New novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 21 இரா.முருகன்

வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமன செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது.

மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது. துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் சத்தமெழக் காலணிகளைத் தரையில் அறைந்து கூடவே வணங்கினார்கள்.

தினசரி நடக்கிறது தான் இதெல்லாம். குழந்தைகள் நீங்கலாக, இவர்கள் எல்லோரும், அரசாங்கத்தால் பணியமர்த்தப் பட்டவர்கள். குழந்தைகள் பெற்றோரோடு வருகிறவர்கள். அவர்களுக்கான தொகையோடு காலை உணவையும் அரசாங்கம் வழங்குகிறது. பெரியவர்களுக்கு காப்பி மட்டும் வழங்கப்படுகிறது. வாசலுக்குப் போன ஒரு அபூர்வ சந்தர்ப்பத்தில் நந்தினி இந்தத் தகவல்களைக் கேட்டுச் சேகரித்து வந்தாள்.

தொடர்ந்து மாறி மாறி வந்த பதினேழு அரசுகளின் ஆட்சியின் போது கடவுளின் மூத்த சகோதரி என்று நந்தினியை மரியாதை செய்து உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது மட்டும் நிலையாகத் தொடர்ந்தது. அவளுடைய அற்புதச் செயலாகச் சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள் ரேடியோ மூலமும், பத்திரிகை மூலமும் நாட்டு மக்களை அடைந்த வண்ணம் இருந்தன. அந்த நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட அடியார்கள் அவளுக்கு நாடு முழுக்க உண்டு என்பதும் அவர்கள் அரசுப் பணியில் இல்லாமலேயே அவள் வீட்டு வாசலில் நின்று அவளை வாழ்த்தி வணங்க ஒடி வருவார்கள் என்பதும் உண்மையே.

ஆனால், அவர்கள் யாரும், வார நாட்களில் காலை நேரத்தில் இப்படிக் காத்து நின்று வாழ்த்த முடியாத நிலையில் இருக்கப்பட்டவர்கள். செய்கிற வேலை காரணமாக அல்லது குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியிருப்பது கருதி அவர்கள் வார நாட்களைத் தவிர்த்து, வார இறுதியில் பங்குபெற முன்வருவார்கள் என்று பத்து நாள் மட்டும் நிகழ்ந்த ஓர் ஆட்சியின் போது அதன் ராணுவத் தலைவர் சொன்னார்.

ஆனால் வார இறுதி ஞாயிறுகளில் இந்த மரியாதை செலுத்துதல் கிடையாது. கடவுளின் சகோதரி என்றாலும் ஞாயிறு ஞாயிறு தானே? உறங்கி ஓய்வெடுக்கவும், எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெத்தனமாகச் செயல்படவுமான அந்தத் தினத்தில் ஆராதகர்களை அழைப்பது முறையாக இருக்காது என்று கருத்துச் சொன்ன அந்த ராணுவத் தலைவர் மறுநாள் காலை வீட்டுக் கழிவறைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதைச் செய்து, அவர் மனநிறைவோடு இறக்க மனிதாபிமானத்தோடு வழி செய்த காரணத்தால், அடுத்து வந்த ஆட்சியில் அந்தத் துப்பாக்கிக்காரன் மன்னிக்கப் பட்டு விடுதலையானான். .

எனின், தற்போது, கடந்த ஒரு மாதமாக நாட்டின் அரசியலில் ஒரு வலுவான மாற்றம் உண்டாகி இருக்கிறது. வல்லரசுகள் இங்கே நிலையான ஆட்சிக்குத் துணை நிற்பதாக உறுதி சொல்வதோடு பாதுகாப்புக்காகப் படைகளையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ஏற்பாடு இன்னும் பத்து வருடமாவது நிலைக்கும் என்று மந்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். அவர்களுடைய தொழிற்சங்கத்தை அங்கீகரித்தால் இன்னும் தெளிவாக இதைச் சொல்ல முடியும் என்று நந்தினியைப் நேற்றுச் சந்தித்தபோது அவர்கள் தெரியப் படுத்தினார்கள். அவள் செய்ய வேண்டியவற்றில் இந்த அங்கீகாரமும் ஒன்று.

பத்து வருடத்துக்குப் பதிலாக இருபது வருடம் இங்கே நிலையான ஆட்சி இருக்கும் என்று தெரிந்தால் நந்தினிக்குச் சொந்த எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக, ஆழமும் அகலமுமாகத் திட்டமிட முடியும்.

குனிந்து வளைந்து காப்பி ப்ளாஸ்கை சிறிய மேஜையில் வைத்துப் போனாள் பணிப்பெண். இந்தப் பானம் பரிசோதிக்கப்பட்டது என்று அறிவித்தபடி பின்னோக்கி நடந்து வணங்கிப் போன பரிசோதனை அதிகாரியைத் தொடர்ந்து வந்த ஊழியர் பானம் அருந்த நல்ல நேரம் என்று அறிவித்துப் போனார். நந்தினி காப்பியைக் குவளையில் சரித்து அருந்த ஆரம்பித்தாள்.

அறை வாசலில் மரியாதையோடு நின்ற வீட்டு நிர்வாக ராணுவ அதிகாரி அவள் பார்வை தன்மேல் படப் பொறுமையாகக் காத்திருந்தார். என்ன என்ற கேள்வியை நந்தினி பார்வையில் கேட்க அவர் சொன்னார் –

எங்கள் அன்பு அன்னையும் நாங்கள் விசுவாசிக்கும் மதங்கள் கடந்த கடவுளின் மரியாதைக்குரிய மூத்த சகோதரியும், ஆயிரம் ஆண்டு நிறைவாழ்வு வாழ்ந்த பெருமைக்குரியவரும், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து அருள வந்தவரும், இந்தியப் பறவை பாடி ஆடும் முகப்பு கொண்ட மாளிகையில் வசிப்பவரும், எதிரிகளுக்குக் காட்டு எறும்புகளின் புற்று போலப் பயமூட்டக் கூடியவரும், அடியவர்களுக்கு செம்மறியாட்டின் கல்லீரலைப் பக்குவமாகச் சமைத்த உணவு போல் ஆனந்தமும் வலிமையும் அளிப்பவருமான நாட்டின் உன்னதத் தலைவர் இதைக் கேட்க மனம் கொண்டு செவி தர வேணும்.

சொல்லு என்பது போலக் கையைக் காட்டினாள் நந்தினி. இந்த மெய்க்கீர்த்தி இவர்களுக்கு கரதலப் பாடமாகச் சொல்லத் தெரிந்த பிறகு தான் நந்தினி வசிக்குமிடத்தில் இவர்களுக்குப் பணி ஒதுக்கப் படுகிறது. மாதம் ஒரு முறை இந்த வரிகள் அங்கங்கே மாற்றப்பட்டு, புது வரிகள் சேர்க்கப்பட்டு, பழையவை நீக்கப் பட்டு ராகத்தோடு சொல்ல இவர்களுக்குப் பயிற்சி தர அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் காலையில் வாத்திய இசையோடு பள்ளி எழுப்பவும் வருகிறவர்கள், நந்தினிக்கு எல்லாம் தெரியும்.

எனில் கேட்டருளுக. ஒன்பது மணிக்கு ராணுவத் தலைவர் உங்களைச் சந்திக்க வருகிறார். நேரம் உசிதமல்லாத பட்சத்தில் கருணை கூர்ந்து அறிவிக்க வேண்டும்.

வரச் சொல்லு என்று சலிப்போடு கை காட்டி அவள் குளிக்கக் கிளம்பினாள். எல்லா தினமும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? ஞாயிறன்று மொத்தம் ஐந்து பேர் மட்டுமே காவலுக்கு இருப்பார்கள். வழக்கம் போல் பதினைந்து இல்லை. ஏற்கனவே செய்து வைத்த உணவையோ, உணவு விடுதியில் அதிகாரிகளின் நேர் பார்வையின் கீழ் சமைத்த உணவையோ உண்ண அவளுக்கு இயலும். அதாவது அவள் விருப்பப் பட்டால் காலடியில் வைத்து வணங்கிப் படைக்கப்படும். அந்த உணவும் எச்சில் செய்யப்பட்டதாக இருக்கும். உணவுப் பரிசோதனை அதிகாரி வீட்டுக்கு உணவை எடுத்துப் போய் அக்கறையோடு செய்யப் படும் சோதனை அது. ஞாயிற்றுக் கிழமைக்கான அதிகாரி கடமைகளில் தட்டிக் கழிக்க முடியாத ஒன்று.

