உப்புக்காரத் தெருப்பையன் டிரைவர் என்னை ஓரமாகக் கூட்டிப் போனான்.
”சார், தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. இங்கே இருந்து மூணு மைல்தான் கருகாவூர். நீங்க நடையை எட்டிப் போட்டாக்கூட போயிடலாம்.. நான் இவங்களை நம்ம கார்லே கும்பகோணம் கொண்டு சேர்த்துடறேன்.. அப்புறம் ஆண்டவனோ, பராசக்தியோ, இயற்கையோ, விதிச்சபடி ஆகட்டும்”’
ரத்னா கேட்டபடி பின்னால் நின்றவள் உடனே கூடைகளை விட்டோபா உதவியோடு இறக்கி வைத்தாள். நான் சுருக்கமாக அந்த மாட்டுவண்டி இளைஞனிடம் எல்லாம் சொன்னேன். கை கூப்பி நின்றான் அவன்.
காலம் தாழ்த்தாதே இனிமேலும் என்று மாட்டுவண்டியை ரோடு ஓர டீக்கடையை ஒட்டி நிறுத்தி, மாடுகளை அவிழ்த்து மரத்தில் கட்டிக் கூளமும் தண்ணீரும் போட வைத்தேன். டீக்கடைக்காரர் சாயந்திரம் ஆறு மணிக்கு முன் எப்போது வந்தாலும் இருப்பதாகவும், மாட்டையும் வண்டியையும் பார்த்துக் கொள்வதாகவும் உதவிக்கு வந்தார். கிராமத்து மனிதர்கள்.
அவனும் அவன் மனைவியும் காரில் ஏற, கார் புறப்பட இருக்க, ரத்னா பணம் பணம் என்றாள். என்ன பணம்? பணத்துக்கு என்ன வந்தது?
”இல்லேங்க.. பிரசவம்னு போறார்..கையிலே பணம் வச்சிருக்காரா?”
அந்தப் பையன் சட்டைப் பையில் தடவிப் பார்த்து ஐந்து ரூபாய் இருக்கு என்று அறிவித்தான். நான் என் கைப்பையைத் திறந்தேன். பிரயாணச் செலவு, டாக்சிக்கு, அபிஷேகம் ஆராதனைக்கு, கும்பகோணம் இதர செலவினங்கள், எதற்கும் இருக்கட்டும் என்று முப்பது ரூபாய் என்று மேலே விவரம் எழுதி பழுப்பு கவர்கள், எட்டணா, ஒரு ரூபாய் காசு நிரம்பிய தோல் பர்ஸ் இப்படி தனித்தனியாக வைத்து எடுத்துப் போவது அப்பாஜி காலத்தில் கற்பித்து ஏற்படுத்திய வழக்கம். இதர செலவினங்களுக்காக என்று எழுதிய கவரை எடுத்து அவனிடம் கொடுத்தேன். வேண்டாம் என்றான். சும்மா வாங்கிக்கப்பா.. கைச்செலவுக்கு வச்சுக்க என்று வற்புறுத்தி வாங்கிக் கொள்ளச் சொன்னோம். கொடுத்த பிறகு அலாதியான ஒரு நிம்மதி வந்தது.
கார் புறப்பட நாங்கள் மூவரும் பேசிக்கொண்டே திருக்கருகாவூர் நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
”தம்பி உன் பெயர் என்ன?” போகும்போது ரத்னா கேட்டாள்.
”அம்மா, நான் தேவனாஞ்சேரி கந்தன். அவ தேவானை”
திருக்கருகாவூர் கோபுர வாசலில், என் வீட்டுக்கு வந்த குருக்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஜலகண்டேசுவரன் என்று விட்டோபா அவர் பெயர் சொன்னார். கும்பகோணம் சாரங்கபாணி சந்நிதித் தெருவாசியாம். விட்டோபாவுக்குத் தெரியாமல் இங்கே யாரும் மூச்சு விட முடியாது.
”நடை சாத்தற நேரமா? கொஞ்சம் தாமதமாகிடுத்து”. நான் மன்னிப்பு கேட்கும் தொனியில் சொல்லியபடி குருக்களை வணங்கினேன்.
“நீங்க வருவது தெரிஞ்சு தானே இங்கேயே இருக்கேன்.. இன்னும் ஒண்ணரை மணி நேரம் இருக்கு நடை சாத்த” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, இளைய குருக்கள் ராகம் போடுவதுபோல் ஸ்தலபுராணம் தொடங்கினார்.
“இந்த ஸ்தலத்தை அப்பரும் சம்பந்தரும் பாடியிருக்கா.. கோவிலுக்குன்னு தனிப் புராணம் உண்டு. அதின்படி, ரொம்ப பழைய காலத்துலே இதெல்லாம் காடு. காட்டுலே ரிஷி பத்தினி பர்ணசாலையிலே தனியா இருக்கறச்சே யாரோ ஒரு முனிபுங்கவன் யாசிச்சு வந்தானாம். அவள் எழுந்து, பிக்ஷையோடு வர தாமதமாகிடுத்தாம். அவள் பூர்ணகர்ப்பிணின்னு தெரியாம சாபமிட்டான் இந்த முனிவன். அந்த சாபத்திலே கருக் கலைஞ்சு போக, இந்த ஸ்தலத்து கர்ப்ப ரக்ஷாம்பிகை கருக்காத்த நாயகி அதை குடத்திலே ஆவாஹனம் செஞ்சு, பத்திரமா பிறக்க வைத்து, வளர்த்து, ரிஷிபத்னி கிட்டே கொடுத்தா..” கோயில் நாகசுவரம், அவர் சொன்னதை, வராளி ராகத்தில் அழகாக முடித்து வைத்தது.
இங்கே பூஜை நடைமுறை என்று அவர் மறுபடி தொடங்க, ரத்னா தெரியும் அய்யா என்றாள். நான் ஆச்சரியப்பட்டு பார்க்க, ஜோசியர் வீட்டம்மா ஒரு நாள் முழுக்க கிளாஸே எடுத்திருக்கிறாள் என்று புரிந்தது.
“சுயம்புவாக புற்று மணல்லே இருந்து முல்லைவன நாதர் வந்ததா ஐதீகம். ஆகவே அபிஷேகம் கிடையாது. புனுகு சாத்தறது தான் விதிச்சிருக்கு. அதுக்கு முந்தி…”.
கொண்டு போயிருந்த பிரப்பங்கூடையில் இருந்து நெய்த் தூக்கை எடுத்தபடி ரத்னா தொடர்ந்தாள் –
“அம்மா சந்நிதி வாசல் படியை நெய்யால் மெழுகி, அப்புறம் சுவாமிக்கு புனுகு சார்த்தறது காலம் காலமாக இருந்து வர்ற வழக்கம்”
அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி ரத்னா கடகடவென்று சொல்லியபடி ஆத்மார்த்தமாக அந்த சீலங்களில் ஆழ்ந்து, நெய்யால் சந்நிதிப்படி மெழுகி, அர்ச்சனை, தீபாராதனை எல்லாம் நடக்கப் பங்கெடுத்து நின்றாள்.
குருக்கள் அர்ச்சனைக்கு பெயர் நட்சத்திரம் கேட்க, நான் ராமோஜி அசுவதி நட்சத்திரம், ரத்னா சதய நட்சத்திரம் என்று சொல்ல, தேவனாஞ்சேரி கந்தன், தேவானை என்று சேர்த்தாள் ரத்னா. மாட்டுவண்டியில் வந்த தம்பதி.
”இது அர்ச்சனை நெய். ஒரு மண்டலம் நாற்பத்தெட்டு நாள் நீங்க ரெண்டு பேரும் தினம் ராத்திரி எடுத்துக்கணும். மாமி ஆத்திலே இல்லாட்ட நீங்க மட்டும். இது விளக்கெண்ணெய் பிரசாதம். பத்திரமா வச்சிருங்கோ. குடிக்க இல்லே. நல்ல நியூஸ் வந்தப்பறம் சுகப் பிரசவம் ஆக தினம் அவா வயத்துலே தடவி விடணும்.. நம்பினா தெய்வீகம், நம்பலேன்னா ஆயுர்வேதம்.. நிச்சயம் கெடுதல் ஒண்ணுமில்லை.. நல்லது தான் இது எல்லாம்”. என்னிடம் நெய் பாட்டிலும், விளக்கெண்ணெய் பாட்டிலும் ஒப்படைத்தார் குருக்கள்.
வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும், பழக்கூழும் நைவேத்தியம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் ஜலகண்டேஸ்வர குருக்கள். நிதானமான, ஸ்பஷ்டமான அஷ்டோத்திர அர்ச்சனை. கணீரென்று ஓதுவாரின் தேவாரம் –
கந்தமௌவல் கமழும் கருகாவூரெம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே
கோவில் வெளிப் பிரகாரத்தில் காளாஞ்சித் தட்டு என்று கோவில் மரியாதையாக மாலை, தேங்காய் மூடி, வாழைப் பழங்கள், கொண்டுபோன தூக்குப் பாத்திரத்தில் பொங்கல், பழக்கூழ் பிரசாதம் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள் குருக்கள் இருவரும்.