அம்பையிடமிருந்து வந்த கதை

 

1997-ம் ஆண்டு கணையாழி பொங்கல் மலரை அப்போதைய கணையாழி ஆசிரியருமான திரு ராம்ஜி தயாரித்தார். நண்பர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்கச் செயலர். சக வங்கி அதிகாரி. தயாரிப்புப் பணியில் நானும் பின்னணியில் இருந்து செயல்பட்டேன்.

யாரிடம் இருந்தெல்லாம் படைப்பு கேட்க வேண்டும் என்று பட்டியல் தயாரான போது முதல் பெயர் அம்பை. அப்புறம் ஒரு இருபத்தைந்து முப்பது பேர்.

கதை கேட்டுக் கடிதம் எழுதி வைத்து விட்டுத்தான் முகவரிகளைத் தேட ஆரம்பித்தோம். அம்பை முகவரியை நண்பர் ஒருவர் வாங்கித் தருவதாகச் சொன்னதால் அந்தக் கடிதத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை அஞ்சலில் அனுப்பினோம்.


இரண்டு நாள் கழித்து ஆபீசர் அசோசியேஷன் ஆபீசில் இருந்து நான் வேலை செய்த கம்ப்யூட்டர் துறைக்கு தொலைபேசி அழைப்பு. ராம்ஜிதான் கூப்பிட்டார்.

’அம்பை கதை அனுப்பிட்டாங்க’.

பூச்சி பிடித்துக் கொண்டிருந்த சைபேஸ்-சி ப்ரோகிராமை அம்போ என்று விட்டு விட்டு அம்பை கதை படிக்க விரைந்தேன். அதெப்படி ரெண்டே நாளில் கதை எழுதி அனுப்பி..

ராம்ஜி கையில் கொடுத்த கதையைப் படிக்க ஆரம்பிக்க, ஏகத்துக்கு ஏமாற்றம். ஊஹும், இது அம்பை கதையாக இருக்கவே முடியாது..

கதையோடு வந்த கடிதத்தைப் படித்தேன் – ‘என்னையும் இலக்கியப் படைப்பாளியாக மதித்துக் கதை கேட்டதற்கு நன்றி. அனுப்பி இருக்கிறேன்’ அம்பை. கீழேயே சின்ன எழுத்தில் சிவலட்சுமியோ தேவாவோ..

அந்தப் பெண்மணி ஆரம்ப எழுத்தாளர். அம்பாசமுத்திரத்தில் இருக்கிறார். ஆகவே பெயரை அம்பை என்று வைத்துக் கொண்டு விட்டார் – அம்பை ஏற்கனவே இருக்கிறார் என்று அறியாமல்.

சரி, அவருக்கு எப்படி எங்கள் கடிதம் போய்ச் சேர்ந்தது?

‘இந்த லெட்டர் மட்டும அனுப்பாம இருக்கேன்னு நான் தான் மணிமேகலைப் பிரசுரம் ‘பிரபலமானவர்களின் முகவரி’ புத்தகத்தில் அட்ரஸ் தேடிக் கண்டுபிடித்து அனுப்பினேன்’ – கணையாழியில் பகுதி நேர ஊழியராக இருந்த இளைஞர் பிறகு சொன்னார். புத்தகத்தையும் காட்டினார்.

அதில் அந்தப் ‘பிரபலமான அம்பை’ இருந்தார். நாங்கள் கதை கேட்ட அம்பை இல்லை.

அம்பாசமுத்திரம் பெண்மணிக்கு புனைபெயரை மாற்றிக்கொள்ளச் சொல்லி கடிதம் எழுதியது போய்ச் சேர்ந்ததா தெரியவில்லை.

ஒரு வேளை இந்த அம்பைக்கு அனுப்பி இருப்பார்களோ!

**************************

’ஆட்டோ கர்ணன்’ spoof அனுப்பிய நண்பருக்கு நன்றி. கர்ண பரம்பரைக் கதையைச் சென்னைக்கு நகர்த்தி, கர்ணனை ஆட்டோ டிரைவராக்கிக் கற்பனை செய்ததை ரசித்தேன்.

கர்ணன் படத்தை இத்தனை வருடம் சென்று இப்போது பார்க்கும்போது இசையும் சிவாஜி நடிப்பும் மனதில் இன்னும் நிலைத்தாலும், சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

1) அது ஏன் அரண்மனைக்குள்ளே ரெண்டு பக்கமும் மாடிப்படி வைத்து அவை அந்தரத்தில் முடிகின்றன?

2) ஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் முன்பும் ஏன் ஜூனியர் ஆர்டிஸ்ட் பெண்கள் ஆளுக்கொரு தாம்பாளத்தைக் கையில் தூக்கிக் கொண்டு அந்தப் படிகளில் குடுகுடு என்று ஏறி அப்புறம் அவரோகணத்தின் போது இறங்கி வருகிறார்கள்?

3) என்.டி.ஆர் முகத்தில் இப்படி நீல டிஸ்டம்பரை வழித்துப் பூசிக் கொண்டாலும் சிரிப்பு மாறாமல் எப்படி இருக்க முடிகிறது? அவர் நடித்தபடி சிரிக்கிறாரா சிரித்தபடி நடிக்கிறாரா?

4) பீமனைத் தவிர வேறு எல்லாரும்‘வெய்ட்’ ஆன பாத்திரங்களாக இருக்க நேர்ந்தது எப்படி? ( (ஆண் – பெண் பாத்திரங்கள் சகலரும்)

5) கண்ணுக்குக் குலமேது கண்ணா பாட்டின் போது என் பின்னால் இரண்டு மத்திய வயதுப் பெண்கள் சுசீலாவைத் திட்டியதைக் கேட்டால் பாவம் அவர் ரொம்ப நொந்து போவார் . ‘இந்த அம்மா கண்ணுக்குக் குலமேது கர்ணான்னு பாடாம கண்ணான்னு பாடறாங்களே. சிவாஜிக்கும் எண்டிஆருக்கும் வித்தியாசம் தெரியாமலா தேவிகா காதலிச்சாங்க?’ அதானே!

6) படம் முடியும் முன்னால் கதவு பக்கம் நின்றவர்கள் உரையாடல் – கொஞ்சம் இரும்மா சுப்ரபாதம் பார்த்துட்டு வந்துடறேன்’… ‘எந்த சுப்ரபாதம்?’ … ‘பரித்தானே சாது நாமம்..’ன்னு சீர்காழி பாடுவாரே… அய்யோ அது சகஸ்ரநாமம்.. இல்லே என் டி ஆர் ச்கஸ்ரநாமம் வர்ற சீன் எல்லாம் முடிஞ்சாச்சு..

ஆனாலும் இந்தப் படம் பார்க்கவாவது – சம்பவாமி யுகே யுகே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன