நிறைவுற இருக்கும் என் அடுத்த நாவல் ‘ராமோஜியம்’ – ஒரு சிறு பகுதி – திருக்கருகாவூருக்கு- ஆண்டு1945

”தம்பி ஒரு உதவி செய்யணும்” என்றார் காளிங்க ரத்தினம். சொல்லுங்க சார்.

”திருக்கருகாவூர் நீங்க போகச் சொல்ல, இந்தக் காணிக்கையையும் கருக்காத்த நாயகி அம்மா உண்டியல்லே சேர்த்துடுங்க..”

சட்டைப் பையில் ஒரு பழைய பர்ஸில் இருந்து நூறு ரூபாய் இரண்டை எடுத்துக் கொடுத்தார்.இரண்டாக மடித்தே யுகக் கணக்காக சட்டையில் இருந்திருக்க வேண்டும் அந்த நோட்டுகள்.

”அவசியம் சார், போட்டுட்டு வந்து.. வந்து எப்படி உங்ககிட்டே செஞ்சாச்சுன்னு சொல்றது?”

”நீங்க புவிப் பொண்ணு கிட்டே சொல்லி விடுங்க.. போதும்.. அது எதையும் மறக்காது.. அநேகமா தினம் ஏதாவது செட்டுலே சந்திச்சுக்கறோம்.. உங்களுக்கு புவி எப்படி..?”. சொன்னேன்

”ஓ சரி, குடும்ப சிநேகிதமா? அது ரொம்ப ஜாக்கிரதையா தான் சிநேகிதம் பாத்துப்பாத்து பண்ணிக்கும்..”

அவர் பக்கத்தில் இருந்த சந்திரகாந்தத்தைப் பார்த்தார் – ”பூஜை முடிஞ்சுடுத்துன்னு ஐயர் சொன்னாரா? பசிக்குது. சாப்பிட்டுட்டு வீட்டுக்கு நடக்கணும்..”

”ஏன் சார், கார் எடுத்து வரலியா?” நான் விசாரித்தேன்.

”வாங்கவே இல்லே.. எதுக்கு? ஷூட்டிங் கூட்டிப்போக டாக்சி அனுப்பிடறாங்க. வேறே எங்கேயும் பக்கத்துலேன்னா நடந்து போயிடறேன்.. கொஞ்சம் தொலைவுன்னா பஸ், எலக்ட்ரிக் ட்ரெயின் இருக்கவே இருக்கு.. காரைக்குடி, கல்லல்னு ஷூட்டிங்க் போக, செட்டியாரே ரயில்லே டிக்கெட் போட்டு கூட்டிப் போய்க் கொண்டாந்து விடறார்.. ஆக, கார் அனாவசியம் தானே?”

அதே என்றேன் பூஜை மேடையைப் பார்த்தபடி.

தெலக்ஸ், ரத்னாவிடம் பேசி, அவளை கூட்டிக்கொண்டு பூஜை மேடைக்குப் போக ரத்னா பூஜை பண்ண உட்கார்ந்திருந்தாள்

அரை மணி நேரத்தில் பூஜை முடிந்து பிரசாதம். எல்லா ஐட்டமும் வரலட்சுமிக்கு படைக்கப்பட்டதால் முழுக்க முழுக்க பிரசாதம் தான்.

ரத்னாவும் தெலக்ஸும் சந்திரகாந்தமும் பரிமாற, அடுத்த ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து ராத்திரி பத்து மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.

பேச்சு சுவாரசியத்தில் கொஞ்சம் குரல் உயர்த்தி டி.டி. ராமசந்தர் பேசினார்-

“ஒரு ரெகுலர் படம் எடுத்தா, யுத்த ஆதரவு பிரசாரமா ஒண்ணும் எடுக்கணும்னு எழுதாத கண்டிஷன்.. சேலம் சுந்தரம் சார் தான் கச்சிதமா ரெண்டும் பொருந்திவர ரங்கூன் ராணி எடுத்து ஹிட் கொடுத்தார் ”

அருகே இருந்தவரும் சினிமா நடிகர் தான். நாரதராகவே ஐம்பது படத்தில் தம்புராவோடு வந்து பாடிவிட்டுக் கலகம் செய்து போயிருக்கிறார். பெயர்… நினைவு வந்தது. மகாலிங்கம். நாரதர் மாலி. நல்ல பாடகர். என் புருஷன் படத்தில் ஒரு சேஞ்சுக்க்காக பேண்ட் ஷர்ட் போட்டு வரும் சமூகப்பட ஹீரோ அவர் தான் என்று படித்திருக்கிறேன். கோட், சூட் போட்ட நாரதரைப் பார்த்த மாதிரி இருந்தது என்று என் புருஷன் பட விமர்சனம் ஒரு பத்திரிகையில் படித்ததும் நினைவு வந்தது. நாரதர் மாலி டிடி ராமசந்தரிடம் சொன்னார் –

“எம் வி எம் செட்டியார் காரைக்குடிக்கு ஸ்டூடியோவை மாத்தி என் புருஷன் எடுத்திருக்கார். கதையை எட்டு தடவை எடிட் பண்ணினார்.. நீளம் பத்தாயிரம் அடிக்கு உள்ளே இருக்கணுமே.. நல்லா வந்திருக்கு”.

சக்ரபாணி பக்கத்து நாற்காலிக்கு இடம் மாறி உட்கார்ந்து சம்பாஷணையில் கலந்து கொண்டார்.

“வரமா எப்படி போகும் மாலி? நீ சிண்டு முடிய நாராயணா நாராயணா சொல்லலியே? சும்மாகாச்சுக்கும் காலை வாரினேன் கண்டுக்காதே.. நீ சொல்றது வாஸ்தவம் தான்.. படம் எடுக்கறது பல விதமா கஷ்டத்தோட. அதை ஓட்ட தியேட்டர் தேடறது அடுத்த கஷ்டம்.. எவாகுவேஷன்னு மூணு வருஷம் முன்பு அடைச்சதுலே சினிமா தியேட்டர் எல்லாம் நஷ்டத்துலே ஓடிச்சு. இன்னும் முழுக்க மீண்டு வரல்லே.. அந்த நேரத்திலே நான் சம்பளத்தை குறைச்சுக்கிட்டேன். வேறே வழி? கொஞ்சமாவது லாபம் வராம எப்படி ப்ரொட்யூசர் படம் எடுப்பார்? ஹாலிவுட்லே எடுத்து வர்ற படத்தைத்தான் ரிலீஸ் பண்ணி அக்கடான்னு இருக்கணும் இனிமேலே” என்று என்னையும் பார்த்துச் சொன்னார் சக்ரபாணி. ராமச்சந்தர் படபடப்பாகப் பேசினார் –

”போன மாசம் ஜப்பான் ஹிரோஷிமாவிலேயும் நாகசாகியிலேயும் அணுகுண்டு போட்டு லட்சக்கணக்கான அப்பாவி ஜனங்களை அமெரிக்கா கொன்னு குவிச்ச அப்புறம் ஹாலிவுட்னாலே கோபம் வருது. ஜப்பான்காரங்க யுத்தத்திலே ரொம்ப அநீதியா நடந்துக்கிட்டாங்கதான். அதுக்காக இப்படி பூச்சி அடிக்கற மாதிரி ஒரு இனத்தையே அழிக்கற நாட்டு சினிமா எதுக்கு? அவங்க கலையும் கலாசாரமும் தான் எதுக்கு.. சீன்னு வர்றது”

நாரதர் பேச வேண்டிய தருணம் என்று உணர்ந்து மறுபடி தொடங்கினார் –

”சினிமா எடுக்கறது கஷ்டம், ஓட்டறது பிரச்சனை..அது கூட பரவாயில்லே.. ஓடற படத்தை பார்த்துட்டு எடுத்தேன் கவிழ்த்தேன்னு பத்திரிகை விமர்சனம் பண்றாங்களே.. என்ன சொல்ல.. ஒரு கச்சேரி ரேடியோவிலே கேட்டுட்டு நல்லா இல்லாட்டாலும் ’ஒரு பாட்டு அற்புதமாக அமிர்தவர்ஷிணியிலே வந்தது.. தோடியை ஒரு கை பார்த்தார், இவரிடம் உள்ள அதிநாஸுக்குடன் சாஹித்யத்தையும் சற்றுத் தெளிவாக அடுத்த கச்சேரியிலே வழங்குவார் என்று எதிர்பார்க்கறோம்’.. இப்படி பிரியத்தோட எழுதறவங்க, இத்தனை கலைஞர்களும் தொழிலாளர்களும் உயிரைக் கொடுத்து உழைச்சு சினிமா எடுத்து வெளியிட்டா பத்திரிகையிலே எழுதறது எப்படி? ‘இந்தப் படத்துலே நல்லா நடிச்சது உரல், உலக்கை, விசிறி, பனைமரம்’. நகைச்சுவையாம். இவங்க எழுதற கதையைப் பற்றி, இந்தக் கதையில் சிறப்பானது கடைசியில் வரும் முற்றுப்புள்ளி ஃபுல்ஸ்டாப் .. எட்டு பக்கம் படித்த பிறகு கடைசியாக வாக்கியம் முடியற இடம் அது’ன்னு என்று நாம் சொன்னா எப்படி இருக்கும்? ”

வீட்டுக்குப் போக டாக்ஸி எடுத்தேன். பத்து ரூபாய் ஆயிற்று. என் அரைநாள் சம்பளம். அதற்குப் பார்த்தால் ட்ராமில், எலக்ட்ரிக் ரயிலில் போக சிரமம். அதை விட பெரிசு, ராத்திரி பத்து மணிக்கு நகைநட்டு போட்ட லட்சணமான பெண்ணை ஆளரவம் ஓய்ந்த தெருவில் கூட்டிப் போவதில் இருக்கும் கஷ்டம் .. யுத்தகால ஜப்பான் குண்டுவீச்சு பயத்தை விட அதிகமும் அபாய சாத்தியமுமானது இது.

அடுத்து வந்த சனிக்கிழமை ஆபீசிலோ வீட்டிலோ விசேஷம் ஒன்றும் இல்லை. விரைவாக வந்த ஒரு ஞாயிறு புதுச் செய்தியோடு பிறந்து வந்தது. செப்டம்பர் ரெண்டாந்தேதி ஆன அன்று இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

எல்லோரும் ஓய்வு எடுக்கும் அமைதியான ஞாயிறான அன்று மனித குலத்தையே சிதைத்து சின்னாபின்னமாக்கிய, ஆறு வருஷம் நீண்ட ஒரு மகாயுத்தம் முடிவுக்கு வந்து, பூமி இனிச் சமாதானமாகச் சுவடு வைத்து முன்னால் போக வழிவகை செய்யப்பட்டது.

ஆகஸ்டில் கொடூரமான ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்கு அப்புறம் போரே வேண்டாம் என்று பிரார்த்தித்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. இதில் தேசம், பாஷை, மதம் என்று வேறுபாடு இல்லை.

ஞாயிற்றுக்கிழமை வீதி சுற்றி வரும் பஜனையில் புது ஐட்டமாக ’ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்று பாரதியார் பாட்டை விலாசினி டைப்பிஸ்ட் அடி எடுத்துத் தர ரத்னா இரைந்து பாடினாள்.

யுத்தம் ஓய்ந்தாலும் சர்க்கார் அதே பிரிட்டீஷ் சர்க்கார் தான். பாரதி பாட்டு தடைசெய்யப்பட்டது. சர்க்கார் உத்யோகஸ்தனான நான் ஒதுங்கினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன