வெள்ளி ராத்திரி எட்டரைக்கு எழும்பூரில் போட்மெயில் ஏற ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிப் போனோம். கேளப்பனின் நண்பர் மாதவன் அவர் கூப்பிட்டனுப்ப வந்திருந்தார். கொச்சி அருகே லந்தன் பத்தேரி தீவுவாசியாம்.
”அங்கே எப்பவும் தண்ணிக்கு நடுவே இருந்துட்டு, இங்கே கோடையிலே தண்ணீர் இல்லாம, செப்டம்பர்லே ஒரே கொட்டாக மழை கொட்டித் தீர்க்க பார்த்துக்கிட்டிருக்கேன்” என்றார். அவர் சொல்லும்போதே சட்டச்சட சட்டச்சட என்று இடி இடித்து, மழை பொழிய ஆரம்பித்தது.
ராத்திரி எட்டரைக்குத்தானே போட்மெயில்? சாப்பிட்டே போயிடலாம் என்று ரவா உப்புமா செய்ய முற்பட்ட ரத்னாவை வேண்டாம் என்று தடுத்தேன்.
எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் விஜிடேரியன் போஜனசாலை என்ற கடமுட பெயரில் அங்கே நடக்கும் சாப்பாட்டுக் கடையில் டிபன் சாப்பிட்டது பற்றி ஆபீஸில் யாராவது பேசிப்பேசி, போயே ஆக வேண்டிய புண்ணியத் திருத்தலங்களில் ஒன்றாக ஆகி விட்டது அந்த போஜனசாலை. ”ஸ்டேஷன்லே சாப்பிட்டுட்டுப் போகலாம்” என்றேன் ரத்னாவிடம்.
”மெனுகார்டை படித்து முடிக்கவே பத்து நிமிஷம் ஆகுதாம்”.
“அவ்வளவு பொடி எழுத்திலேயா அடிச்சிருக்காங்க?” கேட்டபடி இடுப்பில் செருகி இருந்த சுருக்குப் பைக்குள் வைத்த மட்டையிலிருந்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து முகர்ந்தபடி கேட்டாள் அவள். அதிர்ஷ்டம் செய்த மட்டை.
பரபரப்பு குறைவான ரயில்வே ஸ்டேஷன். எவாகுவேஷனில் செங்கல்பட்டுக்கும், ஏன் திருச்சி, தஞ்சாவூருக்குமெல்லாம் குடி மாறியவர்கள் திரும்பி வந்திருந்தாலும், ரயில் பயணத்தைக் குறைத்துக் கொள்வீர் என்று சர்க்கார் விளம்பரம் செய்து செய்து, ஊருக்குப் போகாத ஜனத்தொகை அதிகமானது. போஜனசாலையிலும் சுமாரான கூட்டம் தான்.
உயரமும், அகலமும் கூடிய பெரிய மண்டபம் போல, பிரம்மாண்டமாகத் தெரிந்த இடம் அது. பக்கிங்ஹாம் அரண்மனையில் வளைய வரும் சிப்பந்திகள் போல் மிடுக்கான யூனிபார்ம் அணிந்த சர்வர்கள் தேவையில்லாத பரபரப்பை உண்டாக்கும் வண்ணம் குறுக்கும் நெடுக்கும் ஏதோ அவசரமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள்.
”மெனு கார்ட் ப்ளீஸ்”.
நான் சௌகரியமான இரட்டை இருக்கையில் ரத்னாவோடு இருந்தபடி மிடுக்காகக் கேட்டேன்.
”ரவா உப்புமா இருக்கு, சார்” என்று நாளை உலகம் முடியப் போகிறது என்று அறிவிக்கும் தேவதூதனாக அறிவித்தார் சர்வர். ரத்னா முகத்தில் தெரிந்த சிரிப்புக்கு எனக்குப் பொருள் தெரியும். விடாது துரத்தும் ரவா உப்புமாவை வீட்டிலேயே சுடச்சுட சாப்பிட்டு வந்திருக்கலாம் அல்லவா?
போகட்டும், இங்கே ரயில்வே ரெஸ்டாரண்டில் ஸ்வீட் நன்றாக இருக்கும் என்றும் எனக்குக் காதில் விழுந்தது. என்ன ஸ்வீட் இருக்கு என்று அடுத்துக் கேட்க, எவாகுவேஷனுக்கு முன்னால் அதுவும் ரொம்ப முன்னால் போட்டு விளம்பரத்துக்கு கண்ணாடி ஷெல்பில் வைத்த இனிப்புகளைக் காட்டினார்.
”உப்புமா கூட தொட்டுக்க ஏதும் இல்லைதானே?”
”இல்லாமல் என்ன, சட்னி, சாம்பார், பொரிச்ச அப்பளம்”.
அப்பளம் இங்கே என்ன செய்கிறது என்று புரியாமல் குழம்ப, ”அது ராத்திரி சாதம் வடித்து, சாம்பார், ரசம், தயிரோடு சாப்பாடு போட்ட பழைய காலத்து மெயின் ஐட்டம். இப்போது உப்புமாவுக்கு உறவாகி இருக்கிறது” என்றார்.
கேட்டபடி ஐந்து நிமிடத்தில் கொண்டு வந்தும் வைத்தார். சுமார் ரகம்.
ரயிலில் கூட்டம் வந்து சேர ஆரம்பித்திருக்கும் மூன்றாம் வகுப்புப் பெட்டி ஒன்றின் முன் ரத்னா நின்றாள்.
“இங்கே கொஞ்சம் இடம் இருக்குங்க, ஏறிக்கலாம்”.
நான் வேண்டாம் என்று தலையசைத்து பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடையை எட்டிப் போட்டேன்.
இரண்டாம் வகுப்பு கம்பார்ட்மெண்ட்கள் இரண்டு சுமார் சுத்தமும், ஒன்றிரண்டு பேர் மாத்திரம் உட்கார்ந்திருக்க மங்கிய பல்ப் வெளிச்சமுமாக அடுத்து நின்றன.
போட்மெயில் வாங்க என்று ஒரு தடவை விசிலடிக்க, ரத்னா ”ஏறுங்க. வண்டி கிளம்பப் போகுது” என்று அந்த விசிலை அவசரமாக மொழிபெயர்த்தாள்.
”புறப்பட இன்னும் பத்து நிமிஷம் இருக்கு” என்று அவளை தோளில் தட்டி நடந்தபடி முன்னால் போகச் சொன்னேன்.
“எங்கே இன்னும் போக, தாம்பரமே வந்துடும் நடந்து நடந்து” என்றபடி அவள் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட் பக்கம் நின்று, “பர்ஸ்ட் க்ளாஸ்தான் இனிமேல் இருக்கு, எங்கே போறது இப்போ” என்று குற்றம் சாட்டினாள்.
”அங்கேயே போகலாம் ஏறிக்க” என்றபடி சட்டைப்பையில் இருந்து இரண்டு முதல் வகுப்பு டிக்கட்களை எடுத்தேன். நேற்றே பக்கத்து வீட்டு ஸ்டேஷன் மாஸ்டர் ரிசர்வ் செய்து கொடுத்திருந்தார். ரத்னாவுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று சொல்லாமல் வைத்திருந்தது முடிவு பெறும் நிமிடம் இது.
கம்பார்ட்மெண்ட் ஜன்னல் பக்கம் ஒட்டியிருக்கற பிரயாணிகள் லிஸ்டைப் படிம்மா என்றேன்.
“பத்மநாப ராவ் ராமோஜி ராவ், ரத்னா ராமோஜி ராவ் கூப்பே ஏ”.
அவள் குரல் கிரீச்சிட்டது ஆச்சரியத்தாலும் மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்காலும் என்பதை ரசித்தேன். என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் ரத்னா. சின்ன சின்ன சந்தோஷங்கள் இவளை எனக்கு இன்னும் நெருக்கமாக்குகின்றன