வடம் பிடிக்க வாங்க

 

அடுத்த நூற்றாண்டில் தொழில்நுட்பத் தமிழை எங்கே நிறுத்தலாம்?

செம்மொழி மாநாட்டுக்கு நல்வாழ்த்தையும் கூடவே ஒரு கோரிக்கையையும் சொல்லிக் கொண்டு தொடங்குவோம்(கோரிக்கை கொசுறாக வராத வாழ்த்து ஏது?)

‘ஆனைக் காரியத்திலே சேனைக் காரியமாக’, மாநாட்டை ஒட்டி மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களில் ராடார் நிறுவ தமிழக அரசு ஏற்பாடு செய்தால், விமான விபத்து அபாயங்களில் இருந்து தப்பிப் பிழைத்து, தமிழ் உலகே மறுபடி வாழ்த்தும். அடுத்தடுத்த கோரிக்கைகளையும் கூடவே வைக்கும்.ராடாரும் தொழில்நுட்பம் தொடர்பானது தான். ஆனாலும் டெக்னாலஜி என்றால் சட்டென்று கம்ப்யூட்டரும் அதோடு இணைந்த சிந்தனையாக இணையம் என்ற இண்டர்நெட்டும் மாத்திரம் நம்மில் பலருக்கும் நினைவு வருகிறது போல் மாநாட்டு அமைப்பாளர்களுக்கும் வந்ததைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.ஊரோடு ஒத்து வாழணுமா? சரி. கம்ப்யூட்டரையே எடுத்துக் கொள்வோம். சுவர் ஓரமாக உட்கார்த்தி வைத்திருக்கும் அதை இயக்கலாம் – மின்சாரம் இருந்தால். பொத்தானை அழுத்தி, திரை உயிர் பெற்றதும் ரஹ்மானின் இசையமைப்பில் முதல் துளி போல் அற்புதமான ஒலி. அப்புறம் ‘விண்டோஸ் இஸ் ஸ்டார்டிங் நௌ’ என்று செய்தி. எங்க இங்கிலீஷ் வாத்தியார் கேட்டால் இலக்கணப் பிழை என்று மணிக்கட்டில் அடிப்பார். தப்போ, சரியோ, இதெல்லாமே இங்கிலீஷில் தான்.

மைக்ரோசாஃட் பில்கேட்ஸை தட்டிக் கேட்க முடியாது. ஆனாலும் தயவாகக் கேட்கலாமே. மாட்டேன் என்றால் யாரும் சமைத்து யாரும் பயன்படுத்தும் இலவச சத்திரச் சாப்பாடான லைனக்ஸ் இருக்கவே இருக்கு. தமிழில் யார் முதல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எழுதப் போகிறோம்? எப்போது?

கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்துரு (font) இறக்கிக்கலாம். மாநாடு தொடர்பாகப் பத்திரிகையில் வெளியான செய்திக் குறிப்பில் ‘எழுத்துறு’ன்னு தப்பா அடிச்சு வந்திருக்கு. அதை விடுங்க. என்ன மாதிரியான எழுத்துரு? தமிழுக்கே தனியான டிஸ்க்கியா, ‘டாப்’-ஆ, டாம்-ஆ, உலகப் பொதுமறையான யூனிகோடா என்று ரெண்டு மாமாங்க காலம் தமிழ்-இணைய அறிஞர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களுக்கு விமானம் ஏறிப்போய்ப் போரிட்டு, ஒரு வழியாக யூனிகோட் எழுத்துருவை ஏற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்ய இத்தனை காலமாச்சு!

இப்போதைக்கு தமிழ் யூனிகோட் எழுத்துருவையும், முரசு-அஞ்சல் போன்ற தமிழ் மென்பொருட்களையும் பயன்படுத்தி, இங்கிலீஷ்கார கம்ப்யூட்டரில் தமிழில் எழுதி, அச்சடித்து, மின்னஞ்சல் அனுப்பி, இணையத்தில் போட்டு வைக்கலாம். வாழ்க.

தமிழ் வெர்ச்சுவல் பல்கலைக்கழகம், மதுரைத் திட்டம் போன்ற இணைய தளங்களில் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திவ்யப் பிரபந்தம் தொடங்கி பாரதி, பாரதிதாசன் படைப்புகள் வரை இப்படித் தட்டித் தட்டி சேமித்து வைத்திருக்கிறார்கள். பொள்ளாச்சி நசன் போன்ற அபூர்வ மனிதர்களின் தயவால் தமிழில் சிறு பத்திரிகைகளும் நூறு வருடத்துக்கு முந்திய தமிழ் இதழ்களும் ஸ்கேனரால் வருடப் பட்டு பிம்பமாக இணையத்துக்கு வந்தன. இவர்களும் வாழ்க.

ஸ்கேனர் என்றதும் நினைவு வருது. பழைய புத்தகத்தை வருடி ஏற்படுத்திய நகலை அப்படியே எழுத்துருவாக மாற்றி சேமித்து வைக்க ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் சாதனங்களான ஒ.சி.ஆர் போன்றவை பல ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன. ஹார்ட்வேர்- சாப்ட்வேர் தொகுதியான இந்த ஓ.சி.ஆரை தமிழ்ப் புத்தகங்களுக்கும் பயன்படுத்தப் புதிதாக எழுதிய போது முதல் சிக்கல் – லை, நை, னை, ணை இதெல்லாம் பழைய உருவில் இருந்தால் ஒ.சி.ஆர் தடுமாறும். அது ஒளவையாரை ஒ-ள-வையார் என்று வேறு படித்து அரண்டு கொண்டிருந்தது. ஒரு வழியாக தட்டிக் கொட்டி சரி செய்து மென்பொருளை நேராக்கியதாக எப்போதோ செய்தி படித்த நினைவு. அப்புறம் மங்கலான அச்செழுத்தில் பழைய புத்தகங்களை வருடும் போது எழுத்து புரியாமல் பிரச்சனை வேறு. சமாளித்தார்களா? எல்லோரும் உபயோகிக்க ஏதுவாக, சொற்ப விலைக்கு அல்லது இலவசமாக எப்போது தமிழ் ஒ.சி.ஆர் கிடைக்கும்?

வருடியோ, பெட்டியில் பொறுமையாகத் தட்டியோ தமிழ்ப் புத்தகங்களை இணையத்தில் ஏற்றி வருங்காலத் தலைமுறை படிக்க வாய்ப்பாக சேமித்து வைப்பது நல்ல காரியம் தான். ஆனால் இலக்கியம் மட்டும் போதுமா? தமிழில் தொழில்நுட்பத்தை இணையம் ஏற்றுவது பழைய – புத்திலக்கியப் படைப்புகளோடு முடிந்து விட்டதா? தமிழ்க் கம்ப்யூட்டர் இலக்கியத்தைக் கடந்து அறிவியலை, மருத்துவத்தை, பெர்மா தியரியையும், கர்மாகர் சமன்பாட்டையும் விவாதிக்கும் கணிதத்தை எல்லாம் எப்போது இணையத்தில் தமிழில் ஏற்றப் போகிறது?

‘அன்பே’ன்னு விளிக்க அத்தான் இல்லை, பிள்ளை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கறது போலத்தான் இது. ஆர்க்கியாலஜியில் இருந்து ஏ டு இசட் ஆக, ஸுவாலஜி வரை தமிழில் அறிந்து கொள்ள புத்தகங்கள் வேணும். ஆர்க்கியாலஜியை தொல்பொருள் ஆராய்ச்சி என்றும், ஸுவாலஜியை உயிரியல் என்றும் தமிழ்ப் படுத்திவிட்டு அக்கடா என்று ஓய்வு எடுக்கிற விஷயமில்லை. உட்கார்ந்து பொறுமையாக தொழில்நுட்பச் சொற்களைத் தமிழாக்க வேண்டும்.

எல்லா டெக்னிக்கல் வார்த்தைக்கும் நல்ல தமிழில் கலைச் சொல்லாக்கம் நடத்தியே ஆகணும் என்ற பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தி, அங்கங்கே ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பாவித்து, கொஞ்சம் கொஞ்சமாக தமிழுக்கு மாறுவது எளிய வழி. சுலபமாகப் புரிய வைப்பது தான் இங்கே நோக்கம். தமிழ்ப் புலமையைக் காட்ட தமிழ் சினிமா உட்பட வேறு வழிகள் இருக்கின்றன.

அடுத்து, தமிழ் என்சைக்லோபிடியா. விக்கிபீடியாவின் முதுகில் குதிரையேறி தமிழ் விக்கியை உருவாக்கலாம் தான். ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கென்று எப்போது ஒரு தக்கி (தமிழ் விக்கி), தமிழ் மேய்வான் (ப்ரவுசர்) கிட்டும்? அப்புறம் தமிழ் எழுத்தில் இணைய தளப் பெயரை எப்போது வைக்கலாம்?

நாம் இங்கே இணையத்தில் தமிழைக் கொண்டு வரப் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ் எழுதத் தெரியாமல் இரண்டு தலைமுறை வளர்ந்து விட்டதைக் கணக்கில் எடுத்துக் கொண்டோமா? இந்தியா உள்ளிட்ட பன்னாட்டுத் தமிழர்களில் எத்தனை பேருக்கு தமிழில் தன் பெயரை மட்டுமாவது எழுதத் தெரியும்? இணையத்தில் தமிழ் சொல்லிக் கொடுக்க, ஒளி-ஒலி உருவத்தில் பெரிய அளவில் ஏற்பாடு உண்டா?

இதெல்லாம் அரசு மட்டும் செய்கிற காரியம் இல்லை. ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர் இது. வாருங்கள், வடம் பிடிப்போம்.

இரா.முருகன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன