ராமோஜியம் நாவலில் இருந்து – 1946 ஜனவரி ஆர்தர் ஆஷ்லே – மதறாஸ் கவர்னரின் காரியதரிசியை ராமோஜிராவ் சந்தித்தபோது

பந்துலு சார் கவர்னரின் செக்ரெட்டரி துரைக்கு ஃபோன் பண்ணி, அந்த துரை சொன்னபடி நடந்ததாம் இது. வீரையா ஒன்பது மணிக்கு ஆபீஸ் வரும்போது வெளியே போய்க்கொண்டிருந்தாராம் பந்துலு. அவர் வீரையாவிடம், ”இந்தக் கடுதாசிகளை அவசியம் ராமோஜி சாரிடம் சேர்த்து விடு” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப் போனதாகச் சொன்னான் அவன்.

முதல் கடிதம் என் பெயர் கவரில் எழுதியது. அடுத்தது மிஸ்டர் ஆர்தர் ஆஷ்லே என்று கவர்னரின் செக்ரெட்டரிக்கு விலாசம் எழுதியது.

”அன்புள்ள ராமோஜி, என் தகப்பனார் வால்ட்டேரில் நேற்று ராத்திரி பரமபதம் அடைந்ததாக தந்தி வந்திருக்கிற படியால் நான் பத்து நாள் வாய்மொழியாக லீவு வாங்கிப் போய்க்கொண்டிருக்கிறேன். லீவ் லெட்டரை மிஸ்டர் ஆஷ்லேயிடம் கொடுக்கவும். டெம்பரரி சூபரிண்டெண்ட் ஆக உம்மை நியமிக்கச் சொல்லியிருக்கிறேன். நான் வரும்வரை நல்லபடி நடத்திக் கொடுக்கவும்”.

நான் இன்னொரு தடவை கடிதத்தைப் படித்தேன். பந்துலு ரயிலிலோ பஸ்ஸிலோ இப்போது பதைபதைப்போடு போய்க்கொண்டிருப்பார். எல்லா பிரயாண சம்பந்தமான கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு பன்னிபாய் பந்துலுவும் கூடவே அடக்க ஒடுக்கமாகப் பிரயாணத்தில் இருப்பார்.

நான் இப்போதில் இருந்து சூபரிண்டெண்ட் ஆக பந்துலுவின் இடத்தில் உட்கார்ந்து சகல உலகமும் அடக்கியாண்டு அதிகாரம் செலுத்த ஆரம்பித்திருக்கிறேன் நான் செக்ரெட்டேரியட் பென்ஷன் செக்ஷன் ஆக்டிங் சூப்பரெண்டெண்ட்.

பந்துலுவின் நாற்காலியில் உட்கார்ந்தபோது டேபிளில் கண்ணாடி ஷீட்டுக்குக் கீழே அவர் வைத்திருந்த தெலுங்கு பிரதேசம், கன்னடம், மலையாளம், தமிழ்தேசக் கோவில்களின் கோபுரங்கள் – ஸ்தல மூர்த்தி படங்களை ஒவ்வொன்றாகத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டு வேலையைத் தொடங்கப் பார்த்தால் இன்றைக்கு சாயந்திரம் வரை மேஜைக் கடவுள்களோடு தான் போகும் என்று புரிந்து கொண்டேன்.

ஒரே நமஸ்காரமாக எல்லா அவதாரங்களுக்கும் கை குவித்து, கவர்னர் ஆபீஸ் செக்ரட்டரி என்ற உப தலைமை அதிகாரி துரையைப் பார்க்க அவர் கேபினுக்குப் போனேன். இவருக்கு மேல், கவர்னருக்குக் கீழே இன்னும் ஒரு துரை உண்டு… சீப் செக்ரட்டரி டு கவர்னர்… அவரையும் தரிசனம் செய்ய நாள் நெருங்கி வருகிறது..

நான் இத்தனை வருஷம் கோட்டையில் உத்தியோகம் பார்த்தாலும் ஒரு துரையின் ஆபீசிலும் இதுவரை நுழைந்து பாதம் பணிந்ததில்லை. அதெல்லாம் மாறப்போகிறது பந்துலு அப்பா தயவால்.

