1946 ஜனவரி 1, செவ்வாய்க்கிழமை புதுவருடம் பிறந்தது. பிறக்கும்போதே போர் இல்லாத இந்த வருஷத்தை எப்படி எதிர்கொள்வோம் என்று இனம் புரியாத பயமோ, சங்கடமோ எட்டிப் பார்த்தது உண்மை.
ஹோ அண்ட் கோ டயரியை எனக்கும் பந்துலு சாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளோடு தெலக்ஸ் புவனா அனுப்பி வைத்திருந்தாள். அவளுக்கு இந்தப் புத்தாண்டு பம்பாயில் ஷூட்டிங்கோடு பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
புது வருடம் ரேடியோ செய்தி அறிக்கையோடு தொடங்கியது. ஜப்பானிய சக்கரவர்த்தி ஹிரோஹிட்டோ தான் சூரிய வம்சத்தில் பிறந்தவர் இல்லை என்றும் தன்னையும் சராசரி ஜப்பானியனைப் போலவே ஜப்பான் நாடு கருதி நடத்த வேண்டும் என்றும் உலகுக்கு அறிவித்தார். உலக மகாயுத்தத்தில் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் ஐக்கியப்படைத் தளபதியான ஜெனரல் மக் ஆர்தர் ஜப்பான் அரசாங்கத்திலிருந்து நாஜி ஆதரவு இனவாதிகள் கெல்லி எடுக்கப்பட்டு வீசியெறியப்படுவார்கள் என்று அறிவித்தார். மதறாஸ் புரசைவாக்கம் முத்தியால் நாயக்கன் தெருவில் சாஜு என்ற சினிமா ஆர்ட் டைரக்டர் வளர்க்கும் வெள்ளையன் என்னும் கழுதையின் குறும்புகள் சகிக்க முடியாத அளவு பெருகி உள்ளதாகச் சற்றுமுன் வந்த செய்திகள் அறிவிக்கின்றன.
கழுதை கடந்து போன இந்த ஆறு மாதங்களில் முத்தியால் நாயக்கன் தெருவுக்கே செல்லப் பிராணியாகி இருந்தது. சுபாங்கி அம்மாள் குழம்புக் கருவடமோ, கருவாடோ முறத்தில் இட்டு வாசல் காம்பவுண்டுக்குள் சுக்காக சூரிய வெளிச்சத்தில் காய வைத்தால் எப்படியோ வாசனை பிடித்து காம்பவுண்டுக்குள் நுழைந்து விடும். வாயில் வடாமோ கருவாடோ பிடித்துக்கொண்டு அது அடுத்து ஓடி நிற்கும் இடம் ஐயங்காரின் ரெமிங்டன் டைப் இன்ஸ்ட்டிட்யூட் வாசல். வெள்ளையனுக்கு இன்ஸ்ட்ட்யூட் வாசலில் நிறைய காகிதம் கிடைப்பதால், வத்தல் வடகத்தை அங்கே யாருக்காவது கொடுத்து காகிதம் கிடைக்க கழுதை பிரயத்னப்படுவதாக எல்லோரும் அறிந்திருக்கிறார்கள்.
சைக்கிள் விட்டுப்போகும் காகர்லா வக்கீல் குமஸ்தா பின் சீட்டில் வைத்திருக்கும் கேஸ்கட்டுகளை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் வெள்ளையன் பாதாம் ஹல்வாவாக ருசித்துச் சாப்பிடுவதைத் தெருவே எதிர்பார்த்திருந்தது.
அடுத்த தெரு பிள்ளையார் கோவில் அர்ச்சகரான ராஜப்பா குருக்கள் எங்கள் தெரு வழியாக உயரம் குறைந்த சைக்கிளில் வரும்போது அவருடைய உச்சிக்குடுமியைப் பதம் பார்த்தது அது.
பள்ளிக்கூடம் விட்டுப் போகும் கவர்மெண்ட் பாய்ஸ் ஹை ஸ்கூல் பையன்களிடம் தான் வெள்ளையனுக்குக் கொஞ்சம் பயம். அசந்து இருந்தால் வாலில் ஊசிப்பட்டாசைக் கட்டிக் கொளுத்தி திசையறியாமல் மருண்டு தாறுமாறாக ஓடும்போது சாஜுவை மனமுருக அழைக்கும் அந்தக் கழுதை.
மாதர் சங்கத்துக்கு வரும் அங்கத்தினர்களின் பின்னாலேயே நடந்து வந்து தெருவில் பரிகாசம் உதிர்க்க வைப்பதும் வெள்ளையன் திருவிளையாடலே.
ட்ராம் கண்டக்டர் சாமிக்கண்ணுவின் ட்ராம் எதிர்ப்பட்டால், ட்ராம் பாதையை விட்டு இறங்கி சந்தோஷமாகக் கனைத்து வழியனுப்புவதால் ட்ராம் கம்பெனி உத்தியோகஸ்தர்களின் சிநேகிதனாகி. அவர்கள் அவ்வப்போது தரும் வாழைப்பழம் போன்ற மனுஷ்ய உணவையும், கொள்ளு போன்ற குதிரை உணவையும் உண்டுவரப் பழகியிருந்தது வெள்ளையனுக்கு.
கண்டக்டர் சாமிக்கண்ணுவின் மாமனார் மதுரையிலிருந்து வந்தபோது வெள்ளையன் என்னைப் போலவே ராஜவிசுவாசி என்று புலனானது. அவர் காலையில் வேட்டி துவைத்து உலர்த்தி துண்டோடு உட்கார்ந்து, சேர வாரீர் சகத்தீரே என்று வாசல் பெஞ்சில் உட்கார்ந்து பேசுவது இப்படி இருக்கும் –
”சாப்பாட்டுக்கு ரேஷன்.. ஒழிஞ்சு போகுது.. கட்டத் துணிக்கும் ரேஷனா.. ஒருத்தருக்கு பத்து கஜம் துணிதானா ஒரு வருஷத்துக்கு.. பத்து கஜத்துலே என்ன வரும்? ஒரு வேட்டி, சட்டை, துண்டு இல்லேன்னா ஒரு எட்டு முழப் புடவை. அவ்வளவுதான்.. வருஷத்திலே ரெண்டாவது வேட்டி வேணுமா, கிடையாது, ரெண்டாவது புடவை வேணுமா, கிடைக்காது.. இந்த வெளுப்பானுங்க மட்டும் ஊரிலே இருக்கப்பட்ட துணியை எல்லாம் வாரி எடுத்துப் போட்டுக்கிட்டு திரிவானுங்க.. காங்கிரஸ்காரனும் இதுக்கு காரணம்தான்.. அந்நியத் துணி பகிஷ்காரம் எல்லாம் சரிதான்… அந்நியத் துணியை எரி.. ஆனா அதுக்கு பதிலா கட்டிக்க வேறே துணி வேணாமா? முண்டக்கட்டையா நின்னுக்கிட்டா கொடியை ஆட்டி வந்தேமாதரம் சொல்ல முடியும்? கொடியை எடுத்து இடுப்பிலே சுத்திக்க வேண்டியதுதான் போலே”
எல்லாத் தரப்பையும் அவர் வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தது நிதர்சனம். அவர் வெள்ளைக்காரனை குற்றம் சாட்டி கூண்டிலேற்றி வறுத்தெடுத்துக் கொண்டிருந்தபோது வெள்ளையன் கழுதை அவர் வீட்டு காம்பவுண்ட் உள்ளே நுழைந்து ஐநூத்தொண்ணு பார்சோப் போட்டு பளீர் வெள்ளையில் துவைத்து உலரப்போட்ட வேட்டியை இட்லி சாப்பிடுகிறமாதிரி சுவைத்துக் கொண்டிருந்தது. சாமிக்கண்ணு மாமனார் வெள்ளையனோடு பொருத இயலாமல் மதுரைக்கு பயணம் வைத்தது அப்புறம்தான்.
இன்னும், பாட்டு வாத்தியார் எண்ணப்பாடம் ஈஸ்வரன், தெருவில் மூன்று பெண்களுக்கு கர்னாடக சங்கீதம் சொல்லித்தர அதில் ஒரு பெண் வீட்டு விசாலமான திண்ணையில் உட்காரும்போது, சரளி வரிசையில் தொடங்கி ராரா வேணு கோப பால என்று ஸ்வரஜதி பாடும்போது, நானும் சேர்ந்து கொள்ளட்டுமா என்று கேட்காமலேயே திவ்யமான குரல் உயர்த்திக் கனைக்கத் தொடங்கிவிடும்.
Excerpt from my forthcoming novel RAMOJIUM – chapter Madras 1946 January 1, Tuesday