அவரையும் கூட்டிக்கொண்டு அடுத்த தெரு பாலாஜி பவனில் காப்பி குடித்து வரும்போது கேட்டேன் –
“உமக்கு தோபிகானா தெரியுமா?”
“தெரியுமாவாவது.. நான் அங்கே எம்முட்டு துணி தூக்கிப் போயிருக்கேன்..”
”நாயுடு, குழப்பறீர்” என்று புகார் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“அதில்லே சார், எங்க வீட்டுக்கு சலவைக்காரர் அங்கே தான் இருந்தார்.. நானும் சேத்துப்பட்டுக்காரன் சாமி… வளர்ந்ததெல்லாம் தோபிகானாவிலேதான்”.
மறுபடி குழப்பற்றிங்க நாயுடு ..
அங்கே துணி வெளுக்கத்தான் இடம் இருக்கு, நாயுடு போன்ற முரட்டுப் பிள்ளைகளை எப்படி, யார் வளர்த்தார்கள் அங்கு வைத்து என்று புரியவில்லை.
“அது கிடக்கட்டும், எனக்கு அவசரமா ஒரு நல்ல சலவைக்காரர் வேண்டும்..”
”கால்சராய், சட்டை, வேட்டி தினம் துவைச்சுத் தரவா? ஏற்பாடு செஞ்சுடலாம்”.
“அதுக்கு இல்லே. நம்ம சாஜுவோட கழுதையை சொந்த மகன் மாதிரி பிரியமா வளர்த்து கரையேத்த ஒரு சலவைக்கார நண்பர் வேணும். கிடைக்கலேன்னா சாஜு வீட்டைக் காலி பண்ண வேண்டி வரும்”.
நாயுடு தெருவில் நடுநாயகமாக நின்று, ”நாளைக்கு இதே இடத்துலே இதே நேரத்துலே நாயுடு வருவான், கேட்டுக்குங்க” என்று தன்னை படர்க்கை ஒருமை ஒன்றின்பால் உயிரினமாக்கிப் போனார்.
அடுத்த நாள் சனிக்கிழமை அவர் முகத்தில்தான் கண் விழித்தேன். கொஞ்சம் நரியின் சாயல் மூக்குப் பக்கம் தெரிந்ததாகத் தோன்றியதை மறந்து கொண்டேன்.
தச்சிலா தெரியுமா என்றார் நாயுடு. ஒன்றும் புரியவில்லை.
சாஜு சார்பில் நான் கேட்டுக்கொண்டபடி, கழுதையை அன்போடு வாங்கி வளர்க்க தோபிகானாவில் ஒரு சலவைத் தொழிலாளியைச் சம்மதிக்க வைத்துவிட்டார் நாயுடு. தச்சிலா என்ற பெயர் கொண்ட அவர், துணி வெளுக்கும் பெண்மணி. கழுதையை வாங்கவோ, விற்கவோ காசு ஏதும் தரவோ பெறவோ தேவையில்லாத பரிவர்த்தனையாம் இது.
”ஞாயிற்றுக்கிழமை காலை ஆறரைக்கு வெள்ளையனைக் கூட்டிக்கிட்டு தோபிகானா வந்துடுங்க. தச்சிலா ரெடியா இருக்கும்”.
“எழுந்திரிச்சதுமேயா?” என்று கேட்டேன். “கழுதை ரொம்ப நேரம் தூங்குமா? எழுப்பிவிட்டுடுங்க சீக்கிரம்..” என்றார் நாயுடு. என்னத்தைச் சொல்ல.
“தோபிகாட்லே விடிகாலை நாலு மணியிலேருந்து எட்டு மணி வரை மும்முரமா துணி துவைச்சுக்கிட்டிருப்பாங்க.. அப்போதான் நமக்கும் வேலை முடிக்கணும், சரியா சார்?” விஷயம் தெரிந்த பெருமிதத்தோடு அவர் கேட்க, சரிதான் என்றேன்.
நாளை ஞாயிறு. மாலை ஐந்து மணிக்கு இச்சல்கரஞ்சியில் இருந்து ரத்னா வருகிறாள் செண்ட்ரலில் போய்க் கூட்டி வரணும். வெள்ளையனை இடம் மாற்றணும். புவனாவை சந்திக்க வேண்டும். இனிமேல்கொண்டு, ரெண்டு பேரும் இந்த வாரத்து உடல் நெருக்கம் இல்லாமல், பழையபடி சிநேகிதம் மட்டும் முடிந்தவரை கடைப்பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிரந்தரமாக இல்லை என்றாலும் சில காலத்துக்காவது இது வேண்டியுள்ளது.
நாயுடு இன்னொரு காப்பிக்காக காத்திருக்க, எதிர் வீட்டிலிருந்து கேளப்பன் சேட்டன் வேலை மெனக்கெட்டுக் கூப்பிட்டு சாயா கொடுத்து நாயுடுவை ஷேம லாபம் விசாரித்தார். அவருக்கு ஆபீஸ் லீவு போல.
நான் கேளப்பன், மற்றும் நாயுடுவிடமிருந்து தப்பித்துக்கொண்டு ஆபீசுக்குக் கிளம்பினேன். விலாசினி சுடச்சுட வார்த்து எடுத்து வந்த தேங்காய் எண்ணெய் வாசம் மிகுந்த தோசையும், இஞ்சித் துவையலும் தெம்பாக ஆபீஸ் புறப்பட உதவின.
ஒரு துரையும் வராத ஓய்வான சனிக்கிழமை பகல். மதியம் கேண்டீனில் சாப்பிட்டு விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க விடாமல் மனசு புது மாம்பலத்துக்குப் போ போ என்று நச்சரித்தது.
எலக்ட்ரிக் ரயிலில் போய் இறங்கி கோபதி நாராயணா செட்டி வீதிக்குப் நடக்கும்போது கடல் காற்று வீசத் தொடங்கியிருந்தது. இதமான மாலை நேரம் வந்து கொண்டிருக்கும் சூசனை.
புவி வீட்டு வாசலில் கூர்க்கா என்னைக் கூர்ந்து பார்த்து சல்யூட் வைக்காமல் கதவைத் திறந்து அந்தர் ஜாயியே என்று உள்ளே அனுப்பினான். அடுத்த வீட்டு காம்பவுண்டில் இருந்து இரண்டு பேர் என்னைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டதை நான் கவனிக்கத் தவறவில்லை.
உள்ளே தோட்டக்காரன் வலிந்து வரவழைத்த சிநேகிதமான சிரிப்போடு ”உள்ளே போங்க சார்” என்றான். அவசரமாக தான் படித்துக்கொண்டிருந்த இந்துநேசனை மறைத்தபடி இருந்த இடத்தில் இருந்தபடியே சல்யூட் வைத்தான் ட்ரைவர்.
நான் படியேறி உள்ளே போகும் போது புவியின் டெம்பரவரி சித்தி, சமையல்கட்டில் சமையல்காரிக்கு உத்தரவு கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது நான் கண்ணில் பட்டேன்.
”ரண்டி ரண்டி பாபு … பாக உன்னாரா..” என்று நைச்சியமாக ரெண்டரை வயசு ஆண் குழந்தையைக் கொஞ்சுகிற தாலாட்டு ராகத்தில் என்னை வரவேற்றாள் சித்தி. அதீதமாகத் தெரிந்த வரவேற்பு அது.
போதும் என்று கையசைத்து புவியைத் தேடினேன். படுக்கை அறைத் திரை அசைய பின்னால் இரூந்து குரல் மட்டும் கேட்டது –
“உள்ளே வந்து இருங்க, ராம்… வந்தாச்சு”. புவனா குரல்.
நான் உள்ளே போகும்போது சித்தியும் சமையல்காரியும் என்னையே பார்ப்பது தெரிந்து பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன்.
“உட்கார் ராம்” என்று அரைகுறையாக உடுத்திக் கொண்டு அல்லது களைந்து கொண்டு புவனா படுக்கையில் உட்காரச் சொன்னாள். குஷன் வைத்த நாற்காலியைத் தேடினேன். எங்கே போனதோ.
”திருநீர்மலை போய்ட்டு வரலாமா?”
திடுதிப்பென்று என்னைக் கேட்டாள் புவி. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
”ரத்னா ஊர்லே இல்லாம..”
புவனா சிரித்தாள். ”அதுனாலே தான் போகலாம்னேன்”.
இந்தப் பேச்சு எங்கோ போய்க்கொண்டிருக்கிறதாக உணந்தேன். எழுந்து கொண்டேன்.
”என்ன சினிமாக்காரங்கன்னா திடீர் காதல், திருநீர்மலையிலே கல்யாணம், அடுத்த நாள் ஷூட்டிங்லே சாக்லெட் விநியோகம், நிருபர்களுக்கு ந்யூஸ் .. இதான் வழக்கம்னு நினைச்சியா ராம்? ஓ, நான் அவ்வளவு செல்பிஷ் இல்லே..”
“அப்படி நான் நினைக்கவே இல்லை புவி” என்றேன் சமாதானமாக.
”ரத்னாக்கா இல்லேங்கறதாலே ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டு வந்துடுவோம்னு கூப்பிடலே. நீ கவர்மெண்ட் சர்வெண்ட். ஹிந்து. ஒரு பெண்ஜாதிக்கு மேலே இருந்தா வேலை போயிடும், ஜெயில்லே போட்டுடுவாங்கன்னும் தெரியும்.. சும்மா திருநீர்மலையும் மகாபலிபுரமும் திருக்கழுக்குன்றமும் ஊர் சுத்திப் பார்த்து வரணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? ரிலாக்ஸ்”.
படுக்கையில் என் அருகே அமர்ந்து தோளில் கைபோட்டுக் கொண்டாள்.
”நல்லா இருக்கு இல்லே?”
டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் இரண்டு பேருமாகத் தெரிந்ததைச் சுட்டிக்காட்டிக் கேட்டாள்.
“போட்டோ கிராபரை வரச்சொல்லட்டா?” அவள் இன்னொரு தடவை சிரித்தாள்.
“உடும்புத் தைலம் எடுத்துட்டு வந்திருக்கியா?” சிரிப்பு இன்னும் அதிகமானது.
”புவி, காலையிலே ஏதாவது எடுத்துக்கிட்டியா?”
“நிச்சயமா இல்லை”.
”அப்புறம்?”
“இன்னிக்கு பேப்பர் பார்க்கலியா?”
“எங்கே பார்க்க? மணவாள நாயுடு சுருட்டி குடையோடு எடுத்துப் போய்ட்டாரே”.
“அவருக்கு ஏன் கொடுத்தே? யாரது?”
எலக்ட்ரீஷியன் என்று சொன்னபோது இந்த உரையாடலின் அபத்தம் எனக்குப் புரிபட்டது. ”தினமணி, சுதேசமித்திரன், ஹிந்து எதுவும் இன்னிக்கு படிக்கலே. என்ன விசேஷம்”” என்று புவியையே கேட்டேன்.
”தெலக்ஸ் புவனாவின் காதல் லீலை. குமாஸ்தாவோடு ஜல்சா. தி நகர் முழுக்க உடும்புத் தைல வாடை”.
புவனா தலையணைக்குக் கீழே இருந்து எடுத்துக் கொடுத்தது சகலநேசன் இல்லை. சினிமாநேசன் என்று பெயர் போட்டு பழுப்புக் காகிதத்தில் அச்சடித்த இன்னொரு நேசன்.
”இது கொஞ்சம் அட்வான்ஸ் ஆக நியூஸ் போடற பத்திரிகை போல இருக்கு. நீ ஆபீஸ் நேரத்துலே காமக் களியாட்டம் போடுறவனாம். உனக்கும் எனக்கும் ஒண்ணரை வயசுலே ஒரு பிள்ளை இருக்கானாம். நாக்பூர்லே அவனை உங்க அப்பா வீட்டுலே விட்டுட்டு இங்கே குடித்து, கும்மாளம் போடறோமாம். உன் பெண்டாட்டி லட்சுமிகரமா இருந்தும் குரங்கைக் கட்டிக்கிட்டு கூத்தாடறியாம். அதென்னமோ சரி. ரத்னாக்கா மகாலட்சுமிதான். நான்.”
டிரஸ்ஸிங் டேபிள் மிரரில் கண்ணடித்து, என் காதை மெல்லக் கடித்து நெஞ்சில் பிராண்டினாள் புவி.
“காளிங்க ரத்தினம் அண்ணன் கிட்டே உன் பெண்டாட்டி பஞ்சாயத்துக்குப் போயிருந்தாங்களாம். நாம் அவர் சொல்லியும் கேட்காமல் அம்மணமா ஆடிட்டிருக்கோமாம்.. வா ஆடலாம்” என்றாள்.