ராமோஜி ஆங்கரே – சுவர்ணதுர்க்கம் 1698 : ராமோஜியம் நாவலில் இருந்து

15.ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம் – பகுதி 1

கடல் அமைதியாக இருந்தது.

பிற்பகல் நேரக் கடல் இது. வேளைக்கொரு குணம் இதற்கு உண்டு. மகிழ்ச்சியோ, துக்கமோ கொண்டிருக்கும்போது இது ராமோஜியோடு பேசும். அவனை அதிகாரம் செய்யும். உற்ற தோழனாக, செவி மடலைச் சிலிர்க்க வைக்கும் உப்புக் காற்றோடு ரகசியம் சொல்லும். கடல் கோபித்திருந்தால் ஓவென்று இரைந்து யாரை என்றில்லாமல் வைது திட்டும். அல்லது அழும்.

உறங்கப் போகும் நேரத்தில் கடல் தனக்குத்தானே தாலாட்டுப் பாடிக் கொள்வதையும் ராமோஜி கேட்டிருக்கிறான். காற்றின் கூக்குரல் அதிகமாகும் நேரங்களில் கடலுக்கு ஊடே தூரதேச ஒலிகள் ஒன்றிரண்டாக சப்திக்க ஆரம்பித்து, மெலிந்து இழைந்து, உயர்ந்து, காத்திரமான குரல்களாகும்.

மகாராஷ்டிரத்தில், கொங்கணக் கடல் பிரதேசத் துறைமுகமான டபோலியில் இருந்து ரத்னா, ராமோஜியை அழைக்கும் ஓசை, கடல் அலை மேலேறி வந்து இங்கே அவனுக்குக் கேட்கும். அவன் பதில் சொல்வதையும் ரத்னா சிரிப்பதையும் கடல் சேதியாகக் கொண்டு போகும், வரும்.

ரத்னா என்ன செய்து கொண்டிருப்பாள்? இன்றைக்கு என்ன தினம்? கிறிஸ்துநாதர் வருஷம் 1698 என்பது மட்டும் நினைவு இருக்கிறது. நாளும் நட்சத்திரமும் தெரியாவிட்டாலும், இது கோடை காலம். கடலிலே கோடை உச்சத்தில் தகிக்கிறது.

டபோலி நகரிலும், மிக அருகே ஹர்னாய் கிராமக் கடற்கரையிலும், அதை அடுத்து கடலுக்குள் ஒரு மைல் தூரத்தில் சுவர்ணதுர்க்கம் கடல் கோட்டையிலும் இப்போது கோடையாகத்தான் இருக்கும். இங்கே பிற்பகல் நேரம் என்றால் அங்கே சாயந்திரம் இரவைச் சந்திக்கும் அந்திப் பொழுதாக இருக்கக் கூடும்.

ரத்னா அந்திக்கான தலைக் குளியல் நடத்தி முடித்து மாளிகை உப்பரிகையில் நின்று தலையாற்றிக் கொண்டிருப்பாள். மாலை நேரக் குளியல் விஸ்தாரமான ஒன்று.

காலை நேரத்தில் குளித்து, ஹர்னாய் துர்க்கை கோவிலுக்கு ஓடி, உதயகால ஆராதனை தொழுது திரும்பவே நேரம் சரியாகி விடும். வீட்டில் சின்னதாக ஒரு அபங், ஒரு பஜன் பாடி பூஜை. அது கழிந்துதான் காலை பசியாறுதல்.

ராமோஜி கடலில் இருந்து கரை இறங்கி வீட்டுக்கு வரும்போது காலைச் சிற்றுண்டியோடு அவித்த முட்டையும், மட்டன் குருமாவும் வழக்கமான மல்லிப்பூ இட்லிக்கும், பௌர்ணமிச் சந்திரன் போன்ற தோசைக்கும் கள்ளத் துணையாகும். இஞ்சித் துவையலுக்கும், சாம்ராட் சாம்பாஜி பெயர் கொடுத்த சாம்பாருக்கும் நாவின் சுவை நாளங்களுடைய பின்வரிசையில் இடம் ஒதுக்கி விட்டுக் கும்மாளம் இடும், பொறித்த கோழிமுட்டையும் குருமாவும்.

சாயந்திரக் குளியலை உத்தேசித்து, ராமோஜி ஊரில் இருக்கும்போது வேலைக்காரர்கள் எல்லோரும் காலை ஆறு மணிக்கு வந்து பகல் நான்கு மணிக்கு வேலை முடிந்து அனுப்பிவைக்கப் படுவார்கள்.

ராமோஜி வீட்டிலிருக்கும் தினங்களில் மாலைநேரக் குளியல் சேர்ந்தே நடத்தப்படும் கேளிக்கைச் சடங்காகும். அதன் முன்னும் பின்னும், சில தடவை இரண்டு நேரமும், இன்னும் சில பொழுதுகளில் நீராடும்போதும் கலவி மணம், சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு வாடை போல், சூழலில் அடர்த்தியாகக் கவியும்.

இப்போது தனியாக ரத்னா அந்த நீண்ட, நல்ல பகல்களைப் பற்றிய இனிய நினைவுகளில் மூழ்கியிருப்பாள். ராமோஜிக்குத் தெரியும் அது. எட்டு வருடம் முன், கல்யாணம் ஆனபோதே தொடங்கியவை அந்த நினைவுகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன