காம்பவுண்டுக்கு வெளியே கழுதை சாஜு நின்று கொண்டிருந்தார். எம்விஎம் ஸ்டூடியோவில் உத்தியோகம் பார்க்கத் தொடங்கியிருந்தால் அவர் சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டில் எப்படி இருக்க முடியும்?
அவரைத் திண்ணையில் இருத்தினேன். விலாசினி எதிர் வீட்டில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு சிறிய டம்ளர்களில் சாயாவோடு வந்தபோது இனிமையான மாலை என்று முகமன் கூற மனம் நச்சரித்தது. சொன்னேன்.
”இன்னிக்கும் வீடு சுத்தம் பண்ண முடியலே. நாளைக்கு ரத்தி வந்து எல்லாம் செஞ்சுப்பா.. நீங்க அப்படியே விட்டுடுங்க.. என்ன சரிதானே?”
விலாசினி சொல்ல, நான் ஆடு போல் தலையாட்டினேன்.
சாஜுவுக்கு எம்விஎம்மில் வேலை கிடைக்கவில்லையாம். அவர் கொண்டு போயிருந்த பம்பாயில் வேலை பார்த்திருந்த பட செட்களின் புகைப்படங்கள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தனவாம்.
“ஒரு முப்பது வருஷம் கழிச்சு வர முடியுமா? ரசனை அப்போ மாறியிருக்கும், இதெல்லாம் ரசிகர்களுக்கு இப்போ பிடிக்காது, சாரி” என்றார்களாம்
விலாசினி வந்து ஹாலில் விளக்குப் போட்டுவிட்டு, பூஜை அலமாரியில் தீபம் கொளுத்தி, அச்சுதம் கேசவம் என்று நாமம் சொல்லி, வரேன் என்று கிளம்பிப் போனாள், மனதை விட்டுப் போகாமல்.
சாஜு கையில் வைத்திருந்த ஆல்பத்தை என்னிடம் நீட்டினார். வாங்கிப் பிரித்துப் பார்க்க, முக்கோணமும், வட்டங்களும், நீள் செவ்வகமாக நிழலும் படிகங்களும், முனை திருகிய தூண்களும், கரடுமுரடான தரையில் கிடத்திய சுவர்க்கடியாரங்களும், தலை விரித்தது போல் கிளைகள் எல்லாத் திசையிலும் நீண்ட மரங்களுமாக இருந்தது. தான் புது அலை இந்திப் படத்துக்குப் போட்டது என்றார். பால்ராஜ் சஹானிக்கு பிடித்த ஓட்டல் நடன மண்டபம் செட் அது என்றார். ‘கேபினட் ஆப் டாக்டர் கலிகரி’ என்ற ஜெர்மன் படத்தால் பாதிக்கப்பட்டு உருவாக்கிய செட்டில் நடனம் நடத்தாமல் வில்லனின் பயங்கர வசிப்பிடமாக மந்திரவாதப் படத்தில் பயன்பட்டதாம்.
”ஆர்ட் டைரக்ஷன்ங்கிறது அச்சு அசலா இருக்கறதை காப்பி அடிக்கறதில்லே சார். எழுத்திலே, ஓவியத்திலே சிற்பத்திலே இருக்கும் புனைவும் நிஜமும் ஆர்ட் டைரக்ஷனிலும் இருக்கு என்று ஸ்டூடியோக்காரர்களுக்கு இங்கேயும் புரியலே.. இனி ஹாலிவுட் போனால்தான் படம் கிடைக்கும் போல” என்றார்.
அவரை மறுநாள் ஞாயிறு காலை ஆறு மணிக்கு வேனில் வந்து பார்க்கிறேன் என்று சொன்னேன். வேலப்ப நாயக்கரின் முட்டை வேன், காதல் வாகனமாகவும், கோழிமுட்டை ஊர்தியாகவும் இருப்பதோடு கழுதையும் சுமக்கப் போகுது.
சேத்துப்பட்டு புரசைவாக்கத்திலிருந்து ரெண்டு மைல் தூரம் என்பதைக் கேட்ட சாஜு, அப்போ தோபிகானாவுக்கு நடந்தே போயிடலாமே என்றார். அவருக்குப் பழகியிருக்கலாம். கழுதையோடு தெருவில் இறங்கி நடக்க எனக்கு தைரியம் போதாது தான்.
விடிந்ததும் வேலப்ப நாயக்கர் மருமகன்கள் இரட்டையர்கள் டரடரவென்று சத்தம்போடும் வேனோடு வந்துவிட்டார்கள்.
”நீங்க விழுந்தபோது வந்ததுதான் சார்.. அதுக்கு அப்புறம் இப்பத்தான்..” என்றார்கள் என்னிடம். மூன்று வருடத்துக்கு முன்னால், தெலக்ஸ் புவனா வந்த அந்த மாலைநேரத்தை நினைவு கூர்ந்தார்கள்.
காகர்லா பக்தவத்சலத்தின் இரண்டு மகள்கள்? ”கல்யாணமாகி கர்னூல்லே ஸ்கூல் டீச்சர்களா இருக்காங்க சார்” என்றார்கள்.
மற்றபடி, டைப் அடிக்கக் கற்கும் வேறே பெண்களோடு, காகிதத்தில் நரியும் நாயும் அடித்து நழுவ விட்டு, வெள்ளையன் பேப்பரைக் கொண்டு போகாமல் விரட்டி, நேரம் போக்கிக் கொண்டிருக்கிறார்கள். டைப் ரைட்டிங் லோயர், ஹையர் என்று எந்தப் பரீட்சையும் பாஸ் பண்ணும் உத்தேசம் அவர்களுக்கு இல்லை. ஐயப்பன் நாடகத்தில் புலிக்கு முன் ஓட இன்னும் வரவேற்பு இருக்கிறதாம். எட்டு தினுசான ஓட்டமும் சாட்டமும் திட்டம் பண்ணியிருக்கிறார்களாம் இதற்காக.
வெள்ளையன் கழுதை விடைபெறத் தயாராக நின்றிருந்தது. அதற்கு இட்லியும் நேற்று மீந்த போளியுமாக குந்தி படைத்து முகத்தைச் சுற்றிக் கையை வீசி திருஷ்டி கழித்தாள். பல காலம் வீட்டில் வளர்த்த கழுதையை தோபிகானாவில் விட்டுவிட்டு வருவது வெள்ளையனை விட கழுதை சாஜுவுக்கு துக்கமானதாக இருந்ததைக் கவனித்தேன்.
தச்சிலா நான் எதிர்பார்த்ததைவிட மெலிந்து, அழகான, முப்பதுக்கு மேலே ரெண்டோ, மூன்றோ கூடுதலான வயதுப் பெண்ணாக இருந்தாள். ஏகப்பட்ட கழுதைகளோடு பழகியும் அவள் குரல் இனிமையாக இருந்ததைக் கேட்டேன்.
தோபிகானா முழுக்க வரிசையாகத் தடுப்பு எழுப்பி நூற்றுக்கணக்கான சலவைத் தொழிலாளிகள் தேக்கி வைத்த சுத்த நீரில் துணி துவைத்துக் கொண்டும், வெள்ளாவி வைத்துக் கொண்டும், இரும்புப் பெட்டியில் தணல் பரப்பி இஸ்திரி போட்டுக்கொண்டும் கழுதைகளுக்கு காகிதமும் புல்லும் போட்டுக் கொண்டும் பரபரப்பாக இருந்தது.
தச்சிலா ஜெனரல் ஆஸ்பத்திரி துணிகளை வெளுக்கும் பெண்ணாம். இது செய்யவே நேரம் இல்லாததால் வீடு எதற்கும் சலவை செய்து தருவதில்லையாம். நாலு தலைமுறையாக சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு பெட்ஷீட், போரத்தும் துணி, ஆபரேஷன் தியேட்டர் துணி, டாக்டர்கள் சோப்புப் போட்டுக் கை அலும்பி அலம்பித் துடைக்கும் சுத்தமான வெள்ளைத் துணி இப்படி சகல ஆஸ்பத்திரி துணியும் தச்சிலா துவைத்துத் தருவது தானாம்.
“நானும் என் வீட்டுலே எல்லோரும் என் கழுதகளும் எப்போவும் டெட்டால் வாசனையோட இருக்கோம்” என்றாள் ரத்னச் சுருக்கமாக. பத்து கழுதை வைத்திருக்கிறதாகவும், எந்தக் கழுதையையும் அதன் இஷ்டத்துக்கு மாறாக அழுக்குத்துணி ஏற்ற உபயோகிப்பதில்லை என்றும் தீர்மானமாகச் சொன்னாள்.
கழுதைகள் தோபிகானா முழுக்க துணி சுமந்து போய்வருவதைப் பார்த்த வெள்ளையன் இப்படி வேலையும் செய்ய வேண்டும் என்று தெரியவர, மாட்டேன் மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. தச்சிலா அதை மெதுவாக அணைத்துப் பிடித்துக் கூட்டிப் போவதை கண்ணீர் திரையாகக் கண்ணை மறைக்க சாஜு பார்த்தபடி நின்றார்.
செண்ட்ரலுக்குப் போய் ரத்னாவை அழைத்து வரவும் நாயக்கரின் டெம்போவைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியதை உடனே மாற்றி வைத்தேன். கழுதையைக் கூப்பிட்டுப் போகும் வாகனத்திலா என் சக்ரவர்த்தினி ரத்னாவை அழைத்து வருவது?
ரெட்டையர்கள் கழுதை விஷயமான பயணத்துக்குக் காசேதும் வேண்டாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.
மூன்று மணி நேரம் தாமதமாக வந்து செண்ட்ரலில் பூனா எக்ஸ்பிரஸ் இரவு எட்டு மணிக்கு நின்றதும் ரெண்டாம் வகுப்பு கம்பார்ட்மெண்டில் தேட ரத்னா மிஸ்ஸிங். பதறிப்போய்ப் பார்க்க சாவகாசமாக முதல் வகுப்பு கம்பார்ட்மெண்டில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள் அவள். அவளுடைய அப்பா கூடுதல் பணம் கட்டி, முதல் வகுப்பாக மாற்றிக் கொடுத்தாராம்.
பேகம் அக்தார் என்ற அற்புதமான ஹிந்துஸ்தானி சங்கீதப் பாடகி கூட வந்ததால் பயணம் முழுக்க தும்ரியும் அபங்கும் கஸலும்தானாம். அக்தருக்கு அடுத்த கூப்பேயில் மகா ஜோதிடர் ஒருத்தர் வந்தாராம். ரத்னாவுக்கு நான்கு பேர் அடங்கிய குடும்பம் என்று பார்த்ததுமே சொன்னாராம். புவி நினைவில் நான் திடுக்கிட்டேன். இன்னொருத்தர் யார்?
”இதுதான் மூணாவது” என்றபடி ரத்னா கைப்பையில் ஒரு உடுப்பி கிருஷ்ண விக்ரகத்தைக் காட்டி என் கன்னத்தில் தட்டினாள். அவளை அணைத்துக்கொள்ள நினைத்தேன். போர்ட்டர்களும் பயணிகளும் மொத்த உலகமும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்ததால் அதைக் கைவிட்டேன்.
”அத்தர் போட்டிருக்கீங்களா?”
அவள் கேட்க, பேகம் அக்தர் தான் தும்ரி வாடை அடிக்க அடிக்க பாபுல் மோரா பாடியபடி அவள் பெட்டியில் வந்திருப்பதாகச் சமத்காரமாகச் சொல்லித் தப்பினேன். புவியிடம் வாசனை செண்டை மாற்றச் சொல்ல வேண்டும்.
வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது தெருவில் சிறிய கலவரம் நடப்பதன் அறிகுறிகள் தட்டுப்பட்டன. ஜோசியரும், ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சுபாங்கி அம்மாளுடைய புருஷனும், டைப் இன்ஸ்டிட்யூட் ஐயங்காரும் சேர்ந்து நின்று பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். விலாசினி சாஜு வீட்டுத் தின்ணையில் நின்றபடி எல்லோரையும் போகச் சொல்லிக் கொண்டிருந்ததும் கண்ணில் பட்டது. அந்தரடிச்சான் சாகிப் சுற்றி வந்து குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்க, வெள்ளையன் கழுதையின் கனைப்பு திண்ணையிலிருந்து கேட்டது. அது எப்படியோ, தானே வழி கண்டு, சாஜு வீட்டுக்கு நேரே வந்து சேர்ந்து விட்டது என்று புரிந்தது.
“வெள்ளையன் இங்கேயே சமர்த்தாக இருக்கட்டும். போளி ஸ்டால்லே வேணும்னாலும் வாசல்லே கட்டி வைச்சுடலாம். படுத்திருக்கட்டும்.. நாங்க சாப்பிடற சப்பாத்தியும், வெல்லப் பூரண போளியும், உப்பு கார போளியும், மோதகமும் அதுக்கும் உண்டு” என்றாள் குந்தி ரத்னாவிடம்.
”ஒரே ஒரு தடவை பல்டி அடிச்சுக்கறேன்” என்று அந்தரடிச்சான் சாகிபு குட்டிக்கரணம் அடித்து, கழுதை கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கினான். அது செல்லமாகக் கனைத்தபடி நின்றது.
”குந்தி, சாப்பிடலாமா?” என்றார் சாஜு குந்தியிடம் அசல் தமிழில்.
”ஹோய், மாஜா சாம்ராட்” என்று பதில் குரல் கொடுத்தாள் சோழிப்பல் சுந்தரி.
“மீ பண் ஏத் ஆஹே” என்று தானும் வருவதை அறிவித்தான் பப்லு.
குடும்பம் என்றால் எல்லாம் தான், எல்லோரும் தான் என்றாள் ரத்னா.
(அத்தியாயம் நிறைவு – அடுத்த அத்தியாயம் ராமோஜி ஆங்கரே 1698 சுவர்ணதுர்க்கம்)