ராமோஜியம் – நிறைவுற இருக்கும் புதினத்தின் பகுதிகள் – சென்னை 1946

”ராமோஜி சார், காப்பி குடிச்சீங்களா?”

சனிக்கிழமை காலை ஓசி காப்பிக்காகவும், அதோடு ஊர் வம்புக்காகவும் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தோளில் குடையைத் தொங்கவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து வந்தார் எலக்ட்ரீஷியன் மணவாள நாயுடு. நான் வீட்டுத் திண்ணையில் சுதேசமித்திரன் படித்தபடி இருந்ததைப் பார்த்து அவர் படியேறி வந்தது அரை மணி நேரம் முன்பு.

வந்ததும் குடையை சுவரில் ஓய்வாகச் சாய்த்து வைத்தார் அவர். அப்புறம் ”உங்க வைஸ்ராய் என்ன சொல்றார்?” என்று அக்கறையாக விசாரித்தார்.

என்னமோ நானும், வைஸ்ராய் வேவல் துரையும், ஒரே ஸ்கூலில், ஒரே கிளாசில், ஒரே மாதிரி, ’ஊசியிலைக் காடுகள் லண்டனில் உள்ளன’ என்று பூகோள வகுப்பில் கேள்விக்குப் பதில் சொல்லி, ஒரே பெஞ்சு மேல் ஏறி நின்ற ஆப்த நண்பர்கள் என்பது போல் கேட்டார்.

“வேவல் துரை, காப்பி குடிக்காதீங்க, டீ குடிங்கன்னு சொல்றார்” என்றேன் பேப்பரில் இருந்து தலையைத் தூக்கிப் பார்த்து. “சரி, கொடுங்க, குடிச்சு வைப்போம்.. வைஸ்ராய் ஆர்டர் போட்டா வேணாம்னா சொல்லப் போறேன்”

நாயுடு தலை திண்ணையில் தட்டுப்பட்டதுமே அவருக்கு கிரமமான காப்பி உபசாரம் நடத்திவிட்டாள் ரத்னா. இன்னொரு தடவை எல்லாம் கிடைக்காது.

”ராமோஜி சார், நம்ம சுபாங்கி அம்மா வீட்டுக்கு வடக்கிலே, காகர்லா பக்தவத்சலம் வீட்டுக்கு நேர் எதிரே, கலியுக நளன் அப்புக்குட்டி வீட்டுக்கு குடி வந்திருக்காங்க போல இருக்கு. உங்க ஆள் தானாம்”.

“கோட்டையிலே சர்க்கார் உத்தியோகஸ்தரா?” என்று கேட்டேன் அவரை. “ஐயே, அதெல்லாம் ஒரு சமாசாரமா? உங்க ஆள்-ன்னு சொன்னது உங்களை மாதிரி இந்திக்காரங்க.. “. நான் இந்திக்காரன் இல்லே நாயுடுகாரு என்றேன்.

எலக்ட்ரீஷியன் குரலைத் தாழ்த்தி என்னிடம் கேட்டார் –

“நீங்க பூணூல் போட்டு பார்த்ததே இல்லியே.. வெறும் அய்யரும் இல்லியா?” இல்லை என்றேன். அது என்ன வெறும் அய்யர், வெல்லம் போட்ட அய்யர்?

”அப்போ, கவிச்சி துன்றாப்பலியா?” இதுதானா?

”அது கிடையாது.. போன தலைமுறையிலே விரதம் எடுத்திருக்கோம்… அதுக்கு முந்தி எல்லாம் சாப்பிட்டுட்டு தான் இருந்தோம்.. ஷத்ரியர்கள் நாங்க” பெருமையாகச் சொல்ல “கொஞ்சம் அடக்கி வாசிங்க. சீக்கிரமாகட்டும்” என்று உள்ளே இருந்து ரத்னா குரலைக் கேட்க முடிந்தது.

”புதுசா வந்திருக்கறவர், துணியை முறுக்கிப் போட்டுக்கிட்ட மாதிரி, பத்து இருபது பூணூலை ஒண்ணாக்கிப் போட்டுக்கிட்டிருக்கார்.. என்னத்துனாலே அப்படி?”, நாயுடு ஆர்வமாக விசாரித்தார்.

”பூணூல் விவகாரம் எல்லாம் சாயந்திரம் பார்த்துக்கலாமே. ஆபீஸ் இருக்கில்லே”, ரத்னா அந்தச் சந்திப்பை ஈவிரக்கமில்லாமல் துண்டித்து விட்டாள். அப்புறம் வரேன் என பயமுறுத்தி நாயுடு குடையோடு மறைந்தார்.

”இனிமே காலையிலே வெட்டி அரட்டை அடிக்கறதை நிப்பாட்டி போடுங்க.. நாயுடுகாருவுக்குத்தான் பொழுது போகலேன்னா உங்களுக்கு என்ன சோம்பல்?அப்புறம் பார்க்கலாம்னு அனுப்ப வாயிலே வார்த்தை இல்லையா?”

குளித்துச் சாப்பிட உட்கார்ந்தேன். குழைய வடித்த சாதமும், புளிக்குழம்பும் இலையில் பரிமாறும்போதே, ”ரொம்ப நாள் கழிச்சு வாழைக்காய்ப்பொடி செஞ்சிருக்கேன்..கொஞ்சம் சாதத்தை இதிலே பிசைஞ்சுக்கங்க” என்று வேகவைத்து உதிர்த்த வாழைக்காயை ஜாலிக்கரண்டியில் எடுத்து இலையில் இட்டாள் என் செல்லப் பெண்டாட்டி.

“இது ஏன் வாழைக்காய்ப் பொடின்னு பேர்லே சுத்துது? பொடிமாஸ்னு இதைச் சொல்றது வழக்கம் ஆச்சே?”

“வாழைக்காய் பொடிமாஸ் வேறே.. வாழைக்காய்ப் பொடி வேறே.. பட்டணம் பொடி வேறே.. ஆபீஸ் போய்ட்டு வாங்க, வித்தியாசம் சொல்றேன்” என்று குழம்பை இலையில் வார்த்தவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

”அன்பே, நான் வேட்டி கட்டிக்காம துண்டோட, அல்லது அதுவும் இல்லாமல் மொட்டைக்கட்டையா சாப்பிட உக்காந்துட்டேனா?”

“இல்லை, நாதா. இது வேறே விஷயம்”. அவள் திரும்பத் தரையில் உட்கார்ந்து சிரித்தாள். சொல்லு பெண்ணே? நானும் கொஞ்சம் சிரிக்கிறேனே.

”எல்லாம் நம்ம ஆளுங்க தான்..”

“யார், தெலக்ஸ் புவனாவா?”

”சே .. சே”.

“விலுவா?”

”என்னது விலுவா? சார் இப்போ அல்லும் பகலும் சதா மும்முரமாக நினைக்கறது கும்மு கும்முனு இருக்கற மலையாளி டைப்பிஸ்டையா?”

நோ.. கம்சலையை-ன்னு சொல்லலாம் என்று யோசித்தேன். எதுக்கு வம்பு? நாளைக்கு லகான் மாட்டிவிட்டு ஆபீசுக்கு கூட்டிவந்து விடுவாள் ரத்னா.

”தெருவுக்கு புதுசா வந்திருக்கறவங்க நம்ம ஆளுதான்.. அசல் மராட்டி.. நம்ம மாதிரி ஷத்ரியர் இல்லே.. தேஷஸ்தா ப்ராமின்ஸ் .. முட்டை கூட நோ”.

”இதுக்கா சிரிச்சே?” அவள் திரும்ப சிரிக்க ஆரம்பித்தாள். ”சொல்லிட்டு சிரிக்கறியா இல்லே வாழைக்காய்ப் பொடி முழுசும் நான் தின்னுடட்டா?”

”நல்லா சாப்பிடுங்க..அவ்வளவு பிடிச்சிருக்கா?” இலையில் இருந்து எடுத்து எனக்கு ஊட்டிவிட்டபடி மையல் செய்தாள் மனைவி. சொல்லு ஏன் சிரிச்சே?

”நேத்து அவங்க வீட்டுக்கு போயிருந்தேன்.. அவள் என்னை விட சின்னப் பொண்ணுதான்.. சரி அதென்ன பார்வை? புவியை விடவா சின்னவள்? அதானே?”

மௌனம் காத்தேன்.

”தெரிஞ்சு என்ன ஆகணும்?”

“சரி நான் குறுக்கே வரல்லே… சொல்லி முடி..”

“இச்சல்கரஞ்சியிலேருந்து வந்திருக்கேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டா.. கோதாவரின்னு பேர்.. வீட்டிலே செல்லமா அவளை குண்டின்னு கூப்பிடுவாங்களாம்”. நாலு தடவை ராகமிழுத்து கூப்பிட்டு வேறு காட்டினாள் ரத்னா. தொடர்ந்து புரையேறும் அளவு சிரித்தாள் இப்போது.

”மராட்டியில் அந்த வார்த்தைக்கு பூஜாடின்னு அர்த்தம்தான். கவித்துவமாக வைத்த அந்தப் பெயரை மறந்தும் தமிழ் பிரதேசத்திலே சொல்லாதே.. இங்கே அதுக்கு அர்த்தம் பிருஷ்டம்னு அவ கிட்டே சொல்லிட்டு வந்தேன்.. நான் அவளை குந்தின்னு கூப்பிடறேன்.. இப்போ ஆரம்பிச்சு வச்சா எல்லாரும் இனிமேல் குந்தின்னு தான் சொல்வாங்க”.

”அவங்க வீட்டுக்காரர் என்ன பண்றார்?”

”குந்தி வீட்டுக்காரர் சினிமாவிலே ஆர்ட் டைரக்டராம்..”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன