Bal Ganghadhar Thilak in 1947திலகர் வந்த டிவி ஆன்மீகச் சொற்பொழிவு

காலை அவசரங்களுக்கு இடையே முரண்களும் அபத்தங்களும் எப்படியோ கண்ணில் பட்டு விடுகின்றன.

விஜய் டிவியில் சமயச் சொற்பொழிவு. அவை நிறையக் கூட்டம். கிருஷ்ண கான சபாவா, நாரத கான சபாவா என்று தெரியவில்லை. முதல் வரிசையில் என் அன்பு நண்பர் எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன்.

ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறது. புலவராகிய பேச்சாளர் சீரங்கத்து உறங்காவில்லிதாசனை, அவனுக்கு அரங்கனின் பேரழகைக் காட்டித் தந்த ஆசாரியனைப் பற்றி எல்லாம் அருமையாகப் பேசுகிறார்.

ஆச்சாரியனுக்கும் ஆசிரியருக்கும் வேறுபாடு உண்டு. ஆசிரியர் நன்றாக வாழ்வு அமையக் கல்வி கற்பிக்கிறார். ஆச்சாரியர் வாழ்ந்து காட்டுகிறார்.

மெல்லிய கரவொலி பேச்சாளரைத் தொடர்ந்து உற்சாகப்படுத்த மேலே போகிறார்..

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பால கங்காதர திலகரை தேசியத் தலைவர்கள் ஜனாதிபதி பதவி ஏற்கும்படி கேட்டார்கள். திலக் சொன்னார் – நான் ஆசாரியன். கற்பிப்பது என் பணி. எனக்கு நாட்டுத் தலைமைப் பொறுப்பு தயவு செய்து தராதீர்கள். திலகர் போன்ற தன்னலம் கருதாத ஆச்சாரியார்கள் ..

அரங்கத்தில் ஆயிரம் பேர். தொலைக்காட்சியில் இன்னும் எத்தனை ஆயிரம் பேரோ..

அர்த்தமுள்ள ஆன்மீகத்தோடு அபத்தமான தேசிய ‘வரலாற்றை’யும் மனதில் சுமந்து போயிருப்பார்கள்.

திலகர் மறைந்தது 1920-ல். இந்தியா விடுதலை அடைந்தது – தெரியுமே.

———————————————————
சாவடி, சில்லு என்று இரண்டு மேடை நாடகங்கள் எழுதி முடித்து சிலிக்கன் வாசலை நாடகமாக்கும் சுவாரசியமான வேலையில் ஞாயிறு கரைந்தது. அடுத்து ‘எழுத்துக்காரர்’ நாடகமாகிறது. சாவடி 1914-ல் சென்னை கொத்தவால் சாவடியைக் களமாகக் கொண்டது. இரண்டு மணி நேரம் நிகழும். மற்ற மூன்றும் சேர்ந்து இரண்டரை மணி நேரம்.

எழுதத் தூண்டிய இனிய நண்பர் Anand Raghav, ஷ்ரத்தா நாடகக் குழுவினர், மூத்த தோழர் Bharati Mani எல்லோருக்கும் நன்றி.
——————————————————————
டைம்ஸ் ஓஃப் இந்தியா – Air India’s Dreamliners to fly from today

ஹிந்து – Locked cockpit gives AI passengers jitters..one of Air India’s domestic flights, operating in the Delhi-Bangalore sector, gave its passengers tense moments on Monday, when the cockpit door got locked even as the commander (pilot) was away from his seat to answer nature’s call.

போற போக்கிலே ஃப்ளைட் உள்ளே போகும்போது ஹோஸ்டஸ் சேவிப்பாங்களே, அப்போ மறக்காம கேட்டுடணும் – ‘பைலட் கிரமமா காரியம் எல்லாம் முடிச்சுட்டு வந்தாரோ?’. காக்பிட்டிலேயே கழிப்பறை கட்ட முடியாதோ? கீகடமா இருந்தாக்கூட பரவாயில்லே..

———————————————————-
உண்ட உறிவெண்ணெய் ஊறியது பாற்கடலில்
வண்டார் கருங்குழல் வானுயுரக் கொண்டதோர்
குன்றுசூழ் மேகம் குவலயமே அஞ்சனம்
நன்றுன் மருளும் நயம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன