மறுபடியும் கும்பகோணம்

 

ஏதோ ஒரு பக்கம் இரா.முருகன்

கும்பகோணம் என்று எங்கேயாவது கேட்டால் எனக்கு வென்னீர் பக்கெட் தான் உடனடியாக நினைவு வரும். அதென்னமோ, வேறே நாட்டுக்கு, ஊருக்குப் பயணம் போகும்போது எல்லாம் சாவதானமாக திட்டம் போடுவேன். ராமராஜ் ஜட்டி தொடங்கி பல் துலக்கும் பிரஷ் ஈறாக எடுத்துப் போக வேண்டியவற்றின் பட்டியல் தயாரிக்கப்படும். சேர்த்து வைத்திருந்த அந்தப் பட்டியல்களை இப்போது பார்க்கும்போது ஒன்று சட்டென்று புரிகிறது. பத்து வருடம் முன்னால் பாங்காங் போக எடுத்துப் போனதை விட சமீபத்திய பயணங்களுக்காக மூட்டை கட்டியது ஆகக் குறைவு. வயது தேவைகளைக் குறைக்காவிட்டாலும், இல்லாமல் சமாளிக்கக் கற்றுத் தருகிறது. இலக்கியப் பட்டியல்களுக்கு இது பொருந்தாது.
கும்பகோணம் போவது என்பது எப்போதுமே பட்டியல் போட லாப்டாப்பில் எக்சல் ஷீட்டை திறக்க சந்தர்ப்பம் கொடுக்காமல் திடுதிப்பென்று நிகழ்வது. இன்னும் ஒரு மணி நேரத்திலே கிளம்பு என்று நாவல் அத்தியாயத்தில் பாதி எழுதும்போது கையைப் பிடித்து நிறுத்தி அரை நிஜாரில் இருந்து ஜீன்ஸ் டீஷர்ட்டுக்கு மாற வைப்பது. அசமஞ்சமாக இருக்காமல் ஆக்ஷன் 500 சாப்பிட்ட உத்வேகத்தோடு இயங்க வைப்பது. ஒரு பத்து வருடம் முன்னால் இப்படிப் போனதைப் பற்றி, ‘ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில்’ என்று எழுதினேன். பொழுது போகாத போது, ராத்தூக்கம் வராத நேரத்தில் சாவதானமாக அதை http://www.eramurukan.in/tamil/magazines.php?page=4&count=5 என்று இண்டர்நெட்டில் தட்டிப் படித்துக் கொள்ளலாம்.

சென்னையிலிருந்து திருச்சி, அங்கே இருந்து கும்பகோணம் என்று கொஞ்சம் சுற்று வளைத்து ஒரு பயணம். பாதி தூரம் பஸ், அப்புறம் கார் என்று திட்டம்.

ஞாயிற்றுக்கிழமை நடுப்பகல் நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையம் பேய் உலவுகிற பூமி போல் அமானுஷ்யமான நிசப்தத்தோடு இருந்தது.

கோயம்பேடு மனிதர்கள் என்று குறிப்பிடத் தகுந்த ஒரு பத்து இருபது பேர். தகர ஷெட்டில் வெக்கையைப் பூரணமாக உள்ளே வாங்கி தரையெல்லாம் வியர்வை ஒழுக அதில் சரிபாதிப் பேர் படுத்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். சுவர் ஓரமாகப் படுத்திருந்தவர் தூங்கி விழித்து மார்பில் விரித்து வைத்திருந்த சினிக்கூத்து பத்திரிகையை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார். கழிவறை வாடையைப் பொருட்படுத்தாமல் வெளியே ப்ளாஸ்டிக் டிரம் மேல் ஆரோகணித்து, பூப்போட்ட தட்டில் இன்னொருத்தர் சாவகாசமாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மிச்ச சொச்ச நபர்கள் மினரல் வாட்டரும் பிஸ்கட்டும் விற்கும் கடைகளில் மௌனமாக வியாபாரத்துக்குக் காத்திருந்தார்கள். என் பங்குக்கு நானும் சூழ்நிலைக்குப் பொருத்தமாக, பூச் பாதிரியார் மருது பாண்டியர்கள் பற்றி எழுதிய கையேடு என்று நெருக்கமாக அந்தக்கால ரெமிங்டன் டைப்ரைட்டரில் மங்கலாக அடித்து, அதிமங்கலாக நகல் எடுத்து அனுப்பியிருந்த அவசரப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

கோயம்பேடு விட்டதும் தெரியவில்லை. பாதி தூரம் கடந்ததும் தெரியவில்லை. பூச் பாதிரி பூச்சி காட்டாமல் கச்சிதமாக சரித்திரத்தை எழுதியிருந்தார். அவர் மருது பாண்டியர்களை சந்தித்தது பற்றி எங்கேயாவது குறிப்பிடாமல் போவாரா என்று எதிர்பார்ப்போடு தொடர்ந்து படித்து ஏதோ தோன்ற கடைசிப் பக்கத்துக்குத் தாவினேன். பூச் தன் கட்டுரைக்கு ஆதாரமான தகவல்கள் கொண்ட புத்தகங்களின் அட்டவணையை இணைத்திருந்தார். படித்ததும் மகா பெரிய ஆச்சரியம்.

1957-ல் வெளியான நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய ‘தென்னிந்திய வரலாறு – இரண்டாம் பதிப்பு’, ‘திராவிடத்தின் வரலாறு’ இப்படி அங்கங்கே அந்தப் பட்டியலில் கண்ணில் பட்ட பெயர்கள் சட்டென்று சொன்ன தகவல் – பாதிரியார் பூச் முன்னூறு வருஷத்துக்கு முந்தியவர் இல்லை. 1960-ல் இந்தியா வந்தவர்தான்!

‘சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம்’, ஐம்பது வருடத்துக்கு முந்தி ஒரு பாதிரியார் ஒழிந்த நேரத்தில் எழுதி வைத்த டயரிக் குறிப்பு என்று புரிந்ததும் புத்தகத்தை மடக்கி வைத்தேன். அந்தி உறங்க திருச்சி வந்து சேர்ந்திருந்தது.

அதென்ன அந்தியுறக்கம்? எப்படிய்யா சாயந்திரத்திலே தூக்கம் வரும்? இதெல்லாம் கேட்கக் கூடாது. அன்னிய மொழியில் நினைத்து தமிழில் எழுதினால் இதான் விளைவு. மலையாளத்தில் அந்தியுறங்கல் என்றால் ராத்தங்கல் என்று தமிழில் அர்த்தம். அங்கே கோலக் குழல் என்றால் வாசலில் கோலம் போட உபயோகிக்கிற குழல் இல்லை. கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழலைக் கவித்துவமாகச் சொல்வது. ‘நான் அயோக்கியன்’ என்றால் ஒப்புதல் வாக்குமூலம் இல்லை, ‘எனக்குத் தகுதி இல்லை – இன்னெலிஜிபிள்’ இத்யாதி. இதெல்லாம் எதுக்கு? அந்தியுறக்கத்துக்கு முன்பாரா, பின்பாரா, அவ்வளவே.

விடிகாலை கும்பகோணம் பயணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு அந்தியுறங்க முயற்சி செய்ய வாகாக, திரும்ப பூச் பாதிரியார். என்னமாக் கதை விட்டிருக்கார்!

திருச்சி – கும்பகோணம் போக காரில் பெட்ரோல் போடத் தேர்ந்தெடுத்த பங்கில் எழுபது கடந்த நரை மீசைக்காரர் தனியாக அல்லாடிக் கொண்டிருந்தார். பர்மாஷெல் காலத்து மனிதர். சின்ன சைஸ் நாஸிலில் அன்லீடட் பெட்ரோல் அளந்து விட்டு மைக்ரோசிப் காட்டும் அளவை உத்தேசித்து நிறுத்திப்போட அவர் பட்ட பதட்டத்தை பரிதாபமாகக் கவனிக்க வேண்டி வந்தது. உதவி செய்ய முடியாத காரியம். அவர்தான் தொடங்கி, முடித்து, காசு வாங்கிப் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு வழியாக பத்து நிமிடம் போராடி பெட்ரோல் டாங்க் ஃபுல்.

அடுத்து காற்று சோதனை. அது அவருக்கும் சோதனை நேரம். என்ன அழுத்திப் பிடித்தாலும் முன் வசத்து சக்கரத்தில் காற்று ஏறுவேனா என்கிறது. நான் உதவிக்குக் கைநீட்ட, இன்னொரு கை தடுத்தது. பெட்ரோல் பங்கு முதலாளி.

அவர் போடுவார். பொறுமையா இருங்க. சம்பளம் வாங்கறார் இல்லே.

உலகமே ரம்மியமான காலை ஆறரை மணிக்கு நீலச் சீருடை அணிந்து முகமும் உடலும் வியர்வையில் குளிக்க, கை நடுங்க அந்த முதியவர் எங்கள் காருக்கான பிராணவாயு அளிப்பதே தன் வாழ்க்கையில் இறுதி லட்சியம், அது முடிந்தால் உயிரை விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தவர் போல் மறுபடி மறுபடி அழுத்திப் பிடிக்க, முதலாளி வர்க்கத்தின் முறைப்பை என்னால் தாங்க முடியவில்லை.

உங்க gauge காஜ்லே ஏதொ ப்ராப்ளம். சரி பாருங்க சார். பாவம் பெரியவர் பத்து நிமிஷமா கஷ்டப்பட்டும் முடியலே

முதலாளியிடம் சொல்லி விட்டு, அவர் பார்வையில் பட அந்த சீனியர் சிட்டிசன் சிப்பந்திக்கு பத்து ரூபாய் கொடுத்தபடி காரில் ஏறினேன். போகிற வழியில் வேறே பெட்ரோல் பங்கு இருக்காதா என்ன? அங்கே உடல் தளர்ந்த தொழிலாளிகளும் மனசு கெட்டியான முதலாளிகளும் இருக்க மாட்டார்கள். அல்லது சக்கரத்தில் இருக்கிற காற்று பத்திரமாகக் கும்பகோணம் வரை கொண்டு விட்டு விடும்.

திருச்சி தஞ்சை மார்க்கமாக கார் விரைந்து கொண்டிருந்தது. காவிரிக்கரை பிரதேசம். வரிசையாக மொபைல் போன் அடிக்கிற சத்தம். முதலாவது என்னுடையது. நண்பர் யோகி. செங்கிஸ்கான் பற்றி நுணுக்கமாகப் பேச ஆரம்பிக்கிறார். தொடர்ந்து அடித்த நண்பர் போனில் வீட்டுக்காரம்மா – ‘கும்பகோணத்திலே பேக்கரி ரொட்டியும் ரஸ்க்கும் வாங்கிட்டு வாங்க’. அடுத்து டிரைவரின் மொபைல். ‘சாயந்திரம் வந்துடுவீங்க இல்லே. கோவை ட்ரிப் இருக்கு’.

காவேரிக்கரை கிராமங்களின் சாயல் முழுக்க மாறி அருகிலிருக்கும் நகரத்தின் நீட்சியாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. உழவர் ஓதை, மதகோதை, உடைநீர் ஓதை, விழவர் ஓதை எதுவும் கேட்கவில்லை. மோட்டார் சைக்கிள்கள், ப்ராய்லர் கோழி அடைத்த மடேடார் வான்கள், ஏசு திருச்சபை என்று போட்ட வெள்ளை மாருதி வேன், அப்புறம் மொபைல் போனில் பேசிக்கொண்டே பஸ்ஸுக்காக நிற்கிற ஆண்கள், பெண்கள். முதுகில் நேப்சாக்கோடு பள்ளி போகிற பிள்ளைகள். துணிப் பைக்கட்டைத் தூக்கிக் கொண்டு ஒரே ஒரு சின்னப் பெண்ணை மட்டும் பார்த்தேன். கவனிப்பதற்குள் அவள் பஸ்ஸில் ஓடிப் போய் ஏறிவிட்டாள்.

தஞ்சையைச் சுற்றி பத்து இருபது கிலோமீட்டர் கிராமங்களில் பயிர்த் தொழில் நிலம் போக மீதி இடத்தில் நகரில் எழும்ப வெற்றுவெளி கிடைக்காத கட்டடங்கள் மெல்ல ஊர்ந்து இடம் பிடித்தபடி உள்ளன. டவுனில் உத்தியோகம் பார்க்கிறவர்கள் ஹவுசிங் லோன் போட்டு கிராமத்தில் (அவர்களுக்கு அது புறநகர்) வீடு கட்டிக் குடிபுகுந்து டப்பர்வேர் டிபன் பாக்ஸ் வைத்த நீல பிளாஸ்டிக் உறை, கூலிங் கிளாஸ் சகிதம் நகருக்கு வேலைக்கு வந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பிடித்ததுபோக மிச்ச இடத்தில் மொபைல் போன் விற்கும் கடையும், மதுக் கடையும் இடம் பிடித்திருக்கின்றன. கலர் சோடா, கோலி சோடா வகையறா நான் பார்த்த ஒரு கிராமத்துக் கடையிலும் காணோம். இருந்தாலும் உள்ளே கண்ணுக்கு மறைவாக வைத்திருப்பார்கள் போலிருக்கு.

கிராமப் பகுதியின் கொஞ்ச நஞ்ச குளிர்ச்சியும் காணாமல் போக, கும்பகோணம் காலை பத்து மணிக்கே உலையில் ஏற்றின மாதிரி புழுங்கியது. தண்ணீர் வற்றி சகதி தெரிந்த மகாமகக் குளத்தின் கரையில் ஒரு குஜராத்திக் குடும்பம் சிரத்தையின்றிப் பார்த்து பழக்க தோஷத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டிருந்தது. சுற்றுலாவாக வருகிறவர்களுக்கு ஏற்படுகிற இந்தத் தன்னிச்சையான குழு செயல்பாட்டில், செல்போனில் படம் பிடிப்பதும் அடக்கம்.

மகாமகக் குளத்துப் புராணத்தை விவரித்து சுவாரசியம் கூட்ட முடியாமல் கூட வந்த கைடு பரபரப்பு செய்திக்கு அலைவரிசை மாறியது கண்ணில் பட்டது. ‘மகாமகம் போது பத்தாயிரம் பேர் நெரிசல்லே இங்கே உயிரை விட்டுட்டாங்க’.

‘ராத்திரி ஆவி உலாவுமா?’ சீரியஸா நக்கலா என்று தெரியாத தோரணையில் கேட்டார் காந்தி குல்லாய் வைத்த சேட். உடம்பு பருத்த சேட்டாணியம்மா சுப்ரஹுயே ஜீ என்று சிரித்தபடி அடக்கினாள். பத்து வருடம் முன் மகாமகம் நடந்தபோது இவள் ஒரு ரதியாக இருந்திருப்பாள் என்று அந்த சிரிப்பு சொன்னது.

அந்தக் குஜராத்திக் கூட்டத்தை வளைத்து ஆடித் தள்ளுபடி சில்க் புடவை வாங்கத் தள்ளிக் கொண்டுபோக இன்னொரு கூட்டம் தயாராகக் கூடவே நடந்தது. க்யா ஆடி? டிஸ்கவுண்ட். ஹண்ட்ரட் பெர்செண்ட். படாபடா ஐட்டம். கோவில் யானை தும்பிக்கையால் சேட் தலையில் ஆசிர்வாதம் செய்து ஆமா என்றது.

எல்லாக் கோவிலும் அடச்சுப் பூட்டிய வேளை. ஏசி ஓட்டலில் படியேறி ராத்திரி ஏழு மணி வரை அறை கேட்டபோது விசித்திரமாகப் பார்த்து, கம்ப்யூட்டரில் ஏதோ கணக்குப் போட்டு, எழுநூற்றுப் பதினைந்து ரூபாய் என்று முடிவானது. கவுண்டருக்கு வெளியே வைத்த தொலைக்காட்சியில் இண்டோர் காமிரா மூலம் அவ்வப்போது மாறும் ஓட்டலில் உட்புறம் காட்சியாக விரிந்தபடி இருந்தது.

ரூமுக்குள்ளேயும் காமிரா வைச்சிருக்கீங்களா?

இல்லே சார். நீங்க தைரியமாகப் போங்க. அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே.

அணிந்திருப்பது என்ன கலர் உள்ளாடை என்று சாயந்திரத்துக்குள் கண்டுபிடித்திருந்தாலும் அந்தத் தகவலால் யாருக்கு என்ன பிரயோஜனம்? சர்க்காரும் தனியாரும் எடுக்கிற எண்ணற்ற சர்வே போலத்தான் இதெல்லாம்.

சாயந்திரம் சாரங்கபாணி கோவிலுக்கும், ராமஸ்வாமி கோவிலுக்கும், கும்பேஸ்வரர் கோவிலுக்கும் எல்லாம் பார்த்து அலுத்த சுற்றுலாப் பயணியாகப் போனேன். பத்து வருடத்துக்கு முந்தி இருந்த சிற்பம் பார்க்கும், ஆழ்வாரும் நாயன்மாரும் எழுதியதைச் சுவரில் வரைந்த ரதபந்தம் படிக்கும் ஆவல் கூட அடங்கியிருந்தது. ராமஸ்வாமி கோவில் பட்டாச்சாரியார் பக்கத்தில் கோவில் ஊழியரிடம் பேசியபடி கர்ப்பகிருகத்துக்குள் போனபோது தூக்கலான துளசி வாடையில் pure dejavu.

எல்லாக் கோவில் பிரகாரமும் சுத்தமாக வைக்கப்பட்டிருப்பது கண்ணை ஈர்த்தது. வெளிப் பிரகாரத்தில் கிரிக்கெட் பழகிக் கொண்டிருந்த சின்னப் பசங்கள், பந்து என் தலையில் விழ வெரி சாரி அங்கிள் என்றார்கள். கிரிக்கெட்டும், அங்கிள் ஆண்ட்டி கலாசாரமும் தான் தமிழ்நாட்டை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன என்று அடித்துச் சொல்வேன். ஓட்டல் ரூமில் போய்ச் சொன்னால் கும்பகோணம் முழுக்க ஒளிபரப்பாக சந்தர்ப்பம் உண்டு.

88888888888888888888888888888888888888888888888888888888888888

இண்டர்நெட்டும் சோஷியல் நெட் ஒர்க்கிங் என்கிற இணையம் மூலம் சமூக இணைப்பு வசதியும் வந்தாலும் வந்தது. நமக்குத் தேவையில்லாத கவலையை எல்லாம் கூட வழித்து வாரி மேலே போட்டுக் கொண்டு துன்பப்படுவது வாடிக்கையாகி விட்டது.

சமீபத்தில் மும்பை-பூனா பெருவழியில் ஒரு நண்பர் காரில் போய்க் கொண்டிருந்தார். கொட்டு கொட்டென்று கொட்டுகிற தென்மேற்கு பருவ மழை. காருக்கு பத்து அடி முந்திவரைதான் சாலை தெரிகிறது. வெள்ளக் கடலுக்கு நடுவே கார் பறந்து கொண்டிருக்கிறது.

நம்மாளுக்கு அடக்க முடியாத சமாசாரம். ஒண்ணுக்குப் போயே ஆக வேண்டிய கட்டாயம். ஆனால், வண்டியை எங்கேயும் ஓரம் கட்டி நிறுத்த முடியாது. பின்னால் வேகமாக வரும் வண்டிகள் பார்க்காமல் இடித்து விட்டால் உயிருக்கே ஆபத்து.

நண்பர் செல்போனை எடுத்து டுவிட்டர் இணையத் தளத்தில் அனுபவப் பகிர்வு நடத்த ஆரம்பித்தார். ட்விட்டர் இப்போது கீச்சு என்று தன் பெயரை நல்ல தமிழிலும் விளம்பரம் செய்வதோடு இண்டர்நெட்டிலோ, மொபைல் மூலமோ தமிழிலும் கீச்சு கீச்சென்று சேதி சொல்ல வழி செய்கிறது. அது வாழ்க.

அது சரி, நண்பர்? ‘ரொம்ப முட்டிக்கிட்டு வருது’, ‘தாங்கலே இன்னும் எவ்வளவு தூரம் வண்டியை ஓட்டிட்டுப் போகணுமோ?’, ‘அதிகமா குளிருது. குத்த வைக்கணும் போல இருக்கே, என்ன பண்ணட்டும்?’

அவர் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கீச்ச, நானும் ட்விட்டரில் சமூக அடிப்படையில் இணைந்த மற்ற நண்பர்களும் அதைப் படித்து, ‘பொறுத்துக்குங்க, கொஞ்சம் நேரம் தான்’ என்று தைரியம் சொல்லியபடி பதிலுக்குக் கீச்சுகிறோம்.

அரைமணி நேரம் என் மற்ற வேலையை எல்லாம் விட்டுவிட்டு மும்பை நண்பரோடு நானும் மானசீகமாக துடிக்கத் துடிக்கப் பயணம் போனேன்.

‘அப்பாடா, ஒரு வழியோர ஓட்டல். அற்ப சங்கை தீர்ந்தது. ஆனா ஓட்டல் பாத்ரூம் குழாய்லே தண்ணி வரல்லே’

நண்பர் கீச, ஆறுதலோடு முதல் காரியமாக நான் பாத்ரூம் போய் விட்டு வந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன