ராமோஜியம் நாவலில் இருந்து – சகலநேசனில் தகவல் வந்த ஜனவரி 1946 மதறாஸ்

ரத்னாவை மனதில் அவள் இடத்தில் ஒன்றுக்கு ஒன்பது பூட்டு போட்டுப் பூட்டி வைத்தேன். புவி என்றேன் கிளுகிளுப்பாக அவள் கூந்தலில் முகம் மறைத்துப் பின்கழுத்தில் முத்தமிட்டபடி. என்னடா என்றாள் அவள் என் தோளில் கடித்து.

இதெல்லாம் தசாபதி என்கிற கருப்பு வெள்ளை சினிமாவில் நடக்கிறது. நான் அங்கே அனாவசியமாகப் புகுந்தது தெரிய வந்து என்னைத் துரத்திவிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்தேன்.

”மச்சி, தேவிடியாக் கச்சேரி பார்க்க சூபரின்டெண்டெண்ட் வந்திருக்கார்.. காப்பி எடுத்துவரச் சொல்லுங்க” தசாபதியின் அம்மா என்னைச் சுட்டிக்காட்டியதைப் பார்த்தேன்.

ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் ஏ ஆர் பி வார்டன் உடுப்பில் நிஜாரோடு வந்து, “ரோந்து சுத்தப் போ.. ஜப்பான் ப்ளேன் வருது.. உடுப்பை மாட்டிக்க.. இந்தப் பொண்ணு பம்பாய் போகணும் .. அவளைத் தொந்தரவு பண்ணாதே” என்று விசில் ஊதி என்னை எழுப்பப் பார்க்கிறார். ஏர் ரைட் சைரன் விடாமல் ஒலிக்கிறது.

எழுந்து ஓடு என்றது ஒரு மனம். இதெதுவும் நான் இல்லை என்றது இன்னொன்று. உடம்பு இரு என்று உத்தரவு போட்டது. சரி என்றேன்.

”புவி, எங்க தெருவிலே ஆர்ட் டைரக்டர் கழுதை சாஜு… ”.

”ராம், நீ சரியான லூசு .”. அவள் அணைப்பில் படுக்கையில் உருண்டேன்.

ராத்திரி ஏழு மணி என்றது சுவர்க் கடியாரம். குளித்து, புவி கொடுத்த புது வேட்டியும், சட்டையும் புது மாப்பிள்ளை போல் அணிந்து நிலைக்கண்ணாடியில் முகம் பார்த்து நிற்கிறவன் வேறு யாரோ.

புவியோடு உட்கார்ந்து ராச்சாப்பாடு. பரட்டாவும் மட்டன் குருமாவும் தின்னத் தின்ன இன்னும் என்றது களைத்துக் களித்திருந்த உடல். புவி எடுத்து ஊட்டினாள்.

டீபாயில் சகலநேசன் கிடந்தது. எடுத்துப் பார்த்தேன்.

ராம்ஜி என்ற குஜராத்தி பிராமண குமஸ்தன் கன்னடப் பேரழகியான தெலக்ஸ் புவனாவை பெண்டாண்டு கொண்டிருக்கிறானாம்.

நான் ராம்ஜி இல்லை, ராமோஜி. குஜராத்தி இல்லை, மராத்தி. பிராமணன் இல்லை, ஷத்ரியன். குமாஸ்தா இல்லை, சூபரின்டெண்டெண்ட். இவள் கன்னடப் பேரழகி இல்லை. தெலுங்குக் கன்னி. பெண்டாள்கிறேனா, ஆணாள்கிறாளா?

புவியிடம் கேட்டேன். அவளுடைய ஈரத் தலைமுடி கன்னத்தில் படிய இழுத்து அணைத்து, நிறைந்து ததும்பும் மார்பில் முகம் தேக்கி முத்தமிட்டுப் புறப்பட்டேன்.

முன்ஹாலில் தசாபதி நூறுநாள் கொண்டாட்டத்தில் புவனாவுக்குக் கொடுக்கப்பட்ட கேடயம் கண்ணாடி பீரோவுக்குள் தெரிந்தது. மனதில் வெண்திரை நாயகியாக புவி ஓடி வரத் துரத்திப் போனவன் நான் தான். தசாபதி நாட்டியக் காட்சியில் புவி ஆடும்போது நானும் நுழைந்து அவளைப் பாதி ஆட்டத்தில் பூச்சுமையாகச் சுமந்து உள்ளே போனது உறவு கொள்ள.

மறுபடியுமா?

புவி வாசல் வரை போய்த் திரும்பிய என்னை கைப்பிடித்து உள்ளே கூட்டிப் போனாள். புவி என்றேன் தயக்கத்தோடு. கழுதை சாஜுதானே பார்க்கலாம் என்றாள். தைலம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். இல்லாமலும் தான் என்று என்மேல் படர்ந்தாள். அறுபத்து நாலு கரணம். இப்போது ரெண்டு கம்மி என்றாள். சேர்ந்து உறங்கிய நேரம் நினைவில்லை.

காலையில் வீட்டுக்கு வந்தபோது திண்ணையில் எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு உட்கார்ந்திருந்தார்.

“என்ன சார், காப்பி குடிக்கப் போயிருந்தீங்களா? சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே” என்றார். நாயுடுவோடு போகும் இடமா நான் போயிருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன