பந்துலுவின் மேஜை மேல் குவிந்து கிடந்தன பழையதும் புதியதுமாக ஃபைல்கள். நான் தினசரி ஏதாவது பற்றி அவரோடு பேச வரும்போதும் அதெல்லாம் இருந்தாலும், இந்த நாற்காலியில் உட்கார்ந்ததும் அதிகமாகப் பெருகி எனக்காகக் காத்திருப்பதாக பிரமை. என்னைப் பெருங்காயமாகக் கரைத்து ஒன்றுமில்லாமல் செய்ய இத்தனை ஃபைல்கள். இன்னும் வருகின்றன.
நான் முதல் ஃபைலைத் திறந்தேன். நரசய்யாவுக்கு விஜயவாடா கலெக்டர் ஆபீசுக்கு இட மாற்றம் அனுமதித்து நோட் போட்டிருந்தது. ஆராவமுதன் போட்ட நோட்டு. அவர் தலை கதவுக்கு அந்தப் பக்கம் தெரிந்தது. நான் நிமிர்ந்து பார்த்து வர உத்தரவிடப் பதைபதைப்புடன் அவர் காத்திருந்தார்.
ஆராவமுதனை உள்ளே வரச்சொல்லி வீரையா மூலம் சொல்லி விட்டேன். அதிகாரம் பெண்போதை மாதிரி. அதை விட அதிகம். வைப்பாட்டியோடு குலாவிக் கொண்டிருப்பதை அடுத்தவன் பார்த்தால் சில பேருக்கு போதையாவது போல, அதிகாரத்தோடு உலவிக் கொண்டிருப்பதை இன்னொருத்தன், அதுவும் நேற்றுவரை தோளில் கைபோட்டுக் கொண்டு கூட நடந்து வந்தவன் வாயையும் ஆசனத்தையும் பொத்தி ஒதுங்கி மரியாதையோடு நின்று பார்ப்பதை கடைக்கண்ணால் நோக்குவது அதிக போதை தருவது.
எனக்கு அது வேண்டியிருக்க வீரையாவைக் கூப்பிட்டபடி பைலைப் படிப்பதாக திறந்து வைத்துக் கொண்டேன். மே ஐ கம் இன் என்று ஆரம்பித்து பலகீனமாக சார் என்று முடித்து சூபர்ந்யூமரெரி ஆராவமுதன் கேபினின் சிறிய அரைக்கதவைத் திறக்கக் கை வைத்தபடி எட்டி எட்டி உள்ளே பார்த்து நின்றான். கம் இன் கம் இன் என்று பொறுமை இழந்தவனாகச் சொல்லி ஃபைலில் ஆழ்ந்திருந்ததாகக் காட்டிக்கொண்டேன். ”அந்த ஃபேன் சுவிட்ச்சை போடச்சொன்னது காதில் விழலியா?” என்றேன் தலையை ஃபைலில் நட்டபடி.
”ராம்.. சார்.. என் கிட்டேயா சொல்றீங்க..” ஆராவமுதன் குழம்பி நிற்பதை ரசித்தபடி நரசய்யாவை கூப்பிடும் என்றேன் அலட்சியமாக. வீரையாவும் நரசய்யாவும் உள்ளே நுழைந்து ஓரமாக நிற்க, ஆராவமுதன் எனக்கு விசிறி சுற்ற வைக்க ஓடிப் போய் சுவிட்ச் போட, அதிகாரம் மமதையாக கண்ணைக் கிறக்கியது.
“வாரும் ஆராவமுதன் .. ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தி ஒரே தட்டில் அவரையும் வீரையா, நரசய்யாவையும் வைத்தேன்.
”நரசய்யா, உன் டிரான்ஸ்பருக்கு சிபாரிசு வந்திருக்கு.. என்ன விஷயத்துக்காக ட்ரான்ஸ்பர் இப்போ கேக்கறே? இங்கே இருந்து அங்கே போக – எங்கே .. யெஸ் விஜயவாடா .. செலவு ஆகுமேப்பா.. எல்லாம் சர்க்கார் தலையிலே போடற உத்தேசமா” என்று ஈவிரக்கமின்றிக் கேட்டேன்.
”எவ்வளவு ஆகும் அதுக்கு? தனியா செலவுக் கணக்கு எழுதிக் காட்டியிருக்கணுமே…”
ஆராவமுதன் மரியாதையோடு ஃபைலை வாங்கி நடுங்கும் கைகளோடு இரண்டு பக்கம் தள்ளி விவரம் வாசித்தார் –
“மூன்றாம் வகுப்பு ரயில் மார்க்கமாக மதறாஸ் விஜயவாடா போக மூணு பேர் – நரசய்யா, பெண்டாட்டி, மகன் மூணு வயசு – செலவு ரெண்டரை டிக்கட் ஆறு ரூபா, லக்கேஜ் ரெண்டு ரூபா ஆக மொத்தம் எட்டு ரூபாய்.. ”
”யுத்த காலத்திலே இருக்கறதை விட யுத்தம் ஓய்ந்த இப்போ சிக்கனம் கடைப்பிடிக்கணும்னு கவர்னர் கழுதையா கத்திக்கிட்டிருக்கார்.. நீங்க பாட்டுக்கு ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு வாரி வழங்கறீங்களே”
ஆராவமுதனைப் பார்வையால் எரித்தேன். சூப்பரிண்டெண்ட் நாற்காலியின் விசேஷம் அதில் உட்கார்ந்ததும் மிடுக்கோடு பேசத் தன்னாலேயே வந்தது.
