ராமோஜியம் – நாவலில் இருந்து ஒரு பகுதி – சென்னை 1946

புவனாவின் ’சுந்தரி’ பங்களா வாசலில் அவளுடைய ஆஸ்டின் கார் சமர்த்துக் குட்டிப்பாப்பா போல் நின்றுகொண்டிருந்தது. தோட்டக்காரனும், டிரைவரும், சமையல்காரியும் கண்ணில் படவில்லை. பக்கத்து காம்பவுண்டில் அந்த வீட்டு ஊழியர்கள் அவசர மகாநாடு கூட்டி எதையோ விவாதித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. என்னைப் பார்த்ததும் ஆயியே சாப் என்று கூர்க்கா சல்யூட் அடித்து உள்ளே அனுப்ப அவர்களின் பேச்சு நின்றது.

கூட்டமாக அவர்கள் என்னைப் பார்த்தபடி அடுத்த வீட்டுக்குள் போனார்கள். அவர்கள் போகும்வரை வாசலில் நின்று விட்டு, அழைப்பு மணியை அழுத்தினேன்.

உள்ளே சத்தமே இல்லை. ரெண்டு நிமிஷம் பொறுத்துப் பார்த்தேன். மறுபடி அழுத்தினேன். யாரையும் காணோம். அழைப்பு மணி வேலை செய்யவில்லை போலிருக்கிறது.

கதவைத் தள்ளினேன். திறந்து கொண்டது.

என்னைப் பார்த்ததும் ஹாலில் உட்கார்ந்து ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைத் தொகுப்பு படித்துக் கொண்டிருந்த புவி எழுந்து வந்தாள் என்று சொல்ல நினைத்தேன். அவள் ஹாலில் தான் இருந்தாள். புத்தகம் எதுவும் படித்துக்கொண்டிருக்கவில்லை.

அவளுக்கு முன்னால் டீப்பாயில் ஒரு பகார்டி சுபீரியர் ரம் போத்தல். பக்கத்தில் சின்ன கிறிஸ்டல் கிளாஸ்.

”வாங்க .. ரண்டி” என்று வரவேற்றாள் ரம் மணக்க.

“இது.. நீங்க.. சாரி..:” நான் அவளையும் கிறிஸ்டல் கிளாஸையும் பார்த்தேன்.

”என்ன ராமோஜி சார் ஆச்சர்யமா? வேறே ஒண்ணுமில்லே.. வயித்து வலி பொறுக்காம போனதுன்னா ஒரு சிப்.”

நான் பதறினேன்.

“வயித்து வலியா, வாங்க டாக்டர் கிட்டே போய்ட்டு வருவோம்.. மீசை நாயர் சார் போன் நம்பர் என்கிட்டே இருக்கு..”

“ரொம்ப அவசரப்படறீங்க.. வயறு வலிச்சா குடிக்க ஆரம்பிச்சது தனியா இருக்கும்போது ஒண்ணு ரெண்டு க்ளாஸ் ஸிப் பண்ற அளவிலே இருக்கு.. அதைச் சொல்ல வந்தேன்.. இம்போர்ட்டட் ரம்.. பம்பாய்லே வாங்கினேன்”.

நான் அவளையே பார்த்தபடி நின்றேன். “உள்ளே வாங்க ராம்”.

”வீட்டிலே யாருமில்லையா?”

”இல்லேன்னா வரமாட்டீங்களா?”

”அப்படி இல்லே.. தனியா நீங்க உக்காந்துகிட்டு..”

“அதான் நீங்க வந்துட்டீங்களே.. தனி எங்கே? வேலைக்காரங்களுக்கு கட்டாய அரை நாள் லீவு கொடுத்து ஆளாளுக்கு நூறு ரூபாயும் கொடுத்து காலையிலே வந்தா போதும்னு துரத்திட்டேன்.. சித்தி ராஜமுந்திரிக்கு அவங்க வீட்டுக்கு போயிருக்கா.. இந்த நேரத்திலே தனியா இருந்தா மனசுக்கு இதமா இப்படி குடிக்கலாம்.. சொல்லுங்க.. எப்படி இருக்கீங்க?”

”நானும் தனியாத்தான் இருக்கேன்..”

“க்ரேட் .. ரத்னாக்கா.?”

“அம்மா வீட்டுக்கு போயிருக்கா. வாரக் கடைசி ஆகும் வர..”

“மெவ்விலீஸ்.. என்சேண்டிங்..”

அவள் கொஞ்சம் தள்ளாடி என்னருகே வந்து நிற்க, பழங்களின் மயக்க வைக்கும் வாடை.. ‘யூ லுக் ஸ்மார்ட்’ என்றாள் என் கன்னத்தைத் தட்டி.

“கதவை சாத்திடலாமா?”

இருதயம் படபடக்க, தப்புக்காரியம் செய்ய அட்வான்ஸ் வாங்குகிற மாதிரி வாசல் கதவைச் சாத்தித் தாழிட்டேன்.

அடுத்த வினாடி, இதற்குத்தான் இத்தனை நாள் காத்திருந்ததுபோல் எல்லாத் தடைகளும் உடைந்து நொறுங்க, வெள்ளப்பெருக்கில் அலைக்கழிக்கப்பட்டு நகரும் துரும்பானேன்.

“நான் சூபரின்டெண்டெண்ட் ஆகிட்டேன் புவி” என்ற அற்ப விஷயம் சொன்னபடி கை நீட்டினேன். கன்கிராஜுலேஷன் என்று என்னோடு கை குலுக்கினாள். தோளில் சாய்ந்தவளின் கண் இமைகள்மேல் நான் மெல்ல முத்தமிட்டேன்.

”ஸ்வீட் எல்லாம் கிடையாதா?”

அவள் கையைப் பற்று விடாமல் வளையல்களை பின்னும் முன்னும் தள்ளியபடி, நாளைக்கு எடுத்து வரேன் என்றேன்.

“இப்போ கொடுக்க ரத்னாக்கா பெர்மிஷன் தரலியா?”

“அவ ஊர்லே இல்லேன்னு சொன்னேனே புவி”.

“வந்ததும் பெர்மிஷன் வாங்கி, இதுக்காக இன்னொரு தடவை வருவீங்க அப்படித்தானே?”

“இதுக்காக?” என்று கேட்டபடி இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டேன்.

“எல்லாத்துக்கும் தான்.. ”

என் உதட்டைக் கடித்து நாவால் எச்சில் பூசி, விரல்களைத் தன் விரல்களோடு அழுந்தப் பின்னிக் கொண்டாள் புவி.

“நீங்க கொடுக்கலேன்னா பரவாயில்லே.. நான் ட்ரீட் கொடுக்கட்டுமா?”

நான் நிதானமாக அவள் காது மடல்களை முத்தமிட்டுக் காலம் உறைந்து நிற்க, மறுபடி இதழ் பொருத்தியிருந்தேன். கைகள் வரம்பு மீறத் தொடங்கின.

”எடுத்துக்கறீங்களா ராம்?” பகார்டி போத்தலைக் காட்டினாள்.

தயங்கி விட்டுத் தலையசைத்தேன், டீப்பாயின் கீழிருந்து இன்னொரு கிறிஸ்டல் க்ளாஸை எடுத்தாள். போத்தலிலிருந்து அதற்குள் ரம் வார்த்தாள்.

“அர்ஜெண்டைன் ரம் ..”

“நல்லாயிருக்கு புவி.. உன்னை மாதிரி .. பார்த்தாலே போதை” என்றபடி அவள் உதடுகளை விரலால் நீவினேன்.

பேச்சும் மனதும் உடலும் விபரீதமாக சஞ்சரிப்பதாக உணர்ந்து ரெண்டு பேரும் விலகி அமர்ந்தோம். ஒரு வினாடி தான். மறுபடி நெருங்கி இருந்தோம்.

”பிரிண்ட்லே பார்த்துட்டா இதான் சங்கடம்.. நமக்கு அதெல்லாம் இல்லே, அப்படி எதுவும் நடக்கலேன்னு தெரியும்.. ஆனா படிச்சதும் இப்படி இருந்தா எப்படியிருக்கும்னு தோண ஆரம்பிச்சுடுது .. ஒரு கிளுகிளுப்பு .. உடும்பு தைலம் ஒருத்தருக்கு ஒருத்தர்.. ஸோ எக்ஸோட்டிக்.. ஸ்நேக் ஆயில் மாதிரி என்ன வைல்ட் இமாஜினேஷன்.. ட்ரை பண்ணலாமா?” புவி கொஞ்சினாள்.

தலைகால் புரியாமல் பார்த்தேன்.

”உங்களுக்கு எப்போ தெரியும்?”

காற்றும் கடந்து போகாமல் நெருங்கி உட்கார்ந்து கேட்டபடி டீப்பாயில் ஏதோ தேடினாள் புவி.

இன்றைக்கு காலண்டரில் என் நட்சத்திர பலன் என்ன என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. மனதில் இருப்பது, எப்போதாவது கற்பனை செய்து மயங்கிக் கிடப்பது என்று எல்லாம் பலித்து வருகிற தினமா? சூப்பரிண்டெண்ட் ஆனதில் இருந்து இங்கே புவியோடு .. இது என்ன நாள்..

”எனக்கு காலையிலேயே தெரியும்.. டைரக்டர் கன்னையா சம்சாரம் போன் பண்ணிச்சு.. ரத்னாக்கா மாதிரி நெருக்கமான தோழி அவங்களும்.. இந்த ஊர்க்காரிங்கறதாலே தமிழும் என்னை மாதிரி சரளமா படிப்பா.. ரத்னாக்கா தமிழ் படிக்குமோ? படிச்சிருந்தா நீங்க இன்னிக்கு முழுசா ஆபீஸ் போயிருப்பீங்களோ!”

நான் ஆபீஸ் போறதுக்கும் ரத்னா தமிழ் படிப்பதற்கும் என்ன சம்பந்தம்?

”ரத்னா வியாசர் அமுதமும், துப்பறியும் சாம்புவும் மட்டும் ஒருமாதிரி படிப்பா.. மத்தபடி நல்லா பேச வரும்..” என்றேன்.

இந்த சம்பாஷணையில் ரத்னா அவசியம் வந்தாக வேணுமா?

“உங்களுக்கு எப்போ தெரியும்னு கேட்டேன்.. பதில் சொல்ல மாட்டீங்களா?”

நான் சுதாரித்துக்கொண்டேன். ஏதோ எனக்குத் தெரியாத ஒன்று. அது என்னைத் தவிர மற்றவர்கள் எல்லோருக்கும் ஊரோடு தெரிந்திருக்கிறது.

“எனக்கு எல்லாம் ஏற்கனவே தெரியும்” என்றேன் எந்த நிச்சயமும் இல்லாமல்.

அவள் டீப்பாயில் பத்திரிகைக் குவியலுக்கு அடியே இருந்து பழுப்பு நிறக் காகிதத்தில் அச்சான எதோ ஒரு நியூஸ்பேப்பரை உருவி எடுத்தாள்.

சகலநேசன்.

இப்படி ஒரு பத்திரிகை இருக்கிறதா என்றேன் புவியிடம். குறும்பு தானே. அவள் என் மூக்கை நிமிண்டியபடி பத்திரிகையை என் கையில் கொடுத்தாள்.

பத்திரிகையில் முதல் பக்கத் தலைப்பு – குமாஸ்தாவோடு குமாரி புவனா கும்மாளம்.

”சத்தமா படியுங்க . உங்க குரல்லே கேட்க கிக்கா இருக்கு” என்றாள் புவி.

நான் படித்தேன்.

”செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உத்தியோகம் பார்க்கும் ராம்ஜி என்ற குஜராத்தி பிராமண குமஸ்தன் கன்னடப் பேரழகியான தெலக்ஸ் புவனாவை பெண்டாண்டு கொண்டிருக்கிறானாம். இவர்கள் அவள் இருக்கும் புதுமாம்பலத்தில் ராப்பகலாகக் கும்மாளம் போட்டு கொட்டமடிப்பது போதாமல், ஆந்திராவில் ராஜமுந்திரி போய், முசாபரி பங்களாவில் ஜல்சாவுக்காக ரூம் வாடகைக்கு எடுத்து, சமீபத்தில் வெகு உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. அறுபத்து நாலு கரணமும் செய்து சுகித்தும் திருப்திப்படாமல் பரஸ்பரம் உடும்புத் தைலம் பூசிவிட்டு, தோளில் கால்..”

எனக்குத் தலை சுற்றி வந்தது. புவி என்னை அணைத்து இறுக்கி டேக் இட் ஈசி என்றாள் பகார்டி ரம் மணக்க. அவள் உதட்டில் மெல்லக் கடித்து இன்னும் ஒரு மிடறு ரம் குடித்தேன். அக்னி திராவகம் எரிமலைக் குழம்பாக எனக்குள் மெதுவாக நகர்ந்து, தலைக்குள் ஜிவ்வென்று பாய்ச்சல் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன