”வேலை அதிகம் இருக்கா? ஞாயிற்றுக்கிழமை கூட ஆபீஸ் போய்ட்டு வரீங்க போல இருக்கே?” விலாசினி கண்ணில் கருணை பொங்க விசாரித்தாள். அதில் அனுதாபமும் அன்பும் மேம்பூச்சாக இல்லாமல் உள்ளோடிக் கலந்திருந்ததைக் குழைவான அவளுடைய குரலில் அனுபவித்தேன்.
”இல்லே இல்லே இன்னும் அவ்வளவு மோசமாப் போகல்லே.. பேமிலி ப்ரண்ட்.. காளிங்க ரத்தினம் சார் வாங்களேன்னு கூப்பிட்டிருந்தார்.. வாரா வாரம் நானும் ஒத்தி வச்சு, இன்னிக்கு ரத்னா மாதர் சங்கக் கூட்டம்னு போனதாலே கிளம்பிட்டேன்..” பெருமையோடு சொன்னேன்.
”காளி சாரோடு மீட்டிங்கோ? ஓ நீங்க ஒண்டர்புள் பெர்சன் ராமோஜி சார்”.
விலாசினி மனம் திறந்து பாராட்டியது என்னையும், சுற்றுப்புறத்தையும் குளிர்விக்க, மழை பெய்யத் துவங்கியது. திடமாக நின்று பெய்யும் வடகிழக்குப் பருவ மழை அது.
“சார் ஒரு விஷ்.. உங்களால் முடியுமா?”
“சொல்லுங்க விலாசினி.. என்ன விருப்பம் அது?”
“ஒரே ஒரு தடவை டி.டி ராமசந்தரை சந்திக்கணும்.. நீங்க போகும்போது கூட வரலாமா? அஞ்சு நிமிஷம் போதும்”
நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. என்னோடு விலாசினி கூட வர, டிடி ராமசந்தரை சந்தித்து, ‘என் எதிர்வீட்டு மிசிஸ் விலாசினி.. உங்க ரசிகை.’. (நான் அவங்க ரசிகன்) என்று அறிமுகம் செய்துகொண்டு, ரெண்டு வார்த்தை பேசிவிட்டு வரலாம் தான். டிடி ஆர் கூட அனாவசியம். விலுவோடு கூட நடந்து போய்த் திரும்பும் சந்தோஷம் அளவிட அரியது. ரத்னா பார்த்தால் ஊழிக்கூத்தே அரங்கேறும். நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம்.
விலாசினி உட்கார்ந்திருந்த இருக்கை சாரலில் நனைந்து கிடக்க, அவள் என் பக்கத்தில் அமர்ந்தது இன்னொரு சந்தோஷம்.
“ஸ்திரிகள் டைப் ரைட்டிங்க் படிக்கறது அபூர்வம்.. நீங்க எப்படி?” விலாசினியைக் கேட்டேன்.
“ஆலப்புழையிலே டைப்ரைட்டர் இன்ஸ்டிட்யூட்டில்.. அத்தனையும் பாய்ஸ் .. நான் மட்டும் ஒரே கேர்ள் ஸ்டூடெண்ட்.. தைரியமாக டைப் படிக்கப் போனேன் மிஷின் தரமாட்டேனுட்டாங்க தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்க, எதிரே இல்லாத டைப்ரைட்டர் விசைகளில் பதிந்து அதிரும் அவளுடைய அளவாக நகச்சாயம் பூசிய நீள விரல்களை ரசித்தபடி அருகில் இருந்தேன். நுங்கம்பாக்கம் வந்தது.
”வாங்க சார், இறங்கலியா, வேறே எங்காவது போகணுமா?”
“ஐயோ, வேறே எங்கே போக, நேரே புரசைவாக்கத்துக்கு ட்ராம் தான்”.
நான் குடையை விரித்தபோது தான் விலாசினி தயங்கியபடி நின்றதைக் கவனித்தேன்.
“எப்பவும் கைப்பையிலே குடை இருக்கும். இன்னிக்கு பை எடுத்து வரல்லே.. உங்களுக்கு ஆட்சேபம் இல்லேன்னா..”
எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே என் காட்டில் மழை என்றது மனது. ட்ராம் வரும் வரைக்கும் ஒரே குடைக்குக் கீழ் டைப் ரைட்டிங்கா, ஷார்ட் ஹாண்டா, வந்தேமாதரம் கோஷமா ஜெய்ஹிந்தா, நேருஜியா நேத்தாஜியா என்று விவாதித்துக்கொண்டு அருகருகே நின்றிருந்தோம் என்று சொல்லலாம் தான். ஆனால் அதெல்லாம் பேசவில்லை. நனைந்த வஸ்திரங்களோடு, மழை வலுக்குமோ நிற்குமோ என்றுதான் குளிர நின்று பேசினோம்.
கஸ்தூரி மஞ்சளும், ஸ்வஸ்திக் பரிமள காஸ்ட்ராயில் கூந்தல் தைலமும், டாடாஸ் ஒ டி கோலோனும் மணக்க நின்றாள் அவள். ‘கேளப்பன் சார், சாரி சாரி’ என்று எதற்கோ மனச்சாட்சி மன்னிப்பு கேட்டுவிட்டு மறைந்தது. விலாசினியின் மெய்மணம் மனதில் அழிக்கமுடியாதபடி படிந்து உறைந்தது.
ட்ராமில் இயல்பாக அடுத்தடுத்து உட்கார்ந்து வந்தோம். நான் ஆசைப்பட்டது போல் மழை கூடுதலாகியது. புரசைவாக்கம் வந்து தெருமுனையில் இறங்கிக் கொண்டோம். வேறு எதுவும் பேச இல்லாத மௌனத்தோடு அடுத்தடுத்து நடப்பதே மனதுக்கு நிறைவாக இருந்தது.
வீட்டு வாசலில் நின்றிருந்த கேளப்பன் எங்களைக் கண்டதும் அவசரமாக குடையை விரித்தபடி ஓடி வந்தார்.
“தேங்க்ஸ் சாரே.. குடை சூடிப்போ குட்டியென்னு பறஞ்ஞதும் கேட்டில்ல.. ஞான் ட்ராம் ஸ்டோப் வரெ வந்நு நோக்கி.. போயாச்சு..” என்றார்.
என்னிடம் திரும்பத் திரும்ப நாலு தடவை, “சாருக்கு வளரெ புத்திமுட்டு.. ஷமிக்கணும்..” என்று சொன்னார். விலாசினியும் அதையே எதிரொலிக்க “ஒரு கஷ்டவும் இல்ல” என்று நான் மறுத்தபடி வீட்டுப் படி ஏறினேன். ரத்னா.
உள்ளே கூட்டிப்போய்த் தலை துவட்டி விட்டாள், குடையை விரித்து வெராந்தாவில் தண்ணீர் உதிர வைத்தாள். கண்ணீரும் உகுத்தாள்.
அப்புறம் கேட்டாள் –
“கேளப்பன் அண்ணன் விலு மேல் வச்சிருக்கற நம்பிக்கையிலே பத்துலே ஒரு பங்காவது நான் உங்க மேலே வச்சுக்க ஏன் விடமாட்டேங்கறீங்க?”
”ரத்னா இது அகஸ்மாத்தாக நடந்தது.. நான் மாம்பலத்துலே.. நம்பு ப்ளீஸ்”
“நம்பிக்கை இல்லேன்னு எப்போ சொன்னேன்.. விலு மேலே எனக்கு முழு நம்பிக்கை உண்டு”.
உக்ரமாக என் உதட்டில் முத்தமிட்டாள். ராத்திரி எட்டு மணிக்கே எங்கள் வீட்டில் விளக்கணைக்கப்பட்ட ஞாயிறு அது.
வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ராமோஜியம் – ஒரு சிறு பகுதி A monsoon night in Madras 1946