ராமோஜியம் – 1947 ஆகஸ்ட் 14-ந்தேதி பிறந்த சுதந்திரா

திரும்ப நடக்கும்போது காளிங்க ரத்தினம் சார் கொடுத்தனுப்பிய காணிக்கை இருநூறு ரூபாய் நினைவு வர உடனே நின்றேன். அவசரமாகக் கைப்பையில் தேடினேன். எங்கே போனது அது?

படபடப்போடு கைப்பையைக் கொட்டிக் கவிழ்த்து எடுத்துப் பார்க்க, அந்தக் காணிக்கைப் பணத்தைக் காணவே காணோம். ஆனால், ’முப்பது ரூபாய் இதர செலவினங்கள்’ கவர் பத்திரமாக இருந்தது. காளிங்க ரத்தினத்தின் காணிக்கை வைத்த கவரைத்தான் தேவனாஞ்சேரி கந்தனுக்குக் கொடுத்தேன் என்று புரிந்தது.

இருநூறு ரூபாயா? தானம் செய்தாலும் அளவு பார்த்துச் செய்ய வேண்டாமா என்று ரத்னா திட்டுவாள். ஆனால் எதிர்பார்த்தது பொய்யாக அவள் ஒன்றும் சொல்லவில்லை. பெரிய தொகை. பிரசவச் செலவுகளுக்கு அப்புறமும் கையில் கணிசமாக இருக்கும். நான் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்.

அதை அப்புறம் பார்க்கலாம், காளிங்க ரத்தினம் சார் காணிக்கை கோவிலுக்குப் போய்ச்சேர வேண்டும்.

குருக்களிடம் விவரம் கூறி, இப்போது முப்பது ரூபாய் தருகிறேன், பாக்கி நூற்றெழுபது, ஊருக்குப் போய் மணியார்டர் அனுப்புகிறேன் என்று சொல்லலாமா?

ரத்னாவிடம் கேட்டேன் – உங்கிட்டே எவ்வளவு இருக்கும்மா? ரெண்டு பத்து ரூபாயும் நாலு ஒத்தை ரூபாயும் அவளுடைய கைப்பையில் ரெமி பவுடர் வாசனையோடு கிடைத்தது. ஐந்து ஒரு ரூபாய் காசும். போதாது.

”என்ன சார் ஆச்சு?”

நல்ல வேளையாக விட்டோபா உதவிக்கு வந்தார்.

அவரிடம் வாங்கி விவரம் சொல்லிப் பணம் கொடுக்க, ”உங்களுக்கு எப்படி காளிங்க ரத்தின படையாச்சியைத் தெரியும்?” என்று வியப்போடு கேட்டார் ஜலகண்டேஸ்வர குருக்கள். சொன்னேன். ”அப்போ தெலக்ஸ் புவனேஸ்வரி ஆப்தர் தானா உங்காத்து மாமிக்கு?” என்று முடித்தார் அவர்.

”நீங்க போய்க்கிட்டிருங்க. வரேன்”. ரத்னா திரும்ப சந்நிதிக்கு முன் கண்மூடி நின்றாள். அது யாருக்கு உடலும் மனமும் நலம்பெறப் பிரார்த்தனை என்று அவள் சொல்லாமலேயே தெரியும்.

ரயில் பெட்டியில் ஒரு வினாடி என் கையைப் பற்றி முத்தமிட்ட புவியைப் பிடிவாதமாக மனதிலிருந்து விலக்கி நிறுத்தினேன். களைப்பும் தூக்கக் கலக்கமும் பாதித்த அனிச்சையான செயல் அது. மறந்து விடலாம்.

நிறைவான ஆலய தரிசனம் முடிந்து பட்டீசுவத்தில் அம்மையை துர்க்கையாகக் கண்டு வணங்கி கும்பகோணம் போய்ச் சேர்ந்தோம். வழியில் இட்லி – கடப்பாவையும் விட்டுவைக்கவில்லை. மதியம் ராமாராவ் மாமா வீட்டில் களைகட்டிய விருந்து.

நாங்கள் மதறாஸ் திரும்பும்வரை உப்புக்காரத் தெருப்பையன் டாக்ஸி டிரைவர் சேதி சொல்ல வரவில்லை. எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கும் என்று நினைத்து கருக்காத்த நாயகியை வணங்கிப் புறப்பட்டோம்.

காளிங்க ரத்தினம் அவர்களுக்கு தொலைபேசுவதற்குள் நான் – பந்துலு – பன்னிபாய் பந்துலு – தெலக்ஸ் புவனா கம்பியில்லா தந்தி இணைப்பு வழியாக அவருக்கு ஏற்கனவே என் புனிதப் பயணத்தை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் முழுத் தகவல் தெரிந்திருந்தது.

“உங்க மேலே ரொம்ப கோவமா இருக்கேன் ஐயா” என்றார் திடுதிப்பென்று அவர் அழைப்பின் பேரில் நான் போயிருந்த அவருடைய படத்தின் சிறப்புக் காட்சியில். சார் சார் சாரி சாரி என்று அடைக்கலம் புகுந்தேன் உடனே.

”என்னத்துக்கு சாரியும் வேட்டியும்.. நான் இருநூறு ரூபாய்க்கு ஒரு காணிக்கை வச்சா, நீங்க அதை ரெண்டு இருநூறு ரூபாய் காணிக்கையாக கருக்காத்த நாயகி அம்மா கிட்டே கொடுத்திருக்கீங்க.”.

நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ”சார் உங்க பாடு, கருக்காத்த அம்மா பாடு.. நான் வெறும் கருவி தான்” என்றேன்.

”ஒண்ணு செய்யறீரா?”

”எந்த கோவிலுக்கு சார்?”

”அதெல்லாம் இல்லே.. உமக்கு தமிழ் ஈடுபாடாமே… புவி சொல்லிச்சு.. அடுத்த படத்துக்கு நீர் தான் கதை வசனம் எழுதணும் .. நான் பேசி நடிக்கணும் .. செட்டியாரை எடுக்கச் சொல்றேன்.. பெயர், திருக்கருகாவூர் மகிமை”

”ஐயோ நான் கவர்மெண்ட் செர்வண்ட். அது மட்டும் செய்யக் கூடாது”.

”ஓடாதீர்.. புவி, உன் அக்கா புருஷன் அநியாயத்துக்கு நல்ல மனுஷன்” என்று தெலக்ஸிடமும் சொல்ல மறக்கவில்லை அவர்.

“அந்தக் கந்தன் வேறே யாரும் இல்லே.. அம்மா வீட்டுக்கு விளையாட வந்த சுவாமிமலை ஆண்டவன் தான்” என்கிறார் அந்தப் பழுத்த ஆத்திகர்.

பின் குறிப்பு 1947

காளிங்க ரத்தினம் சார், நான் அவர் சார்பில், ஒரு கிராமத்துப் பெண்ணின் பிரசவச் செலவுக்கு, கருக்காத்த நாயகிக்கான காணிக்கைத் தொகையை எடுத்துக் கொடுத்ததை இன்னும் நினைவு வைத்துக்கொண்டு என்னைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லி வருகிறார். பலபேரிடம் இதைச் சொல்லியிருக்கிறார் என்றும், அவர்கள் என்னைப் பாராட்டும்போது அறிகிறேன். அவருக்கும் எனக்கும் நண்பர்கள் அவர்கள். காளி சாருடைய, தினை அளவு அதுவும், அகஸ்மாத்தாக நற்செயல் செய்தாலும், பனை அளவு அதைப் பெருக்கிப் பார்த்துப் பாராட்டும் நல்ல குணம் எத்தனை பேரிடம் உண்டு?

போன வாரம் அதாவது 1947 ஆகஸ்ட் பதினான்காம் தேதி, ரத்னா கருக்காத்த நாயகி கர்ப்பரக்ஷ அம்மன் அருளோடு ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றபோது, குழந்தைக்கு ’சுதந்திரா’ என்று பெயர் சூட்டிய குடும்ப நண்பரான பெரியவர் அவர்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன