காளி வீட்டில் இருந்து இறங்கும்போது தெலக்ஸ் புவனா நினைவு வந்தது. அவள் சேலத்துக்கு ஷூட்டிங் என்று போய் ரெண்டு நாளானதால் வீடு பூட்டி இருந்தது. இருக்கட்டும், அடுத்த வாரம் ஊர் சுற்றும்போது வரலாம்.
திரும்பி வர மின்சார ரயிலுக்காகக் காத்திருந்தபோது ஞாயிறு என்பதாலோ என்னமோ கூட்டமே இல்லை. அரை மணி நேரம் நின்ற பிறகு ரயில் வந்து அலுப்போடு நின்றது.
எனக்கு முன்னால் நின்ற கம்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பயணி, விலாசினி.
அவசரமாக ட்ரெயினில் ஏறினேன். கை தலையைத் தடவி, சீவியது கலையவில்லை என்று தன்னிச்சையாக உறுதிப்படுத்திக் கொண்டது. முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கலாம் என்று தோன்ற, கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன். இனி தயக்கமின்றிப் பக்கத்தில் இருந்து பேசி சந்தோஷப்படலாம்.
என்ன சொல்லி கூப்பிடணும்? விலாசினி, விலு… அதெல்லாம் அதிகப் பிரசங்கத்தனம். மேடம்? சர்க்கார் ஆபீஸ் சாயல் அடிக்கிறது. அம்மா? எனக்கு வயசானதாகச் சொல்கிறது இந்த அழைப்பு. ஹலோ. என்ன ஃபோனிலா பேசுகிறேன்? நேரில் தனியாகச் சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்க, இந்த அற்பமான சுண்டைக்காய் விஷயத்தை ஏன் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டும்? கையை நீட்டி, குலுக்க ஆயத்தமாகப் போகலாமா? தெலக்ஸ் புவியா இது கை குலுக்க? இன்னொரு அன்பான தோழி. எனக்கில்லை. ரத்னாவுக்கு. என்மேல் மதிப்பு வைத்த கல்யாணமான, அழகான பெண். நான் இவள் மேல் வைத்திருப்பது மதிப்பு. கூடவே வேறேதோ. அது ஆசை இல்லை. அன்பும் இல்லை. மறைவில் ஒளிந்த காமம் தானா, சொல்லத் தெரியவில்லை.
”குட் ஈவினிங்..”
என்னை அறியாமலேயே சரியான வார்த்தையோடு விலாசினியை எதிர்கொண்டேன். குட் ஈவினிங் என்று வரவேற்றாள். அவளுக்கு எதிர் இருக்கையில், நேரில் இருப்பதற்குக் கொஞ்சம் விலகி உட்கார்ந்து சிரித்தபடி அவளை நோக்கினேன்.
கொப்பும் குழையுமாகக் கொழித்து முன்னால் அமர்ந்திருந்தாள் விலாசினி. மை எழுதிய கண்கள் கவிதை சொல்ல, நெகிழ்ந்த கூந்தலோடு என்னையே பார்த்தபடி சிரித்திருந்தாள். இந்த மலையாளப் பெண்கள் ஏன் எப்போதும் அரை மணி நேரம் முன்புதான் தலைக்குக் குளித்து ஆறப்போடுவது போல் அழகாக தழைத்து வாரி சதா ஈரக் கூந்தலோடு மனதுக்குள் வந்து குடியேறிவிடுகிறார்கள்? உதடு சற்றே பெரியது. எனில், அதுவும் ஓர் அழகு.
”கிண்டியிலே ஒரு சிநேகிதி ரொம்ப நாளா கூப்பிட்டுக்கிட்டிருந்தா .. இவரானா இந்த சண்டே, நெக்ஸ்ட் சண்டேன்னு பதுங்கறார்.. சரின்னு நானே இன்னிக்கு கிளம்பி பார்த்துட்டு வந்துட்டேன்..”
விலாசினி சொன்னதை தேவதை சொன்னமாதிரி ஒரு வார்த்தையும் சிந்திப் போகாமல் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஸ்கூல் ப்ரண்டோ என்று விசாரித்தேன். இல்லையாம்.
“நான் ஸ்கூல் எல்லாம் திருப்புணித்துறையிலே தான் .. ஆலப்புழை பக்கம்.. போயிருக்கீங்களா?”. ஆர்வமாக என்னைக் கேட்டாள்.
எனக்கு அங்கே வேலை இல்லாவிட்டாலும் திருப்புணித்துறை போய் வரவேண்டும். என்னைக் கவர்ந்த ஒரு தேவதையின் அவதார ஸ்தலம் அது. அது ஏன் ஒரு ஐடெக்ஸ் சிமிழ் நிறைய அடைத்த கண்மையை, ஜலதோஷத்துக்கு விக்ஸ் வேபராப் நெஞ்சில் தடவுவது போல், முழுசாக வழித்துக் கண்ணில் பூசி வரவேண்டும்? இதுதான் கேரள வழக்கமோ?
”நான் ஸ்கூல் காலேஜ் எல்லாம் மெட்றாஸ் தான்” என்று சிரித்தேன். இண்டர்மீடியட் கோர்ஸ் வரை படித்தால் என்ன, காலேஜில் தானே அதைப் படிக்கப் போனது?
Excerpts from my forthcoming novel RAMOJIUM – chapter Vilasini 1946