”இருங்க சாமி, தொரை கையிலே சொல்லிட்டு வரேன்”.

டவாலி வீராச்சாமி செட்டியார் என்னை ஒரு பிரம்பு உள்வாங்கிய நாற்காலியில் இருத்திவிட்டுப் போனார். துரையை முதல் தடவையாகப் பார்த்துப் பேசப் போகிறேன். கையில் எலுமிச்சம்பழம் கூட எடுத்துப் போகவில்லையே என்று மனம் குறைப்பட்டது. எலுமிச்சம்பழம் என்னத்துக்காக எடுத்துப் போகணும் என்று இதுவரை தெரியாமலேயே எட்டு வருஷம் கவர்மெண்ட் சர்வீஸில் உழைத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறேன்.

துரை தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தபோது நான் கதவைத் தட்டிவிட்டு உள்ளே போனேன். உள்ளே நுழைந்து இடுப்பு வரை குனிந்து வணங்க வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

கையில் பந்துலு சார் எழுதிய கவரோடு குனிய, தன்னிச்சையாக வாயுப் பிரிந்தேன். இதேதடா சங்கடம் என்று துரையிடம் மன்னிப்பு கேட்க, ‘எனக்கு ரொம்ப பிடிச்சது சுபாவமா பேசி, சிரிச்சு, வாயு பிரிந்து… நாம் எல்லாரும் மனுஷங்க. கல் சிலை இல்லை’ என்றான் துரை. எஸ் சார் என்றேன் உடனே.

“பந்துலு அதானே உன் பெயர்?”

என்னைக்கேட்டான் துரை. இல்லை என் சூபரிண்டெண்ட் பெயர் என்றேன்.

“பந்து என்றால் பால்ஸ் தானே?” என்று என் அரைக்குச் சுட்டி அடுத்த சிரிப்பு.

“அது இல்லே சார், ஒரு சர்நேம்.. துணைப்பெயர்.. அதற்கெல்லாம் அர்த்தம் இல்லை” என்றேன்.

“உனக்கு பால்ஸ் இல்லை என்கிறாயா?” என்று அடுத்த கேள்வி. கேணைத்தனமாக சிரித்து நின்றேன்.

“அப்போ இன்னும் ரெண்டு வாரம் அந்தக் கிழவன் கண்ணிலே படமாட்டானா? ரொம்ப நல்லது. உனக்கு எத்தனை பெண்டாட்டி?

“ஒன்று தான்” என்றேன்.

”எனக்கு லண்டன்லே ஒண்ணு. இங்கே இன்னொண்ணு. கருப்பு அழகி. கம்சலை மாதிரி” என்றான். செயிண்ட் ஜியார்ஜ் கோட்டை முழுக்க கம்சலை பிரசித்தம். துரைக்கு வீரையா பற்றித் தெரியாது. ரட்சைப்பட்டான் பயல்.

”உன் பேரென்ன?”, வெளியே வரும்போது கேட்டான். ராமோஜி ராவ் என்றேன்.

“ ஓ நீதான் ராமோஜியா? பெர்மனெண்ட் சூப்பரின்டெண்ட் போஸ்டுக்கு உன்னைத்தான் சீஃப் செக்ரட்டரி ரெகமெண்ட் பண்ணியிருக்கார்.. உனக்கு தெரியாதுன்னா இப்போ தெரிஞ்சுக்க.. வெளியே சொல்லிடாதே.. சொன்னா உன் பால்ஸை நெரிச்சுடுவேன்..”

அவன் கையைப் பிசைகிறார்போல, கைகுலுக்குவது போல கையசைத்து விடைகொடுக்க, ஆனந்தம், பேரானந்தம்.

நான் வெளியே வந்தபோது டவாலி செட்டியார் ஓடி வந்து துரை கொடுத்ததாகக் கையில் கொடுத்துப் போனான். இன்னும் சீவாத பெருமாள்செட்டி அண்ட் சன்ஸ் பென்சில் அது. அன்பளிப்பு தந்ததாகவாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன