”பலகாரச் செலவில் பாதிக்கு பாதியாவது வாடகையிலே கழிச்சுக்க முடிஞ்சா இந்த மாசம் கையிலே காசு ரொம்ப கஷ்டப்படுத்தாமே புழங்கும்”. சாஜு கூடவே முறையிட்டார்.
எனக்கு இந்த முறையீட்டில் புரியாத பகுதி உண்டு. அப்புக்குட்டியின் பெண்டாட்டி இறந்து போய் பத்து வருஷமாகிறது. நான் வீடு விலைக்கு வாங்கி இங்கே குடி வந்ததற்கு ஒரு மாதம் முன்புதான் அந்தம்மா நோய் கண்டு மரித்தது. அவள் எப்படி ஸ்வீட் செய்யக் கற்றுக்கொள்ள வந்தது?
ரத்னா இம்மாதிரி புதிர்களை விடுவிக்கக் கூடியவள். அவளிடம் கேட்கலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டு, நான் வந்த விவகாரத்தை ஆரம்பித்தேன். கழுதை கெட்டால் குட்டிச்சுவரோ என்னமோ, கழுதை தெருவிலே ஓடினா ஒரு வீடு, வாசல், கதவு மிச்சமிருக்காமல் தொந்தரவுதான்.
”ராமோஜி சார் கொஞ்சம் அப்புக்குட்டி சார் கிட்டே எடுத்து சொல்லணும். இல்லேன்னா இன்னொரு ஐடியா கூட கைவசம் உண்டு” என்றார் சாஜு
”அந்தம்மாவும் இந்தப் பொண்ணும் சேர்ந்து மாம்பலத்துலே மராட்டா போளி ஸ்டால் வச்சுடலாம்.. அப்புக்குட்டி இடம் பிடிச்சுத் தந்து, கொஞ்சம் முதலீடும் உதவட்டும்.. பிசினஸ் நல்லா போகும் .. இனிப்பு, கார போளி மட்டும் போதும்..”
”அண்ணா இந்த ஊர்லே போளியை பெயர் சொல்றது கூட பாதாம்லே வர ப மாதிரி boli-யாம். சரியான உச்சரிப்போட ப-வை அழுத்தமா போட்டு சொல்லக் கத்துக்கொடுத்துட்டு சித்திவிநாயக் போளி ஸ்டால்னு பேர்வச்சுடலாம்” என்றாள் குந்தி அழகாகச் சிரித்து.
நான் கழுதை கிடக்கு என்று எழுந்து வந்தபோது சாஜு வீட்டு சமையலறையில் இருந்து போளி கமகமவென்று வாசனையடித்துக் கொண்டிருந்ததாக நாசி கற்பனை செய்தது.
ரத்னா அப்புக்குட்டியிடம் பேசி கடை போடுவதை முடித்துத் தருவதாகவும் அப்படி செய்தால் எவ்வளவு கமிஷன் தருவார்கள் என்றும் கேட்டாள். தினசரி ரெண்டு பேர் சாப்பிடும் அளவு, எட்டு இல்லை பத்து இனிப்பு, கார போளி டெலிவரி வேண்டும் என்று விளையாட்டுக்காகக் கேட்க, அப்படியே ஆகட்டும் என்றாள் குந்தி. போய் வந்து அரைநாளில் விஷயம் முடிந்துவிட்டதாக ஆபீஸ் விட்டு நான் வந்தபோது அறிவித்தாள் ரத்னா. கமிஷன் வேண்டாமென்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டதாகவும் சொன்னாள் அவள்.
அப்போதுதான் எனக்கு அப்புக்குட்டி சம்சாரத்தின் சமாசாரம் நினைவு வந்தது. ரத்னா கண்ணை ஒரு வெட்டு வெட்டி, பொய்க் கோபம் காட்டினாள்.
“இதெல்லாம் மறக்கவே மாட்டீரே ராவ்ஜி,, அப்புக்குட்டி ஒரு குப்புக்குட்டியை கீப்பாக வச்சுக்கிட்டிருந்தா உமக்கு லஹரி ஏற ஆரம்பிச்சுடுமே அவளைப் பார்க்காமலேயே… பார்க்கணும்னு மனசு கிடந்து அடிச்சுக்குதா?”
ஆமா, பெரிய கிளியோபாட்ரா.. விலாசினிக்கு தங்கச்சி.. நான் வாசலுக்குப் போனேன்.
அடுத்த ஞாயிறு கழுதை வெள்ளையன் எந்த விஷமமும் யார் வீட்டிலும் செய்யாமல் சமர்த்தாக தன் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தது. அது மட்டுமில்லை, அதன் பக்கத்தில் திண்ணையிலிருந்து காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு பப்லுவும் சாதுப் பிள்ளையாக, அந்தரடிச்சான் சாகிப் அவதாரமாக இல்லாமல் உட்கார்ந்திருந்தான்.
மாம்பலத்தில் சித்தி விநாயக் போளி ஸ்டால் திறக்கிற நாளாம் அது. குந்தி என்னையும் ரத்னாவையும் கூட்டிப் போய் விளக்கேற்றி ஆரம்பிக்க வைத்தாள். .
மெட்றாஸுக்கு வந்தது நல்லதா போச்சு. ஆர்ட் டைரக்ஷன் வாய்ப்பு கிடைக்காட்டாலும் போளி ஸ்டால் நடத்த முடியுதே என்றார் ஆர்ட் டைரக்டர் சாஜு. பம்பாயில் வடா பாவ் கடை நடத்தினால் வரும் பிசினெஸ் போளிக்கடை, தோசைக்கடை என்று நடத்தினால் வராதாம்.
வார இறுதியில் ரத்னா இச்சல்கரஞ்சி போக வேண்டி வந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணமாகி இருபத்தைந்தாம் வருடம் பூர்த்தியானதைக் கொண்டாட எங்களைக் கூப்பிட்டிருந்தார்கள். ஆபீஸ் மும்முரம் காரணம் ரத்னாவை மட்டும் செகண்ட் க்ளாஸ் டிக்கெட் எடுத்து பூனா அங்கிருந்து இச்சல்கரஞ்சி போக அனுப்பி வைத்தேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தனிமையை உணர்ந்த காலம் அது.
”ராமோஜி சார் ராமோஜி சார்”.
நான் ஆபீஸுக்கு போக ட்ராமுக்காக காத்திருந்தபடி மெல்ல நடக்கும்போது சாஜு பின்னால் இருந்து கூப்பிட்டார். என் வீட்டு வாசல் கொஞ்சம் அகலமாக இருந்தால் ட்ராம் கண்டக்டர் சாமிக்கண்ணு வீட்டுக்குள் வந்தே ட்ராமில் ஏற்றிக் கொண்டு போவாராக்கும்.
என்ன விஷயம் சாஜு?”
அவர் பக்கத்தில் ஓடி வந்து சொன்னார் –
“உங்களுக்கு காளிங்க ரத்தினம் சாரும் தெலக்ஸ் புவனாவும் ஆப்தர்களாமே.. கொஞ்சம் எனக்கும் அறிமுகப்படுத்தி வையுங்களேன்”.
ஆகட்டும் என்று சொல்வதற்குள் சாமிக்கண்ணுவின் ட்ராம் என்னை எதிர்கொண்டு நின்றது. நேரே ஆபீஸ்.
பந்துலு சாருடைய நாற்காலி காலியாக இருந்தது. வீரையா என்னைப் பார்த்து ஓட்டமாக ஓடி வந்து, காலையில் பந்துலு சார் வந்து முக்கியமான பைல்களைப் பார்த்துக் கையெழுத்துப் போட்டு, எனக்கு இரண்டு பழுப்பு கவர்களை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்று அறிவித்தான்