எல்லாத் தடியன்களோட எச்சிலையும் தினம் தின்னுட்டிருக்கேனண்டா வைத்தாஸ் திருட்டுத் தேவடியா மகனே, வாடா நாள்பட்ட காட்டெறும்புப் புற்றே. புற்றிலே உன் குறியை விட்டு ஆகப் பாதியாக்க வேணும். என் அரைக்கட்டில் தகிக்கும் நெருப்பணைக்க வராத உனக்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை. நிலையான அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரம் நாளையோடு ஆகிறது. நீ என்னைப் பார்க்க, என்னோடு கூடி அனுபவிக்க ஓடி வந்திருக்க வேணாமோ? உள்ளே வா உள்ளே வா என்று நான் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் நீயாக வரவும், நீ எதிர்பார்ப்போடு என்னைக் கேட்கச் சொல்லி, நான் கேட்டு, மறுபடி மறுபடி எனக்குள் வரவுமாக உடல் கலக்க ஓடோடி வராமல் எந்தப் பஞ்சாபிப் பெண்ணின் கையிடுக்கு வியர்வை வாடையைத் தீர்க்கமாக முகர்ந்து கொண்டு அவளுக்குத் தூமைத்துணி துவைத்துக் கொண்டிருக்கிறாயடா அயோக்கியா?

நந்தினி குளித்து உடுத்து வரும்போது ஒன்பது மணி அறிவிக்கப் பட்டது. சந்திக்கவும் பேசவும் நல்ல நேரம் என்றும் கூறப்பட்டது.

ஒன்பது மணிக்கு வந்தவர் இரண்டாம் கட்ட ராணுவத் தலைவர். ஓங்கு தாங்காக வளர்ந்த கெச்சலான இளையவர். இன்னும் விடலைப் பருவம் நீங்காமல் முகம் முழுக்கப் பருக்களாக வெடித்து வாரிக் கிடந்தது. இந்த வயதில் ராணுவத்தில் தொடக்க நிலை உத்தியோகங்கள் தான் தரப்படுவது வாடிக்கை. இவன் செயற்கரிய செயல் ஏதாவது செய்து இந்தப் பதவி உயர்வு கிட்டியிருக்கலாம்.

கைகளை விறைப்பாக வைத்து அசையாமல் சிலை போல நின்றபடி இருந்தவனை உட்காரச் சொன்னாள் நந்தினி. பெயர் கேட்டாள், தன் சரித்திரத்தை இரண்டு நிமிடத்தில் மரியாதை விலகாத குரலில் ஒப்பித்தான் வந்தவன். அவன் சோபா நுனியில் விழுவது போல் உட்கார்ந்திருந்தான்.

இன்னும் பத்து வருடம் இந்த அமைதி நிலைத்திருக்கும் என்பது உண்மைதானா?

நந்தினி அவனிடம் விசாரித்தாள். அரசு ஆரூடக்காரர்கள் உறுதியாகச் சொன்னாலும் அவள் இன்னும் முழுக்க நம்பாத செய்தி அது.

பத்து வருடம் தான் அம்மா. பெரிய கால்வெளி அது. பத்து வருடத்தில் என்னென்னவோ கடவுளின் சகோதரியின் அருளால் நடந்தேறுமல்லவா?

வந்தவன் கேட்டு விட்டு நந்தினியைப் பார்த்து மரியாதை விலகாது சிரித்தான். சொல்வதைக் கருணையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற யாசித்தல் அவன் பார்வையில் தட்டுப்பட, நந்தினி ஆமாம் என்கிறதாகத் தலையாட்டினாள்.

இந்த அரசு தாக்குப் பிடித்து இன்னொரு பத்து வருடம் ஆட்சியைத் தொடரலாம். பத்து வருடத்தில் நாடே உலக வரைபடத்தில் காணாமல் போகலாம். பத்து வருடத்தில், யார் கண்டது இங்கே உண்மையான ஜனநாயகம் கூட ஏற்பட்டு விடலாம். நந்தினிக்கு இன்னும் பத்து வயது கூடி ஐம்பதுக்களில் சிறு ரோகங்களோடும், மெனோபாஸ் கோபங்களோடும், தலைமுடிக்கான சாயத்தோடும் அவள் வயோதிகத்தில் அடியெடுத்து வைப்பாள். அது நிச்சயமானது.

உன் பிரார்த்தனைகளைக் கூறு.

கடவுளின் மூத்த சகோதரி கீழ்ப்பட்டவர்களை விரிவாகப் பேசக் கோரும் மரபுப்படி கேட்டாள் நந்தினி.

அவன் பேசிக் கொண்டே போனான். கேட்பது தவிர குறுக்குக் கேள்விக்கு இடம் இல்லாத பேச்சு அது.

வைத்தாஸ் அடுத்த வாரம் இங்கே இருப்பான். தில்லியில் தூதரகம் புனரமைக்கிற, நட்புறவை மறு கட்டமைப்பு செய்கிற முக்கியமான பணி அவன் தான் செய்தாக வேண்டியிருக்கிறது. தேசியக் கடமை.

நந்தினி மக்களவை அதிபராக அடுத்த வாரம் பதவியேற்பாள். தேர்தல் அறிவிப்பதும், நட்பான வல்லரசு நாடு இங்கே தொடங்க இருக்கும் மோட்டார் கார் தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் இடுவதும் மக்கள் அதிபராக அவள் செய்ய வேண்டிய முதல் செயல்களில் அடக்கம்.

இல்லை, இன்னும் நாட்டின் பொருளாதார நிலைமை முன்னேறவில்லை. ஆயிரம் பேருக்கு ஒரு கார் என்ற நிலை தான் இன்னும். வல்லரசின் கர்ர்த் தொழிற்சாலையில் கனரக ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு நட்பு நாடுகளுக்கு மற்றவர்களோடு நட்பு வளர்க்க ஏற்றுமதி செய்யப்படும். நட்பு வளர்ப்பதில் நட்போடு கூடிய படையெடுப்பும் அன்போடு ஆக்கிரமித்தலும் அடங்கும்.

நந்தினி நாட்டு அதிபராக நட்பான வல்லரசு நாடுகளுக்கு இரண்டு வார நல்லெண்ணப் பயணம் இந்த மாத இறுதியில் போக வேண்டி வரும். அந்த நாடுகளுக்குப் போகும் போது அவளுடைய மாந்திரீகம் கலந்த ஆளுமை வெளிப்படுத்தப்படாது. இந்திய முறை நாட்டியத் தேர்ச்சியும், ஆங்கிலப் புலமையும், நிர்வாக அறிவின் முதிர்ச்சியும் வெளித் தெரியும் படி அவள் நடக்க வேண்டி வரும். வைத்தாஸ் அவளோடு அநேகமாகப் பயணத்தில் வருவான்.

மாந்திரீக ஆளுமை என்பது வீட்டு முன்னறை ஓவியத்தில் இருந்து இறங்கி மயில் ஆடி மரியாதை செய்த ஒன்று. அந்த மயில் இனியும் ஆடும் என்று நட்பு வல்லரசு நாடுகளில் சந்திப்பின் போது எதிர்பார்க்கப் படலாம். பறவையும் அதன் நடனமும் வளத்தோடு தொடர்புடையதாக உணர்ந்து கொள்ள வேண்டிய அழுத்தமான படிமங்கள் மட்டுமே என்றோ மற்றப்படி உசிதமாகவோ நந்தினி பேசலாம். அதன் பிறகு, அவர்கள் பறவைகள் இடம் பெறும் வேறு ஓவியங்களைக் காட்டி அவற்றில் சிறைப்பட்ட பறவைகளை ஆடவும் அகவவுமாக அற்புதம் நிகழ்த்தச் சொல்லிக் கேட்க மாட்டார்கள் என்பது உறுதி.

உள்நாட்டில் நந்தினிக்கு இருக்கும் பிம்பம் முழுக்க மாந்திரீகம் மற்றும் காருண்யம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டது. அவள் பிரார்த்தனை செய்தால் தானியங்கள் ஆகாயத்தில் இருந்து சொரியும். அவள் கடுமையாகப் பார்த்தால் எதிரிகள் அடுத்த ஒன்பது மணி நேரத்துக்குள் குழைந்து விழுந்து உடல் சுருங்கி இறப்பார்கள். அவள் அன்போடு கை குலுக்கினால் தீராத நோய்கள் குணமாகும் என்று விரியும் அந்த மாந்திரீகப் புனைவை நந்தினி இனி பெரும்பாலும் இறக்கி வைக்கலாம். இந்தச் சிறப்புகளை அவளிடமிருந்து பெற்று, சிறு சிறு அற்புதங்களை அவள் சார்பில் நிகழ்த்தத் தக்க விதத்தில் மரபுத் தொடர்ச்சி ஏற்படுத்தித் தரப்படும். அதைப் பற்றி உரையாடவே இந்தச் சந்திப்பு.

கடவுளுக்கு மூத்த சகோதரியின் அற்புதங்கள் நிகழ்த்தும் புனித ஆளுமையைக் கைமாற்ற பத்து வயதுக்கு மேற்படாத சிறுமி அல்லது சிறுவன் தேர்ந்தெடுக்கப் படலாம் என்று முந்தாநாள் முடிவானது.

ஜோஜோ அல்லது வூடூ மந்திரவாதம் செய்யும் பரமபரைக் குடும்பங்களில் தேடி அது அமையாத் பட்சத்தில் வெளியில் இருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. வூடூ முழுக்கத் தீமை வருத்தும் என்பதால் நன்மை வருத்தும் ஜோஜோ பிரிவு மாந்திரீகத்தைக் குலத்தொழிலாகச் செய்யும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதிகாரி பேசிக் கொண்டு போக, காப்பி பிளாஸ்கோடு உள்ளே வந்தாள் பணிப்பெண். கதவுக்கு வெளியே முன்னறையில் கருத்து மெலிந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்தது நந்தினி கண்ணில் பட்டது. சிறுமி கையை உயர்த்த ரோஜாப்பூ இதழ்கள் தரையைப் பார்த்துக் கவிழ்ந்த அவளுடைய வெற்று உள்ளங்கைகளில் இருந்து மெல்லத் தரையில் உதிர்ந்தன.

நந்தினியின் பார்வை போன இடத்தைத் தொடர்ந்து ராணுவ அதிகாரியும் பார்த்து விட்டு அவசரமாக நந்தினியை வணங்கினார்.

கையை அசைத்துப் பூ வரவழைத்துப் போகிற இடமெல்லாம் குப்பை போடக் கூடாது என்று எச்சரித்துத்தான் கூட்டி வந்தேன். மன்னிக்க வேண்டும் அம்மா. இதோ அவளை மேலும் எச்சரித்து விட்டு வருகிறேன்.

அவர் கிளம்ப, வேண்டாம் என்று நந்தினி கை காட்டி நிறுத்தினாள்.

அந்தப் பெண் தானா அற்புதங்களை என் சார்பில் நிகழ்த்தப் போவது?

அவர் மகிழ்ச்சியோடு தலையாட்டினார்.

அவள் பெயர் என்ன?

எமிலி ஆந்த்ரோசா. வடக்குப் பகுதியில் இருந்து வருகிறவள்.. நான்கு தலைமுறையாக ஜோஜோ நல்ல விஷயங்களுக்காகப் பிரயோகிப்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட குடும்பம். காதல் கைகூட, பிரிந்த கணவன் திரும்பி வரவும், இருப்பவன் போகாமல் இருக்கவும் உதவும் தாயத்து தயாரித்து விற்பனை, தொழில் அபிவிருத்திக்கான மாந்திரீகப் பிரயோகங்கள் நடத்துதல் இப்படியான செயல்களை இவள் அப்பா செய்து வருகிறார். இவருடைய பெரியப்பா இன்னும் பிரபலமானவர். அவர் தற்போது உயிரோடு இல்லை.

என்ன மாதிரியான அற்புதங்கள் செய்த மனிதர் அந்த இறந்த மந்திரவாதி? நந்தினி கேட்டாள்.

அதிகாரி கொஞ்சம் தயங்கினார். ஒரு பெண் அதிகாரி வந்து கொண்டிருக்கிறார் அம்மா. அவர் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுவார்.

எமிலி பிறந்த ஒரு வருடத்திலேயே சிறு சிறு அற்புதங்கள் நிகழ்த்த வல்லமை படைத்தவளாக இருந்து வருகிறாள். பள்ளியில் படிப்பதிலும், ,எறிபந்து விளையாட்டிலும் கூட ஆற்றல் மிகுந்தவள். பள்ளி நாட்களில் அற்புதம் நிகழ்த்தாமல் விடுமுறை தினங்களில் மட்டும் நடைபெற வைப்பதால் அவளுக்குக் கல்வியிலும் விளையாட்டிலும் இருக்கும் ஈர்ப்பும் அவற்றின் மேல் வைத்திருக்கும் மதிப்பும் புலனாகும்.

நினைத்த மாத்திரத்தில் கையில் இருந்து பூ இதழ்களை உதிர்ப்பது, சிறு நிலப்பரப்பில், அது சில சதுர அடிகள் பரப்பளவு கொண்டதாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் மட்டும் மழை பொழிய வைப்பது, மழைக்கு நடுவே ஒரு சிறு இடத்தில் மட்டும் மழை இன்றி வைப்பது, நடக்கும் போது செவ்வெறும்புகள் குறுக்கிட்டால் அவை அனைத்தும் அப்புறம் போய் வரிசையாக அசையாமல் நின்று மரியாதை செலுத்தச் செய்வது போன்ற அற்புதங்களை எமிலி நிகழ்த்தி வருகிறாள். புற்றில் இருந்து ஈசல்களை வெளி வரச் செய்யும், பரவலாகக் கோரிக்கை வைக்கப்பட்டு நிகழ்த்தும் மற்றொரு அற்புதம் அரசால் நிறுத்தப்பட்டுள்ளது. வெளிவந்த ஈசல்களை அரிசி கலந்து வறுத்துத் தின்பதால் ஈசல் இல்லாத நாட்கள் வரும் என்பதாலேயே அந்தத் தடை. ஈசல் இல்லாத மழைக்காலங்கள் குறைந்த அதிர்ஷ்டம் தரக் கூடியவை அன்றோ.

வாசல் கதவு மற்படி திறக்க, வெளியே நின்று கருத்து வடிவாகத் தடித்த வனப்புள்ள ஒரு இளம் பெண் அதிகாரி நந்தினியை வணங்கினாள்.

நீங்கள் கேட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க வந்திருக்கிறார் என்று ஆண் அதிகாரி சொன்னார். என்ன சந்தேகம் என்று நந்தினிக்கு மறந்துவிட்டது. இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் பற்றி என்று அடியெடுத்துக் கொடுத்தபடி அவர் புதிதாக வந்த பெண் அதிகாரியைப் பார்க்க அவள் தலையைக் குனிந்து மீண்டும் வணங்கி உள்ளே வந்தாள்.

உள்ளறையில் பெண் அதிகாரி கண்கள் தரையை நோக்கி இருக்க மெல்லிய குரலில் நந்தினியிடம் கூறியது –

ஆணும் பெண்ணும் இணை விழைந்து கலவியின் ஈடுபட்டு முடிந்ததும் அவனால் வெளியேற முடியாமல் அவளுக்குள்ளேயே சிறை வைக்கச் செய்யும் மந்திரவாதத்தில் இந்தச் சிறுமியின் பெரிய தகப்பனார் வல்லவர். திருமணம் மீறிய உறவுகள் அதிகமாக இருக்கும் சூழலில், வேலி தாண்டி வெளியே போன ஆண்களை உடனே பிடித்து, மிக வலுவான தடயத்தின் அடிப்படையில் தண்டிக்க இதுவே சிறந்த வழி என்று நாட்டில் பலரும் எண்ணுகிறார்கள். அறுவை சிகிச்சை நடத்திக் கூட அவனைப் பத்திரமாகப் பிரித்து வெளியே எடுக்க முடியாது.

அந்தப் பெண் அதிகாரியை வாஞ்சையாகத் தோளில் தட்டி விடை கொடுத்தாள் நந்தினி. எழுந்த போது கண் இருண்டு வர, சுவரில் கை வைத்து அழுத்தியபடி. அங்கேயே நின்றாள்.

நந்தினியைச் சுற்றி இருளும் ஒளியும் கலந்து நிகழும் ஓவியமாகக் காட்சி விரிந்து கொண்டிருந்தது.

வைத்தாஸே, அடே வைத்தாஸே. ஜூஜூ மந்திரவாதம் செய்யப் போறேன். எனக்குள்ளே நீ வந்ததும் சிறைப் பிடிக்க வேணும். உடனே வந்து சேர். உள்ளே வந்த பின்னாடி நானாக விடுவிக்கும் வரை நீ திரும்பிப் போகவே முடியாது. இருபத்துநாலு மணி நேரமும் போகம் அனுபவிக்கணும் வாடா கழிசடையே என் காது மடலைச் சுவைத்துக் காதல் செய்ய வா. .

புகையோடு எழும் மாடிப்படி வளைவில் தோளில் குரங்குக் குட்டியோடு நின்றிருந்த பெண் நந்தினியைத் திரும்பிப் பார்க்கிறாள். பக்கத்தில் வைத்தாஸ் அந்தப் பெண்ணைக் காமம் நனைந்த குரலில் விளிக்கிறான் –

வீராவாலி, வா, என்னை முழுக்க ஆக்கிரமித்துக் கலக்க வா.

வீராவாலி என்ற அந்தப் பெண் மோகம் தலைக்கேறச் சிரிக்கிறாள். இருகை கொண்டு அவளைத் தூக்கி இடுப்போடு அணைத்து, அவளுடைய உடலின் வியர்வை மணத்தை வெறியோடு முகர்கிறான் வைத்தாஸ்.

வைத்தாஸே திருடா, அந்த அழுக்குச் சிறுக்கி உனக்கு ரதியா? புணர்ந்ததும் சீக்குப் பிடிச்சு நீ அழுகி உதிர்ந்து போகப் போறே.

வைத்தாஸ் சிரிக்கிறான். அவன் வீராவாலியின் மார்பகங்களை ஆசையோடு வருடியபடி சொல்கிறான் –

மன்னிக்கணும். நான் வைத்தாஸ் எழுதும் நாவலில் வரும் வைத்தாஸ். இவளோடு சுகித்துக் கிடப்பது தவிர, என்னைப் படைச்ச வைத்தாஸ் இப்போ எனக்கு வேறு எந்த வேலையையும் தரலே.

அவன் சொல்லியபடி நிதானமாக, இருளில் கிடந்த மாடிப்படி ஏறுகிறான். மேல் படியில் நின்று திரும்பப் பார்க்கிறான். இறங்கி வருகிறான்.

குரங்குக் குட்டியை விட்டுட்டு வா.

வைத்தாஸ் படைத்த வைத்தாஸ் வீராவாலியின் தோளில் இருந்து குரங்குக் குட்டியை இறக்கி விட்டு அவள் இடையைத் தழுவிக் கொள்கிறான். குரங்குக் குட்டி அறைக்கு வெளியே ஓடுகிறது.

வைத்தாஸின் வைத்தாஸும் வீராவாலியும் நந்தினியின் கட்டிலில் சரிகிறார்கள்.

பின்னால் ரெட்டைக் கட்டிலில் ஆதி மனிதனும் மனுஷியும் வெறியோடு கலக்கும் வாடை அறையெங்கும் நிறைய, முன்னறைக்கு மெல்ல வந்தாள் நந்தினி. ராணுவ அதிகாரி மயக்கமடைந்து சோபாவில் கிடந்தார். ஒரு சதுர அடிப் பரப்பில் ரோஜாப் பூ வாசனையோடு அடர்த்தியான தூறல் விழுந்து கொண்டிருக்க, காத்திருந்த சிறுமி குரங்குக் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

காப்பி சாப்பிடலாம் வா.

நந்தினி அந்தப் சிறுமியை அருகில் அழைத்தபோது சுவரில் மாட்டியிருந்த ஓவியத்தில் இருந்த மயில் ஆட ஆரம்பித்திருந்தது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன