ராமோஜியம் – போட் மெயிலில் கும்பகோணத்துக்கு – 1945

வெளிவர இருக்கும் என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – சில பகுதிகள்

தெலக்ஸ் தலையைச் சாய்த்தபடி சிரித்தாள். ”எம்விஎம் செட்டியார் சார் அடுத்த படம். காரைக்குடி பக்கம் கல்லல்னு ஒரு ஊர். பக்கத்திலே செம்மண் பிரதேசத்துலே அவசர அவசரமா ஸ்டூடியோ டெவலப் பண்ணி அங்கே தான் ஷூட்டிங் எல்லாம்.. படிச்சிருப்பீங்களே பத்திரிகையிலே”.

இது என்னைக் கேட்டது. பின்னே இல்லையா? பாராயணமே பண்ணி இருக்கிறேன்.

”நாங்க கும்பகோணம் போறோம்” என்றேன் பெருமையோடு.

”அதான் கேட்டேன், அடுத்த தேன் நிலவான்னு.. ரத்னா அக்கா நீங்க ரெண்டு பேரும் அங்கே தான் முதன்முதலா சந்திச்சீங்கன்னு சொல்லியிருக்கா. டீ ஆபீசர் நீங்கதானே?”

ரத்னா முதலிரவில் பொடி டப்பி தேடியது தவிர எல்லாம் சொல்லியிருக்கிறாள் தெலக்ஸுக்கு என்று புரிந்தது. எப்போது சொன்னாள்?

ரயில் நின்றது. கம்பார்ட்மெண்ட் வாசலுக்கு நடந்து போய்ப் பார்த்தேன். செங்கல்பட்டு சந்திப்பு.

”உங்க ஃபேமிலி ஹைதராபாத்லே இருக்காங்களா?” என்று தயக்கத்தோடு கேட்டேன். தெலக்ஸ் தப்பாக நினைக்க மாட்டாள் தான். உங்களுக்கு எதுக்கு அந்தத் தகவல் எல்லாம் என்று வசமாக சிக்க வைக்க, வீட்டு சுகவாச ஞாயிற்றுக்கிழமை வரும். அப்போது ரத்னா கண்டித்தால் என்ன செய்வது?

நல்ல வேளை ரத்னாவும் சேர்ந்து கொண்டாள் –

”நானே கேட்கணும்னு இருந்தேன். உங்க டாடி, டாக்டர் மீசை நாயருக்கு ப்ரண்டுன்னு தெரியும்.. இவர் காலை உடச்சுக்கிட்டு கிடந்தபோது கூட்டி வந்தோமே.. உங்க பேமிலியும் இங்கே தான் இருக்கறதா நினைச்சேன்.. பந்துலம்மா மாமி தான் இல்லேன்னு சொன்னாங்க”

”கொய்ட் ரைட். பேமிலி ராஜமுந்திரியிலே இருக்காங்க. அம்மா கிடையாது. அப்பா, ரெண்டு தம்பிங்க, ஒரு தங்கச்சி இதான் குடும்பம்” என்றாள் தெலக்ஸ்.

”மாசத்துக்கு ஒரு தடவை போய்ட்டு வருவீங்களா இருக்கும்”.

”நோ, வருஷத்துக்கு ஒரு தடவை. போய் முசாபரி பங்களாவிலே தங்கி தகவல் அனுப்புவேன். அப்பாவோ ரெண்டு தம்பிகளும் சேர்ந்தோ பார்க்க வருவாங்க. ஒரே ஒரு தடவை தங்கச்சி வந்திருந்தா அவங்களோட. கொடுக்க வாங்கிப் போயிருந்த எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு, முசாபரி பங்களா சமையல்காரன் போட்ட டீயை குடிச்சுட்டு, உடம்பை பாத்துக்கோ, சீக்கிரம் இந்தப் பக்கமா வரப் பாரு என்று சொல்லிவிட்டுப் போவாங்க”.

தெலக்ஸ் கண் நிறைந்தது. ரத்னாவின் தோளில் சாய்ந்து அடக்க முடியாமல் அழத் தொடங்கினாள் அவள். ரத்னா ஆதரவாக அவள் கூந்தலைத் தடவிக் கொண்டிருந்தாள். இந்தப் பெண்கள் எப்படி நொடியில் அந்யோன்மாக சிநேகம் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கூப்பே கதவில் மெல்லத் தட்டும் ஒலி. புவனா அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார, டிக்கெட் பரிசோதகர் பெரிய நமஸ்காரமாக கரங்கள் குவித்து, தெலக்ஸ் புவனாவை வணங்கியபடி உள்ளே வந்தார்.

நான் டிக்கெட்களை எடுத்து நீட்ட, வேண்டாம் என்று ஒதுக்கி, என் பக்கத்தில் உட்கார்ந்து தெலக்ஸ் புவனாவைக் கண்குளிரக் கண்ட பாவத்தில் நெக்குருகி இருந்தார் அவர். தசாபதியிலே நீங்க என்று ஆரம்பிப்பார் என்று தோன்றியது.

”தசாபதியிலே நீங்க அருமையா ஆக்ட் கொடுத்திருந்தீங்க மேடம். வீட்டுலே சம்சாரத்துக்கும் உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு. என் மாமியார், எழுபது வயசு, பிடிவாதம் பிடிச்சு, ஓடியன்லே படம் ஆடுதாமே, போகணும்னு அது நச்சரிச்சுதுன்னு கூட்டிப் போனோம். ஒவ்வொரு சீனுக்கும் ஓன்னு சிரிச்சு.. எங்களுக்கு பயமாப் போயிடுச்சு.. ஏது சினிமா பார்த்துக்கிட்டே வைகுந்த பதவி வகிக்கப் போயிடுவாங்களோன்னு… குப்குப்குப்னு ரயில் பத்தி வியாசம் எழுதுவாரே ராமசந்தர்.. ரயில்வேகாரன்கிற முறையிலே ரொம்ப ரசிச்சேன் நானும். பெறகு ’க்ராஸ் த பிரிட்ஜ் வென் யூ கம் டு இட்’ அப்படின்னு சிரிச்சுக்கிட்டே எழுதி அனுப்புவீங்களே”.

”அதை படத்திலே காட்டலீங்களே” என்று சிரித்தாள் புவனா. இவர், படத்தில் வந்ததை விட அதிகம் காமெடி பண்ணுகிறார் என்று தோன்றியது. அதுவும், தான் காசு வாங்காமலேயே காமெடியன் ஆனதை அறியாமல்.

”வரட்டா என்ன, வந்திருந்தா நிச்சயம் அந்த சீன்லேயும் எல்லோரையும் கவர்ந்து கட்டிப் போட்டிருப்பீங்க” என்று சமத்காரமாகச் சொன்னார் அவர்.

“பாபு மோஷாய்” அடுத்த கூப்பேயில் இருந்து அழைத்த யாரோ அடுத்த வினாடி எங்கள் கூப்பே வாசலுக்கே வந்து விட்டார்கள். வங்காளிகள் என்று மூலக்கச்ச வேட்டி சொன்னது.

“டிடிஆர் மோஷய், எப்போ எங்க டிக்கட் பாத்து முடிப்பீங்க? பீ பாண்ட் டு ஸ்லீப்”. மனசே இல்லாமல் டிக்கட் பரிசோதகர் அடுத்த கூப்பேக்குப் போனார். போகும்போது தன் கையில் வைத்திருந்த டயரியில் தெலெக்ஸ் புவனாவின் ஆட்டோகிராப் வாங்கிப்போகவும் அவர் மறக்கவில்லை.

“வங்காளிகள் ரொம்ப அறிவு உள்ளவங்க.. இங்க்லீஷ் நல்லா, தமிழர் மாதிரியே எழுதுவாங்க. உச்சரிக்கத்தான் சிரமப்படுவாங்க” என்றாள் புவனா.

ராத்திரி பத்து மணிக்கு சினிமா தவிர பேச அவளிடம் நிறைய உண்டு என்று அறிய சந்தோஷமாக இருந்தது. ஒரு நிமிடம் மௌனம் அங்கே நிலவியது.

“கோஷும் வங்காளி தான். என் ஹஸ்பெண்ட்” என்றாள் புவனா வெளியே இருட்டை வெறித்து. ஹஸ்பெண்டா? இவளுக்கு கல்யாணம் ஆகி விட்டதா?

“ஆச்சரியப்படறீங்களா ரத்னாக்கா?” கேட்டபடி அவள் கொண்டு வந்திருந்த பிரப்பங்கூடையிலிருந்து தண்ணீர் கூஜாவை எடுத்தாள். நான் சுபாவமாக அவள் கையிலிருந்து கூஜாவை வாங்கித் திறந்து டம்ளரை உள்ளே இருந்து எடுத்தேன். ஏலம், சுக்கு வாசனையடிக்கும் குளிர்ந்த நீர் அது.

வண்டி நின்றது. அதற்குள் விழுப்புரம் வந்தாச்சா? புவனா கேட்டாள்.

அதெப்படி, விழுப்புரம் வர நடுராத்திரி ஆயிடுமே என்றாள் ரத்னா. நான் வாசலுக்குப் போய் வெளிக்கதவைத் திறந்து பார்த்துவிட்டு வந்து மருவத்தூர் என்றேன்.

”இப்போ தான் முதல் தடவையா இங்கே நிக்கறதை பார்க்கறேன்” என்றாள் புவனா.

”சார் வெளிக்கதவை தாழ்ப்பாள் போட்டே எப்பவும் வச்சுக்குங்க. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் பிரயாண நேரத்திலே. தமிழ் பேசற பூமி தான். வடக்கே சம்பல் பள்ளத்தாக்கு மாதிரி கொள்ளைக்காரன் வர்ற இடம் இல்லேதான். ஆனாலும் நம்ம ஆளுங்களே தமிழ்லே பேசிக்கிட்டு கொள்ளை அடிக்க வரலாம். ரயில்லே வருவாங்கன்னு சொல்லலே.. பொதுவா மேடம்”

அவர் திரும்ப தெலக்ஸ் புவனாவிடம் பேச எங்கே ஆரம்பிப்பது என்று புரியாமல் இருக்க நான் சரடு எடுத்துக் கொடுத்து விட்டேன் என்னை அறியாமலேயே.

”சரி, சார். ஒரு ஆப்ளிகேஷன்.. காலையிலே காரைக்குடி வந்ததும் எழுப்பி விடுறீங்களா” என்று புவனா டிக்கெட் பரிசோதகரைக் கேட்க பரவசமடைந்து அவர் ”கண்டிப்பாக”என்று சொல்லிப் பறந்து போனார்.

”சார் எனக்கும் ஒரு ஆப்ளிகேஷன்”. ரத்னா கூப்பிட உடனே வாயெல்லாம் சிரிப்பாகத் திரும்பினார். ”மேடம் நீங்களும் சினிமா லைன்லே இருக்கீங்களா?”

”இல்லே, என் வீட்டுக்காரர் விட மாட்டார்” என்று என்னைப் பார்த்துக் கை சுட்டிக் காட்டிச் சிரித்தாள் ரத்னா.

”சார், எங்களை கும்பகோணத்திலே எழுப்பி விட்டுடுங்க ப்ளீஸ்”.

“கும்பகோணமா, நடுவிலே கிராஸிங் இல்லாம இருந்தா காலை அஞ்சு மணிக்கு கும்பகோணம். இருந்தா ரயிலோட இஷ்டம் தான்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன