தியூப்ளே வீதி
“அழகான பெண்களே, என் இன்னுயிர்த் தோழிகளே, எல்லாக் கசடுகளோடும் நான் இன்னும் உயிர் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் உங்கள் அன்பும் உங்கள் மேல் என் தீராக் காதலும்தான் காரணம். உடலும் காமமும் எரிந்து தீரும். நான் இருப்பேன் நீங்களாக!”
– நாவலில் இருந்து
இரா.முருகன் ஸார் அவர்களின் படைப்புகளில் முதன்முதலில் நான் வாசித்தது “மூன்று விரல்” நாவல். அதற்குப் பிறகு நினைவில் இருப்பதில் முதலாவது என்றால் “நெம்பர் 40, ரெட்டைத் தெரு” புனைகதைதான். அவரது வார்த்தைகளின் படி ‘1960-களில் தமிழ்நாட்டில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறுநகரத்தில் வாழ்ந்த பத்து வயதுப் பையனின் வாழ்க்கை’ அந்தப் புனைவு!
அதன்தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்குப் பிறகு 1970-களில் அந்தப் பையன் வளர்ந்து, வேறு ஒரு ஊரில் கல்லூரியில் அடியெடுத்து வைத்து, பல்வேறு வகையான மனிதர்களுடன் பழகி, அழகான மூன்று பெண் தோழிகளுடன் வாழ்ந்த ஓர் ரசமான வாழ்க்கையே ‘தியூப்ளே வீதி’. இப்போது நான் பணியாற்றும் தினமணி டாட்காமில் இந்த நாவல் 33 வாரங்கள் தொடராக வெளிவந்துள்ளது. (ஆர்வமுள்ளோர் தேடி வாசிக்கக் கடவது)
இந்தப் படைப்பானது பயோஃபிக்ஷன் எனப்படும் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையிலமைந்த ஓர் புனைகதை என்பதால் நாம் படிப்பவற்றில் எவ்வளவு சதவீதம் உண்மை? எவ்வளவு சதவீதம் கற்பனை? என்ற சுவராஸ்யமான கேள்வியும், எழுத்தாளர் குறித்து நாம் உருவாக்கி இருக்கும் பிம்பத்தை, புனைகதை சம்பவங்களோடு பொருத்திப் பார்க்கும் முயற்சிகளும் உங்களையறியாமல் வாசிப்பில் ஊடுபாவிக்கொண்டே இருக்கும்! 🙂
ஓகே, படைப்புக்குள் வருவோம். இந்த நாவலில் கதைசொல்லியான அந்தக் குறும்புக்கார இளம் பிராயத்தினன் ரெட்டைத் தெரு வாசியாக அந்தக்கால புதுமுக வகுப்பு (பியூசி) சேரும் தருணத்தில், பக்கத்து வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்காக பொள்ளாச்சியில் இருந்து வரும் மேகலா அவன் வாழ்க்கையில் வந்துசேரும் அழகான முதல் காதலி! பின்னர் பொங்கல் மற்றும் கிடைத்த விடுமுறை தினங்களில் அவள் இங்கு வந்து போக அந்தக் காதல் வளர்கிறது. ஆனால் அதைத் தொடர வாய்ப்பில்லாமல் அவனது வாழ்க்கையானது கல்லூரிப் படிப்பிற்காக, ‘தியூப்ளே வீதி’ அமைத்துள்ள புதுச்சேரிக்கு இடம்பெயர்கிறது. உடன் நாமும்தான். ஆனால் அதன்பின்னான கல்லூரி நாட்களில் அவன் மனசின் வழி ஆங்காங்கே மேகலா தலைகாட்டும் குட்டிக் குட்டி எபிசோட்கள் எல்லாமே ‘மினி மேஜிக்கல் ரியலிஸம்’! 🙂
புதுவையில் கல்லூரி முதல்நாளில் ராகிங் செய்வதன் வழியாக அவனுக்கு அறிமுகமாகும் லெச்சு, வைத்தி, சிற்சபேசன், அந்த்துவான் என்ற ஒரு பெரிய நட்புப் பட்டாளம். அவர்கள் வழி அறிமுகமாகும் சாந்தி ரூழே எனும் தோழி. ராகிங்குக்காக குனிந்து சலாம் சொல்வதன் வழி அவனுக்கு நட்பாகும் சீனியர் மாணவி வைஷூ என வரிசையான கதாபாத்திரங்கள் ஒருபக்கம்!
அதேநேரம் அப்பாவின் நண்பர் மூலம் டவுன்ஹாலில் விருந்தொன்றுக்குச் செல்லும் போது அங்கே மெல்லிய மதுபோதையில் அவனுக்கு அறிமுகமாகும் செவிலியான ஜோஸபின். இந்தநாவலில் அவளோர் தேவதைக் கதாபாத்திரம். அவளுக்கும் கதைசொல்லிக்கும் இடையில் நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் தருணங்கள் அனைத்தும் குறும்பு, காதல், கோபம், தாய்மை, ஆங்காரம் மற்றும் அக்கறை எனப் பலவகையான உணர்வுகளின் கலவையானதோர் வானவில்! அடுத்ததாக தமிழாசிரியர் பார்வேந்தனாரின் மகளாக வரும் கயல் (எ) கயல்விழி. அவனாடு சரிக்குச்சரியாக நின்று பேசி, கொஞ்சி, விளையாடி, கோபப்பட்டு, அவன் கூடவே சைக்கிள் விட்டு, அவ்வப்போது உதடுகளில் வழிய வழிய ‘ஷகொலா’ சாப்பிட்டு முழுக்க அதகளம் செய்பவள். அடுத்தபடியாக ப்ரெஞ்ச் இறக்குமதி நாயகி அமேலி! நாயகனோடு ரொம்ப இண்ட்டிமஸியாக இருக்கும், அதன்பொருட்டு சோகத்தைச் சுமக்கும் பேரழகி. மேகலாவையும் சேர்த்து இந்த நான்கு பெண்களுடன் நடக்கும் ஒரு “ரோலர் கோஸ்டர் ரைட்”தான் இந்த பயோஃபிக்ஷன் புனைகதை!
கதைசொல்லி இந்த நான்கு பெண்களையும் நேசித்து, ஒருத்தியோடு உறவும் கொண்டு, திருமணத்திற்குப் பிறகும் அது தொடர்ந்து என இந்த நாவல் உங்கள் முன் வைப்பது ஒரு மெட்டா எத்திக்கல் கேள்வி! வாசித்து நீங்களே விடை தேடலாம். உங்கள் காதல் நினைவுகளை அசை போட்டபடி! 🙂
இரா.முருகன் ஸார் எழுத்துக்களில் ‘மேஜிக்கல் ரியலிசம்’ தாண்டி என்னை மிகவும் கவர்த்தது அவரது நகைச்சுவை. ‘வாத்தியார்’ பாணியில் சொல்வதென்றால் ‘அபார நகைச்சுவை’. மனம் விட்டுச் சிரிக்காமல் இதன் பக்கங்களை உங்களால் புரட்ட முடியாது. வாசித்தபோது தனியே உட்கார்ந்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்த என்னை அம்மா ஒரு மாதிரியாக பார்த்து விட்டுப் போனார். வாத்தியாருக்கு ஸ்ரீரங்கம், கவிஞர் கலாப்ரியாவிற்கு நெல்லை போல முருகன் ஸாருக்கு ரெட்டைத் தெருவை உள்ளடக்கிய அவரது ஊர் ஒரு metaphor! அவரது படைப்புகளில் அது வெவ்வேறு வகையில் வெளிப்படும் விதம் எப்போதுமே வியந்து பார்க்கத்தக்கது.
2016 மத்தியில் மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகில் உள்ள ஏதோ ஒரு கன்வென்ஷன் சென்டரில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. உமா ஷக்தி அக்கா,கவிஞர் Tk Kalapria எழுத்தாளர்கள் பாலகுமாரன் மற்றும் மாலன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்ட நினைவு. அப்போது கையில் காசில்லை என்பதால் புத்தகம் வாங்கவில்லை. 🙁 பின்னர் உமா அக்காவிடமே 2018 வாக்கில் இரவல் வாங்கிய புத்தகம். இந்தக் கரோனா நாட்களில்தான் படிக்க வாய்த்திருக்கிறது. புத்தகம் வாசிப்பது குறித்த எனது வாட்ஸப் ஸ்டேட்டஸ் பார்த்து மெசேஜ் செய்த அக்காவிடம், கரோனா தளர்வு வந்தவுடன் புத்தகத்தை சமத்தாக திருப்பித் தருவதாக கூறியுள்ளேன். 🙂
எனக்கு ஏனோ எப்போதுமே இரா.முருகன் ஸார் தமிழில் குறைவாக கொண்டாடப்படும் ஓர் எழுத்தாளர் என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். அதை மீண்டும் ஒருமுறை இந்தநூல் உறுதி செய்திருக்கிறது. mersi sir!