எட்டு ரூபா செலவு தரமுடியாது. அஞ்சு ரூபாய் தான்.. ரெண்டரை டிக்கட் இல்லே ரெண்டு டிக்கட்… லக்கேஜுக்கு தனியா தரமுடியாது..
பட்டவர்த்தனமாக உரைத்து, “என்னப்பா நரசய்யா சரிதானே?” என்று ஆராவமுதைப் பார்ப்பதைத் தவிர்த்து நரசய்யாவை நோக்கியபடி சொன்னேன். அவன் விரைப்பாக நின்று அலட்சியமாக பதில் சொன்னான் –
”மூணு ரூபா கூட வேணாம் சாமி.. சர்க்காருக்கு செலவு நிறைய இருக்கும்.. வைப்பாட்டி வீட்டுக்கு மாகாணிக் கிழங்கு ஊறுகா போட்டுத் தூக்கிட்டு போக ரிக்ஷா கூலி எல்லாம் சர்க்காருக்கு முக்கியமான செலவு ஆச்சே.. தோள்மேலே காலு.. சுளுக்கிக்கப் போவுது.. பார்த்து.. உடும்புத் தைலம் வாங்கிப் பூசி.. அதெல்லாம் கிடக்கட்டும்.. கவர்னர் கழுதையா கத்தறாராமே.. அடடா.. ரொம்ப மருவாதியான விஷயம் ஆச்சே..”
நான் தடாரென்று அதல பாதாளத்தில் கால் இடறி விழுந்த மாதிரி உணர்ந்தேன். கவர்னரையும் கழுதையையும் ஒரே வாக்கியத்தில் சேர்ந்து வரும்படிக்குச் சொல்லியிருக்கக் கூடாது.. மாகாணிக் கிழங்கு.. வைப்பாட்டி வீடு.. ரிக்ஷா கூலி .. ஐயோ .. என்ன சொல்கிறான் இழவெடுத்தவன்…. தோள் மேலே கால்.. உடும்பு தைலம்.. இதென்ன விஷயம்.. வீரையாவும் ஆராவமுதனும் கூட நக்கலாக பார்த்த மாதிரி இருந்ததே.. என்ன சமாசாரமாக இருக்கும்..
”சரி ஐயா, நீங்க உங்க சௌகரியப்படி செய்யுங்க.. சார்.. உங்களுக்கு கண்வலி வந்திருக்காமே.. கம்சலை சொல்லிச்சு.. அதைப்பார்த்து கண்ணடிச்சீங்களாம்.. நீங்க நாக்கு அளுகின மாதிரி அசிங்க அசிங்கமா, ஆபாசமா பேசினாலும் பேசுவீங்க.. ஆனா, சின்னப் பொண்ணைப் பார்த்து காவாலித்தனமா கண்ணடிக்க மாட்டீங்கன்னு அதுங்கையிலே சொன்னேன்.. கண் வலியிலே என்ன செய்யறோம்னே தெரியாம போயிருக்கலாம்.. போகுது போ.. கண்ணுலே உடும்பு தைலம் போட்டுக்க முடியாதுதான்.. வேறே மருந்தே இல்லையா என்ன?”
சொல்லியபடி நரசய்யா கைக்குட்டையால் பின்னங்கழுத்தைத் துடைத்துக்கொண்டு போனான்.
சதுரங்கத்தில் செக் வைக்கப்பட்ட ராஜா மாதிரி முழித்துக் கொண்டிருக்க, அந்தப் படையெடுப்பு நரசய்யாவுக்கும் கூட வந்த ஆராவமுதுக்கும் வெற்றிமுகத்தைக் காட்டியதாகத் தெரிந்தது. வீரையா வெளியே போகும்முன் திரும்பி வந்து மெல்லிய குரலில் அதிகாரமாகச் சொன்னான் –
”சார், தோஸ்த் இல்லியா நீ? கம்சலை புருஷன் ஒரு மாதிரி பட்டவன்… எனக்கு என்னமோ பேச, சிரிக்க சிநேகிதன்னு சலுகை.. எல்லோருக்கும் முடியாது.. அதும்மேலே அத்தனை இஷ்டம் வேணாம் .. சொல்லிட்டேன்.. ஆமா, உடும்பு தைலம் இங்கே இருந்து எடுத்துப் போவியா மாம்பலத்துலே வாங்குவியா?”
அவன் சற்று உரக்க ஏதோ தெலுங்கு பாடலை முணுமுணுத்தபடி, ‘போடா மயிரே’ என்று என்னை நரகலைப்போல் பார்த்து வெளியே போக, என் முதல் சூப்ரண்டண்ட் தினப் பகல் ஊர்ந்து போனது.