ராமோஜியம் – ஜனவரி 1, 1946 செவ்வாய் – சென்னை

”ஸ்வாகத ஆஹே பாவு”

இந்த சகோதரனுக்கு மராட்டியில் நல்வரவு சொல்லி வரவேற்றாள் குந்தி. பின்னாலேயே சாஜுயும் கை கூப்பியபடி வந்தார்.

”துமி சகளே கஸே ஆஹத்?”

அவர்கள் எல்லோருடைய நலமும் – கழுதைக்குட்டி உட்பட – பொதுவாக விசாரித்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தேன். காப்பி, டீ எதுவும் வேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாகச் சொல்லி வைத்தேன்.

இந்தத் தெருவிலேயே முதல் தரமான காப்பியும் டீயும் ரத்னா கலந்து தருவதுதான். புரசைவாக்கத்திலேயே என்று கூடச் சொல்வேன்.

சமையல்கட்டில் ஏதோ களேபரமாக சத்தம். அங்கே இருந்து பல்டி அடித்து ஹாலுக்கு வந்து போகிற போக்கில் தலைகீழாக நின்றபடி எனக்கு குட் மார்னிங் சொல்லிப் போனான் பப்லு.

பாரதியார் எழுதிய அந்தரடிச்சான் சாகிப் கதையை சினிமாவாக எடுத்தால், தாடி, மீசை ஒட்டி பப்லுவை சின்ன அந்தரடிச்சான் சாகிப்பாக நடிக்க வைக்கலாம். அப்படி குட்டிக்கரணமும், கையால் நடையுமாக அவன் வித்தியாசமானவன்.

”சார், ஹவுஸ் ஓனர் நளமகராஜ் உங்க ஃப்ரண்ட் தானே?”

சாஜு என்னை கவலையோடு பார்த்தபடி கேட்க, குந்தி ஒரு டம்ளரில் பானகத்தோடு வந்து நின்றாள்.

“காப்பி டீ எல்லாம் கெடுதல்.. பானகம் எடுத்துக்குங்க அண்ணா, ராமசந்திர மூர்த்திக்கு நம்ம வீட்டுலே தினசரி காலையிலே நைவேத்தியம் இது” என்றபடி அவள் கொடுத்ததைத் தட்டாமல் வாங்கிக் கொண்டேன்.

நள மகராஜ் என்ற பட்டப்பெயர் கொண்ட அப்புக்குட்டி, சாஜு இருக்கும் இந்த வீட்டு ஓனர். வீட்டைக் காலி செய்யச் சொல்லியிருப்பார் என்பது தவிர சாஜு அவர் பெயரை பிரஸ்தாபித்ததற்கான காரணம் வேறு எதுவும் இருக்காது.

என்ன, ஏதாவது வாடகை பிரச்சனையா என்று விசாரித்தபடி பானகம் முழுவதையும் குடித்துத் தீர்த்தேன், சுக்கும், மிளகும், வெல்லமும், ஏலப் பொடியும் சரியான விகிதத்தில் கலந்த அந்த இனிப்பு உரைப்பு தூக்கலான பானத்தைக் குடித்ததும் அபங் பிழையின்றிப் பாட வரும். லாவணி ஆடலாம்.

“வாடகை எதுவும் பிரச்சனை இல்லேண்ணா. வாடகைக்கு இந்த வீட்டுக்கு வந்தபோது தான் ஹௌஸ் ஓனர் கல்யாண சமையல்காரர்னு தெரிஞ்சுது. நாங்களும் சமையல் தான் தொழிலா வச்சிருக்கற ஃபேமிலிதான்.. ஓனர் கிட்டே ஆதரவு வாங்க, எங்க குடும்பம் நாலு தலைமுறையா புணேயிலே மித்தாய் ஸ்டால் வச்சு நல்ல வியாபாரம் நடக்குதுன்னு சொன்னதை அவர் பிடிச்சுக்கிட்டார்… இங்கே சரிவர தெரியாத, அச்சு அசல் மராட்டி இனிப்பு, காரம் எல்லாம் செய்ய கத்துக்க அவங்க வீட்டம்மாவை அனுப்பறார்.. அவங்களுக்கு ஸ்வீட் ஸ்டால் வச்சுக்கொடுக்கற யோசனை போல.. போன ஞாயிறு சிரோட்டி, சுருள் பூரி, வரும் புதவாரம் பூரண் போளி, ஞாயிறு அன்னிக்கு மோதகம், அடுத்த திங்கள் கச்சோடி, அதுக்கு அடுத்த வாரம் பாம்பே காஜா இப்படி அசல் மராத்தி பலகாரமா லிஸ்ட் போட்டு வீட்டம்மாவை அனுப்ப ஆரம்பிச்சிருக்கார்.. வீட்டு சொந்தக்காரர் கேட்டா மத்தவங்க கேட்பதை விட முக்கியமாச்சே. இந்த வீடு இல்லேன்னா வேறே எங்கே வாடகைக்கு இடம் கிடைக்கும்? இதெல்லாம் செய்யலாம்தான். பருப்பும், எண்ணெய் நெய்யும், ஜீனியும் வாங்க வேணாமா? அடுப்புலே விறகு போடற செலவு வேறே.. காசுக்கு எங்கே போறது அண்ணா?”.

எர்ரகுண்ட்லாவைக் கடக்கும் மெட்றாஸ் – தாதர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் குந்தி பேசினாள்.

(Excerpts from my forthcoming novel RAMOJIUM – Jan 1, 1946 Madras chapter)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன