புதினம் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி – சகலநேசன் 1946 ஜனவரி

உடம்பு கொஞ்சம் ஓய்வெடு என்று முரண்டு பிடித்தது. சூபரின்டெண்டெண்ட் பதவி இல்லாதிருந்தால் ஆபீசுக்கு ஒரு நாள் லீவு சொல்லியிருப்பேன்.

எல்லா அக்கப்போரும் சகித்து, நீள நீளமாகக் கையெழுத்து போட்டு, நிறைய ஃபைல் நோட்டிங்குக்கு ரிடர்ன் என்று சிவப்பு மையில் எழுதித் திருப்பி அனுப்பி, ஓர் ஆபீஸ் நாள் கடந்து போனது.

சாயந்திரம் ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது சாஜுவை வீட்டு வாசலில் பார்த்தேன். முகம் மலர்ந்திருந்தார்.

காலையில் எம்விஎம் செட்டியார் ஆளனுப்பிக் கூட்டிவரச் சொல்லியிருக்கிறாராம். அடுத்த படத்தின் ஆர்ட் டைரக்டர்களில் இவரும் இருக்கக் கூடுமாம்.

எல்லாம் ஏரோப்ளேன் வேகத்தில் நடந்திருக்கிறது. புவனா அதன் பின்னால் என்று விளங்கியது. அவளுக்குக் கூட இருந்தும், கிடந்தும் நன்றி சொல்ல வேண்டும். இணை விழைய ஒரு சாக்கு. உடம்பு துணைக்கு ஏங்குகிறது. ரத்னாவை சௌகரியமாக மறந்தாகி விட்டது. இன்னும் சில நாட்கள் இந்த நெருக்கமும், புவனாவின் வாய் மணமும் கையிடுக்கு வாடையும், ஏலம் கிராம்பு வாசனையையும், செண்ட் அள்ளி அக்குளில் பூசியதையும் கடந்து, கூடவே வந்து போதையூட்டிக் கொண்டிருக்கும். வரட்டும். அதெல்லாம் தான் காமம்.

அடுத்து வந்த சாயந்திரத்தில் சாஜுவை வாசலில் பார்த்தேன். செட்டியாரைப் போய்ப் பார்க்கலியா என்று கேட்டேன்.

“போனேன், ஒரு மணி நேரம் காத்துக்கிட்டிருந்தேன். நாளைக்கு பார்க்கறாராம்னு அனுப்பிட்டாங்க” என்றார் ஒரு நைந்த சிரிப்புடன். பெரிய மனுஷர்கள். நம்மைப் போல் இது ஒன்று மட்டும் அவர்கள் கவனிக்க வேண்டியதில்லை. நமக்குக் காரியம் ஆக நாம் தான் அலைய வேண்டும்.

”பரவாயில்லை. இத்தனை நாள் பொறுத்தாகி விட்டது. இன்னும் ஒரு நாள் தானே” என்றேன் நைச்சியமாக. புவி கேட்டால் சொல்ல விஷயம் உண்டு. இப்போது போய்ப் பார்த்தால் என்ன? வீட்டில் இருப்பாளா. பிரகதி ஸ்டூடியோவில் ஷூட்டிங் என்றாள். போய்ப் பார்க்கலாமா? வேணாம், சகலநேசன் விசேஷ எடிஷன் போட்டு விடுவான்.

போளிக்கடை அமோகமாகப் போகிறதாக சாஜு சொன்னார். தப்பாக உச்சரித்தால் என்ன, காத்திருந்து வாங்கி சாப்பிட்டு பார்சல் எடுத்துப் போகிறார்களாம். குந்தி தான் முழு நிர்வாகமும். அப்புக்குட்டியின் வைப்பு ஒருநாள் போல வந்து நிற்க முடியவில்லை என்று வருவதில்லையாம்.

எங்கோ ஆரம்பித்தது எப்படியோ வளர்ந்து குந்திக்கும் சாஜுவுக்கும் நல்ல வழியைக் காட்டிவிட்டது போளி ஸ்டால். ஆர்ட் டைரக்ஷன் இல்லாவிட்டாலும் போளி கைகொடுக்கும். பப்லு கூட குட்டிக்கரணம் போடுவதை கம்மியாக்கிக் கொண்டு போளி பார்சல் கட்டுவதில் மும்முரமாம். கழுதை வெள்ளையன்? அவன் விஷயம் தான் பிரச்சனையாகி விட்டது என்றார் சாஜு.

வீட்டு சொந்தக்காரராக கல்யாண சமையல் மாஸ்டர் அப்புக்குட்டி, கழுதையைத் துரத்தியடிக்கணும் அல்லது வீட்டைக் காலி செய்ய வேணும் என்று சொல்லி விட்டாராம். தெரு முழுக்கப் புகார் சொன்னதன் பலன்.

போளி ஸ்டாலில் முதலீடு போட்டிருப்பதால் அவரால் சாஜுவை முழுக்கப் பகைத்துக் கொள்ளவும் முடியாது என்பது நல்லதாக எனக்குப் பட்டது.

கழுதையை தோபிகானாவில் சலவைத் தொழிலாளி யாருக்காவது கொடுத்து விடலாம் என்று யாரோ சொன்னார்களாம்.

“சார், தோபிகானாலே யாரையாவது தெரியும்னா..ப்ளீஸ்.” சாஜு கெஞ்சினார்

தோபிகானா சேத்துப்பட்டில் இருப்பது தெரியும். அங்கே யாரைப் பிடிக்க?

மணவாள நாயுடு நினைவு வந்தார்.வாக்கிங்க் என்சைக்ளோபீடியா.

நாளைக்கு சொல்கிறேன் என்று சாஜுவிடம் விடை பெற்று வீட்டைப்பார்க்க நடந்தேன்.

வீட்டுக் கதவைத் திறந்தேன். ரெண்டு நாள் பெருக்கித் துடைக்காதது, மேலே லேசாகப் பூசிய தூசியில் தெரிந்தது. துடைப்பத்தைத் தேடி எடுத்து பெருக்கும்போது வாசலில் ரத்னா ரத்னா என்று குரல். விலாசினி தான்.

”ரத்னா ஊருக்கு.. தெரிந்திருக்குமே..” நான் ஆச்சரியப்படுவதாக நடித்துச் சிரித்தேன். விலாசினியும் சிரித்தபடி உள்ளே வந்தாள். புவியை விட ஒரு அடி உயரம் கூடுதல் விலாசினிக்கு என்று மனம் உருப்படியில்லாத கணக்குப் போட்டுச் சொன்னது.

”தெரியும்.. அண்ணான்னு கூப்பிடலாம்னா ரொம்ப செயற்கையா இருக்கும்.. சார் சார்னு கூப்பிடலாம்னா, சோப் விக்கற சேல்ஸ் கேர்ள் நினைவு வரும்..”

சொல்லியபடி உள்ளே வந்தவள் நான் அவளைக் கண்டதும் கீழே போட்டிருந்த
துடைப்பத்தைப் பார்த்தாள்.

“விளக்கு வைச்ச அப்புறமா பெருக்கறது மகா தப்பு..” துடைப்பத்தை சமையலறைச் சுவரில் சாத்தி வைத்தாள்.

“தூசி கொஞ்சம் போல தானே இருக்கு.. ஒரு ராத்திரி பொறுத்துக்குங்க நாளைக்கு வரேன்” என்று சொல்லும்போதே அவள் முகம் குங்குமம் போல் சிவந்து விட்டதைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

கையில் வைத்திருந்த பாத்திரத்தில் ஆப்பமும் ஸ்ட்யூவும் வழிய வழிய எடுத்து வந்திருந்தாள்.

“இது ராத்திரி சாப்பாடு காலையிலே டீ எடுத்து வரட்டா..?”

”உங்களுக்கு சிரமம் வேணாம்.. நான் ஹோட்டலுக்குப் போய்க்கறேன்.. கம்பெனி கொடுக்க ஆள் ரெடி.. எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு”.சிரித்தேன்

“ஓ, கம்பெனிக்கு ஏற்பாடு செஞ்சாச்சா.. பெரிய ஆள் சார் நீங்க ..போகட்டே.. போன வாரம் ஒரு கும்பாவிலே பாயசம் கொண்டு வந்திருந்தேன் .. கிச்சன்லே தேடி அந்தக் கும்பாவை எடுத்துக்கட்டா?”

முன்னால் வைத்திருந்த வலை போட்ட அலமாரியிலேயே கும்பா விலாசினி போல புஷ்டியாக வீற்றிருந்தது. எடுத்து அவளிடம் நீட்டினேன். விலாசினி கை நீட்டும்போது புவனா நினைவு வந்தாள். ஸ்தம்பிக்க வைக்கும் மெல்லிய வியர்வை வாடையின் கிறுகிறுப்போடு வாசலுக்கு நடக்கும் போது சற்றே திரும்பி என்னிடம், பாயசம் எப்படி இருந்தது எனக் கேட்டாள்.

“கோகனட் பேரடைஸ், மில்க் லாகூன், கேஷ்யு ஹெவன்” என்றேன். அது ரொம்பப் பிடித்திருக்கும் போல. ”ஸோ நைஸ் ஓஃப் யூ” என்று உதடு குவித்துப் பாராட்டி கண்ணால் குளிர்வித்துப் போனாள் விலாசினி.

ரத்னா, புவனா என்று மாறிமாறி நினைவு வர எப்போது உறங்கினேனோ. மணவாள நாயுடு திண்ணையில் என் காலடிப் பக்கம் உட்கார்ந்து சுதேசமித்திரன் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி கண் விழித்தேன்.

”நாயுடுகாரு , உமக்கு காப்பி வேணும்னா கழுதைக்கு ஒரு ஏற்பாடு செய்யும்”.

நான் அவரிடம் சொல்ல, ஒரு நிமிடம் என்னைக் கூர்ந்து பார்த்தார்.

“சார் இன்னும் தூக்கம் முழிக்கலே போலே இருக்கு.. இந்த சீன் கனவு முடிச்சு எழுந்திருங்க .. நான் தினமணியும் படிச்சுடறேன் இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. சினிமா மலர் இணைப்பு அமர்க்களமா இருக்கும்” என்றார் நாயுடு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன