அவர் போன பிறகு கதவு அடைத்து வந்தேன்.
“புவி, உங்க படம் நான் தசாபதி தான் முதன்முதலா பார்த்தேன். அதுக்கு முந்தி ஆக்ட் கொடுத்திருக்கீங்கன்னு சொன்னீங்களே”, ரத்னா சொன்னாள்.
”ஓ நான் நாலு வருஷம் முந்தி, அவன்.. கோஷ்.. ஏமாத்திட்டுப் போனதுமே நடிக்க ஆரம்பிச்சுட்டேன்”.
”ராஜ முந்திரியிலேயா?” நான் கேட்டேன். ”இல்லை, மதறாஸ். திரும்பி வந்தாச்சு” என்றாள். புரியாமல் பார்த்தோம்.
”ராஜமுந்திரிக்கு அஞ்சு மைல்லே கோலமூரு தான் என் பூர்விகம். அப்பா பத்து ஏக்கர் நிலம் வச்சிருக்கார்.பி.ஏ பி.எல். நான் பிறந்ததும் குடும்பம் மெட்றாஸுக்கு வந்துச்சு. அப்பா ஹைகோர்ட்லே ப்ராக்டிஸ் பண்ணலாம்னு வந்தார். நல்லா பேசுவார். ஆனா நடுவிலே வாய் குழறும். யாரும் கட்சிக்காரன் வராததுக்கு அது காரணமோ என்னமோ. நான் எட்டாம் கிளாஸ் வரை இங்கே தான் படிச்சேன். தமிழ் அத்துப்படி ஆனது அப்படித்தான். மாம்பலத்திலே டாக்டர் நாயர் இருந்த வீட்டுக்கு பக்கத்து வீடு நாங்க”.
“நான் மெட்றாஸ் வர்றதுக்கு முந்தியே நீங்க வந்தாச்சு போல, புவி” ரத்னா சொல்ல, அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கி ஒரு மடக்கு தண்ணீரைக் குடித்தாள் தெலக்ஸ்.
”யெஸ்.. ரத்னாக்கா, இன்னும் கொஞ்சம் தான் இருக்கு… ஆரம்பிச்சாச்சு, முடிச்சுடட்டா… தூக்கம் வருதுன்னா சொல்லுங்க.. புவனா சொன்னாள்.
”தூக்கமாவது ஒண்ணாவது புவி. உங்களோட இப்படி நெருக்கமா உட்கார்ந்து பேச எனக்கு கொடுத்து வைக்கணும்”
ரத்னா என் மனதைப் படித்து எழுத்துக்கு எழுத்து சொன்னாள். புவி என்ற அழைப்பு உட்பட.
”எனக்கு அப்புறம் மூணு பேரை பெத்து வளர்த்துக்கிட்டு இருந்த அம்மா ஷயர் ரோகத்திலே போய்ச் சேர்ந்ததும் அப்பா குடும்பத்தை ராஜமுந்திரிக்கு இடம் மாத்தினார். லாயர் ஆகாட்ட பரவாயில்லே. விவசாயத்தையாவது கவனிச்சுக்கலாம்னு நினைச்சார். சுமாரா குடும்பம் நடத்த பணம் வந்தது. வருது இப்போவும். நான் ஸ்கூல் பைனல் முடிச்சு ப்ரீயூ படிக்க பணம் கட்டினார். அப்போ தான் கோஷ்னு போட்டோகிராபர் ராஜமுந்திரி வந்தது. என் மனசைக் கவர்ந்துட்டான் பாஸ்டர்ட்.. சாரி ராமோஜி சார்… இனிமே சொல்லலே.. என் குடும்பத்தை விட்டுட்டு கோஷ்.. வெரி ஸ்டைலிஷ் பெர்சன்.. ரொம்ப படிச்ச மாதிரி பாவனை.. ஹிந்துஸ்தானி சினிமாப்பட ஹீரோ ப்ருத்விராஜ் கபூர் மாதிரி குரல்.. அவனை ரகசியமாக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவன்கூட பம்பாய் போனேன். அவன் சொன்னான்னு இஷ்டமே இல்லாம கருக்கலைப்பு செஞ்சுக்கிட்டேன்.. மோகம் கண்ணை மறைச்ச நேரம் அது.. இந்துஸ்தானி சினிமாவிலே நடிக்கலாம்னு நைச்சியமா பேசி, பணம் கொட்டும்னு ஆசை காட்டி, அவன் கூட்டிப் போன இடம்…”
புவனா மறுபடி ரத்னா தோளைப் பற்றி அழத் தொடங்கினாள். பெண்ணுக்குப் பெண் ஆறுதலாக இருந்த தருணம் அது. நான் குறுக்கிடாமல் உட்கார்ந்திருந்தேன். வெளியே போயிருக்கலாமோ என்று யோசித்து எழுந்தேன். உட்காரச் சொல்லி சைகை காட்டினாள் தெலக்ஸ் புவனா.
”என்னை சிவப்பு விளக்குலே வித்துடப் பார்த்தான் ஸ்கவுண்ட்ரல். எப்படியோ தப்பிச்சு மெட்றாஸ் வந்தேன். நாயர் டாக்டர், அம்மாஞ்சி வீரேசலிங்கம் பந்துலு இப்படி பலபேர் உதவி செஞ்சாங்க. நானும் ஸ்கூல் சிநேகத்தை வச்சு ப்ரண்ட்ஸ் மூலமா சினிமா வந்தேன். 1937-இல் இருந்து நாலு வருஷமா சின்னச் சின்ன ரோல்லே நடிக்கறபோது தெலக்ஸ் சோப் மாடலிங் அசைண்மெண்ட் வந்துச்சு. அப்புறம் தசாபதி. அதெல்லாம் உங்களுக்கு தெரியும் .. அது ஊருக்கு தெரிஞ்ச புவனா.. உள்ளுக்குள்ளே புவனா கருக்கலச்சுதால சாபமோ என்னமோ கர்ப்பப் பை எடுத்தாச்சு.. உடம்பு வலி.. மனசுலே ரணம்.. சிரிக்கப் பழகியாச்சு.. தனியா .. அவ்வளவுதான் ரத்னாக்கா”
ரத்னா அவள் தோளில் தலையமர்த்தி விம்மினாள். அரையிருட்டில் ரயில் சத்தத்தைக் கேட்டபடி அவர்களுக்கு அந்நியனாக சும்மா அமர்ந்திருந்தேன். வெகுநேரம் அந்தப் பெண்கள் எதுவும் பேசாமல் நேசம் பகிர்ந்திருந்தார்கள்.
”ஏன் தனியா சிரமப்படணும்? குடும்பத்தை இங்கே கூட்டி வரலாமே புவி? உங்க அப்பா, தங்கச்சி, தம்பிகள்.. போய்ட்டு வாங்க” ரத்னா வற்புறுத்தினாள்.
”போனேன். அப்பா துரத்தி விட்டுட்டார். வீட்டிலே இருந்து கழுத்தைப் பிடிச்சு தெருவுக்கு தள்ளிவிட்டார். அப்போ இருந்து வைராக்கியம். அந்த வீட்டுலே அப்புறம் கால் வைக்கலே”.
”அப்புறம்?” ரத்னா கேட்டாள்.
”இங்கே தனியாகத்தான் மெட்றாஸ்லே ஜி.என்.செட்டி ஸ்ட்ரீட்லே வாடகைக்கு இடம் பார்த்து குடி வந்தேன்.. துணைக்கு யாராவது வேணுமே… ராஜமுந்திரியிலே என் வீட்டுலே சுத்துக்காரியம் செஞ்சு சமையல் பண்ணிட்டிருந்த ரத்னம்மாவை இங்கே வரவழைத்து ஒரு சௌகரியத்துக்காக சித்தி ஆக்கிட்டேன்…”
அவள் சிரிக்க ஆரம்பித்து மறுபடி விசும்பினாள்.
ரத்னா மடியில் தலை வைத்து அவள் உறங்கிப் போனாள். நான் இன்னொரு கீழ் இருக்கையை படுக்கையாக்கி ரத்னாவைப் படுக்கச் சொன்னேன். அதற்கு மேலே ஏணி ஏறி, என் படுக்கைக்குப் போனேன்.
மறக்க முடியாத இரவு அது.
நடு ராத்திரியில் ரயில் எங்கோ நீண்ட நேரம் நிற்க, எந்த ஸ்டேஷன் என்று பார்க்க நான் கீழே இறங்கி வந்தேன். புவனாவின் இருக்கைக்கு ஓரமாக உட்கார்ந்து கீழே என் செருப்புகளைத் தேடும்போது, மெத்தென்று புவனாவின் கை என் கையில் பட்டு இறுகப் பற்றியது. ஒரு ஜோடி உதடுகள், பற்றிய கையை முத்தமிட்டு விலகின. அடுத்த வினாடி புவனா மறுபடி தூக்கத்தில். நான் அதற்கப்புறம் உறங்கவில்லை.
”சார், கும்பகோணம் வந்தாச்சு”. டிக்கெட் எக்ஸாமினர் எழுப்பினார். ரத்னா உடனே எழுந்து விட்டாள். புவனாவும்.
ரத்னாவின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு அவளையும் என்னையும் அனுப்பிவைக்க கம்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்தாள் தெலக்ஸ் புவனா.
நானும் புவனாவும் வெறும் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம். பின் சின்னச் சிரிப்பு இரு வசமும் இருந்து முன் நகர்ந்து போய்க் கலைந்தது.
(விரைவில் வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – கும்பகோணம் 1944)