”எப்படி ஆடறோம்?” பத்திரிகையை என் முகத்துக்கு நேர்பிடித்தாள்.
எனக்கு எல்லாம் பழகிவிட்டிருந்தது. சகல நேசனின் உடும்புத் தைலமும், அறுபத்து நாலு கரணமும் நிஜமாகவும் கிட்டத்தட்ட அதே நிலைக்குக் கொண்டு போய் விட்டதைப் போல் அம்மணமாக ஆடுவது கிளர்ச்சியூட்டவில்லை தான். எழுதட்டும். இனி இது பற்றி எழுத ஒன்றுமில்லை என்று நிறுத்தி விடுவார்கள். நாலு பேர் அடுத்த வீட்டு காம்பவுண்டில் இருந்து பார்த்தால் பிரபலமானேன் என்று அர்த்தம். தலையைக் கண்டதும் டிரைவரும், தோட்டக்காரனும், சமையல்காரியும் குசுகுசுவென்று பேசினால் மேல்தட்டு பிரஜையாகி விட்டேன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.
”நீ ஷூட்டிங் ஷூட்டிங்னு ராப்பகலா போய் ரொம்ப பலகீனமா களைப்பாயிருக்கே.. இன்னிக்கு பூரா தூங்கி ரெஸ்ட் எடு. நான் பக்கத்திலே உக்காந்து, தூங்கறவரை மகாபாரதம் கதை சொல்றேன்..” என்றேன்.
அவள் புருவம் உயர்த்தி வியப்போடு பார்த்தாள்.
”ஓ பாரதக் கதை சொல்வியா? சல்லியன் யார் சொல்லு. அம்பாலிகை? உதங்கர்? புரூ?” விசாரித்தாள்.
வேணாம், ராமாயணமே சொல்றேன் என்று அவசரமாகச் சொன்னேன்.
”திருநீர்மலை வரல்லேன்னா பரவாயில்லே. நாளைக்கு ஞாயித்துக்கிழமை தானே. மகாபலிபுரம் போய்ட்டு வரலாமா? காரை நானே ஓட்டறேன்.. என் கிட்டே ட்ரைவிங் லைசன்ஸ் இருக்கு”. புவி முறையிட்டாள்.
அவள் விளைவித்த வியப்பை ஓரங்கட்டினேன். அது இல்லாமல் புவி இல்லை.
“நாளைக்கா?”
“ஏன் ராகம் இழுக்கறே?” மடியில் உட்கார்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சினாள்.
“இல்லே .. நாளைக்கு ரத்னா வரா. செண்ட்ரல் போய் கூட்டி வரணும்..”
”நினைச்சேன். இது டெம்பரவரி சந்தோஷம் தானே… ரத்னாக்கா வந்தா நீ முழுக்க அங்கேதான் சரணாகதி. இந்தப்பக்கம் இருக்கறவளை மறந்துடுவியே. ஒரு மணி நேரம் கூட வர முடியாதா? உன் வீட்டுக்கு வந்து கோனை அருவி கூட்டிப் போறேன்.. இல்லே நிம்மதியா பீச்சுலே கார் சவாரி. ரத்னாக்காவையும் கூட்டிப் போகலாம்”.
”எதுவுமே முடியாது புவி. நாளைக்கு ரத்னா வந்ததும் வீடு சுத்தமா இல்லைன்னு சுத்தப்படுத்த உக்காந்துடுவா. அவ ப்ரண்ட் எதிர்வீட்டு விலாசினி ஹெல்ப் பண்றேன்னாங்க.. நேத்து நாங்க ரெண்டு பேரும் வீட்டை பெருக்கி மெழுகிடலாம்னு சொன்னாங்க.. எனக்கும் பிடிச்சிருந்தது அது.. சாப்பாடும் கொடுத்து, வீடு சரியாக்கித் தரவும் விலாசினி வேணுமா.. அந்தப் பொண்ணுக்கு ஏன் கஷ்டம் தரணும்னு.. வேணாம்னுட்டேன் அதுலே விலாசினிக்கு ரொம்ப வருத்தம்.. புவனா புவி மாதிரி விலாசினி விலு.. எனக்கு, பொய் சொல்ல மாட்டேன்.. விலு மேலே ஒரு க்ரஷ் இருக்குதான்.. ரெண்டு பேரும் கல்யாணம் ஆனவங்க.. ஆனா என்ன.. க்ரஷ்ஷும் இன்பாசுவேஷனும் யாரையும் கேட்டுக்கிட்டும் வர்றதில்லையே..”
“ஓ இப்படி ஸ்பெஷல் ஷோ ஒரு படம் ஓடிட்டு இருக்கா? தெரியாதே” என்று கண்ணை அகல விரித்து வியந்தாள் புவனா.
”புவி, விலாசினி பேமிலி ப்ரண்ட்”.
“நான் உங்க பேமிலி. எனக்கும் ப்ரண்ட் தானே”.
“அப்படின்னா அப்படித்தான்” என்று அவள் தலையை வருடினேன். இங்கே இருந்தால் நாளைக்கு செண்ட்ரல் போகமுடியும் என்று தோன்றவில்லை.
”நல்ல உயரமா, எடுப்பா மாநிறமா அந்தப் பொண்ணுதானே.. ரத்னாக்காவுக்கு ப்ரண்ட் எல்லாம் அவங்க மாதிரியே அழகழகா வந்துடறாங்க”.
நான் குந்தி என்று ஆரம்பித்து சிரித்தேன். ஊஹும், இது இங்கே சரிப்படாது.
“சரி, நான் புறப்படறேன்.. இன்னும் ஒரு வாரம் வரமுடியும்னு தோணலை.. நான் வராட்டாலும் ஃபோன்லே அடிக்கடி பேசிப்போம்” என்றேன்.
“உங்க வீட்டுக்கு ஒரு லைன் வாங்கிடலாமா?” புவி கேட்டாள்.
“நான் ஏற்கனவே அப்ளை பண்ணிட்டேன்” என்று கெத்தாகச் சொன்னேன்.
“சாப்பிட்டுப் போ ராம். இட்லி, வடைகறி. கவிச்சி சாப்பிடுவியா?”
மாட்டேன் என்றேன்.
“ஏன் உடம்பு பெருத்துடுமா? நான் படிக்கற்போது எல்லாம் ஸ்ட்ரிக்ட் வெஜிடேரியன். தெலுங்கு ப்ராமின்ஸ்.. பந்துலு அம்மாஞ்சி அளவுக்கு இல்லேன்னாலும் வீட்டுலே வெங்காயம் கூட அண்டாது.. சினிமாவுக்கு வந்து சுரா, புறா, மீன், ஆடுன்னு சகலமும் பழகியாச்சு..”
சித்தி என்று கூப்பிட்டு ரெண்டு பேருக்கும் காப்பி எடுத்துவரச் சொன்னாள்.
“நரசூஸ் பொடி வாங்கினீங்களே போட்டு புது டிகாஷன் இறக்கி கொடுங்களேன்” என்று சித்திக்கு அன்புக் கட்டளை இட்டாள். சித்தி, பெட்டில் உட்கார்ந்திருந்த என்னை தேவடியானே என்று பார்த்துவிட்டுப் போனாள்.
சித்தி கொண்டு வந்து வைத்த காப்பியை ஒரு மிடறு குடித்தேன். சர்க்கரையே போடலியே என்று எழுந்து அவளைக் கூப்பிட முனைந்தேன். வேண்டாம் என்று புவனா நெருங்கி அமர்ந்தாள்.
“இங்கே இருந்து எடுத்துக்கோ”.
அவள் இதழ்களைச் சுவைத்தேன். சர்க்கரை அதிகம்.
நான் வீடு போகும்போது இருட்டு கவிந்து கொண்டிருந்தது. இன்றைக்கு சனிக்கிழமை கச்சேரி ஆலந்தூர் சகோதரர்கள் என்று நினைவு வந்தது. ”பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது” என்று செஞ்சுருட்டியில் பாடுவதைக் கேட்க இன்று எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதா, தெரியவில்லை.
பித்தம் எப்போது தெளியுமோ, அது தெளியும்போது நானிருப்பேனோ?