சூபரிண்டெண்டெண்ட் ராமோஜி 1946 ஜனவரி – ராமோஜியம் நாவலில் இருந்து

கேண்டீனுக்குப் போனபோது எனக்கு அதிகார போதை தலைக்கேறி இருந்ததாக உணர்ந்தேன். எதிர்ப்பட்ட எல்லோரும் மரியாதையாகச் சிரித்து ஒரு அடி விலகி நின்று கைகுவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நாலைந்து பேர் அப்படி மனசைக் குளிர்வித்தார்கள் தான். ஆனால் பல பேர், என்னைப் பார்த்ததும் ஒதுங்கி ரெண்டு மூணு பேராக நின்று உற்றுப் பார்த்து ஏதோ தகவல் சரி பார்க்கிறதாகத் தலையாட்டிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

நல்லா வயிறு எரியட்டும்.. நான் டெம்பரரி சூபரின்டெண்டெண்ட்… அது நிரந்தரமாக என்ன சூசனைகளும் உண்டு.. ஆகட்டும் இவர்கள் பிருஷ்டத்தில் சூடு வைத்து இழுத்து வரச்சொல்லி மண்டியிட வைக்க மாட்டேனா என்ன?

சாயந்திரம் சீக்கிரம் கிளம்பினால் என்ன? சூப்பரிண்டெண்ட் என்றால் அவ்வப்போது சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் தான். வீட்டுக்கு நாலு ஃபைல் எடுத்துப் போய்க் கொண்டு வந்தால், ஆபீஸ் காரியத்தை வீட்டிலும் போய்ப் பார்க்கிற அதிகாரியாக பெயர் வரும் நல்லதுக்குத் தான்.

நாலு மணிக்குக் கிளம்பும்முன் தான் வீட்டுக்கு வேண்டாம் தெலெக்ஸ் வீட்டுக்குப் போகலாமே.. அதுவும் என் வீடு தான் என்று மனம் உறவு சொல்லியது..

இன்று காலையில் பம்பாயில் இருந்து பறந்து வந்து மீதி நாள் ஓய்வெடுக்கப் போவதாக புவி சொல்லியிருந்தாளே.. போய்ப் பார்த்தால் என்ன..

சூபரின்டெண்டெண்ட் ஆனதும், நிரந்தரமாக ஆகப் போவதும் சொல்லி சந்தோஷம் பகிர்ந்து கொள்ளலாம். பந்துலு அப்பா இறந்தது பற்றி கட்டிப்பிடித்து ஒரு நிமிடம் அழலாம்.. கைலாசவாசி சீனியர் பந்துலுவை எனக்குத் தெரியாதே..

புதுமாம்பலம் போக ஒரு சாக்கு வேணும்.. ஆர்ட் டைரக்டர் கழுதை சாஜு நினைவு வந்தார். அவருக்கு ஒரு படத்தில் சான்ஸ் வாங்கித்தரும்படி புவியிடம் ஒரு வார்த்தை சொல்லலாமே. உதவிக்கு உதவி, உறவுக்கு உறவு..

நான் கடைசியாக ஒரு புது பென்ஷன் ஃபைலைப் பார்த்து அப்ரூவ்ட் என்று ரெகமெண்டேஷன் எழுதி நீளமாகக் கையெழுத்துப்போட டெலிபோன் அடித்தது.

“பென்ஷன் சூப்பரிண்டெண்ட் ஆபீஸ்.. செக்ரெடேரியட் ஆபிசர் ராமோஜிராவ் ஹியர்..

”ராமோஜி சார், புவி ஹியர்… குட் ஈவினிங்..”

”குட் ஈவினிங் புவி… நானே அங்கே தான் கிளம்பி வந்துட்டிருக்கேன்”.

”பரவாயில்லே சார்… வரணும்னு இல்லே.. உங்க சௌகரியப்படி செய்யுங்க..”

”நோ நோ நேர்லே பார்த்து பேசறதை நேர்லே பேசிடணும்.. போன்லே முடிக்க முடிஞ்சாலும் அததுக்கு நடைமுறை உண்டே..”

”நான் பெரிசாவே எடுத்துக்க மாட்டேன் சார்…”

”வரலாம்னு புறப்பட்டாச்சு. பெரிசென்ன சிறிசென்ன.. அப்படியே இருக்கட்டுமே..”

”ஓ எனக்கு ஆப்ஜெக்ஷன் இல்லே..”

”புவிக்கு இல்லேன்னாலும் ராமோஜிக்கு இது பெரிசாச்சே.. இங்கே ஏதாவது வாங்கிட்டு வரணுமா..?”

”நோ தேங்க்ஸ் ராம்.. ப்ளீஸ்..

”சீ யூ புவி ..” ஃபோனை வைத்தேன்.

உன்னை நயந்துநான் பேசி ஓர் முத்தம். அதென்ன உடும்பு தைலம்.. என்ன சமாசாரம் என்று வீரையாவிடம் விசாரிக்கவேண்டும்.. வீரையா முறைத்துக்கொண்டே கடந்து போக, வரச்சொல்லி விரல் சுட்டினேன்.. முறுக்காகத் திரும்பி வந்தான்.

” ஏன் சார் நரசய்யா கூட வம்பு வளர்க்கறே?.. மூத்திரத்திலே மீன் பிடிக்கற மாதிரி அவன் ஊர் மாறிப் போக எட்டு ரூபா பிசாத்து காசு தர முடியாது, அஞ்சு ரூபா தரேங்கறியே.. மூணு ரூபா மிச்சம் பிடிச்சா ஆறாம் ஜியார்ஜ் சக்கரவர்த்திக்கு ஐஸ்ப்ரூட் வாங்கித் தரப்போறியா, இல்லே அவர் உனக்கு தருவாரா?”

வீரையா என் பக்கத்தில் வந்து காட்டிய சைகைக்கு ஐஸ்ப்ரூட் சாப்பிடுவது தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.

நான் ”எட்டு ரூபாய் இல்லே, பத்து ரூபாய்க்கு பாஸ் பண்ணிட்டேன்” என்று சொல்ல அவன் முகம் மலர்ந்து, ராமோஜி அண்ணவாரு அண்ணவாரு தான் என்று என்னைச் சிலாகித்தான். கம்சலை விஷயம் சும்மா நரசய்யா பேச்சு வாக்கில் நூல் விட்டுப் பார்த்தானாம். நான் அவளைக் கண்டு மெய்மறந்து நிற்பதாக அவளே வீரையாவிடம் சொல்லியும் அவன் நம்பவில்லையாம்.

அதோட அழகு எங்கே.. நீங்க எங்கே… உங்க அழகு எங்கே.. அது எங்கே..

எதோ சொல்ல வந்து ஏதோ சொல்ல, உடும்பு என்று நான் ஆரம்பிப்பதற்குள் அவனைக் காணோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன