கும்பகோணம் ரயில் நிலையத்தில் காலை 1945 – ராமோஜியம் நாவலில் இருந்து

என் அடுத்து வெளிவர இருக்கும் நாவலான ‘ராமோஜியம்’ – சில பகுதிகள் இங்கே

மணி ஆறரை ஆகியிருந்தது. அந்தக் காலை நேரத்திலும் கும்பகோணம் ரயில் நிலையத்தில் தெலக்ஸ் தெலக்ஸ் என்று பரபரப்பு தெரிந்தது.

போட்மெயில் மெதுவாக நகர்ந்து வந்து நிற்கத் தயாராகிக்கொண்டிருந்தது. ராமு ராமு என்று தீனமான சத்தம். ப்ளாட்பாரத்தில் ரயிலோடு ஓடி வந்து கொண்டிருந்தார் விட்டோபா.

வண்டி நின்றது. நான் இறங்கி ப்ளாட்பாரத்தில் நிற்க என் மேல் மோதி அணைத்துக் கொண்டு நின்றார் அவர் மூச்சு வாங்க. எல்லோருக்கும் நல்லது மட்டும் நினைக்கும் அந்த அப்பாவி மனுஷரின் பிடியில் கண்கலங்கக் கட்டுண்டு நின்றேன் நான்.

“ரத்னா, வாம்மா வாம்மா.. இளைச்சுப் போயிட்டியே இப்படி.. உங்க ராவ்ஜி மூணு வேளையும் எடை கட்டின பால்லே போட்ட டீ மட்டும் குடிச்சு சிக்கனமா இருந்து பணம் சேர்க்கணும்னு சொல்லி இருக்காரா? கேட்கவே கேட்காதே”

என் விலாவில் இடிப்பும், ரத்னா தலையில் கை வைத்து இன்னொரு கையால் ஆசிர்வாதமும் செய்துவிட்டு, ஓட்டைப் பல்லோடு சிரித்தபடி நின்றார் அவர்.

தெலக்ஸ் புவனா உள்ளே போவதற்கு முன் எங்களுக்குக் கையசைக்க, கும்பகோணம் ஜங்ஷன் முழுவதும் பதிலுக்கு கையசைத்து அவளை வழியனுப்பியது.

“பல்லு எங்கே போச்சு, விட்டோபா சார்?” நான் கேட்டேன்.

”அதை ஏன் கேக்கறீங்க.. சீசந்திக்கு மொறுமொறுன்னு பண்ணியிருந்தாளேன்னு ஏழெட்டு வெல்லச் சீடை தின்னுட்டேன். கடைசியாக் கடிச்ச சீடை வாயிலே இருந்து கையிலே வந்து விழுந்தது. கடிச்ச பல் வயத்துக்குள்ளே போயிடுத்து. எப்படா விடியும்னு காத்துக்கிட்டிருந்து.. காலம்பற பாம்பே கக்கூஸ் வேணாம்னு மெட்றாஸ் கக்கூஸ்லே உக்காந்து வெளிக்கு போகறபோது, ஒரு வேப்பங்குச்சியாலே ..”

”வாங்க, சூடா ஒரு காப்பி சாப்பிடலாம்” என்று அவரை சரியான இடத்தில் நிறுத்தியிருக்காவிட்டால் அங்கே வேறே வாடை தூக்கலாக அடித்திருக்கும்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். ஏழு வருஷத்தில் கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் பெரிதாக ஒன்றும் மாறியிருக்கவில்லை. இந்த விளக்குக் கம்பத்தின் அடியில் தான் கோபுவும், ராஜுவும் ரத்னாவைக் கூட்டிப்போகக் காத்திருந்தது. இதோ இந்த சிமெண்ட் பெஞ்சோடு ஒட்டி நான் நிற்க, புன்முறுவலோடு நேரே பார்த்தபடி ரத்னா என் நெஞ்சில் நடை போட்டு நுழைந்தது.

இங்கே தான் நான் நின்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் துக்காம்பாளையத் தெருவுக்கு வழிகேட்டேன்.

“வெளியிலே ஜட்கா வண்டிக்காரன் யாரைக் கேட்டாலும் சொல்வானே.. எட்டணா கொடுத்தா கொண்டு போய் விட்டுடவும் செய்வான்.. ஒண்ணு செய்யுங்கோ.. அதோ போறாளே, அவா கூடப் போங்கோ. ”. அவா கூடத்தான் வாழ்க்கை முழுவதும் போய்க் கொண்டிருக்கிறேன் சார்.

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் இல்லை இப்போது கொடி காட்டியவர்.

என் நினைப்பு பின்னால் வந்து கொண்டிருந்த ரத்னாவைப் பாதித்திருக்கக் கூடும். என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டுப் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தாள்.

விட்டோபா ஒரு பையைத் தூக்கியபடி முன்னால் போக, நான் தவிர்க்க முடியாத ஆர்வத்தோடு ரத்னாவின் கைத்தலம் பற்றி நடந்தேன்.

இருவரும் எல்லாம் பேசினோம். ஒன்றும் வாய்ச் சொல்லாகப் பேசவில்லை இருவரும். பேசிய, கேட்ட, பாடிய, கூடப் பாடிய, தாளம் தட்டிய, கூடி ஆடிய, ஆட்டத்துக்குத் தாளம் சேர்த்த அனுபவங்கள் சரஞ்சரமாக மனதில் எழுந்து நிறைய, கூட்டம் சற்றே கூடியிருந்த ப்ளாட்பாரச் சிற்றுண்டி சாலை வாசலில் நின்றோம். கைகள் அவசரமாக, தற்காலிகமாக விடுவித்துக் கொண்டன.

நாங்கள் நின்றதைத் திரும்பிப் பார்த்து விட்டோபாவும் திரும்பி வந்தார்.

“கொண்டு வந்திருக்கேனே.. கார்லே இருக்கு” என்று அவர் அபிநயித்தது உருளை போல், அணுகுண்டு மாதிரி என் கண்ணுக்கு அர்த்தமானது. என்ன என்று வாயைத் திறந்து கேட்டே விட்டேன்.

தர்மோஸ் ப்ளாஸ்காம். உள்ளே காப்பி ஊற்றிக் கொண்டு வந்திருக்கிறாராம். வீட்டில் போட்டது கூட இல்லை. எனக்குப் பிடிக்குமே என்பதால் மங்களாம்பிகா விலாஸில் வாங்கி எடுத்து வந்ததாம்.

அதற்குள் ரயில்வே சிற்றுண்டிச் சாலை வாசலில் டீ ஆற்றிக் கொண்டிருந்த இளைஞன் ”சார் வாங்க, சௌக்கியமா, என்னை நினைவு இருக்கா?” என்று கேட்டபடி டீ கப்பையும் பால் கரண்டியையும் தூக்கிக் கொண்டு என்னை வரவேற்க அருகில் வந்துவிட்டான்.

”பச்சையப்பன் தெருவிலே நீங்களும் விட்டோபா சாரும் டீ விளம்பரத்துக்கு வந்தபோது ஒருநாளும் எனக்கு டீ தராம போனதில்லே சார் .. நீங்க டீ போடுற முறைன்னு கத்துக் கொடுத்தது இப்போ எனக்கு சோறு போடுது” என்று நெக்குருகினான் அவன்.

நினைவு இருக்கிறது, பச்சையப்பன் தெருச் சிறுவன், பத்து வருஷத்தில் ஆறடிக்கு வளர்ந்து, வரவேற்கிறான். கைகுலுக்கி வாழ்த்து சொன்னேன்.

“நம்ம ப்ராண்ட் டீ நாலு போடு சாருக்கு” என்று உள்ளே யாரையோ உற்சாகமாகக் கூப்பிட்டபடி தன் வேலை இடத்துக்குத் திரும்பினான் அவன்.

”விட்டோபா, காப்பி அப்புறம் குடிச்சுக்கலாம் நீங்களும் வாங்க” என்று அழைத்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன