புதிது எழுதிக் கொண்டிருக்கும் புது நாவல் ‘மிளகு’ துவக்கம்

எழுதிக் கொண்டிருக்கும் ‘மிளகு’ நாவலின் தொடக்கம் இது –

மிளகு ராணி விடிய வெகுநேரம் இருக்கும்போதே எழுந்து விட்டாள்.

மிளகு ராணி. ஒரு தடவை நிலைக் கண்ணாடியில் நோக்கிச் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள்.

கண்ணாடி பெல்ஜிய நாட்டில் செய்து அனுப்பியது. அடுத்து இருப்பது இங்கே மலையாள பூமியில் உலோகத்தைப் பளபளப்பாக்கிச் செய்த ஆரன்முளை உலோகக் கண்ணாடி. இரண்டிலும், வயதானாலும் உற்சாகமான ஒரு மூதாட்டி சிரிக்கிறாள். மிளகு ராணி.

சளுவ வம்ச மகாராணி சென்னபைரதேவி.

சென்னபைரதேவிக்கு தங்களுக்குள் பிரியத்தோடு மிளகு ராணி பட்டம் அளித்து அழகு பார்க்கிறவர்கள் பரங்கியர்கள். இங்கே மிளகும் லவங்கமும் ஏலமும் வாங்க வந்து கொண்டிருக்கும் மேற்குத் திசைப் போர்த்துகீசியர்கள். சென்னா இல்லாமல் அவர்களுடைய மாபெரும் வணிகம் ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்று விடும்.

மிளகு ராணி. உடம்பில் உயிர் இருக்கும் வரை ஏதேதோ கௌரவமாகவும், பகடியாகக் கேலி செய்து பட்டப்பெயர் தந்தும் பெயர் நிலைக்கும். உயிர் விடைபெற்றுப் போனால் அத்தனை பெயரும் போக அது என்று திணை மாறி விடும்.

இதென்ன விடிந்ததுமே வேதாந்த விசாரம். தலை குலுக்கி அந்தச் சிந்தனையை உதிர்த்தாள் சென்னபைரதேவி.

மிர்ஜான் கோட்டையின் கொத்தளங்களில் இருந்து நடுராத்திரிக்கு அப்புறம் இரண்டு நாழிகை கழிந்தது என்று அறிவிக்கும் முரசு சத்தம் கேட்க ஆரம்பித்திருந்தது. கோல்கொண்டா கோட்டையில் நேரத்தை அறிவிக்க பீரங்கி முழங்குவார்கள். பாமனி சுல்தான்களின் பழக்கம் அது. பீரங்கியோ, முரசோ, இந்த பின்னிரவுக் காலத்தில் யாரும் இதை லட்சியம் செய்யப் போவதில்லை. அவரவர்கள் வீட்டில் துணையை அணைத்துக் கொண்டு துயில் கொண்டிருப்பார்கள். குறைந்த பட்சம் தலையணையாவது அருகே இருக்கும்.

சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினெட்டு வயதில் மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள். ஆயிற்று, அறுபது வயது எட்டிப் பார்க்கிறது.

அறுபதாம் வயதின் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாக தலை சுற்றலும், நாவில் கசப்புப் படுதலும், சதா தொல்லை கொடுக்கும் மலச்சிக்கலும் அதன் காரணமாக வயிற்றில் வாயு பூரித்து வீர்த்திருப்பதும் மகாராணி என்று பார்த்து அனுமதி வாங்கி நுழையாமல் சென்னாவைத் துன்பப்படுத்த அந்த மெல்லிய தேகத்தில் ரகசியமாக நுழைந்திருக்கின்றன. சென்னாவுக்கு அவற்றைப் பற்றித் தெரியாவிட்டாலும் பொறுத்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டிருக்கிறாள்.

மாதவிலக்கு ஒரு இருபது வருடத்துக்கு முன்பு வரை கடுமையான உடம்பு சார்ந்த பிரச்சனையாகத் துன்பம், பெருந்துன்பம் கொடுத்ததை விடவா இந்த உடல் உபாதைகள் தேகத்தை ஓய்த்துப் போடும்? போகிற இடத்தில் எல்லாம் இடுப்பில் சிவப்புத் துணியை சேலைக்கு உள்ளே ஒரு நாளைக்கு எத்தனை தடவை அணிந்துபோய் மாற்ற வேண்டி இருக்கும். செலுவி என்ற அந்தரங்கமான சேடிப் பெண் மட்டும் இல்லாமல் இருந்தால் சென்னா மீண்டு வந்திருக்காத பெருந்துன்பமாக அந்த உடல் சம்பந்தப்பட்ட சிரமம் வடிவெடுத்திருக்கக் கூடும்.

இன்னும் எத்தனை காலம் இந்தத் துன்பத்தோடு அலைந்து திரிய வேண்டும்? மனதில் வணங்கிக் கேட்டாள் சென்னா. ஆதிநாதரில் தொடங்கி, மஹாவீரர் வரையான இருபத்து நான்கு சமணத் தீர்த்தங்கரர்கள் வரிசையை மனதில் உருப்போடத் தொடங்கினாள் கட்டிலின் ஓரத்தில் கண்மூடி அமர்ந்தபடி. ஒவ்வொரு தீர்த்தங்கராக மனதில் அழைத்து அவர்களின் திவ்ய ரூபத்தை அகக்கண் குளிரப் பார்த்து மனதால் வணங்கி இருக்க, எண்ணத்திலும் நினைவிலும் ஒரு தெளிவும் உற்சாகமும் மேலெழுந்தது.

ஓம் நமோ அரிஹண்டானம்
ஓம் நமோ சிந்தானம்
ஓம் நமோ யரியானம்
ஓம் நமோ சாயானம்

பரபரவென்று சமண மத வழிபாட்டு வாசகங்களில் தலையான நவ்கார் மஹாமந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி கோட்டையின் வெளிச் சுவருக்குச் செல்லும் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

மிர்ஜான் கோட்டை படம் உதவி en.wikipedia.org நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன