கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு காலைப் பொழுது 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

”ஏம்பா நீ போன வாரம் நான் பார்த்தபோது காப்பி போட்டுட்டிருந்தியே” என்று விசாரித்தபடி திரும்பினார் விட்டோபா.

”ஆமா காப்பி மாஸ்டர் வரலேன்னு முதலாளி அங்கே அந்த மூலைக்கு போகச் சொன்னார். காப்பி மாஸ்டர் போயாச்சு.. அட இருக்காருங்க.. மெட்றாஸோட போயிட்டார்.. எல்லோரும் மெட்றாஸை விட்டு வரும்போது இவர் அங்கே காபிக்கடை இல்லே டீக்கடை போட்டிருக்கார்.. நல்லா போகுதாம்”.

பச்சையப்பன் தெருப்பையன் என் தகவலுக்காகவும் சொன்னான். ”இங்கே காப்பி கோட்டை ஆச்சே.. டீ எப்படி போவுது?” என்று கேட்டபடி நான் அவன் போட்டுத் தந்த முதல் டீயை ரத்னாவுக்கு எடுத்து நீட்டினேன். அவள் ப்ளாட்பாரம் வாஷ்பேசினில் பல் துலக்கி விட்டுச் சுறுசுறுப்பாக ஓடி வந்தாள்.

”சார், இது காப்பி காப்பின்னு காங்கிரஸுக்கு அடுத்தபடி காப்பிக்கும் கோட்டையாத்தான் இருந்துது. இப்போ டீ எதிர்க் கட்சியா அமோகமா வளர்ந்துட்டு இருக்கு.. நாளைக்கே ஆட்சியைப் பிடிச்சுடும்.. பாருங்க”

”அதென்னப்பா டீமேல் அத்தனை ஈடுபாடு கும்மோணம் மகாஜனங்களுக்கு?”

”பின்னே இல்லியா சார்? காப்பியை பீப்ரி, ரோசெட்டான்னு காபிக் கொட்டை வாங்கி வறுத்து பொடிச்சு டீகாஷன் இறக்கணும்.. பால் தேடித்தேடி தண்ணீ கலக்காம வாங்கி அதிகமாகவும் இல்லாம குறைவாகவும் இல்லாம காய்ச்சணும். பார்த்துப் பார்த்து சர்க்கரை கலக்கணும். கலந்த காப்பி ஒரு துளி வாயிலே பட்டா கசக்கணும்.. அடுத்தது இனிக்கணும்.. இப்படி சிரமப்பட்டு போட்டு நீட்டினா, குடிச்சுட்டு வாசல் திண்ணையிலே உட்கார்ந்து, ’என்னடா நேத்து ஏன் வேலைக்கு வரலே? கட்டி வைச்சு மிலாராலே விளாசணுமா?’ என்று மிரட்டறது தானே வரும்.. கூடவே, காப்பி குடிச்சா இங்க்லீஷ்காரனுக்கு கால் பிடிச்சு விடற அடிமைத்தனம் தோணும்”.

டீ குடிச்சாலோ? டீ குடித்தபடி நின்ற யாரோ கேட்டார்கள்.

”டீ சாமானியப்பட்டவனோட பானம். காலையிலே எழுந்தோமா, பசியோ பட்டினியோ குடிசையாண்ட டீக்கடையிலே தெம்பா ஒரு டீ சாப்பிட்டு மண்வெட்டியை எடுத்துட்டு கிளம்பினா பத்து மணி வரை வயிறு இரை கேட்காது. கூழோ பழைய சோறோ வந்தா தின்னுட்டு, குடிச்சுட்டு, மறுபடி ஒரு டீ.. இன்னும் நாலு மணி நேரம் வேலை.. குளிச்சு, கஞ்சி குடிச்சு இன்னொரு டீ.. சாயந்திரம் அஞ்சு வரை தெம்பா வேலை. சாயந்திரம் கள்ளுக்கடைக்கு போகலாம்னு உடம்பு கேட்டா, மகாத்மா காந்திக்கு ஜேன்னு சொல்லி இன்னொரு டீ.. உடம்பும் மனசும் நல்லா இருக்கும்..”

அவன் டீயின் மகத்துவம் சொல்ல, இத்தனை பேருக்கு டீ பிடிக்க நானும் விட்டோபாவும் விதை போட்ட காலத்தை நினைத்தபடி ஸ்டேஷனுக்கு வெளியே வந்தோம். ”டீ போட்டு கொடுத்து இங்கே ப்ரண்ட்ஸ் தேடிக்கிட்டேன்” என்று ரத்னாவிடம் சொல்ல அவள் கூறிய பதில் –

”நீங்க இங்கே போட்டுக் கொடுத்த முதல் டீ உங்களுக்கு பொண்டாட்டீ வாங்கிக் கொடுத்ததை மறந்தாச்சா? இல்லே இன்னமும் தெலக்ஸ் நினைப்பா?”

நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். எப்படி இந்த முக்கியமான விஷயத்தை மறந்தேன்.

“சும்மா கிண்டலுக்காக சொன்னேன்.. அந்த தெலக்ஸ் பொண்ணு உள்ளபடிக்கே பாவம் தான்.. அவளுக்கும் சேர்த்து பிரார்த்திக்கணும்” என்றாள் ஒரே நிமிஷத்தில் மனம் நிறைய அன்பும் கருணையும் கொண்டவளாக. மனிதர்கள் தானே எல்லோரும். தேவதை ஆவதும் உண்டு.

”பிரேமா எப்படி உங்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆனது? அடுத்த வீட்டுலே இருக்காளா? முட்டை ஓடு, மீன் செதில்னு உங்க வீட்டுலே தூக்கிப் போடுவாளா? வீடு முழுக்க டீசண்ட் சவுக்கார சோப் கோடவுனாமே?”

விட்டோபா தன் தமிழ்த் திரைப்பட அறிவைப் பறை சாற்றியதில் பிரேமாவை புவனாவாக்கி, டீசண்ட் சவுக்காரத்தை தெலெக்ஸ் சோப் ஆக்கிப் புரிந்து கொண்டோம்.

இந்த முட்டை ஓடு, மீன் செதிள் பற்றிக் கேட்க ஆசை. ஆனால் விட்டோபா வேறே எங்கேயாவது பேச்சை இழுத்துக்கொண்டு போய் விடுவார். இன்றைக்கு வந்த காரியம் நிறைவேறினால் போலதான்.

“ஊர்லே இன்னிக்குன்னு நாள் வாடகைக்கு பேச ஒரு ஜட்கா கிடையாது. அதான் பஜார்லே சொல்லி காரை எடுத்துக்கிட்டு வந்தேன்.

அவர் காட்டிய திசையில் ஒரு ஆஸ்டின் மைனர் கார் அடக்க ஒடுக்கமாக நின்றுகொண்டிருந்தது. யார் டிரைவர்? வண்டிக்குப் பின்னால் சிகரெட் புகைத்துவிட்டு அசோகா பாக்குத்தூள் பொட்டலத்தைப் பிரித்து வாயிலிட்டு மென்றபடி ஓடி வந்த டிரைவர் பக்கத்தில் வைத்து என்னைப் பார்த்ததும் நின்றார்.

”டீ சார், நல்லா இருக்கீங்களா? நான் உப்புக்காரத் தெருப்பையன்.. உங்களுக்கு நினைவு இருக்குமோ என்னமோ.. எனக்கு மறக்க முடியாது .. பிஸ்கட்டும் டீயும் எத்தனை நாள் உங்ககிட்டே வாங்கிககிட்டிருக்கேன்” என்றான்.

கும்பகோணம் முழுக்க என் சிஷ்யர்களால் ஆனது.

“என் வீட்டுக்கு போகலாம் முதல்லே… அதுக்குள்ளே இந்த காபியை குடிச்சுடலாம்.. புது ப்ளாஸ்க்.. சூடு நிக்குமான்னு தெரியலே”

விட்டோபா கோப்பையில் ஊற்றி நீட்டிய காப்பி நல்ல சூடாக, வாசனை தூக்கலாக மங்களாம்பிகா ஹோட்டல் காப்பியின் சகல லட்சணங்களும் குணாதிசயங்களும் பொருந்தியதாக இருந்தது. அதை ரசித்துக் குடித்து முடிப்பதற்குள் சோலையப்பன் தெருவில் விட்டோபா வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தோம் நாங்கள்.

குளித்து விட்டு திருக்கருகாவூர் புறப்பட்டோம். விட்டோபா மனைவி மணக்க மணக்க கடப்பாவும் தட்டு இட்லியும் காலை பசியாற செய்து வைத்ததை சாப்பிட முடியாமல் போனது. கோவில் பிரார்த்தனை செய்து முடிந்து தான் இன்னிக்கு ப்ரெக் பாஸ்ட் என்று தீர்மானமாக ரத்னா சொன்னதால், ஒரு டிபன் கேரியரில் கடப்பாவும் இட்லியும் கருகாவூருக்கு எங்களோடு வந்தது.

கடப்பா வாசனையோடு காரே மங்களாம்பிகா ஹோட்டலுக்கு சக்கரம் பொருத்தினதுபோல் உருண்டு போய்க் கொண்டிருந்தது.

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன