ஒரு வருடம் மட்டும் தான், கூட ரெண்டு மாதம், சரி, நான் இருந்த அந்தக் குறுகிய பொழுதில் பிடித்துப்போன ஊர் இது. பிறந்து வளர்ந்த மதறாஸ் கூட அப்புறம் தான். ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு முகமும் நினைவில் மட்டுமில்லை ஆழ்ந்த உறக்கத்தின் போது கனவிலும் வந்து போகுமளவு என்னை பாதித்த ஊர் இது.
ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். ரத்னா இங்கே வராமல் இருந்தால் நான் மட்டும் வந்திருந்தால் குடந்தை என்னை இத்தனை ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமா? அல்லது நான் வர முடியாமல், எனக்கு டீ போர்ட் பீல்ட் ஆபீசர் உத்தியோகமே ஆகாதிருந்தால்?
ரத்னாவுக்கு வேறே யாரவது ஒரு ராமோஜி கிடைத்திருக்கலாம் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது. காரின் பின் சீட்டில் நான் அவளுக்கு நெருங்கி உட்கார்ந்து அவள் கையைப் பலமாகப் பற்றிக் கொண்டேன். முன்சீட்டில் விட்டோபா கடப்பா மணக்கும் உறக்கத்தில் இருந்தார்.
பட்டீசுவரம் வந்தது. ”ஒரு நிமிஷம் உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுட்டு போகலாமா?” ரத்னாவைக் கேட்டேன்.
”இல்லீங்க, கர்பரக்ஷாம்பிகை கிட்டே வரேன்னு சொல்லியிருக்கோம். கருக்காத்த நாயகி காத்துக்கிட்டிருப்பா. திரும்பும்போது இங்கே தேனுபுரீஸ்வரரை சாவகாசமா கும்பிட்டுக்கலாம். அவர் கோபிச்சுக்க மாட்டார். அம்பிகையைப் பார்த்தா அப்பனைப் பார்த்த மாதிரி தான்”.
பட்டீசுவரம் துர்க்கைக்கும் காரில் இருந்தபடியே ஒரு நொடி கரம் குவித்து மனம் குவித்து வணக்கம் சொல்லித் தொடர்ந்து போனோம்.
முன்னைக்கு இப்போது கும்பகோணத்தைச் சுற்றி நீண்டு போகும் வயல்பரப்பு செழிப்பாக பசுமையாக இருந்ததாகத் தோன்றியது. வயல்கள் இல்லாத நிலப் பரப்பில் தோப்பும் துரவுமாக அடர்ந்த மரங்கள் நிறைந்து நின்றன. அங்கங்கே தென்னை மரங்கள் நீர்ப்பரப்பை வளைந்து தொடப் பார்த்தும், நிமிர்ந்து வானத்தை விசாரித்தும் அணிவகுத்து நின்றன. கால்வாய் மதகுகளின் வழியே வேகம் கொண்டு பாயும் வெள்ளப் பெருக்கில் நாரைகளும் கொக்குகளும் எவ்விப் பறந்து இறகு கொண்டு தொட்டு உயரம் சென்றன. இதமான காலை வெய்யில் எங்கும் சூழ்ந்திருந்தது.
இந்த வருஷம் நல்ல மகசூல் கிடைக்குமோ? விட்டோபாவிடம் கேட்டேன்.
“மழை அதிகம் இந்த வருஷம். வெய்யிலும் அதிகம் அதுனாலே பூச்சி பொட்டு அண்டாது” என்றார். டாக்சியை ஓட்டி வந்த ’உப்புக்காரத்தெருப் பையன்’ டிரைவர் வழியிலிருந்து கண்ணை எடுக்காமலேயே சொன்னது –
”ஆனா பாதி நெல்லு அரிசியாக்கி ரேஷனுக்குப் போகாமே ராணுவத்துக்கும் அனுப்பாமே எங்கேயோ கருப்பு சந்தையிலே போய் முடியுது.. வங்காளத்துக்கு தேவைக்கு வேண்டிய அரிசி போகாம, சர்க்காரே பஞ்சத்தை கொண்டு வந்துடுச்சு”
நான் பேச்சை எப்படியாவது கத்தரிக்க வேண்டிய அவசியத்தோடு, நீங்க எப்போ டாக்ஸி வாங்கினீங்க தம்பி என்று பேச்சை மாற்றினேன். சர்க்கார் உத்யோகஸ்தன், கடப்பா வாடையடிக்கும் டாக்சியில் போனாலும், சர்க்கார் விரோத பேச்சுக்கு துணை போகக் கூடாது. அதைக் கேட்கவும் கூடாது. மேலே பேச்சு வளரவிடவும் கூடாது. டாக்ஸி தன்னுடையது இல்லை, டிரைவிங்க் கூலி மட்டும் வரும் என அடக்கமாகச் சொன்ன டிரைவர் பையன் தொடர்ந்தான்-
”இங்கே இப்போ எல்லாம் மாறிக்கிட்டு வருது.. காங்கிரஸ் வந்ததாலே இல்லே.. சிகப்புக் கொடிக்காரங்க வரவுக்கு அப்புறம்னு கேட்டிருப்பீங்களே சார்?”
டிரைவர் மேலும் உற்சாகத்தோடு ராஜ விரோத சம்பாஷணையில் முன்னால் போக, “தசாபதி பாத்தீங்களா? என்றேன். அப்புறம் திருக்கருகாவூர் மூன்று மைல் அறிவிப்புப் பலகை வரும் வரை தெலக்ஸ் புவனா தான், டிடி ராமச்சந்தர் தான், காளிங்க ரத்தினம் தான்.
எதிர் திசையில் இருந்து வரிசையாக இரட்டை மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. தாராசுரம் சந்தைக்குப் போய்ட்டு வர்றவங்க என்றார் விட்டோபா. ”நாம் டீ ஆத்தின இடம் தானே அதுவும்?” என்று கேட்டேன். ஆமாம் என்றார்.
கோணல் மாணலாக அசைந்தபடி ஒரு மாட்டு வண்டி எதிரே வருவதைப் பார்த்தோம். வண்டியை வேகம் எடுக்க வைக்க, ஓட்டி வந்த இளைஞன் முயற்சி செய்வதும், மாடுகள் முரண்டு பிடிப்பதும் கண்ணில் பட்டது. அவன் கண்கள் எப்பாடு பட்டும் அந்தப் பிராணிகளை வேகமெடுக்க வைக்கிற தீவிரத்தோடு வெறித்திருந்தன. மாடுகளிலொன்று தீனமாக குரல் எழுப்பி உயிர் பயத்தில்அழைத்தது மனதைப் பிசைந்தது. அது இறந்துவிடக்கூடும். மற்றது ஓவென அலறி பயத்தில் சாணி போட்டபடி நின்றே விட்டது அவன் கைச்சவுக்கால் அவற்றை விடாமல் அடித்துப் போவென்று கூச்சலிட்டான்.
ரத்னா கோபத்தோடு என்னைப் பார்த்தாள்.
“என்னங்க, மாட்டை இந்த அடி அடிக்கறான். பாவம், வாயில்லா பிராணியை போபோன்னு விரட்டினா, இழுத்துட்டு ஓட சக்தி வேணாமா அதுக்கு. கொஞ்சம் காரை நிறுத்துங்க தம்பி” என்று குரல் கொடுத்தாள் அவள்.
மாட்டு வண்டிக்கு முன்னால் ரோடு ஓரமாக காரை நிறுத்தினான் தோழன் உப்புக்காரத் தெருப்பையன். ரத்னா சண்டை போடும் உத்தேசத்தோடு எழுந்திருக்க, நான் அவளுடைய தோளைப்பிடித்து உட்கார வைத்தேன்.
”நீ கோவிலுக்கு வந்திருக்கே. ரௌத்ர பாவம் காட்டற நேரம் இல்லே இது”.
சொல்லிப் புரியவைத்து உட்காரச் செய்தபோது டிரைவர் வண்டிக்காரனின் முண்டாசை எம்பிக் குதித்து உருவி, ”ஏண்டா மாட்டை அடிக்கறே அறிவில்லாதவனே” என்று வேகமாக முன்னால் போய் விட்டிருந்தான்.
மாட்டு வண்டிக்காரன் வண்டியை விட்டு இறங்கி, இரண்டு கையையும் கூப்பியபடி டிரைவரிடம் ஏதோ சொல்ல, அவனும் டிரைவரும் வண்டிக்குப் பின்னால் நடந்து போனார்கள்.
“சந்தை முடியறதுக்குள்ளே விக்கணும்.. காய்கறி, தேங்காய் வச்சிருக்கேன்.. அதான் விரசா ஓடப் பண்ணிட்டு இருக்கேன்.. இப்படித்தான் சொல்லி சந்தேகம்-னா வண்டிக்குள் பார்னு கூப்பிட்டிருப்பான்” என்றார் விட்டோபா.
நான் பார்த்தபோது டிரைவரின் கையைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தான் பையன் என்பதைக் கவனித்தேன். உடனே இறங்கினேன்.
“ரத்னா, நீ விட்டோபா அண்ணா கூட இங்கேயே இரு. ஒரு நிமிஷத்துலே வந்துடறேன்.. முடியலேன்னா விட்டுட்டு வர வேண்டியதுதானே நம்மாளு… எதுக்கு சும்மா நின்னு நேரம் கடத்திட்டு இருக்கான்? கூட்டி வரேன்”
நான் மாட்டு வண்டியை உற்றுப் பார்த்தேன். காய்கறியோ, மீனோ, கருவாடோ, தேங்காயோ ஏற்றிப் போவதாகக் காட்டும் வாடை எதுவும் வண்டிக்குள் இருந்து வரவில்லை.
உள்ளே இருந்து முனகல் சத்தம் மட்டும் விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு பெண் குரலாக இருந்தது.
நான் பின்னால் போக, வண்டிக்காரன் நான் எதிர்பார்க்காதபடி என் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
”சார், நான் தப்பு எதுவும் பண்ணலே. மாட்டை வேகமா போகவைக்க முடியுமான்னு பார்த்தேன்.. என் பொண்டாட்டி உசிருக்கு போராடிட்டு இருக்கா உள்ளே.. ரெண்டு உசிரு.. பிரசவ ஆஸ்பத்திரிக்கு போய்ட்டிருக்கேன்.. தப்பு எதுவும் பண்ணலே சாமி.. வெள்ளாட்டி வரமுடியாம வாந்திபேதியிலே கிடக்கா.. யாரும் இல்லே பிரசவம் பார்க்க.. என்ன செய்வேன் சாமி…” அவன் அழத் தொடங்கினான்.
Excerpts from my forthcoming novel RAMOJIUM