முத்தம்மா டீச்சர் இன்னும் பார்த்து முடிக்காத கேவா கலர்ப் படம் – இனிய கானங்கள்

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்                  இரா.முருகன்

 

அத்தியாயம் 4

 

எல்லோருக்கும் நாற்காலி டிக்கெட்.

 

அலமேலம்மாக் கிழவி கூட கதவோரம் நாற்காலியைக் கோணலாக இழுத்துப் போட்டுக் கொண்டு வாயில் புகையிலைக் கட்டையைக் குதப்பியபடி கெத்தாக உட்கார்ந்திருந்தாள்.

 

ஒரு பெரிய பொட்டலம் நிறைய மட்டன் கவாப்பும், மீன் கவாப்பும் வாங்கி வந்து, படம் ஆரம்பிக்க முன்னால் எல்லோருக்கும் கொடுத்தார் மாப்பிள்ளை.

 

‘கொடுங்க..கொடுங்க.. நாளைக்கு ராசாத்தி கஜானாவைப் பிடிச்ச பிறகு சுக்கு மல்லி காப்பி கூடக் கெடைக்காது..’

 

போதும்பொண்ணு உரக்கச் சொல்ல, வழக்கமான சிரிப்புச் சத்தம்.

 

இந்த நாலு நாளில் சிரித்துச் சிரித்து முத்தம்மாவுக்கு, சிநேகிதிகளில் யாராவது பேச ஆரம்பித்தாலும், தானே சிரிப்பு வந்து விடுகிறது.

 

‘தெரசாளும் வந்திருந்தா நல்லா இருக்கும்..’

 

அழகுமீனா சொன்னாள்.

 

தெரசா வரவில்லை.

 

‘கல்யாணம் ஆகப் போற பொண்ணு.. கண்ட சினிமாவுக்கெல்லாம் போகக் கூடாது..’

 

வீட்டில் சொல்லி விட்டார்களாம்..

 

‘நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் கூட்டிப் போறேன்.. பத்துக் கட்டளை மாதிரி நல்ல படம் வரும்…’

 

அவளைக் கட்டிக்கொள்ளப் போகிற மரியஜெகம் சொல்லியிருக்கிறானாம்.

 

பத்துக் கட்டளையும் கேவா கலர்ப்படமா, அதில் பாட்டு உண்டா என்று தெரசாளுக்குத் தெரியவில்லை.

 

‘ரெண்டு வருஷம் முந்தி இதே படம் வந்தது. நாங்க எல்லோரும் இப்படிக் கூட்டமா வந்தோம்..’

 

பின்னால் இருந்து ராசாத்தி குரல்.

 

கவாப்புக் கடித்தபடி முத்தம்மா பின்னால் பார்க்க, பின் வரிசையில் மாப்பிள்ளை தோளில் தலையைச் சாய்த்தபடி ராசாத்தி சொல்லிக் கொண்டிருந்தது மெலிசாகக் காதில் விழுந்தது.

 

முத்தம்மாவுக்கு நேர் பின்னால் கட்டை மீசையைத் தடவிக் கொண்டு, அவளையே பார்க்கிற மாப்பிள்ளை.

 

மதியம் பாத்திரம் அடுக்கும்போது, நடுவில் ஒரு நிமிஷம் தோட்டத்துக்கு ஒண்ணுக்கிருக்கப் போய் விட்டு வருகிற நேரத்தில், கழிப்பறை வாசலில் முத்தம்மாவின் உதட்டைக் கவ்விச் சிரித்துப் போன கைகாரர்.

 

யாராவது பார்த்திருந்தால்… தைரியம் தான்.. தப்பில்லையா.. சீ…

 

விளக்கு அணைத்து மணியடிக்கப் படம் போட்டானது.

 

கடற்கரை. மோட்டார் பைக் சத்தம்.

 

முத்தம்மாவுக்குக் குறுகுறுவென்று வந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

 

‘பாட்டொன்று பாடலாமா .. பக்கம் வந்து பேசலாமா..’

 

தொப்பை தள்ளிய கதாநாயகன் கண்ணடித்தபடி ஆடிக் கொண்டு வர, முத்தம்மாவுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.

 

கதாநாயகிக்கும் பெரிய உதடுகள். முத்தம்மா போல.

 

ஒரு பெரிய பூவைக் காட்டுகிறார்கள். அப்புறம் கதாநாயகனின் உதடுகள் திரை முழுக்க விரிகின்றன.

 

பெண்ணைப் போல உதட்டுச் சாயம் தீற்றிய கதாநாயகன். கடித்துத் திங்கலாம் போல அழகானவன். கடித்தால் பவுடர் மணக்கும். மாப்பிள்ளை வேறு மாதிரி அழகு. கடித்தால் கவாப்பு மணக்கும்.

 

கதாநாயகன், படகில் சாய்ந்து நின்று கண் இமையைப் படபடவென்று விரிக்கும் கதாநாயகியின் உள்ளங்காலை வருடுகிறான். முத்தம்மாவின் மனம் வாலண்டினா தெரஷ்கோவா மாதிரி தெரிந்த ஆகாசத்தை எல்லாம் கடந்து பறக்கிறது.

 

பின்னாலிருந்து மாப்பிள்ளையின் கால் விரல்கள் முத்தம்மாவின் உள்ளங்காலில் வருடி விஷமம் செய்கின்றன.

 

துள்ளிக் குதித்து ஓடிப் படகைச் சுற்றி வருகிற கதாநாயகி மார்பு விம்ம நிற்கிறாள். காலேஜ் படிக்கிறவள். மாப்பிள்ளைக்கு ரொம்பப் பிடிக்கும்.

 

உள்ளங்கால் சில்லென்று எரிகிறது.

 

கதாநாயகியின் இடுப்பை வளைத்துப் பிடித்துக் குனிகிற கதாநாயகன்.

 

‘வண்டாக நானும் தேன் உண்ணலாமா?’

 

பகலில் தோட்டத்து மூலையில் சுருட்டு வாடையோடு தேன் உண்ட உதடுகள்..

 

கடைவாயில் தெற்றுப்பல் தெரிந்திருக்குமா…

 

சிநேகிதிக்குத் துரோகம் இல்லையா…

 

முத்தம்மா கொடுத்தால் தானே.. வாங்கினதெல்லாம் அதில் சேர்த்தியா..

 

காலை நகர்த்த, ஏனோ மனசு நகர மாட்டேன் என்கிறது.

 

கதவுப் பக்கம் சின்னதாக ஒரு விளக்கு வெளிச்சம். டிக்கட் செக் பண்ண வருகிறவன்.

 

டார்ச் வெளிச்சம் தொடை தொடையாக நகர்கிறது.

 

முத்தம்மா பக்கம் யாரோ குனிகிறார்கள்.

 

சொல்லி விடலாமா?

 

பின்னாலே உக்கார்ந்து என் கால்லே உரசற ஆளு கிட்டே டிக்கெட் கேட்டுப் பாருங்க..

 

காதருகில் கிசுகிசுப்பு சத்தம்.

 

‘படம் பார்த்தது போதும்.. கிளம்பு..’

 

முதல் வீட்டு சடகோப ராமானுஜ மாமா குரல்.

 

முத்தம்மா புரியாமல் இருட்டுக்குள் பார்க்கிறாள். காலைக் கவ்விப் பிடித்தபடி மாப்பிள்ளையின் கால்கள்.

 

மனசேயில்லாமல் விலக்குகிறாள் முத்தம்மா.

 

திரையில் பிருஷ்டங்கள் ஆடிக் குலுங்க இடுப்பை ஒயிலாக ஒடித்து ஒடித்து நடந்து போகும் கதாநாயகி. தூரத்தில் ரயில் விடுகிறது போல் ஒருத்தி கையை இன்னொருத்தி பிடித்தபடி ஒற்றை வரிசையாக ஓடுகிற தோழிகள்..

 

அதில் ஒரு தோழியாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்..

 

‘எந்திரு முத்தம்மா.. சொல்றேன் இல்லே..’

 

சடகோப மாமா அவசரப்படுதுகிறார். எழுந்திருக்கிறாள்.

 

போகாதே போகாதே என்று சைகை காட்டியபடி கதாநாயகன் காற்றில் பூப்போட்ட கைக்குட்டையைப் பறக்க விடுகிறான்.

 

திரும்பத் திரும்பப் பார்த்தபடி முத்தம்மா வெளியே வந்தாள்.

 

இருட்டு. தூறிக் கொண்டிருந்தது.

 

‘காரியர்லே உக்காரு..’

 

அப்புறம் ஒன்றும் பேசாமல் சைக்கிள் மிதிக்கிற சடகோப மாமா..

 

முத்தம்மாவுக்கு உள்ளங்காலில் மாப்பிள்ளை கால் நகம் பட்ட இடம் எரிந்தது. சைக்கிள் காரியரில் உட்கார்ந்தபடி காலைத் தடவிப் பார்க்க முடியாது.

 

கதாநாயகி மோட்டார் பைக் பின்னால் உட்கார்ந்து போவாளா?

 

ஏரிக்கரையில் சைக்கிள் ஏறியபோது டெண்ட் கொட்டகையிலிருந்து கேவி அழுகிற சத்தம் கேட்டது. பாவம், கதாநாயகிக்கு என்னமோ..

 

முத்தம்மா வீட்டு வாசலில் சின்னக் கூட்டம்.

 

முத்தம்மாவின் நாயனா உடம்பை வீட்டுக் கூடத்தில் கிடத்தி இருந்தது. மூக்கில் பஞ்சு. பக்கத்தில் ஊதுவத்தி சுருள் சுருளாகப் புகைந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன