ஊமைப் பாட்டி 1966

 

ஊமைப் பாட்டி 1966 இரா.முருகன்

ரெட்டைத் தெருவில் சாக்குப் படுதா கட்டிய ஒரே வீடு ஊமைப் பாட்டி வீடாகத்தான் இருக்கும். பாண்டியன் மளிகைக் கடையில் கடலைப் புண்ணாக்கும் அரிசியும் அடைத்து வந்த காலி சாக்குகளை யாசித்து வாங்கி வந்து வீட்டுத் திண்ணையில் வரிசையாகத் தொங்க விடுவாள் பாட்டி. வெய்யிலோ மழையோ அவள் உலகம் மளிகை வாடையடிக்கும் சணல் திரைகளுக்குப் பின்னால் இடுங்கியிருக்கும். அவள் மட்டுமில்லை, பேரன் நாகநாதனின் உலகமும் கூட.சொல்லப் போனால் பாட்டியில்லை ஊமை. பேரன் தான். ‘நாகு, எழுந்திருடா. சங்கு ஊதியாச்சு. இன்னும் என்ன வழிச்சுண்டு தூக்கம்?’ பாட்டி சத்தம் புண்ணாக்குச் சாக்கு திரைச்சீலையைக் கடந்து ரெட்டை தெரு பாதிவரை எதிரொலிப்பது நாங்கள் பள்ளிக்கூடம் கிளம்ப அடியெடுத்து வைக்கும் போதுதான். பஞ்சாயத்து போர்டு ஆபீசில் எட்டு மணிச் சங்கு ஊதினாலும் ஊதாவிட்டாலும் பாட்டி குரல் ஒருநாள் விடாமல் பேரனை எழுப்பும். அப்புறம் சொல்லி வைத்தது போல் ஓர் அழுகைச் சத்தம். பேரன் அழுகிற ஓசை அது. நாகநாதனுக்கு இருபது வயசாவது இருக்கும். தொண்டையைக் கனைத்துக் கொண்டு ஏதோ சொல்ல ஆரம்பிப்பதுபோல் முஸ்தீபோடு தொடங்கி எதுவும் பேச முடியாத தடித்த குரலில் அவன் அழுவான். அப்போதெல்லாம் மனசை இனம் தெரியாத பயம் கவ்வும்.

எதுக்கு அழணும் அத்தனை பெரிய ஆம்பிளை? எங்களை மாதிரி சயின்ஸ் மாஸ்டர் கரடி சாரின் ஷேவ் செய்த முகத்தை எதிர்பார்த்து திகிலோடு பள்ளிக்கூடம் போக வேணுமா என்ன அவனுக்கு? கரடி வாத்தியார் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை சுத்தமாக முகத்தை மழித்துக் கொள்வார். தாடியோடு இருக்கிற போது வகுப்பில் பிரியமாகப் பேசுகிற அவர் ஷவரக் கல்யாணம் முடிந்து வந்த தினங்களில் தவறாது ஒரு முதுகு விடாமல் கச்சேரி நடத்தி விடுவார். நாகநாதன் எங்கள் வயசில் கரடி வாத்தியார் பாடம் நடத்த ஒன்பதாம் கிளாஸ் படித்ததாகத் தெரியவில்லை. பள்ளிக்கூடம் போய்ப் படிக்க வைக்காததற்கு அவன் வாய் பேசாத குறைபாடு ஒரு சாக்கு. மதுரையில் இப்படிப் பட்டவர்களுக்காகவே இருக்கிற பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு சமயம் பாட்டி அவனைக் கொண்டு போய்ச் சேர்த்ததாகவும் அவனுடைய குரல் இல்லாத அழுகையில் பயந்து போன வாத்தியார் அவனைத் திரும்பிப் பத்திரமாக பாட்டியோடு அனுப்பி விட்டதாகவும் குண்டு ராஜு அவ்வப்போது கோலி விடுவான். ‘நாகநாதன் மாதிரி காலம் முழுக்க சும்மா இருக்கக் கொடுத்து வச்சிருக்கணும்’. அவன் சொல்வது சரியோ?தெரியாது.

மதியம் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்து விட்டு அவசரமாக திரும்பப் பள்ளிக்கூடத்துக்கு ஓடும்போது தன் வீட்டு வாசலில் நாகநாதன் நின்று எங்களில் யாரையாவது ஏகதேசமாகத் தோளைத் தொட்டுத் திருப்புவான். உதடு வேகமாக அசைய அடித் தொண்டையில் இருந்து மௌனமான குரல் என்னமோ விசாரிக்கும். தொடர்ந்து அவன் கை தொப்பி வைத்த தலை, நீளக் கோட்டு, சைக்கிள், தோளில் பை என்று காட்டுகிற சங்கேதங்களை ஒருசேரப் பார்க்கும்போது ஜவஹர்லால் நேரு ரெட்டைத் தெருவில் சைக்கிள் விட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போனதைப் பார்த்தியா என்று கேட்பதாக எனக்குப் புரிந்தது. ‘தபால்காரர் வேலுச்சாமி வந்தாச்சான்னு கேட்கறாண்டா’. குண்டுராஜு மொழி பெயர்க்கும் போது அவனைப் பாராட்டுகிறதுபோல் புன்னகை செய்து திரும்ப அடித் தொண்டையால் விசாரிப்பான் நாகநாதன். தினசரி அவனுக்குக் கடுதாசி எழுத யார் இருக்கிறார்களோ. ஆனால் மாசம் பிறந்ததும் தவறாமல் மணி ஆர்டர் டில்லியில் இருந்து அவன் பெயருக்கு வந்துவிடும். கிளாரா விசாலாட்சி என்று அனுப்பியவர் விவரம் இருப்பதாக நாகநாதன் சார்பில் மணியார்டரை வாங்கி அவன் ரேகை புரட்டிய இடத்தில் சாட்சிக் கையெழுத்து போடும் ரெட்டைத் தெரு வக்கீல் குமாஸ்தாக்கள் சொல்வார்கள். மொட்டைத்தலை ஊமைப் பாட்டிக்கு தில்லிக்கார கிளாரா விசாலம் ரொம்ப உறவாம் ஒரு காலத்தில். அதாவது மருமகள்.

சனிக்கிழமை மதியங்களில் கோர்ட் இல்லாமல் வக்கீல்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது வக்கீல் குமாஸ்தாக்கள் அரட்டைக்கு அலைவார்கள். அவர்களை சுவாரசியமான வம்புகளுக்காக தெருப் பெண்டுகள் முற்றுகையிடும்போது நாங்களும் கூடவே இருந்து ஒட்டுக் கேட்போம். அப்படிக் கேட்டபோது கிடைத்தது இது – விசாலம் தினசரி அடி உதை என்று இருபது வருஷம் முந்தி இங்கே ஊமைப் பாட்டி வீட்டில் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. பாட்டிக்கு ஒரே பிள்ளை அதாவது நாகநாதனின் தகப்பன் குடித்து விட்டு வந்து அடிப்பான். விசாலத்தின் வீட்டில் இருந்து காசு கொண்டுவரச் சொல்லி விரட்டும்போது பாட்டியும் சேர்ந்து திட்டுவாளாம். பிரசவத்துக்கு விசாலம் மிஷினரி ஆஸ்பத்திரியில் சேர்ந்தது, நாளடைவில் அவள் விவாகரத்தும் மதமாற்றமுமாக வீட்டுக்காரனைப் பிரிந்ததில் முடிந்ததாம். நர்ஸ் பயிற்சி முடித்து விசாலம் டில்லிக்குப் போக, ஊமைப் பிள்ளையை நாகநாதனின் அப்பா வளர்க்கச் சொல்லி கோர்ட் உத்தரவாம். அவன் சார்பில் பாட்டி வளர்க்கிறதுக்கு நாகநாதனின் அம்மா நர்ஸ் வேலை பார்த்து இன்னும் மாசாமாசம் தவறாமல் பணம் அனுப்புகிறாளாம்.

மணியார்டர் வந்ததும் நாகநாதன் சுறுசுறுப்பாக ராதா சாமி கடையில் சப்ஜா விதை போட்ட ஒண்டிப்பிலி சர்பத் குடிப்பான். பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு கோவிலுக்குப் போய் சனீஸ்வரன் கோவில் தீபத்தில் ரெண்டு ஸ்பூன் இலுப்பெண்ணெய் ஊற்றுவான். அப்புறம் அவன் அப்பா குடும்பத்தோடு வரும்போது ஓரமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பான். விசாலத்தை ரத்து செய்த கையோடு இன்னொரு கல்யாணம் செய்து கொண்ட அந்த அப்பன் நாலு பெண் குழந்தைகளோடு மாசாமாசம் வந்து ஊமைப் பாட்டி வீட்டுத் திண்ணையில் உட்கார்கிறதும் அந்தக் குழந்தைகள் அதிசயப் பிராணியைப் பார்க்கிறதுபோல் நாகநாதனைப் பார்க்கிறதும் தவறாமல் நடக்கிற காட்சிகள். அதெல்லாம் அனேகமாக அந்தக் குழந்தைகளில் ஒன்றின் கையில் அட்லாஸ் மாதிரி விரிந்த ரெண்டு பெரிய பத்து ரூபாய் நோட்டுக்களை நாகநாதன் வைப்பதில் முடியும். பஸ் பிடிக்க விரையும் குடும்பத் தலைவன் இப்போது குடிக்கிறதில்லை என்பாள் பாட்டி.

பாட்டி வீட்டில் சாவு விழுந்ததும் பஸ் பிடித்து தனியாக வந்தான் அப்பன். நாலைந்து நாள் சென்று வீட்டு வாசலில் ஒரு கார். வடக்கத்தி பைஜாமா போட்ட ஒரு சோனியான மாமி அவசரமாக இறங்கினாள். கூடவே கழுத்தில் சிலுவை மாட்டிய நாலைந்து கன்யா ஸ்திரிகள். நிதானமாக படி ஏறினார்கள் அவர்கள்.

கிட்டத்தட்ட நாகநாதன் குரலில் சத்தம் இல்லாமல் அந்த கிறிஸ்துவ மாமி அழுதாள். திடீரென வெடித்துச் சிதறி, ‘இதுக்கா உன்னை இங்கே விட்டுட்டுப் போனேண்டா நாகு’ என்று உச்சத்தைத் தொட்டது அழுகைக் குரல். பாட்டி கன்யாஸ்திரிகளுக்குப் பின்னால் நின்றபடி சும்மா பார்த்துக் கொண்டிருந்தாள். நாகநாதனின் அம்மாவும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவே இல்லை.

காய்ச்சல் கண்டு இறந்து போன நாகநாதனின் துணிமணி என்று ஒரு சின்ன மூட்டையை பாட்டி கிளாரா மாமியிடம் கொடுத்தாள். கன்யாஸ்திரிகள் சிலுவை வரைந்து கொண்டார்கள். மாமி புறப்படும் போது ஊமைப் பாட்டி கேட்டாள் – ‘அடுத்த மாசம் மட்டும் கொஞ்சம் வழக்கம் போல பணம் அனுப்பிடுடியம்மா. பத்து நாள் காரியம் பண்ண செலவு ரொம்ப ஆறது. உன் ஆம்படையான் கஷ்டப்படறான் பாவம்’. மாமி ஒன்றும் சொல்லாமல் இறங்கிப் போனதைப் பார்த்தபடி நின்றோம்.

(தினகரன் டிசம்பர் 2010)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன