ஜனவரி 1, 1946 சென்னை – ’ராமோஜியம்’ புதினம் சில பகுதிகள்

இன்றைக்கு முத்தியால் நாயக்கன் தெரு புத்தாண்டு கோலாகலத்தோடு கலகலப்பாகக் கண்விழித்த போது கழுதை வெள்ளையன் கனைத்துக்கொண்டு யார் கையிலும் பிடிபடாமல் சுற்றிச்சுற்றி ஓடியது. எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையப் பார்த்து, ரத்னா எவர்சில்வர் தட்டில் சப்பாத்திக் குழவியால் கொட்டி முழக்க வந்தவழியே திருப்பி ஓடியது அது. திண்ணைக்கு காப்பி டம்ளரோடு போனபோது ”இன்னும் ரெண்டே வாரத்திலே போகியும் பொங்கலும் வந்துடும். கொட்டு எல்லாம் போகிக்கு வச்சுக்க.. தட்டு பொங்கலுக்கு வச்சுக்கோ’ என்றேன் ரத்னாவிடம்.

காப்பியும் சுதேசமித்திரனுமாக சாய்வு நாற்காலியில் ஆரோகணித்தபோது, கேளப்பன் வீட்டுத் தோட்டத்திலிருந்து கழுதை வெளியே வந்து நின்றதைப் பார்த்தேன்.

“அய்யய்யே.. இந்த சனியன் எதை வாயிலே வச்சுட்டிருக்கு பாருங்க” என்று ரத்னா நிலைவாசலுக்கு வந்தபோது தலையில் அடித்துக் கொண்டாள். பார்த்தேன். மார்க்கச்சை.

”இத்தனை பெரிசா.. விலுவா இருக்கும்” என்று நாக்கில் சனி இருக்க, அபஸ்வரமாக ஆரம்பித்தேன்.

காப்பி டம்ளர் எகிறி விழ டபராவை என் கையில் இருந்து பறித்துப் போட்டுவிட்டு ரத்னா உள்ளே போகும்போது சத்தத்தோடு கதவையும் அடைத்துப் போனாள்.

விலாசினி வீட்டுத் தோட்டத்துக்குள் இருந்து நாலுகால் பிராணி வந்ததை ரத்னா பார்த்திருக்கவில்லை என்பதால், கழுதை எடுத்துப் போவது எதிர்வீட்டுத் துணி என்று தர்க்க பூர்வமாக நிரூபிக்க நான் தேர்வு செய்த வாக்கியத்தை வேறே மோஸ்தரில், கவுதம புத்தர், அசோகர், கேளப்பன் என சாத்வீகமாக ஆரம்பித்திருக்கலாம். கேளப்பன் உள்ளாடை இல்லையே அது.

மெல்ல கதவைத் தட்டித் திறந்து உள்ளே போனேன். ரத்னாவின் சொல் மழை.

“காலையிலே சுதேசமித்திரன், தினமணின்னு ஊர்ப்பட்ட பேப்பரை படிக்கறதெல்லாம் விலு குளிச்சுட்டு உள்பாடி உலர்த்தறதை ரசிச்சு ரசிச்சு உள்ளே படம் பிடிச்சு வச்சுக்கத்தானே? பெரிசா கச்சு பார்த்த ஷணமே விலாசினியோடதாம்.. மனசுக்குள்ளே இது தவிர வேறே எதுவும் காயப் போட்டிருக்காதோ.. இப்ப சொல்றேன்.. கேட்டுக்குங்க.. புது வருஷமோ, பழசோ.. உருப்படவே மாட்டீங்க.. அது ஒரு கழுதை.. நீங்க இன்னொண்ணு..”

”இல்லே ரத்னா, நான் பேப்பர் படிக்கறபோது அந்தப் பொண்ணு குளிச்சுட்டு தலையாத்திக்கிட்டு நிப்பாங்களே தவிர உள்பாடி எதுவும் அப்போ உலர்த்தறது இல்லை” என்று மறுபடி அவள் வலையில் விழுந்தேன்.

”அதானே.. ஒரு மலையாளிப் பொண்ணு குளிச்சுட்டு வாசல்லே நின்னு தலையாத்தக் கூடாதே.. எப்படியோ புத்தியிலே தந்தி அடிச்சு நாக்கிலே ஜலம் ஊறும்.. எல்லா வேலையையும் போட்டுட்டு திடும்னு பார்க்க வந்து நின்னுடுவீங்களே.. எனக்கு விலு போல தலைமுடி அவ்வளவு இல்லே தான்.. சிடுக்கும் இல்லே.. நீளமா தலைமுடி நம்ம தெருவிலேயே ஏன் நம்ம வார்டிலேயே ரெண்டே பேருக்குத்தான் வாய்ச்சிருக்கு.. இன்னொண்ணு யாரு தெரியுமா? இங்கே மாதிரி அங்கேயும் போய் நில்லுங்க.. போங்க”

சொல்லிக்கொண்டு இன்னொரு முழு டம்ளர் சுடச்சுட காப்பி எடுத்து வந்து தந்தாள் என் மனைவி. வாய் என்ன தான் கோபித்தாலும் கையும் மனசும் உபசரிக்க மறக்காது.

நான் காப்பி குடித்தபடி, தெருவில் வேறே யாருக்கு நீளமான தலைமுடி என்று யோசித்தேன்.

“அதானே யோசனை.. சரி தொலையுங்க” என்றபடி அவள் சொன்ன பெயர் – ராமண்ணா ஜோசியர். இதைக் கேட்டதற்குக் கேட்காமலேயே இருந்திருக்கலாம்.

வாசலில் சத்தம் அடங்கியிருந்தது. கேளப்பன் சாவகாசமாக வெள்ளையனின் வாயில் ஒரு பிடி தோட்டத்து இலை தழையை உருட்டிக் கொடுத்து, கழுதை கவ்விக் கொண்டிருந்த மார்க்கச்சையை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், தோளில் துண்டு போல் கச்சையைப் போட்டபடி ஒரு அடி முன்னால் எடுத்து வைத்து, ”நவ வர்ஷ ஆசம்சகள் ஹெப்பி நியூ இயர்” என்று கைகொடுத்தார். அவர் தோளைப் பிடிவாதமாகப் பார்க்காமல் நானும் வாழ்த்து சொன்னேன்.

”இந்த கழுத சல்யம் தாங்க முடியலே ராமோஜி சார்.. மொலக் கச்சை எடுத்துட்டு ஓடுது..கழுத வளர்த்தறவரோடு கூட ஒந்நு சொல்லுங்க..”

அவர் சிரிக்க, எனக்கு தடைவிதிக்கப்பட்ட சொல்லைக் கேட்ட சங்கடம்.

”ஆமாமா, சொல்றேன் சாஜுகிட்டே”.

“நல்லா மராட்டியிலே சொல்லுங்க” என்றபடி கேளப்பன் திரும்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன