போட் மெயில் என்னும் மதறாஸ் – ராமேஸ்வரம் மெயில் 1945 : புதினம் ராமோஜியம் சில பகுதிகள்

உள்ளே உட்கார்ந்ததும் மெத்தை தைத்த இருக்கையில் படுத்துப் பார்த்தாள்.

”என்னங்க, படுக்க இடம் சரியா இல்லையே”.

நான் அவளை எழுந்து நிற்கச் சொல்லிவிட்டு, பின்னால் தாழ்ப்பாள் போட்டு மாட்டி இருந்த மெத்தைப் படுக்கையை மெல்ல இறக்கினேன். ஓஓஒ என்று குழந்தை போல் குதூகலித்து, சந்தோஷப்பட்டு, ஒரு நிமிடம் படுத்து எழுந்து, உயரத்தில் உட்கார்ந்து சிரித்தாள்.

ரயில் கிளம்பினதும் இந்த மெத்தையை இறக்கலாம் என்று அதை திரும்பப் பொருத்தி வைத்தேன்.

”நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமா இந்த இடம்? கூப்பேன்னு கதவுக்கு உள்ளே கதவா வேறே போட்டு வச்சிருக்கு. பிரமாதம்” என்று பாராட்டினாள்.

”எத்தனை பேர் இங்கே இருக்கலாம்?” விடாமல் கேட்டாள்.

”இப்போதைக்கு நாம் ரெண்டு பேர் மட்டும் தான் என்று கண்ணைச் சிமிட்டினேன். வேறே யாரும் வராம இருக்கட்டும். வந்தா இன்னும் ரெண்டு பேர் இருக்கலாம்”, என்றேன்.

”நாலு பேர், ரெண்டு படுக்கையா?”

“சே சே அப்படி இல்லை.. மேலே சீட் இருக்கே ரெண்டு பக்கமும், அது ரெண்டு படுக்கையாக கணக்கு..”

நான் மேலே போக ஏற வேண்டிய சின்ன ஏணியைக் காட்ட அவள் உற்சாகம் எல்லை கடந்தது. அந்த ஏணியில் ஏறி மேலே படுத்து என்னை பார்த்து பதிலுக்குக் கண்ணடித்தாள். போட்மெயில் புறப்பட்டது.

நான் கூபேயின் கதவை இழுத்து அடைத்து விட்டு ரத்னா பக்கத்தில் உட்கார்ந்தேன். ”அதுக்குள்ளே என்ன அவசரம், ரயில் எக்மோர் ஸ்டேஷனை விட்டு வெளியே கூட போயிருக்காது” என்று ஆட்சேபம் தெரிவித்து விலகி உட்கார்ந்தாள் ரத்னா.

”டிக்கெட் செக் பண்ண வருவாங்களே.. ”

“பர்ஸ்ட் க்ளாஸ் வேறே.. செக் பண்ணாம போயிடுமா என்ன?”

அதெல்லாம் வரும்போது வரட்டும் என்று படுக்கையை மலர்த்திப் போட்டேன். தண்ணீர் கூஜாவை பிரப்பங்கூடையில் தேடினேன். காணோம்.

”எடுத்து வைக்கவில்லையா?” ரத்னாவைக் கேட்டேன்.

”நீங்க கொண்டு வர்ரதா சொன்னீங்களே ஆட்டோ ரிக்ஷாவிலே ஏறும்போது?”.

யாரிடமோ கொடுத்தேன் கையிலிருந்த கூஜாவை ஆட்டோ ஏறும்போது. ஆமா, லக்கேஜை இருக்கைக்கு பின்னால் வைத்து விட்டு வாங்கத் திட்டம். வாங்க மறந்து வண்டி போய்விட்டது. யாரிடம்? விலாசினி தான்.

ரத்னாவுக்கு பிரியாவிடை மூன்று நாட்களுக்குத் தர அவளோடு அன்னியோன்யமாகப் பேசிக்கொண்டிருந்த நேரம் கூஜாவைக் கேட்க, கையில் திருப்பித் தர இரு தரப்பிலும் மறந்து விட்டிருக்கிறது.

கூஜா பத்திரமாகத்தானிருக்கும் என்றேன் ரத்னாவிடம்.

”என்ன பிரயோஜனம்? தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன பண்ண?” ரத்னா கேட்க, ”நாம் பர்ஸ்ட் கிளாஸில் இருக்கறதாலே கேட்டா, உடனே விழுந்தடித்துப் போய் தண்ணிகொண்டு வருவாங்க, வேணும்னா பார்” என்று எழுந்தேன்.

வண்டி நின்றிருந்தது. மாம்பலம். கூப்பே கதவு தட்டப்பட்டது. திறந்தேன்.

“வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ் ராமோஜி சார்”, தெலக்ஸ் புவனா கூப்பே உள்ளே நுழைந்தாள்.

எல்லா தேவதைகளும், டீக்காக உடுத்திய அஸ்து தேவதைகள், சுடக்கு தேவதைகள் உட்பட, கட்டாயமான மெஜந்தா வண்ண உடுப்பணிந்து மிதந்து கொண்டிருந்ததாகவும், சும்மா இருக்காமல் ரோஜாப்பூக்களை வழியெங்கும் உதிர்த்துக் கொண்டிருந்ததாகவும் கற்பனை செய்ய இதமாக இருந்தது.

”ரத்னாக்கா” என்று கட்டிப்பிடித்தபடி இருக்கையில் இருவராக வீற்றிருக்க நான் எதிர் சீட்டுக்கு நகர்ந்தேன். பெட்டியை உள்ளே வைத்துவிட்டு தெலக்ஸ் கூட வந்த அவளுடைய ஊழியர்களின் சின்னக் கூட்டம் புறப்பட்டுப் போக ரயில் நகர்ந்தது.

”ரத்னாக்கா எங்கே ஜோடியா ரெண்டு பேரும் கூப்பேயிலே? செகண்ட் ஹனிமூனா? தேன் நிலவு நேரத்திலே பூஜை வேளை கரடி மாதிரி நான் வந்துட்டேனா?”

புவனா கேட்க, இல்லவே இல்லை என்று மறுத்து, தெலக்ஸோடு கை கோர்த்துக் கொண்டு பிரியம் காட்டினாள் ரத்னா. பெண்ணாகப் பிறக்கக் கொடுத்து வைக்கவேண்டும் என்று தோன்றிய அபூர்வமான நிமிடங்களில் சில இவை.

”எங்கே கிளம்பிட்டீங்க புவி?” என்று கேட்டாள் ரத்னா. புவி என்று புவனா சொல்லியும் அழைக்க எனக்குத்தான் வாய்க்கவில்லை. ரத்னா கூப்பிடட்டும்.

”நானா, திடீர்னு போட்மெயில்லே போகணும்னு ஆசையா இருந்துச்சு..”

”இதானே வேணாங்கறது..” ரத்னா அவள் முதுகில் ஓங்கித் தட்டினாள். எப்படி இந்தப் பெண்களால் இப்படி அந்நியோன்யமாக இழைய முடிகிறது.

”ராமேஸ்வரம் போறாங்களா இருக்கும்” என்றேன் நான். ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்று பெண்கள் சாம்ராஜ்யத்தில் குரல் ஒலிக்க முயன்றேன்.

”காசி, ராமேஸ்வரம் போகிற வயசா இது?” ரத்னா தெலக்ஸின் தாடையை கையில் ஏந்தி வெளிச்சத்தில் காட்ட, ஆட்டுக்குட்டி போல தேமேன்னு இருந்தாள் அந்த அழகி. பாராட்டை வாய்க்குள் சொல்லிக் கொண்டேன்.

“ஷூட்டிங் தான், வேறே என்ன”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன