தியூப்ளே வீதி – 3

 

தியூப்ளே வீதி – 3 இரா.முருகன்

நான் ராஜா காலேஜில் பி.யூ.சி என்ற புகுமுக வகுப்பு சேர்ந்ததுக்கும் ‘ஓடிப் போறது’ என்ற பரபரப்பான விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லைதான். ஆனாலும் அந்த வருடம் ஓடுகிற வருடமாக இருந்தது என்பது மட்டும் நிச்சயம். ஆணும் பெண்ணுமாக இளசுகள் அவ்வப்போது காணாமல் போனார்கள். தனித்து இல்லாமல் அவர்கள் ஜோடிகளாகக் காணாமல் போனதாகத் தெரிந்தபோது ‘ஓடிப் போனவர்கள்’ முத்திரை குத்தப்பட்டு சுடச்சுட அதிகாரபூர்வ செய்தி வெளியாகும்.

அதாவது காலையில் நியூஸ் பேப்பரோடு ‘இன்னார் வீட்டுப் பொண்ணு – பிள்ளை ஓடிடுச்சாமே’ என்ற செய்தியையும் நல்லையா வழங்குவதில் தொடங்கும் இது. நல்லையா செய்தி தருகிற விஷயத்தில் ஆகாசவாணி மாதிரி. கேட்கிறவருக்குப் பிரயோஜனப் படுகிறதோ, இல்லையோ, ‘நான்கு நாள் அரசுப் பயணமாக புதுடில்லி வந்த கென்யா அதிபர் ஜோமோ கென்யாட்டா இந்திய – கென்ய வர்த்தக மற்றும் கலாசார உறவுகளின் வளர்ச்சியில் திருப்தி தெரிவித்தார்’ என காலையில் பீப் பீப் சங்கு முழக்கி அகில பாரத செய்தி அறிக்கை ரேடியோ கொரகொரப்புக்கு நடுவே வருமே. அது போல், நல்லையாவின் தொடர் ஓட்டச் செய்திகள் சகலருக்கும் சமமாக பீடிப் புகை இருமலோடு பாரபட்சமின்றி வினியோகிக்கப்படும்.

ரேடியோவில் கொரகொர அதிகமாகி, செய்தி அறிக்கை வாசிக்கிற விஜயம் குரலுக்கும் பஞ்சாபகேசன் குரலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகும்போது, எதிரில் ‘ராஜன் மான்சூனைஸ்டு ரேடியோஸ்’ கடை வைத்திருந்த புஷ்பவனம் திண்ணைக் கடையில் ரேடியோவைச் சேர்க்க வேண்டி வரலாம். ரிப்பேர் செய்வது தவிர, காலநிலை எப்படி இருந்தாலும் கரகரப்பு இல்லாமல் தெளிவாகக் கேட்கும் ரேடியோ என்று லேபல் அடித்து நேஷனல் எக்கோ ரேடியோவை நூற்றைம்பது ரூபாக்கு விற்றுக் கமிஷன் பெறுகிறதும் புஷ்பவனத்தின் தொழிலில் அடங்குவது.

‘ஏண்டா, திரும்பவும் நோக்காடா உங்க ரேடியோவுக்கு? மார்க்கோனி ரேடியோ இது. 1954 மேக். எனக்குக் கல்யாணமான வருஷம். மாமியும் நானும் பாரு சதா லொக்லொக்குனு இருமிண்டே இருக்கோம். வயசு ஆறதே. ரேடியோவுக்கு கிழடு தட்டிடுத்து. போட்டுட்டு பளிச்சுனு ஒரு நேஷனல் எக்கோ வாங்கிடலாமே. மாசம் முழுக்க மழை பெஞ்சாலும் நம்ம வீட்டுக்குள்ளே கணீர்னு நியூஸ் கேட்கும்.’

புஷ்பவனத்தின் லாஜிக் எங்கேயோ இடிக்கிறதாகத் தோன்றினாலும், ‘சரிதான். புது வருஷத்துலே கட்டாயம் புது ரேடியா வாங்கிடலாம்’ என்று வாக்குத் தருவதுதான் தெரு வழக்கம். அதே போல், நம்பினாலும் இல்லாவிட்டாலும் நல்லையாவின் ஓடிப் போனவர்கள் செய்தி காரண காரியங்களை ஆராயாது மெஜாரிட்டி மகாஜனங்களால் போகிற போக்கில் வாங்கப்பட்டு தேவையான போது மேலும் பகிர்ந்து கொள்ளப்படும். எனக்கென்னமோ ஓடிப் போனதாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெண்களும் நான் கவனித்துப் பார்க்கத் தவறிய அங்க லாவண்யமுள்ள அழகிகளாகவும், அவர்களுடைய சக ஓட்டக் காரர்கள் சகல சாமர்த்தியமும் நிறைந்த ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாத கல்லுளுமங்கன்களாகவும் படும். சரி, இன்றைய தலைப்புச் செய்தி – ஆதினமிளகி மகள் ஓட்டம்.

குட்டி எருமைப் பண்ணை. அதாவது ஏழெட்டு எருமைகள் மட்டும் இருக்கிற ஒரு சின்னக் கொட்டில். ஆதீனமிளகி அதை நடத்தி ஊரில் இருக்கப்பட்ட பாரம்பரியம் வாய்ந்த மாயழகு டீக்கடையில் தொடங்கி, முந்தாநாள் புதிதாக திறந்த சுபாஷ் டீ ஸ்டால் வரை பால் சப்ளை செய்து வந்தார். முனிசிபாலிட்டியும் கொட்டிலுக்கு முன்னால் அடிபம்பு ரூபத்தில் அவருக்கு உதவிக் கரம் நீட்டியது.

ஆதினமிளகி உபரி வருமானத்துக்காக கொட்டிலை ஒட்டி நாலைந்து கீற்று வேய்ந்து ஒரு சின்னப் பந்தலும், ரெண்டு மர பெஞ்சும், அண்டா குண்டாவுமாக ஒரு கடை நடத்திக் கொண்டிருந்தார். அங்கே டீ கிடைக்காது. இரவில் மட்டும் திறந்திருக்கும் கடை அது. ராத்திரி எட்டு மணிக்கு பனங்கல்கண்டு போட்டுக் காய்ச்சின எருமைப் பால் வியாபாரம் சக்கைப்போடு போடும். அந்தப் பால் அறிமுகப்படுத்தப்பட்ட பின் ஊரில் பிரசவ ஆஸ்பத்திரி கட்டில்கள் காலியாக ஒருநாள் கூடக் கிடந்ததாகச் சரித்திரம் இல்லை என்று பரவலான பேச்சு.

‘ஆதினமிளகியோட ரெண்டாம் பொண்ணு பெட்டிக்கடை சிவராமனோட ஓடிடுச்சாமே. ஒரு வருஷமா கடுதாசி பழக்கமாம். மதுரை போயிருப்பாங்கன்னு ஒரு ஊகத்துலே எருமைப் பண்ணைக்காரரும், பெட்டிக்கடையான் அப்பாரும் அடுத்த அடுத்த பஸ்ஸுலே மதுரை போயிருக்காங்களாம்’.

நல்லையா செய்திக்கு தற்போதைய நிலவரம் இது. பிசிக்ஸ் பிராக்டிக்கல் வகுப்பில் மஜீத் தெரு ராமானுஜலு அறிவித்தான். மதியம் நாலு மணிக்கு உடம்பு முழுக்க வியர்த்துக் கொட்டினாலும் அவனுடைய நெற்றியில் நாமம் மட்டும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தின மாதிரி துளிக்கூட அலுங்காமல் இருந்தது. பிறக்கும்போதே சிவப்பும் வெள்ளையுமாக முத்திரை குத்தி அனுப்பி இருப்பாங்களோ.

ராமானுஜலு நாயுடு நாமத்தை விட அதிசயம், லெட்டர் போக்குவரத்து. ஓடிப் போகிறவர்கள் எல்லோரும் ஏதோ கணக்கு வைத்துக் கொண்டு பிரஸ்தாப தினத்துக்குக் குறைந்தது ஆறு மாதம் முன்னால் தொடங்கி பரஸ்பரம் லெட்டர் கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். பக்கத்து, எதிர் வீடுகளில் இருந்தாலும் இப்படியான ரகசிய லெட்டர் பரிமாற்றமே ஓடிப் போக முன்னறிவிப்பு என்பது எழுதப்படாத விதி.

பிசிக்ஸ் தியரி கிளாசில் தக்கலை ஞான வெளிச்சம் என்ற லெக்சரர் மலையாள வாடை அடிக்கும் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தின ஸ்க்ரூ காஜை கையில் பிடித்து மகா சன்னமான இரும்புக் கம்பி, தாமிரக் கம்பி, செப்புக் கம்பி வகையறாக்களின் அகலத்தை, கன பரிமாணத்தை அளக்கிற செய்முறை வகுப்பு. ஏதோ செயற்கைக் கோள் ஏவுகிற விஞ்ஞானிகள் போல் படு அக்கறையாக கம்பி கம்பியாக அளவெடுத்துக் கொண்டிருந்தோம். தும்பாவிலும் ஸ்க்ரூ காஜ் இருக்கும்.

‘யசோதான்னு பேரு. ஜிமிக்கி போட்டிருக்குமே. கொஞ்சம் தாட்டியான பொண்ணு’.

ராதாகிருஷ்ணன் பொழிப்புரை கொடுத்தபடி வெர்னியர் காலிப்பரால் ஒரு இரும்புத் துண்டை மில்லிமீட்டருக்கும் குறைவான நீளம் சுத்தமாக அளந்து கொண்டிருந்தான். தக்கலை மகா விஞ்ஞானி முந்தாநாள் வகுப்பில் அறிமுகப்படுத்திய வெட்டுக்கிளி மாதிரியான இன்னொரு வினோத இனம் இது.

‘யசோதாவா? யாரு? உடஞ்ச முன் பல்லு. கண்ணுலே நிறைய மை பூசிக்கிட்டு?’

மணியன் என்கிற பக்கத்து டேபிள் இளம் விஞ்ஞானி குறுக்கே வெட்டினான்.

‘சைலன்ஸ். சத்தம் எளுப்பினீகளோ, பைனலுக்கு நோட்டு சைன் பண்ண மாட்டேன் மக்கா. பியூசி மட்டும் ரெண்டுங்கெட்டானா முடிச்சுட்டு கவர்மெண்டு ஆப்பீசிலே டென் ஏ ஒன் டெம்பரவரி கிளார்க்கனா இருக்க ரெடியாவே?’

கரிமாணிக்கம் என்ற அட்டைக்கரி இரைந்தான். டெமான்ஸ்ட்ரேட்டர் எனும் அதி உன்னத பதவி அவனுக்கு. இங்கே புரபசர், லெக்சரர்களுக்கு ஒத்தாசையாக பிராக்டிக்கல் கிளாஸ் நடத்துகிற இக்கிணியூண்டு உத்தியோகம். இவனும் தக்கலைக்காரனாம். ஞான வெளிச்சத்தோடு இலவச இணைப்பாக இந்தக் கரியையும் மூட்டை கட்டி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

டென் ஏ ஒன் கிடக்கட்டும். பெட்டிக்கடை சிவராமனோடு எருமைப் பண்ணை பொண்ணு ஓடிப் போனால், எனக்கு ப்ரூட் மிக்சர் எங்கே இருந்து கிடைக்கும்?

சிவராமன் பெட்டிக்கடையில் ரசிகர்களால் விரும்பப்பட்டு அதி உற்சாகமாக உண்டு, குடித்து மகிழப்படுகிற பதார்த்தம் இந்த ப்ரூட் மிக்சர். நாட்டு வாழை, மலை வாழை, பூவன் வாழை, பச்சைநாடான் வாழை, ரஸ்தாளி வாழை, சீசனுக்கு மல்கோவா, கிளிமூக்கு, நீலம் மாம்பழ வகைகள், சன்னமாகக் கீறிக் கலந்த பலாச்சுளை, பப்பாளி, திராட்சை, கொடிமுந்திரி, ஆரஞ்சு, சாத்துக்குடி இப்படி ஞானப்பழம் தவிர்த்து இதர சகலவிதமான பழங்களும் தட்டுப்படும் ஒரே உணவு மற்றும் பானம் சிவராமன் காப்புரிமை வாங்காது போன இந்த ப்ரூட் மிக்சர்.

வாய் அகலமாக, முப்பது லிட்டர் பிடிக்கும் ஒரு எவர்சில்வர் அண்டாவை சுமாராகக் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். ஊருணித் தண்ணீர், சப்ஜாடாக வாங்கிய சீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பால்கோவா ரெண்டு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ கலந்து பாகு பதத்தில் காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை ஆற வைத்து அழுகிப் போய்க் கொண்டிருக்கும் பழத்தை எல்லாம் நறுக்கிப் போட்டு சாக்ரினையும், ஒண்டிப்பிலி சர்பத்தையும் சேர்த்து ஒரு கலக்கு. மேலே சப்ஜா விதை. வெந்த சேமியா. ஐஸ், முந்திரிப் பருப்பு. இதுதான் ப்ரூட் மிக்சரின் ரெசிப்பி. சாப்பிட்டுப் பழகிப் பழகி அந்த ருசி தேவாமிர்தமாக மாறின ஒன்று.

சிவராமன் ஓடிப் போனால் அவன் அண்ணன் மீசை மருது இருக்கான். சிவராமன் மேலுக்கு முடியாமல் மட்டம் போட்டால் கிடைப்பது மருது தயாரிப்பு தான். சகிக்காது அது. தோசை மாவு புளித்த வாடை தூக்கலாக வரும். தினசரி அந்த வாடையோடு ப்ரூட் மிக்சர் போட்டால் கடையை இழுத்து மூட வேண்டி வரலாம்.

‘ஓடிப் போறவ தனியாப் போகக் கூடாதா? எதுக்காக சிவராமனையும் இழுத்துக்கிட்டுப் போறா’?

மணியனும் ப்ரூட் மிக்சருக்கு அடிமை. ஸ்கூரூ காஜில் அவன் ஆதங்கத்தையும் சேர்த்து நுணுக்கமாக அளந்தபடி சொல்ல பின்னால் இடி முழக்கம். கரி மாணிக்கம். ஒட்டுக் கேட்டுக் கொண்டு உலர்ந்த பல்லி போல நிற்கிறான் கரி.

‘இந்தா வே, காலேஜிலே பிசிக்ஸ் படிக்க வந்தீரா, இந்துநேசன் படிக்க வந்தீரா’?

அவன் மணியனை விசாரித்துவிட்டு என்னையும் சேர்த்துப் பார்த்தான்.

இந்துநேசன் சாதா பத்திரிகையா என்ன? ‘இரு தரப்பு ஏற்றுமதி ஒப்பந்தம் பற்றி சோவியத் தூதுக்குழு பேச்சு வார்த்தை’ என்று தினமணி முதல் பக்கத்தில் தலைப்பு தருவதற்கு ஈடாக இந்துநேசனில் ‘சிங்கப்பூர் போன நடிகை தோல் பிசினஸில் மும்முரம்’ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாச்சே. அல்பமான உள்ளூர் ஓட்ட விவகாரம் எல்லாம் இ.நேசனில் வராது என்று கரியனுக்குத் தெரியாது போல இருக்கிறது. இல்லை, தக்கலையில் யார் ஓடினாலும் இந்து நேசன் லோக்கலாக நூறு காப்பி அச்சடித்து இந்தாவே இந்தாவே என்று கூவிக்கூவி விற்பார்களோ என்னமோ.

மணியனின் ப்ராக்டிக்கல் நோட்டைப் பிடுங்கினான் கரி. நீலம் படர்ந்த சட்டைப் பையில் இருந்து மை கசியும் ரைட்டர் பேனாவை எடுத்தான். பட்டையாக ரெண்டு கோடு போட்டு ‘ரிபீட்’ என்று கோட்டுக்கு நடுவே அகல உழுதான்.

மணியன் கோணலாகச் சிரித்தபடி முழுக்கைச் சட்டையின் கையை மடக்கிவிட்டபடி பிசிக்ஸ் லேபரட்டரியிலிருந்து அமர்த்தலாக வெளியேறினான். அவன் முகபாவம் ‘போடா வெண்ணே’ என்று இருந்தது. இதுக்கு நானாக இருந்தாலும் ரிபீட் போடுவேன்.

சாயந்திரம் ஒரே வேகத்தில் சைக்கிள் விட்டபடி வீட்டுக்குத் திரும்பும்போது மணியன் அடிக்கடி என்னைப் பார்த்து விஷமமாக விசில் அடித்தான். தலையில் கர்ச்சீப் வேறே கட்டியிருந்தான்.

‘எதுக்குடா சீட்டி அடிக்கறே? ரோடுலே போறவங்க காலிப் பசங்கன்னு நினைக்கவா’?

அவனைக் கண்டித்தேன். அடங்கக் கூடிய பிள்ளையா அவன்?

வீட்டு வாசலில் சைக்கிளை சுவரில் சார்த்திவிட்டு நுழைய மணியனும் கூடவே நுழைந்தான்.

முன்வாசல் அறை எனக்கு என்று நானாகவே பட்டா போடாமல் ஆக்கிரமித்திருந்தபடியால் யாரும் உத்தரவன்னியில் உள்ளே வர முடியாது.

மணியன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தான்.

ஸ்க்ரூ காஜ்.

‘எதுக்குடா இந்த எழவை லவட்டிக்கிட்டு வந்திருக்கே’?

நான் மெய்யான கோபத்தோடு கேட்டேன். நாளைக்கு கரிமாணிக்கத்துக்கோ ஞான வெளிச்சத்துக்கோ இது தெரிந்து போனால் தக்கலை கோஷ்டி எங்கள் ரெண்டு பேரையும் வெட்டிப் போட்டு காலேஜுக்குள் ப்ரூட் மிக்சர் பிழிந்து விடும்.

‘மயிர்மாணிக்கம் திட்டினான் இல்லேடா, அதுக்குப் பழி வாங்கத்தான். அவன் சம்பளத்துலே கட் பண்ணிப்பாங்க பாரு. என்ன விலை இருக்கும்? பத்தாயிரம்’?

இவனுக்கு பிசிக்ஸ் தான் வீக் என்றால் பொது அறிவும் அதே படிக்குத்தான். மூணு இஞ்ச் ஸ்க்ரூ கேஜில் டயோடும் ட்ரையோடுமா வச்சிருக்கு? அதெல்லாம் வச்ச நேஷனல் எக்கோ மான்சூனைஸ்ட் ரேடியோவே நூத்தம்பது ரூபாய் தான்.

‘நமக்கும் பரீட்சை நேரத்துலே வீட்டுலே சாவகாசமா உட்கார்ந்து பழகிக்கிட்டா ப்ராக்டிக்கல்லே ஃபுல் மார்க் வரும். இது இங்கேயே இருக்கட்டும்டா’.

மணியன் நைச்சியமாகச் சொன்னான். அட முட்டாளே, ப்ராக்டிக்கலுக்கு ஆயிரம் விஷயம் இருக்கே. ஸ்க்ரூ காஜ் தான் வரும் என்று என்ன நிச்சயம்?

‘வரும் பாரு. தினம் விடிகாலையிலே கிழக்கு பார்த்து தியானம் பண்ணிட்டு இதை நினைச்சுக்கோ. பரீட்சையிலே கேள்வியா வந்து நிக்கும். நம்பினா நடக்கும்’.

அவன் என் மேஜைக்குள் ஸ்க்ரூ காஜைப் போட்டு ஒளித்துவிட்டு நம்புவர்களின் மகானாகப் புனிதமான பாவனைகளோடு வாசலுக்குப் போனான். நம்பாதவன் வயிற்றில் பசி ஸ்கூரூ காஜில் அளக்க முடியாதபடி கொழுந்து விட்டு எரிந்தது.

அம்மா எங்கே? சாயந்திரம் டிபன் என்ன? சேமியா உப்புமா?

தட்டு நிறைத்து வெளுத்த துணியை நாலாக மடித்துப் போட்டது போல் இடியாப்பம். பச்சைமிளகாய் நிறத்தைக் கொஞ்சம் கடன் வாங்கிய மோர்க்குழம்பு. கூட, சின்னக் கிண்ணத்தில் கோழிக் கழிச்சல் மாதிரி எதோ திருஷ்டிப் பரிகாரம்.

அதை நகர்த்தி வைத்துவிட்டு தட்டை எடுத்தேன்.

‘காலேஜ் எப்படிடா போச்சு’?

வழக்கமான கேள்வி. ‘அது எங்கேயும் போகல்லே. நான் தான் போய்ட்டு வந்திருக்கேன். அது சரி, என்ன இன்னிக்கு வெளுத்துக் கட்டியிருக்கே’?

சாப்பாட்டை மெச்சினால் அம்மாவுக்கு உச்சி குளிர்ந்து விடும். அப்பா விஜயம் செய்யும் நாட்களிலும் அவருடைய சீரக ரசம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம் மெனுவோடு என் வழக்கமான மெனுவும் விசேஷ சலுகையாக அமலாக்கப்படும்.

‘நான் எங்கே பண்ணினேன்? வெள்ளியன்னிக்கு பூத்திருவிழா வருதில்லே? கம்பவுண்டர் வீட்டுப் பொண்ணு மேகலா பொள்ளாச்சியிலே இருந்து வந்திருக்கா. அவ கைவண்ணம். நம்ம வீட்டுக்கும் மறக்காம கொண்டு வந்து கொடுத்தா’.

‘இந்த கோழிக் கழிச்சல்’?

‘வாயை மூடுடா. கடலை மாவு சட்னி. சாப்பிட்டுப் பாரு. இருந்தா பாதி ராஜ்ஜியத்தையே எழுதி வச்சுடுவே. இதுவும் அவ பண்ணிக் கொண்டு வந்ததுதான்’.

அவசரமாக அந்தக் கண்றாவியையும் பக்கத்தில் நகர்த்திக் கொண்டேன். ரசிக்கக் கத்துக்கணும். இன்னும் எவ்வளவோ முன்னால் போக வேண்டி இருக்கே.

சட்டென்று சந்தோஷம். பயம். எதுக்கு? அவள் எந்த நிமிடமும் படியேறி வரலாம். திருட்டுச் சொத்தை மேஜைக்குள் வைத்துக் கொண்டு நான் முழிக்கிற முழியே காட்டிக் கொடுத்து விடும். போயும் போயும் ஒரு ஸ்க்ரூ காஜ் கூட்டுக் களவாணியையா கல்யாணம் செஞ்சுப்பேன்னு நினைச்சே. போடா டென் ஏ ஒன் வேலைக்கு போ. ஊஸ்ட் ஆனா, ஆதீனமிளகி கடையிலே எருமைப்பால் ஆத்து.

அவள் திரும்பியே பார்க்காமல் கொல்லைப் புறவழியாக இறங்கிப் போய்விடலாம்.

கரிமாணிக்கம் மேல் கோபம் வந்து கவிந்தது. மணியன் மேலும். என்னதுக்கு எதுக்கு என தெரியாமல் ஆதினமிளகி மகள், ப்ரூட் மிக்சர் சிவராமன் மேல் கூட.

அடுத்த நாள் சில பல சமாச்சாரங்கள் நடந்தேறின.

காலையில் நல்லையா பேப்பரோடு விநியோகித்த ஓட்டச் செய்தி இப்படி இருந்தது

ஆதினமிளகி மகளும் சிவராமனும் மதுரை ரிஜிஸ்தர் ஆபீசில் கல்யாணம் செய்துகொண்டார்கள். மாதக் கடைசியில் இரு வீட்டு வாழ்த்துகளோடு மொய் எழுதினவர்களுக்கு விருந்து போட்டு ஒரு கல்யாணச் சடங்கு நடக்க இருக்கிறது.

கருமாணிக்கம் என்ற டெமான்ஸ்ட்ரேட்டர் கரி, மெஸ் நடத்துகிறவங்க பெண், அதாவது சூப்பம்மாவின் அக்காவோடு நேற்று ராத்திரி ஓடி விட்டான். கரிக்கு இந்த மாதத்தோடு காலேஜிலும் ஊஸ்ட் ஆகி விட்டதாக அதாவது வேலை காலியாகி விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. போன இடத்தில் அவர்கள் புதுசாக மெஸ் நடத்தவோ அதிகாரம் செய்யாமல் ஸ்க்ரூ காஜ், வெர்னியர் காலிப்பர் கொண்டு கம்பி, சட்டம், உருளைக் கட்டை, அப்பளக் குழவி, விசிறிமட்டை இதையெல்லாம் அளக்கப் படிப்பிக்கவோ ஏற்பாடு செய்திருக்கலாம்.

நான் சொல்லாமலேயே மணியன் ஸ்க்ரூ காஜை பிசிக்ஸ் லேபரட்டரியில் திரும்பக் கொண்டு வைத்துவிட்டான். அறிவியல் வளர்ச்சிக்கு அவனுடைய வாழ்க்கையில் அதிக பட்ச பங்காற்றுதல் அந்தக் காரியமாகத்தான் இருக்கும்.

நான் ப்ரூட் மிக்சரை விட்டு விட்டு கடலை மாவுச் சட்னிக்கு தாசன் ஆனேன்.

(தொடரும்)

Yugamayini Feb 2011

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன