ராமோஜி ஆங்கரே 1698 அத்தியாயத்திலிருந்து : புதினம் ராமோஜியம் (வெளிவர இருக்கிறது)

ராமோஜியை தஞ்சாவூரிலோ, டபோலிலோ, சுவர்ணதுர்க்கத்திலோ யாரும் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில்லை. முன்பெல்லாம் எலிப்பொறி ராமோஜி என்று கூப்பிடுவார்கள். அப்புறம் அவனை ராமோஜி ஆங்கரே என்று அழைப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. அது ராமோஜி கடற்படையில் சேர்ந்த பிறகு.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் புதல்வர் ராஜாராம் போன்ஸ்லே நாடாளும் இந்தக் காலத்தில் மராட்டி கடற்படை சகல வலிமையோடும் முன்னேறத் தொடங்கியுள்ளது. அவரைத் தெரியாதவர்கள் கூட அபூர்வமாக அங்கங்கே இருக்கலாம். ஆனால் மராட்டி கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரேயைத் தெரியாதவர்கள் இந்துஸ்தானத்தில் எங்கும் இருக்க முடியாது.

எனினும், தஞ்சாவூர் மராட்டியர்களில், ஆங்கரேயின் கடற்படையில் சேர்ந்தவர்கள் அதிகமில்லை. அவர்கள் பெரும்பாலும் இங்க்லீஷ் சர்க்காரில் சின்னச் சின்னதாக உத்தியோகம், மற்றும், வாழைப்பழமும், வெற்றிலை, பாக்கு சீவலும், புகையிலையும் விற்பது என்று இப்படிக் குற்றேவலும் சிறு வர்த்தகமும் செய்வதல்லாமல் பெரியதாக எதுவும் செய்ய முனைவதில்லை. ராமோஜி ஆங்க்ரே அந்த விஷயத்தில் முற்றிலும் வித்தியாசமானவன்.

ரத்னாவைக் கல்யாணம் செய்து புணேக்கு அடுத்து ஒரு கிராமத்திலிருந்து கூட்டி வந்த பிறகுதான் அவனும் மாறிப் போனான். பத்தோடு பதினொன்றாக இருந்தவன், ஆயிரத்தில், பத்தாயிரத்தில் ஒருத்தனானது ரத்னா இச்சல்கரஞ்சியில் இருந்து வந்த முகூர்த்தம்தான்.

தஞ்சாவூரில், புணேயும் நாகபுரியும் பிரசித்தமான அளவு மராட்டிய பட்டணம் வேறெதுவும் அதிகமாகத் தெரிய வந்திருக்கவில்லை. இச்சல்கரஞ்சி என்ற ரத்னாவின் ஊர்ப் பெயரையே பஜனைமடத்தெரு சாமண்ணா எச்சில்காளாஞ்சி என்று தான் ஆரம்பத்தில் ராமோஜியை கிண்டல் செய்யும் விதமாகச் சொல்லி வந்தார். அது ராமோஜி ஆங்கரே எலிப்பொறி ராமோஜியாக இருந்த, காலத்தில். இப்போது எச்சில் கரஞ்சி என்று சொன்னால், சாமண்ணா வாயில் பல் இருக்காது. அது ஏற்கனவே இல்லைதான்.

எலிப்பொறி ராமோஜி என்று சொப்பனத்தில் கூட யாரும் அழைக்காமல் இந்த எட்டு வருடம் போயிருக்கிறது.

பத்து வருடம் முன்பு, ராமோஜியின் தினசரி வேலை மெல்லிசான மரப்பலகை கிடைக்க, மரம் அறுக்கும் மரவாடிப் பட்டறைகளை தினசரி ஒரு தடவை சுற்றி வருவது. அதற்கு நிறைய நேரம் செலவாகும்.

எலிப்பொறி செய்ய அப்படி மரம் வாங்கி எடுத்துப் போகும்போது ஏற்கனவே அவனிடம் வாங்கிய யாராவது வழியில் பிடித்து நிறுத்துவார்கள்.

”எலியை வைத்தால் மூஞ்சூறு மாட்டுகிறதே.. சித்தி புத்தி சமேத கணபதி பகவான் வாகனமன்றோ மூஷிகம் . அதை ஏன் பிடிக்க வேண்டும்? உன் எலிப்பொறி ஒன்றும் சரியில்லை” என்றோ, ’உப்புக்கண்டம் மாட்டி வைக்க எலிப்பொறிக்குள் வசதி வேண்டும்’ என்றோ குறைச்சல், புகார் என்று சொல்ல, ராமோஜி அதை எல்லாம் சாந்தமாக ஏற்று வாங்க வேண்டி வரும்.

அபூர்வமாக, ”உன் எலிப்பொறியை வைத்து ஒரே நாளில் நாலு எலி பிடித்தேன்” என்று பாராட்டு வருவதும் உண்டு. எலிப்பொறியில் எலி மாட்ட, பொறியை நன்றாக அலம்பி விட்டு காய வைத்து அப்புறம் வெங்காய பஜ்ஜியோ வடையோ, முடிந்தால் புதிதாகச் செய்து மாட்டி வைக்கணும் என்று சொல்லிக் கொடுத்தாலும் அதில் சிரத்தை இல்லாதவர்களோடு அல்லாடிக் கொண்டிருந்தபோது தான் இச்சல்கரஞ்சியில் இருந்து ரத்னா பாய் என்ற அழகான கன்யகையை அவன் கல்யாணம் செய்துகொள்ள ஏற்பாடானது.

அவள் தான் ராமோஜி பிழைப்புக்காக மேற்கொண்ட தொழிலைப் பற்றி அவனிடம் முதல் தடவையாகப் பேசியது.

“வாழ்க்கை முழுக்க எலிப்பொறி செஞ்சு ஒண்ணும் ரெண்டுமா விற்கப் போறீங்களா?” அவள் கேள்விக்கு அவன் பதில் வெகுளித்தனமாக இருந்தது –

“இன்னிக்கு ரெண்டு பொறி, அடுத்த வாரம் நாலு, அடுத்த மாதம் பத்து, அடுத்த வருஷம் நூறு இப்படி வியாபாரம் செழிக்கும்” என்று அவன் கணக்குப் போட்டுக் கனவு கண்டுகொண்டிருந்தபோது ரத்னா கேட்டாள் –

“தஞ்சாவூர் முழுக்க எலியே இல்லாமல் போச்சுன்னா?”

“கும்பகோணத்திலே இருக்குமே”

“அங்கே வேறே யாராவது எலிப்பொறி வித்துக்கிட்டு இருக்கமாட்டாங்களா?”

ரத்னா தான் ராமோஜியை சத்ரபதி ராஜாராம் போன்ஸ்லேயின் சமுத்திர சேனையில் சேர வைத்தது.

“தரையில் நகரும் காலாட்படை என்றால் அடிதடி, உடம்புக்குக் காயம், கைகால் ஒடிந்து போவது என்று நிறைய வரும். சமுத்திரத்தில் கப்பலேறி விதம்விதமாக தேசம் போகும் கடல் படைக்காரன் ஆகலாமே. உத்தியோகம் வேகமாக விருத்தியாகும். கடல், பழகினால் நிலத்தை விடப் பத்திரமானதில்லையா?”

அவள் அடி எடுத்துக் கொடுக்க, அவனுக்கு எல்லாமே புதுசாக இருந்தது. முக்கியமாக கடலில் கப்பல் பயணம். அவன் கடலையும் கப்பலையும் தன் வாழ்க்கையில் பத்தாவது வயசில் அப்பாஜி நாகைப்பட்டிணத்தில் கொண்டுபோய்க் காட்ட ஒரு தடவை பார்த்திருக்கிறான். நாகையில் யாருக்கோ கல்யாணம் என்று அப்பாஜி கூட்டிப் போனபோது அது.

கடற்படையில் சேர ராமோஜிக்கு விருப்பம் தான். சாப்பாடு போட்டு சம்பளமும் தருவார்களாம் என்று ரத்னா சொன்னபோது நியாயமான ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான் அவன் –

”எனக்கு நீச்சல் தெரியாதே. கடல் படையில் நான் எப்படி சேர முடியும்?”

கடல்படையில் சேர ஒழுங்கும், சொன்னபடி கேட்கும் உடம்பும், வலிமையும் வேண்டுமே தவிர, நீச்சல் தெரிந்திருக்க வேண்டாம் என்று ரத்னா சொல்லி அவன் தெரிந்து கொண்டது அப்போது தான்.

ரத்னா சொல்லிக் கொடுத்தபடி கடற்படையில் சேர சம்மதம் என்று ராமோஜி எழுதிய லிகிதத்தை, அவள் புணேயில் யார் மூலமோ கனோஜி ஆங்கரேவுக்குச் சேர்ப்பித்தாள். சுவர்ணதுர்க்கத்தில் தன்னைச் சந்திக்கச் சொன்னார் ஆங்கரே.

ராமோஜி சுவர்ணதுர்க்கத்துக்கு, ரத்னாவோடு வேடிக்கை பார்க்கும் உத்தேசத்தோடு போனான். ஆங்கரே உற்சாகமும் சந்தோஷமுமாக இருந்த நாள் அது. ராமோஜியைப் பார்த்ததுமே ஆங்கரேக்குப் பிடித்துப் போனது. வெகுளியான முக பாவமும், சதா அங்கே தவழும் சிரிப்பும், வாழ்க்கையை சுவாரசியமாகப் பார்க்கிற மனோபாவமுமாக ராமோஜியின் விசேஷங்கள் கனோஜி ஆங்கரேக்குப் ரசிக்கக் கூடியதாக இருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன