New Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 11 இரா.முருகன்

பிரியத்துக்கு பாத்தியதை உள்ளவர்களே, உங்களுடைய ஆத்மா ஜீவித்திருப்பது போல நீங்கள் அனைத்திலும் சுகமாக ஜீவித்திருக்க கர்த்தராகிய ஏசு கிறிஸ்துவின் திருநாமத்தால் வாழ்த்துகிறேன் (யோவான்).

ப்ரியமான புத்ரி கொச்சு தெரிசா, கொச்சு தெரிசாளின் அன்பான கணவன் ஜனாப் முசாஃபர் அலி சாஹேப், நான் இங்கே கால்டர்டேலுக்கு ஐந்து நாள் முன்பாக அதாவது கடந்த மாசம் இருபத்தெட்டாம் தேதி திங்கள்கிழமை காலையில் நலமாக வந்து சேர்ந்தேன்.

அமேயர் பாதிரியார் இங்கிலாந்து போய்ச் சேர்ந்த கையோடு கொச்சு தெரிசாவுக்கு எழுதிய கடிதம் இப்படி ஆரம்பித்தது. இந்த நாலைந்து வரியை எழுதவே அவருக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.

வயோதிகம் தான் காரணம். அமேயர் பாதிரியாருடைய அறிவின் ஒரு கோடியில், இப்படிச் சுணங்கியதற்குக் காரணமாக வயது சொல்லப்பட்டது.

எனில், பசிக்கும் போது ஆகாரம் இவ்வளவு போதும் என்று தோன்றும் வரை சாப்பிடவோ, தேத்தண்ணீர் பெரிய குவளையில் அளவாகச் சர்க்கரை சேர்த்து நல்ல சூடாக வழங்கச் சொல்லிக் கோரிக்கை விடுத்துக் காத்திருக்கவோ எந்த விதமான தாமதமும் குறுக்கே வருவதில்லை என்பதையும் பாதிரியார் நினைத்துப் பார்த்தார்.

அதை எல்லாம் இயக்கும் இன்னொரு பகுதி மூளையில் இருந்தால் அதுவும் வயோதிகத்தால் தளர்ந்திருக்கும் இல்லையா? இல்லையே. பசியும் தாகமும் தீர்க்கத் தீர்க்க அதிகமாகிறதே தவிர, கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா?

பாதிரியாருக்குத் தெரியவில்லை. இதை எல்லாம் இன்னும் அதிகமாக ஆராய்ந்து அவருக்கு வாடிகனில் இருந்து சீரிய சிந்தனையாளர் என்று எழுதிய காகிதக் கிரீடத்தை யாரும் அணிவித்துப் போகப் போவதில்லை.

அப்பன், சாயா எடுத்துக் கொள்ளணும். உங்களுக்காக இந்திய மோஸ்தரில் பாலையும் டீத் தூளையும் தனித் தனியாகச் சுட வைத்துக் கலந்தது.

கால்டெர்டெல் மார்க்கெட்டில் கசாப்புக்கடை வைத்திருக்கும் பெர்ணாந்தஸ். அமேயர் பாதிரியாருக்கு அன்போடு ஒரு குவளை தேநீர் தர முன் வந்தான்.

பாதிரியார் இரண்டு நீண்ட மாதங்கள் இந்தியாவில் சுற்றி வந்ததைக் குறிப்பிட்டு அவருடைய அனுபவத்தைப் பங்கு வைக்கக் கோரிக்கை விடுக்கும் கால்டர்டேல் மறைநில மந்தையின் அன்பான ஆடுகளை அவர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். அனுபவங்கள் எல்லாம் பங்கு வைக்கத் தானே. காடியில் அமிழ்த்தி சீனப் பரணியில் ஊறுகாய் போட்டுச் சேமிக்க இல்லையே

பெர்னாந்தஸ், பாதிரியாருக்கு அளித்த சிறப்பான டீத்தூள் ப்ராட்ஃபோர்டில் இருந்து மாமிசம் எடுத்து வருகிற டிரக் ஓட்டும் சீனாக்காரன் சூ மின் பீஜிங்கில் விடுமுறைக்குப் போய் விட்டு வந்த போது கொண்டு வந்ததாம்.

இந்தியப் பெண் மாதிரி மல்லிகைப் பூ வாசனை அடிக்கிற சாயா என்றான் பெர்ணாந்தஸ். வேண்டாம் என்று சொல்லி அவனிடம் இருந்த பழைய மூணு ரோஜாப் புஷ்பம் சாயா இலைகளையே கிள்ளிப் போட்டு உண்டாக்கிய டீ கேட்டு வாங்கிக் கொண்டார் அமேயர் பாதிரியார். அது நேற்று காலையில்.

வாடிகனில் இருந்து அவருடைய இந்தியப் பயணத்தைப் பற்றித் தொலைபேசி விசாரிக்காவிட்டாலும், கூப்பிடு தூரத்தில் மான்செஸ்டரில் இருந்து திருச்சபை அழைப்பு வந்தது. அது முந்தாநாள் மாலையில்.

அமேயர் பாதிரியார் தென்னிந்தியாவின் சிறப்பை, அங்கே ஏசு சபை நடவடிக்கைகள் இன்னும் மேம்பட வழி இருப்பதை எல்லாம் ஆர்வத்தோடு பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். சரிதான் என்று குறுக்குச் சால் போட்டு அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்த வயதானவரும் ஒரு நிமிஷத்துக்கு பத்து வினாடி நேரம் மட்டும் காது கேட்கிறவருமான கார்டினல் சொன்னார் –

தந்தையார் அவர்களே, ஒரு வருடமாக நீங்கள் உங்கள் மந்தையைப் புறக்கணித்து விக்கிரக ஆராதகர்களிடையே ஆனந்தக் களிப்போடு திரிந்து தேவ ஊழியத்தை ஒதுக்கி வைத்ததன் காரணம் என்ன? திருந்தி வந்தீரா?

நான் இரண்டே இரண்டு மாதம் தான் எழுதி அறிவித்து விடுப்பில் போனது. இந்தியாவில் இருந்து ஆயர் கடிதம், திருச்சபை செய்தித் தொகுப்பு இரண்டு சேவைகளையும் செய்து தான் வந்தேன்.

அமேயர் சொன்னது எல்லாம் கார்டினல் காதில் விழாமல், அருவி பொழியும் சீரான ஓசை மட்டும் அவருடைய உட்செவியில் நிறைந்து வழிந்தது.

கார்டினல் நாத்தழதழக்க, வாரும், உம் மந்தைக்காக மன்றாடுவோம் என்று உரக்க லத்தீனில் திருவசனம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தனக்கு எதுவும் காதில் கேட்காத தோரணையில் நாலு ஹலோ, ஹலோவும் அவசரமான ஆமெனுமாக அமேயர் பாதிரியார் கார்டினலை அகற்றி நிறுத்த வேண்டி இருந்தது அப்போது.

பாதிரியார் இத்தனை வருடம் செய்த ஊழியமும் செய்ய இருப்பதும் இப்படி மறைவில் ஒளிக்கப் படுவது பற்றி அவருக்கு வருத்தம் இல்லை. அவருடைய பயணத்தைப் பற்றி வாடிகனில் ஊழியம் புரியும் தெக்கே பரம்பில் அச்சன் மூலம் அங்கே சரியான தகவலைப் போப்பரசர் வரை அறிவித்து வைத்திருக்கிறார். நாளைக்கே அவரை ரோமாபுரிக்குப் பதவி மாற்றமும் இட மாற்றமும் செய்து அழைத்துக் கொள்ளலாம். அப்பன் வீட்டில் ஆயிரம் அறை.

கால்டர்டேல் குரிசுப் பள்ளியில் ஒரு நூற்றாண்டு முன்னர் பியானோ வாசித்து வந்த ஒரு ஊழியக்காரன் சின்னஞ்சிறு கிரகமான யுரேனஸைக் கண்டுபிடித்தது உண்மையன்றோ. அதற்காக போப்பாண்டவரின் பாராட்டு பத்து வருஷம் கழித்து வந்து சேர்ந்தபோது அந்த ஊழியன் சர்ச் வளாகத்தில் அந்திம உறக்கத்தில் இருந்தான். இங்கிலீஷிலும் லத்தீனிலும் கடிதம் எழுத ஆள் தேடுவதில் தாமதமானதாக அப்போது அறிவிக்கப் பட்டது. அமேயர் பாதிரியாருக்கான திருச்சபை கடிதம் எழுத தெக்கே பரம்பில் போல் அங்கே எல்லா மொழியும் தெரிந்த பாதிரியார்கள் அருகே இருக்க வேண்டும்.

இந்த அக்கப்போர்கள் அல்லாமல் ரெண்டு மாசத்தில் கால்டர்டேலில் வேறு எந்த மாற்றங்கள் உண்டு என்பதை முதலில் அவதானிக்க வேணும். அதெல்லாம் இனி அவர் ஊழியம் செய்ய இருக்கும் முறையை மாற்றி வைக்க வழி செய்யக் கூடும். இல்லாவிட்டாலும் வம்புக்கு படி ஏறும் மந்தையின் மூத்த ஆடுகளோடு பேச விஷயத் தீவனம் தரும் அதெல்லாம்.

கசாப்புக் காரன் பெர்னாந்தஸ் சொன்னபடிக்கு, யார்க்‌ஷயர் நெடுக இந்த ரெண்டு மாசத்தில் ஒரு கொடூரன் உலாவி வந்தானாம். ராத்திரி வீடு புகுந்து கழுத்தில் ரேசர் பிளேடால் கீறி ரத்தம் வர வைத்துப் போவதே அவன் செய்ததாம். யாரும் ரத்தப் போக்கால் மரிக்கா விட்டாலும், சன்னமாகக் கழுத்தில் கீறி வந்த நாலைந்து துளி ரத்தத்தை அவன் தன்னுடைய ஆள்காட்டி விரலில் பூசிப் போனதாகக் கதை பரவியதாம். அப்புறம் கால்டர்டேல் நகர மன்றம் கூட்டம் கூடி, பாதிக்கப் பட்ட நூறு பேரை அழைத்து நாலு கதவையும் சார்த்தி வைத்து நல்வழி காட்ட வகுப்பு எடுக்கப் பட்டதாம். அது முடிந்து ஆளுக்கு பத்து பவுண்ட் காசும், நாலு மரக்கால் கோதுமையும், ரெண்டு ராத்தல் ஆட்டு இறைச்சியும் அளிக்கப்பட்டதாம்.

இப்படி வெகுமதி வாங்கிய அவர்கள் எல்லோரும் ஒருத்தர் போல் மற்றவர் கீசுக் கீசென்று கழுத்தில் யாரும் அவர்களைக் கிழிக்கவில்லை என்றும் ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர்களே வீட்டில் இருந்த பழைய பிளேடு, பியர் பாட்டில் திறக்கும் சின்ன அறம் இவற்றால் தம்தம் கழுத்திலும் கையிலும் முதுகிலும் கீறிக் கொண்டதாகவும் அறிவித்தனர். இறந்து போன இரண்டு பேர், கழுத்தில் பிளேடோடு மேலே இருந்து குதித்துச் சவப்பெட்டியில் நேரே விழுவது எப்படி இருக்கும் என்று தெரிவதற்காகத் தாங்களே விழுந்து பெட்டியில் படுத்து மூடிக் கொண்டதாகச் சொன்னார்கள்.எது எப்படியோ ரேசர் பிளேட் ராட்சசர்கள் இல்லாமல் போனதில் அமேயருக்கு ஆசுவாசம் கொஞ்ச நஞ்சமில்லை.

ஊரில் போன மாதக் கடைசியில் பேய் ஆராதகன் ஒருவன் குடியேறி இருப்பதாக அமேயர் பாதிரியாருக்குத் தெரிய வந்தது. பேயோட்டுகிறவன் இல்லை. பிசாசு இருப்பதாகத் தெரிந்த இடங்களில் ராத்தங்கி, அவற்றோடு பேசவும் பழகவும், முடிந்தால் கேமராவில் அவற்றைப் படம் பிடிக்கவும் ஆர்வம் உள்ளவனாம். அம்மாதிரியான இடங்களில் தங்கி இருந்து நடவடிக்கைகளைக் கவனிக்க அவன் பணம் செலவழிக்கவும் தயாராம்.

அட்சன் முடுக்குச் சந்தில் முப்பது பரம்பரைக் கொல்லன் பெர்ரியின் வீட்டு முகப்பில் ஒரு ஆவி உண்டு. முன்னூறு வருடம் முன் கோட்டைக் கதவுக்கு மாற்றுச் சாவி செய்யப் பணம் கொடுத்து இன்னும் கிடைக்காமல் காத்திருக்கும் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தனின் ஆவி அது. பௌர்ணமி இரவுகளில் சாவி வேணும் சாவி வேணும் என்று அது பாடுவது உண்டாம். அதைக் கேட்கக் கொல்லனுக்கு பத்து பவுண்ட் வாடகை கொடுத்து பிசாசு ஆராதகன் அந்த வீட்டில் தங்கினதாகக் கேள்வி. பூட்டி வைத்த எல்லா வீடுகளுக்கு உள்ளும் அவன் பிசாசு ஆராய்ச்சிக்காக நுழைய ஆர்வம் காட்டுகிறானாம். நல்லதிற்கில்லை இது என்று அமேயர் நினைத்தார்.

ஆராதகர்கள் ஒரு பக்கம் பிசசுகளின் தோளில் கை போட்டு அணைத்துச் சேர்ந்து சுற்ற முன்வர, உள்ளூர்ப் பேய்கள் தங்கள் விளையாட்டுகளை மும்முரமாக்கிக் கொண்டிருப்பதாகவும் அமேயர் பாதிரியார் காதில் விழுந்தது.

கால்டர்டேல் நைட் கிளப்பில் சுற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு விடலைப் பேய் ஒன்று உண்டு. ஆண் தான். நைட் கிளப்பில் இருந்து வந்து, அமேயர் பாதிரியாருக்கு இருபது பவுண்ட் தட்சணை வைத்து அந்தப் பேயை ஓட்ட வரச் சொன்னார்கள் ஒரு முறை. அது சில ஆண்டுகள் முன்.

அவர் சாமக்கிரியைகளோடும் உதவியாளர்களோடும் அங்கே போக, அவசரமாக உள்ளே அழைத்த நைட்கிளப் உரிமையாளர் சொன்னார் –

அச்சன், நாலைந்து வாடிக்கையாளர்கள், எல்லோரும் கிழவர்கள், அவர்கள் சல்யம் பொறுக்கமுடியாமல் உங்களைப் பேயோட்டக் கூப்பிட்டது. உள்ளபடிக்கு அந்தப் பேய் பற்றிய வதந்தியால் தான் கிளப் நிரம்பி வழிகிறது. அதுவும் போன வாரத்தில் பிசாசு பெண்கள் கூடவே உள்ளே நுழைவதாகச் செய்தி. கடைசி வரிசை இருக்கையை அந்த ஆவி ஆக்ரமித்துக் கொள்ள அதன் மடியில் அமர்ந்து சிலீரென்று பிருஷ்டம் ஈரமாக அரக்கப் பரக்க வெளியே ஓடி வரும் பெண்களைப் பார்க்கவே வெளியூர்க் குடிகாரர்கள் வந்து சேர்கிறார்கள் இருந்துட்டுப் போகட்டும். வியாபார விருத்தி ஆகிறது. வந்ததற்கு ஒரு பிரார்த்தனையும் நன்றி அறிவிப்பும் சொல்லிப் போங்கள்.

அன்றைக்கு விரட்டாமல் திரும்பி வந்த விடலைப் பிசாசு இப்போது பெண்கள் கழிவறையில் தண்ணீர் திறக்க வேண்டிய நேரத்தில் நீர்ப் போக்கை அடைக்கிறதாம். காலிலும் தலையிலும் தண்ணீர்க் குழாய் திறந்து பெண்களின் உடுப்பை நனைக்கிறதாம். இன்னும் மோசமாக, பெண்கள் கழிவறைக் கதவுகளை, உள்ளே யாராவது இருக்கும் போதே மட்ட மல்லாக்கத் திறந்து வைக்கிறதாம். அது மட்டுமில்லை, இருக்கும் வெளிச்சமான விளக்குகளை எல்லாம் போட்டுக் கழிப்பறையைப் பிரகாசப்படுத்துகிறதாம். கழிவறைச் சத்தங்களை ஒலி பெருக்குகிறதாம்.

மேற்படித் தகவலை பெர்னாந்தஸ் குறையாகச் சொன்னாலும் அவன் முகத்தில் சந்தோஷம் இருந்ததைக் கவனித்தார் அமேயர் பாதிரியார்.

நேரம் கிடைக்கும் போது நைட் கிளப் வாசலில் ஒரு பிரார்த்தனை ஏற்பாடு செய்து நடத்தி விட்டு வந்தால் அடுத்த இரண்டு மாதம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பிரசங்கங்களுக்கு வேறே பேச்சு விஷயம் தேவையின்றிப் போய் விடும். இந்தச் சிந்தனையைப் பத்திரமாக நினைவில் மூடி வைத்தார் அவர்.

ஊரில் எங்கே போனாலும் அவரிடம் கொச்சு தெரிசா பற்றியும் முசாபர் அலி பற்றியும் அன்போடு விசாரித்தார்கள். அவர்கள் திரும்ப வந்து பிஷ் அண்ட் சிப் கடை மறுபடி இயங்குவதை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

எல்லாம் எழுதிக் கொச்சு தெரிசாவுக்கு அமேயர் பாதிரியார் இன்று கடிதம் அனுப்புவார். குரிசுப் பள்ளி வளாகத்தில் நிம்மதியாக ஒரு மணி நேரம் அவர் தெய்வ சிந்தனையில் சாய்வு நாற்காலி போட்டு அமரும் நேரம் இது. அது கழிந்து கடிதம் எழுதப்படும்.

அமேயர் பாதிரியார் திருப்தியாகக் கண்ணை மூடிக் கொண்ட போது நாலு கல் படி சுலபமாக ஏறி, உள்ளே கடந்து வந்து அவரை இடித்துக் கொண்டு மெட்காஃபின் விநோதமான கார் நின்றது.

(தொடரும்)

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன