”குந்தி வீட்டுக்காரர் சினிமாவிலே ஆர்ட் டைரக்டராம்..”
“என்னது, ஆர்ட் டைரக்டரா?”
“ஆமா, அப்படித்தான் சொன்னா குந்தி”.
பூணூலை கயிறு மாதிரி கனமாகப் போட்டுக்கொண்டு ஆசாரம் கொண்டாடிக்கொண்டு வருகிற சினிமாக்காரரைக் கற்பனை செய்யவே சிரமமாக இருந்தது. எதற்கு சினிமா சான்ஸ் அதிகமான பம்பாயை விட்டு இங்கே தென்னிந்தியாவின் மூலையில் மதறாஸுக்கு குடும்பத்தோடு வந்திருக்கிறார் அந்த தேஷஸ்த பிராமணர்?
சாயந்திரம் ஆபீஸ் விட்டு வரும்போது அந்தப் பக்கம் இயல்பாகப் பார்க்க, எழுந்து வந்த சிரிப்பை அடக்கியபடி நகர்ந்தேன். உள்ளே இருந்து பட்டை ப்ரேம் மூக்குக் கண்ணாடியோடு ஒருத்தர் வேகமாக வருவதை ஓரக்கண்ணால் கண்டேன். அவரையும் முந்திக்கொண்டு ஒரு கழுதைக்குட்டி வெளியே ஓடி வந்தது.
“ஆத் ஜா.. ஆத் ஜா”
எனக்கு நமஸ்காரம் சொல்லியபடி, உள்ளே போ என்று மராத்தியில் கழுதைக்குட்டியிடம் இரைந்தார் கண்ணாடிக்காரர். என்னை சந்திக்கத்தான் வீட்டுக்குள்ளிருந்து வேகமாக வந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்.
”ஆத் ஜா”. மராத்தி தெரிந்த அந்தக் கழுதைக்குட்டி மாட்டேன் என்று சமர்த்தாகத் தலையசைத்து விட்டு, வீட்டுத் திண்ணையில் ஏறிப் படுத்துக்கொண்டது. நான் இதைப் பார்த்தபடி ஒரு வினாடி நின்றுவிட்டேன்.
”நமஸ்காரம், நீங்க மராட்டி தானே?” வெடவெட என்று ஆறடிக்கு மேலும் உயரமாக, பூஞ்சை உடம்போடு நின்று கை நீட்டியவருக்கு என் வயது இருக்கும். மேலேயும் இருக்கக் கூடும்.
தலையசைத்து, ”நான் ராமோஜி ராவ்” என்றேன். அவர் ’ரவிகாந்த் கணிட்கர், சினிமா ஆர்ட் டைரக்டர்’ என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
உள்ளே இருந்து ஊய்ய் என்று சத்தம் கேட்டது. தலைகீழாக நின்று, கையைத் தரையில் ஊன்றியபடி வாசல்படி இறங்கி வந்தான் ஒரு பதினைந்து வயசுப் பையன். அவன் ஊய் ஊய் என்று என்னைப் பார்த்துச் சத்தமிட நடையை எட்டிப் போட்டேன். ஆர்ட் டைரக்டர் வீட்டில் வேறே என்ன எல்லாம் உண்டோ.
”ஆர்ட் டைரக்டரை பார்த்தேன்”.
கைகால் அலம்பி உள்ளே வந்து, சமையல்கட்டுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடி, ரத்னாவுக்குக் கைநீட்டிக் கொண்டு சொன்னேன்.
”யாரு குந்தி புருஷனா?” அவள் கேள்வி புரிந்தது.
“அந்தப் பொண்ணு இனிமே குந்தி தான்..” என்றாள் என் அணைப்பில் கட்டுண்டு. பின்னால் இருந்து வெள்ளிப் பொடி டப்பியை லாகவமாக முன்னால் வலித்து, சிட்டிகை உறிஞ்சி, உடனடி உற்சாகம் கொண்டாள் அவள்.
” டிபனுக்கு என்ன செஞ்சிருக்கே அன்பே?”
சட்டியும் பானையும் என்றாள். என்னது?
புட்டு, கடலை என்றாள் ரத்னா. விலு சொல்லிக் கொடுத்த அல்லது கொண்டு வந்து கொடுத்த பலகாரம் என்று தேங்காய் முழுக்காட்டி வந்ததைப் பார்த்தே தெரிந்தது. ஆனால் புட்டு கடலை மலையாளப் பிரதேசத்தில் காலையில் கழிக்கும், சரி, சாப்பிடும் உணவு இல்லையோ.
விலு சமைத்து எடுத்து வந்தால், நடுராத்திரி கூட சாப்பிடலாம்.
”ஆர்ட் டைரக்டர் வீட்டுலே வேறே என்ன பார்த்தே..?”
கொண்டைக்கடலை காரத்தை நாக்கில் படர்த்தி அனுபவித்தபடி கேட்டேன்.
”வேறே என்ன, தையல் மிஷின், சைக்கிள், சிமண்ராவ் கதைப் புத்தகம், ரேடியோ மேலே திலகர் காந்தி படம், சுவரிலே பம்பாய் சயான் சித்தி வினாயகர் கேலண்டர், குந்தியோட வெள்ளை வெளேர் சோழிப் பல்லு..”
இந்த கடைசி ஐட்டம் எவ்வளவு தூரம் நான் ஸ்த்ரிலோலனாகத் தலைகுப்புற மோகத்தில் விழுந்திருக்கிறேன் என்று சோதிக்க இறக்கப்படும் சீட்டு.
”அதெல்லாம் யார் பார்த்தா? நான் அவங்க வீட்டுலேயும் அழகான ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்தேன்” என்றேன்.
”அவங்க வீட்டிலேயும்னா, வேறே யார் வீட்டுலே.. ராவ்ஜி, இதானே வேணாங்கறது.. நான் கழுதையாவே இருந்துட்டு போறேன்.. டீ போட்டுக்கொடுத்து இந்தக் கழுதையை கும்பகோணத்திலே தெருத்தெருவா துரத்தின ஆண்கழுதை இப்போ இங்கே சில்மிஷம் பண்ணிட்டிருக்கு.. ஆனா மனசு எல்லாம் புட்டு பண்ணின கழுதை மேலே.. புட்டு தின்னுட்டு எப்படா வேலி தாண்டலாம், எப்படிடா போகலாம்னு ஏங்கிக்கிட்டிருக்கு .. புட்டுபுட்டு வச்சுட்டேனா.. போலா ராவ்ஜி மகராஜ்.. ”
நான் கவனிக்காதது போல், “கடலையிலே உப்பு கொஞ்சம் அதிகமா இருக்கே டியர்..” என்றேன்.
“பரவாயில்லீங்க.. உங்க விலு கஷ்டப்பட்டு செஞ்சிருக்கா.. வீணாக்க வேணாம்”. முகம் ஒரு வினாடி மலர, இன்னொரு கரண்டி கடலையைத் தட்டில் போட்டாள் ரத்னா.