ராமோஜியம் – விரைவில் வெளிவரும் என் அடுத்த நாவலில் இருந்து சில பகுதிகள்

”தேக்லோ, லோக்கல் பாஷை தெரியாது சரிவர. தொழில்லே பம்பாய் மாதிரி வாய்ப்பு அதிகம் இல்லாட்டாலும் இங்கேயும் போட்டா போட்டி, வாடகைக்கு இடம் கிடைச்சாலும் கழுதை வளர்க்கறான்னு தெரிஞ்சா காலி பண்ணச் சொல்றாங்க.. இந்த வீட்டுலே என்னமோ கழுதை வந்தா யோகம் வரும்னு ஆரூடம் இருக்காம்.. அதான் ஆறு மாசத்துக்கு மட்டும் கழுதை, குதிரை எல்லாம் வீட்டு வாசல்லே கட்டி வச்சுக்க வீட்டு ஓனர் அப்புக்குட்டி அனுமதி கொடுத்திருக்காராம்.. அவர் போகச் சொன்னா, வேறே வீடு பார்க்கற கஷ்டம் திரும்ப வரும்.. இந்தப் பையன் வேறே அப்பாவியா குட்டிக் கரணமடிச்சுக்கிட்டு இருக்கான்.. எல்லாத்தையும் சகிச்சு, வெள்ளை வெளேர்னு சோழிப்பல்லை காட்டி குந்தி ரம்யமா சிரிக்குது.. ” ரத்னா நீளப் பேசி நிறுத்தினாள்.

நான் பார்க்கலியே என்று சாதுவாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்.

“ஆமா, புட்டு கடலையை தட்டுலே பாத்தா சிக்குனு விலு ஞாபகம் வந்துடும்.. வேறே எதுவும் அப்புறம் கண்ணுக்குத் தெரியாது.. வெளியே வாங்க ராவ்ஜி” என்று கிண்டல் செய்தாள் கட்டியவள். சொல்லிச் சொல்லி விலாசினி முகம் மனதில் இருந்து உடனே மலர்ந்து சிரித்தது.

அநேகமாக வாரம் இரண்டு தடவையாவது பந்துலு சார் சீட் அருகே வைத்த ஆபீஸ் டெலிபோனில் என்னைக் கூப்பிடுவாள் தெலக்ஸ் புவனா. அது ராமண்ணா ஜோசியருக்கு ஏதாவது சொல்லி விடுவதற்காக இருக்கும். அல்லது அரைக்கீரை விதைக் கூந்தல் தைலமும், சந்தனாதித் தைலமும், ரிண்டான் தாம்பூல மாத்திரையும் வேணும் என்று புவி கேட்டு நான் ப்ராட்வேயில் வாங்கிப்போய்த் தருவதற்காக இருக்கும். அதுவுமன்றி, ரத்னா வீட்டில் செய்து என் மூலம் கொடுத்துவிட்ட உக்காரை, மனோகரம், முள்ளுத் தேங்குழல் முதலான நொறுக்குத்தீனி, மாகாணிக்கிழங்கு ஊறுகாய், இன்னும் கொஞ்சம் மாகாணிக்கிழங்கு ஊறுகாய், மேலும் மாகாணிக்கிழங்கு ஊறுகாய், தேங்காய் சட்னிபொடி இத்யாதி வஸ்துக்களின் குணநலன் பாராட்டவும் தெலக்ஸ் என்னைக் கூப்பிடுவாள். ’சும்மாத்தான் கூப்பிட்டேன், என்ன பண்றீங்க’வாக அவளுடைய அழைப்பு இருக்கவும் வாய்ப்புண்டு.

ஜோசியர் வீட்டு டெலிபோன் வேலை பார்த்தாலும் ஏகப்பட்ட பிரச்சனை என்பதால் அதைப் பயன்படுத்துவதில்லை. பேச்சு சரியாகக் கேட்பதில்லை. அல்லது பாதியில் நின்று போகிறது. ராமண்ணா ஜோசியரைக் கூப்பிட்டால் டெலிபோன் இணைப்பு, ரஹமத்துல்லா, அவருடைய பேகம் தவ்லத் உன்னிஸாவோடு மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருப்பதற்குக் குறுக்கே கரடியாகப் புகுந்து சங்கடப்பட, சிரிக்க வைக்கிறது. அல்லது சின்னய்யா பலசரக்கு மளிகையில் அழைப்பு போய் உளுத்தம்பருப்பு கொள்முதல் பற்றி வெள்ளையும் கறுப்புமாகக் கணக்குத் தருகிறது. கிராஸ்டாக்.

அவருடைய அத்தங்காள் புவியின் நிரந்தர தூதுவனாக, ராமண்ணா ஜோசியரின் சோழிகளுக்கு வேலை வைக்க நான் தான் போக்குவரத்து நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை பந்துலு சார் அறிவார். அவர் பாதி வேடிக்கையாகவும் மீதி சீரியஸாகவும் சொல்வார் –

“ஓய் ராமோஜி, அந்தப் பொண்ணு என் கூட பேசறது கூட கம்மியாயிடுத்துங்காணும்.. போனை எடுத்தா ராமோஜி சார் தான்.. பொண்டாட்டிக்கு தெரிஞ்சு இப்படியான சில்லறை சந்தோஷங்கள் அனுபவிக்க உமக்கு வாச்சிருக்குய்யா, சந்தோஷமா இரும்” என்றார் அவர்.

கேலிதான். எந்த வன்மமும் குரோதமும் இல்லாத நல்ல மனுஷர் அவர். மனதால் இன்னொரு காளிங்க ரத்தினம். காளி சாரையும் மாதம் ஒரு தடவையாவது போய்ச் சந்திக்கிறேன்.

காளிங்க ரத்தினம் சாரை பார்க்க அவருடைய புதுமாம்பலம் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை போயிருந்தபோது எங்கள் தெரு மனுஷர்கள் பற்றிப் பேச்சு வந்தது.

காளி வீட்டில் நாய் வளர்க்கிறார். புவியும் கூடத்தான். அடுத்த வீட்டுக்காரர்கள் நாய் இரைச்சல் தாங்கவில்லை என்று புவிக்குச் சொல்வதில்லை. ஏனென்றால் அவர்களும் வளர்க்கிறார்கள். ஆனால் காளிங்க ரத்தினத்துக்கு அந்த வகையில் சிரமமாம். சமண சந்நியாசிகள் தங்கி இருக்கும் பக்கத்து வீட்டில் சத்தமே எப்போதும் கேட்காதாம். நாய் குரைத்தால் கோபம் வருகிறதாம். கோபம் வந்தால் நல்ல சமணரில் இருந்து அவர்களை கீழே தள்ளிவிடுகிறதாம். சந்நியாசிகள் தரும் ஆலோசனை இது –

”நாய்களை வேறு எங்காவது வைத்து வளர்த்துத் தினம் போய் பார்க்கலாமே”.

இப்போது நாய்களுக்குக் குரைக்காமல் முனகக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருப்பதாக காளி சிரிக்காமல் சொன்னார்.

நான் காளி சாரிடம் சொன்னேன் –

”நாய் வளர்க்கறதுக்கு இம்புட்டு பிரச்சனையா? எங்க தெருவிலே கழுதை வளர்க்கறாங்க.. யாரும் ஒண்ணும் சொல்றதில்லே”

“அப்படியா?”

“ஆமா சார். உங்க ஃபீல்ட் தான். ஆர்ட் டைரக்டர்” என்றேன். காளிங்க ரத்தினம் சாரோடு அரட்டை அடித்துக்கொண்டிருந்த அபூர்வ சூளாமணி ஆர்ட் டைரக்டர் ஜலகம் ஸ்ரீகிருஷ்ணா சாவதானமாகக் கேட்டார் –

“யாரு நம்ம களுதை சாஜுவா?”

ஆக சாஜு கழுதை வளர்ப்பது பழைய இண்டஸ்ட்ரீ ந்யூஸ் என்று தாமதமாக அறிந்து கொண்டேன்.

“அது ஆச்சு ஒரு வருஷமா சாஜு கழுதை வளர்க்கறது..” ஜலகம் சொன்னார்.

“அது என்னய்யா, பம்பாய்லே இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கே கழுதை மேய்க்கறது..?” காளியும் வம்பு கேட்கிற ஓய்வில் இருந்தார்.

”தமிழ்ப் படம் இல்லே.. தெலுங்குலே தமிழ்ப்படம்” என்றார் ஜலகம் புரியாத புதிராக. புரியலே ஆண்டவனே.

”அதான் சார், தமிழ் நாய்னா படம்..”

தமிழ்லே ஏது நாய்னா? அத்தா உண்டு தேவாரத்திலே. அப்பா உண்டு திருப்புகழ்லே. இது என்ன புதுசா நாய்னா?

நான் கேட்டேன். அதானே என்றார் காளி.

“ஒண்ணு ரெண்டில்லே மொத்தம் அறவை மூடு.. சிக்ஸ்டி த்ரீ நாய்னா உண்டு தமிழ்லே. தெல்சா?” ஜலகம் தீர்மானமாக அறிவித்தார்.

ஓ, அறுபத்து மூன்று நாயன்மாரா? விளங்கியது என்று சொன்னோம். திருப்தியோடு ஜலகம் கதையை முன்னால் நகர்த்திப் போனார்.

“ஒக நாய்னா தோபி. வாளு, சிவபக்துலு துணி கொடுத்தா ஃப்ரீயா வாஷ் பண்ணித் தருவாராம்.. பேரு என்னாது அது.. திரு.. திருக்குரைப்பு ..”

“ஓ திருக்குறிப்பு நாயனாரா?” காளி விசாரித்தார்.

அவுனய்யா என்றார் கதையைச் சொல்லி முடித்த திருப்தியோடு.

“திருக்குறிப்புத் தொண்டர் நல்ல சிவபக்தர். சலவைத் தொழிலாளி. சிவனடியார் கட்டிய துணியைத் துவைத்துத் தரணும் என்றால் காசு வாங்க மாட்டார். சிவன் அவரைச் சோதிக்க சிவனடியார் கோலத்தில் வந்து பழைய வேட்டியைக் கொடுக்கிறான். சாயந்திரத்துக்குள்ளே துவைத்து உலர்த்தி மடித்துத் தராவிட்டால் சாபம் தருவேன் .. உனக்கு பாவம் வரும் என்று பயமுறுத்துகிறான்… திடீரென்று மழை கொட்டு கொட்டு என்று கொட்ட நாயனார் வாக்குக் கொடுத்தபடி சிவனடியார் உடுப்பைத் துவைக்க முடியவில்லை. அவர் துணி துவைக்கும் கல்லில் தலையை மோதி உயிர் போக்கிக்கொள்ளப் போகும்போது சிவன் பிரத்யட்சமாகிறார்.. பக்தா உன் பக்திக்கு மெச்சினேன்.. எட்செட்ரா எட்செட்ரா” காளி திருவிளையாடல் புராணக் கதைச் சுருக்கம் சொன்னார்.

இதுலே க்ளைமேக்ஸ் வலுவா இல்லியே என்று என் சந்தேகத்தை எழுப்பினேன்.

“அவுனய்யா.. அதான் தமிழ் நாய்னா தெலுகு நாய்னா ஆனபோது அவர் ராஜகுமாரன். சின்னப் பிள்ளையிலே அரண்மனையிலே இருந்து தூக்கி வந்து சலவைக்காரர் வளர்க்கறார்.. ராஜகுமாரன் கூடவே ஒரு களுத இருக்கு. மந்திர தந்திரம் தெரிஞ்ச, பறக்கற களுதெ அது.. சிவனடியார் வேறே யாருமில்லே சிவன் தான்னு தெரிஞ்சு அது எச்சரிக்க வர்ற போது தோபிகாட்டுலே அதைக் கட்டிப் போட்டுடறாங்க.. ஈ விதங்க சுவாரசியமா தெலுகு நாய்னா கதை பண்ணினாங்க.. சாஜு தான் ஆர்ட் டைரக்டர்..” ஜலகம் நிறுத்தினார்.

”ஆக இந்தக் கழுதை, என்னைய மாதிரி இன்னொரு ஆர்டிஸ்ட். அப்படித்தானே ராவு?” காளி கேட்டதற்கு ஆமாம் என்று பதில் சொன்னால் அவரையும் கழுதையாக்கி விடும் அந்தப் பதில். அதைத்தானே எதிர்பார்த்து இருக்கிறார் அந்தப் பொல்லாத மனுஷர். இல்லை என்று பதில் சொன்னால், பிறகு வேறே என்ன புரிஞ்சுக்கிட்டீங்க என்று கேள்வி வரும்.

சும்மா இருந்தேன். ஜலகம் தொடர்ந்தார் –

“படம் முடிஞ்சு ரிலீஸ் போய் சுமாரா ஓடிச்சு.. செட் ப்ராபர்ட்டி எல்லாம் திருப்பியாச்சு.. கழுதையை என்ன பண்றது? பத்தி விட்டுடலாம்னார் ப்ரட்யூசர். ரங்கீலா கிருஷ்ணா தான் நாய்னா ஹீரோ. மனசு வரல்லே.. அவரை விட நல்லா நடிச்சிருக்குன்னு களுதன்னு தெலுங்கு சினிமா பத்திரிகையிலே வேறே முள்ளப்பூடி கிண்டல் செஞ்சு படத்துக்கு ஓடவைக்க உதவிச்சு.. அதெல்லாம் வேறே கதை… கழுதையை நான் எடுத்துப் போய் வளர்க்கறேன்னு சாஜு சொல்லவே அன்னிலே இருந்து அவர் களுதை சாஜு”.

ராமோஜியம் – இரா.முருகன் புதினம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன