கிரமித்த காமமும் மோகமும் போன இடம் புரியவில்லை. உயிர் தப்பும் ஆசை மட்டும் பலமாக மிச்சம் இருந்தது.

வைத்தாஸ் துள்ளி எழுந்து விளக்கைப் போட அறைச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய வௌவால் கருத்த சிறகுகள் நெடியடிக்க வீசி ஜன்னல் வழியே பறந்து போனது. வெறுமையாகக் கிடந்தது கட்டில்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன