A chat with Govind Nihalani, Karnad – 75கோவிந்த் நிஹலானியோடு ஓர் உரையாடல்; கர்னாட் – 75

மூத்த நண்பரும் தேசிய அளவில் சிறந்த இயக்குனர் / ஒளிப்பதிவாளருமான திரு கோவிந்த் நிஹலானியோடு நேற்று பேசிக் கொண்டிருந்தேன்.

அவருடைய கதைக்கருவை வைத்து நான் ஆங்கிலத்தில் திரைக்கதை எழுதிய ஒரு மராத்தி / இந்தி சினிமா இப்போதைக்கு இல்லை என்று ஆனதால், அந்த ஸ்கிரிப்டை நாடகமாக்கிக் கொண்டிருக்கிறேன். ப்ளாக் ஹ்யூமர் என்ற அவ்வளவாகக் கையாளப்படாத நகைச்சுவை உத்தி.
ஒரு ஊடகத்திலிருந்து மற்ற ஒன்றுக்கு மாற்றுவது, அதுவும் காட்சி ரூபமான மீடியத்திலிருந்து வசன உருவான மேடையாக்கத்துக்கு மாற்றுவதில் ஏற்படும் சவால்கள் பற்றிய என் சந்தேகங்களுக்கு குரு ஸ்தானத்தில் இருந்து வகுப்பு எடுத்தார் கோவிந்த்.

விஷுவலாகச் சொல்லும்போது நாலு டிஸ்ஸால்வ், ட்ரால் இன், டீப் இண்டர்கட் என்று காட்சிகளை அடுக்கி ப்ளாக் ஹுயூமர் எபக்டை கொண்டு வந்து விடலாம். அடிப்படையோட்டமாக அமைந்திருக்கும் வன்முறையை எந்த இடத்திலும் நியாயப்படுத்தாமல், அந்த கறுப்பு நகைச்சுவை அதை மேலும் குற்றப்படுத்தும். நாடகத்தில் வசனத்துக்கு முக்கியத்துவம் என்பதால் நகைச்சுவை முந்தி, ஒரு கட்டத்தில் அடித்தளக் கட்டுமானமான வன்முறையை நியாயப்படுத்துவது மாதிரி கூட ஆகி விடக்கூடும். கவனம் தேவை. வசனம் எழுதும் போது முழுக் கதை உருவத்தையும் மனதில் எப்போதும் வைத்திருந்தாலே (keeping the large picture in mind) இது சரியாக வரும்..

கோவிந்த் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். பீஷ்ம சஹானியின் தமஸ், மராத்தி நாடக ஆசிரியர்கள் மகேஷ் எல்குஞ்ச்வரின் ‘பார்ட்டி’ நாடகம் இவற்றை ஊடகம் மாற்றி செல்லுலாய்டில் இயக்கி முத்திரை பதித்தவர் அவர்.

கோவிந்தின் குரு ஷ்யாம் பெனகால் ப்ளாக் ஹ்யூமரை அநாயாசமாகக் கையாண்டிருப்பார் – மண்டி படத்தில். ‘விடுதி’க்குக் கட்டாயப்படுத்திக் கொண்டு வரப்பட்ட ஊமைப் பெண்ணை தொழிலில் ஈடுபடுத்த விடுதித் தலைவி ஷாபனா ஆஸ்மி முயன்று கொண்டிருக்க, விடுதிக்குள் புகுந்த குரங்கை, அங்கே எடுபிடியாக குறைந்த பட்ச அறிவுடன் வளைய வரும் நசிருதீன் ஷா பிரயத்தனம் எடுத்து விரட்டிக் கொண்டிருப்பார். அந்தக் காட்சியின் பாதிப்பு படம் பார்த்து பல நாள் இருந்தது.

கோவிந்த் அறிவுரை எப்படி செயலாகிறது பார்க்கலாம்..
————————————–
கோவிந்த் நிஹலானியிடமும் நான் கேட்ட கேள்வி – நினைவு தெரிஞ்சு நீங்க பார்த்த படம் எது?

நரசிம் பஹத். இந்திப் படம். 1940-ல் வந்தது. (இது அப்புறம் 1953-லும் இன்னொரு முறை படமானதாம்). காந்திஜிக்குப் பிரியமான ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலை எழுதிய நரசிம் மேத்தாவின் வரலாறு.

‘இந்தப் படத்தை அப்பவே ரீ-ரன்.. அஞ்சு வயசுலே பார்த்தேன் இரா.. ஒரு காட்சி நல்லா நினைவு இருக்கு.. சின்னப் பையன் நரசிம் புறாக்களுக்கு தானியம் போட்டிட்டிருப்பான்.. புறா மேலே கேமரா நிலைக்கும்.. டிஸ்ஸால்வ்.. ஓபன் செஞ்சா திரும்ப புறா.. கேமிரா ட்ரால்.. தானியம் போடற கை பெரியவன் ஒருத்தனோடது. அப்புறம் அவன் முகம் தெரியும்.. பையன் வளர்ந்து பெரியவன் ஆனான்னு புரிஞ்சுக்கறதுலே ஒரு கஷ்டமும் இல்லே’

குழந்தை மாதிரி சந்தோஷமாகச் சொன்னார்.

கோவிந்துக்கு ஐந்து வயதில் பிடித்த கேமிரா பித்து எழுபத்து மூணு நடக்கிற இப்போதும் உறுதியாகத்தான் இருக்கு..
————————————

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர், நாடக, சினிமா நடிகர் கிரிஷ் கர்னாடின் 75-வது பிறந்த நாளுக்காக இன்றைக்கு அவரை ஹிந்து பத்திரிகை பேட்டி கண்டிருக்கிறது.

கோடம்பாக்கத்திலும் அப்பா வேடத்தில் அவ்வப்போது வருகிறவர் கிரீஷ் கர்னாட். இங்கே ஞானபீடம், சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி இப்படி உன்னதமான விருதுகளோடு வந்த ஒரே கலைஞர் அவராகத்தான் இருக்க முடியும்.

பெந்தகலே ஃபார் டோஸ்ட் என்று சமீபத்தில் புதிய நாடகம் எழுதியிருக்கிறாரம். பெங்களூர் நகர உருவாக்கம், வளர்ச்சி பற்றி கதையும், நிஜமும் கலந்து எழுதிய நாடகத்தில் 20-க்கும் மேற்பட்ட பாத்திரங்கள். நாடகத்தை மராத்தியில் மொழி பெயர்த்து மும்பையில் போட சூப்பர் ஹிட்டாம்.

அவருடைய நாடக வாழ்க்கை துவங்கியது சென்னை ப்ளேயர்ஸ் நாடகக் குழுவில் தான். ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் மேலாளராக அப்போது (1975) யூ.ஆர்.ஆனந்த மூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவ்லையும் படமாக்கி, பிராணேஷாசார்யா என்ற கதைக்கு அச்சாணியான பாத்திரத்தில் நடித்ததும் சென்னையில் இருக்கும்போது தான்.

அவர் சென்னையைக் கடந்து எத்தனையோ உயரங்களைத் தொட்டு விட்டார் இப்போது..

மராத்தி – கன்னட இலக்கியப் பரிமாற்றம் விசித்திரமானது. அரசியலில் கர்னாடகத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் மஹாராஷ்ட்ர ஏகாகிரன் சமிதி போன்ற அமைப்புகள் கன்னட எதிர்ப்பை தூண்டிக் கொண்டிருக்கும்போது மும்பையில் அவை நிறைந்து கிரீஷ் கர்னாடின் கன்னட நாடகம் மொழிபெயர்ப்பில் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய ‘ஹயவதன’, ‘நாகமண்டலா’, ‘துக்ளக்’ எல்லா நாடகங்களுமே இப்படி கன்னடத்தில் எழுதி மராத்தி போனவை தான்.

கர்னாடின் நாடகங்களும், ம்கேஷ் எல்குஞ்ச்வரின் ‘வாதே சிராபந்தி’யும், மராத்தி – இந்தியில் விஜய் டெண்டுல்கரின் ‘சஹாராம் பைண்டர்’, ‘காஷிராம் கொத்வால்’ போன்ற நாடகங்களும் பரீட்சார்த்த முயற்சிகளாகவும் பெரும் வெற்றி பெற்றவை.

மராட்டி ரசிகர்களைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. தாதா கோண்ட்கேயின் இரட்டை அர்த்த வசன சினிமாவையும் ரசிப்பார்கள். பரீட்சார்த்த நாடகத்தையும் வெற்றிபெற வைப்பார்கள்.

அடுத்த நம்ம நாடகம் மராத்தியிலே தான் நடத்தணும்..
——————————

பெரிய்ய்ய தண்ணி பாட்டில் (‘மினரல் வாட்டர்’ கேன்) ‘உற்பத்தியாளர்கள்’ வேலை நிறுத்தம் முடிந்து விட்டதாம்.

சென்னையில் இந்தத் தண்ணீர் கிடைக்காமல் நேற்று கேன் ஒன்று ஐம்பது ரூபாய்க்கு விற்றது. இன்றோ நூறு ரூபாய். சாதா தினங்களில் இது முப்பது ரூபாய் இருக்கும்.

செங்கல்பட்டுலேருந்து தண்ணி கொண்டு வரோம் சார்.. திருச்சியிலேருந்து வந்த தண்ணி சார்.. இமய மலைத் தண்ணி சார்…

நிலைமை இப்படியே நீடித்திருந்தால் அடுத்த வாரம் இது கேனுக்கு ஆயிரம் ரூபாய் ஆகி இருக்கும். அதையும் வாங்கிக் குடிக்க ஆளிருக்கும்போது விற்கிறவர்களுக்கு என்ன கவலை?

சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பாட்டிலில் தண்ணீர் அடைக்கும் நிறுவனங்களுக்குத் தடை விதித்து அவர்களின் மின் இணைப்பையும் துண்டித்த நல்ல செயலை மாநில அரசு செய்தது. அதை எதிர்த்தாம் வேலை நிறுத்தம்.

மாநகராட்சி வழங்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடித்தாலே போதும். காய்ச்சக் கூடச் செய்யாமல் சிவகங்கை செட்டியூரணி ஃபாண்டா Fanta நிறத் தண்ணீர் குடித்து வளர்ந்தவன் நான்.

வான் போல் விலை உயர்ந்த கேன் என் செய்யும்? வழி நடத்தும் கோள் என் செய்யும்? கோன் எம் அம்பலக் கூத்தன் இருக்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன