என் நாவல்களில் சென்னை – அரசூர் வம்சம், விஸ்வரூபம், ராமோஜியம் சில சிறு பகுதிகள்

ஆகஸ்ட் 22 1639

மதராஸ் என்ற சென்னை அமைக்கப்பட்ட தினம். இன்றைக்கு அந்தப் பெரும் நிகழ்வின் ஆண்டு நிறைவு. சென்னைக்கு என் வாழ்த்துகள்.

என் படைப்புகளில் நான் விரிவாகச் சிறப்பித்து எழுதிக் கொண்டாடும் என் பிரியத்துக்கு உரிய பெருநிலப் பரப்பு மதறாஸ். முக்கியமாக நாவல்களில் கதாபாத்திரமே ஆகியிருப்பது வெவ்வேறு காலகட்டத்தில் சென்னை மாநகர்.

அரசூர் வம்சம் 1850-களின் சென்னை

விஸ்வரூபம் நாவலில் – 1915 முதல் 1945 வரையான சென்னை

அச்சுதம் கேசவம் 1960-களின் சென்னை

வாழ்ந்து போதீரே 1950, 1960-களின் சென்னை

மூன்று விரல் 1990-களின் சென்னை

1975 – 1970களின் சென்னை

ராமோஜியம் – 1930,1940களின் சென்னை

இது தவிர ஆழ்வார், சிலிக்கன் வாசல், வெறுங்காவல், மீண்டும் கல்யாணி போன்ற பல சிறுகதைகளும், முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் போன்ற குறுநாவல்களும் சென்னையைக் கதை நிகழும் களமாகக் கொண்டவை.

சென்னையைப் பற்றி இன்னும் நிறைய எழுத வேண்டும். எழுதுவேன்.

சென்னை பற்றி நான் எழுதிய சில சிறு நாவல் பகுதிகளை இன்று இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களுக்கு என் அன்பான சென்னை தினம் 2021 வாழ்த்துகள்
——————————————————————–

ராமோஜியம் நாவல் – 1943 சென்னை

இந்தக் காரை யாரெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்று பிள்ளை டிரைவரிடம் விசாரித்தேன்.

கவர்னர் ஆர்தர் ஹோப் துரை எப்பவாவது குஷி கிளம்பினால் காரை ஓட்டிக் கொண்டு ரேஸ் கிளப் போவார் என்று தெரிந்தது. குதிரை ரேஸில் பைத்தியம் பிடித்தது போல் ஈடுபாடு உள்ள மனுஷர் அவர்.

அவரைத் தவிர இன்னும் இரண்டு துரைகளின் பெயர்களைச் சொன்னார். அதில் ஒருத்தர் எவாகுவேஷன் நேரத்தில் மெட்றாஸ் மிருகக் காட்சி சாலைக்கு யமனாகப் போனவர். மிருகங்கள் எல்லாம் எவாக்குவேஷன் நேரத்தில் ஊருக்குள் வந்து வழியோடு போகிற யாரையும் அடித்துத் தின்று விடும் என்ற பயத்தால் அவருக்கு அரசாங்க அனுமதி கொடுத்து ராத்திரியோடு ராத்திரியாக வேலையை முடித்து வர அனுப்பியிருந்தார்கள்.

ரிப்பன் கட்டடத்துக்கு பின்னால் மிருகக் காட்சி சாலையில் வாசல் கதவை அடைத்துப் பூட்டி விட்டு, டார்ச் விளக்குகளோடு நாலு காவலாளிகள் கூட நடந்து வர, சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, கொரில்லா இப்படி ஒவ்வொரு விலங்காக கம்பி வழியே துப்பாக்கியால் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்ற படுபாவி அந்த வெள்ளைக்காரன்.

காண்டாமிருகத்தையும் நீர்யானையையும் கொல்ல காவல்காரர்களும் துப்பாக்கிகளால் சுட்டார்கள் என்று தகவல். அது மட்டுமில்லை, குட்டி யானையோடு அம்மா யானையையும் சேர்த்து மத்தகத்தில் குறி பார்த்துச் சுட்டுக் கொன்ற பாதகன் அவன்.

மிருகக் காட்சி சாலை உள்ளே இருந்த கவரிமான், புள்ளிமான் என்று அத்தனையையும் வேனில் ஏற்றித் தூக்கிப் போய் அடுத்த ஒரு மாதம் எல்லா வெள்ளைக்காரன் வீட்டிலும் மான்கறி, சமைத்து, கபாலத்திலிருந்து கொம்பு முளைக்கும் அளவு தின்று தீர்த்ததாகத் தகவல் வந்தது.

குரங்குகள் மட்டும் தப்பித்து திருப்பதி பக்கம் ஓடி விட்டதாக நிம்மதி தரும் செய்தியும் வந்தது.

இந்தக் கொலைகாரனுக்குக் கொஞ்சமும் குறையாத இன்னொரு பாபாத்மா காரில் தினசரி வரப் போகிற இன்னொரு தடியன். இவன் மெட்றாஸ் தெருவில் அலைந்த லைசன்ஸ் இல்லாத நாய், கிழட்டு மாடு, வழி தவறிய வெள்ளாடு என்று எல்லா மிருகங்களையும் வர்ஜாவர்ஜமில்லாமல் கொன்று, மிருகக்காட்சிசாலை சிங்கத்துக்கும் புலிக்கும் அந்த மாமிசத்தைச் சாப்பிடப் போட்டவன். நாய் மாமிசம் சாப்பிடுகிற வன விலங்குகள் மதறாஸில் தான் இருந்திருக்கும்.
யானையும் காண்டாமிருகமும் மாமிசம் தின்னாது என்று யாரோ சொல்ல, யுத்தகாலத்தில் கிடைக்கிறதை வைத்துத்தான் ஜீவிக்க வேண்டும் என்று யானைக்கு புத்தி சொன்ன அபூர்வ புத்திசாலி இவன்.

“சாமிகளே, கோட்டைக்கு வந்தாச்சு. கொடி பிடிச்சு நடந்து போங்க”,

பிள்ளையார் ஓரமாக நிறுத்தினார். ஓரக் கண்ணால் பார்த்தேன். இரண்டு மூன்று உத்தியோகஸ்தர்கள் போகிற போக்கில் அலட்சியமாக என்னைப் பார்த்து மூக்கைச் சிந்தி எறிந்து சுவரில் விரலைத் துடைத்துப் போனமாதிரி இருந்தது. நான் இறங்க முற்பட்டேன்.

“சாமிகளே, இந்தாங்க, கையெழுத்து போடுங்க” என்ற் ஒரு நூறு பக்க நோட்புக்கை நீட்டினார் ஆறுமுகத்தா பிள்ளை.

“கையெழுத்தெல்லாம் போடணும்னு யாரும் சொல்லலே. தினம் காலையிலே ஆபீஸ் வர கார் அனுப்பறோம்னு தான் பேச்சு அண்ணாச்சி” என்றேன்.

“அதை எனக்குச் சொல்லலியே, தம்பியாப்பிள்ளே. துளசிங்க முதலியார்வாள் நேத்து கார் சாவியைக் கொடுத்தபோதே நோட்டுப்புத்தகம் வாங்கி அதையும் சேர்த்துத்தான் கொடுத்தார்.

தினம் என்ன என்ன செய்யணும்னு வேறே சாங்கோபாங்கமா சொல்லியிருக்கார்”, பிள்ளையார் வெளியே வந்து எனக்கு முன்னால் கொஞ்சம் ஒதுங்கி மரியாதையாக நின்றார்.
“என்ன என்ன செய்யணும்?”
இன்னிக்கு ஆபீஸ் ஐந்து பத்து நிமிஷம் தாமதமாகப் போனால் பரவாயில்லை. துரை காலைக் கழுவிக் குடிக்கிற இவர்களாச்சு, நானாச்சு.. துளசிங்கம் முதலியார் போன ஜன்மத்தில் இருந்து ஜூனியர் குமாஸ்தாவாகவே இருக்கப்பட்டவர். அவர் என்னை அதிகாரம் செய்வதாவது.

”காலையிலே டெப்போ போகணும், கவுர்மெண்ட் காரெல்லாம் ட்ராம் கார்களோட தான் நிப்பாட்டி வச்சிருக்கு. டிப்போவிலே இருபத்திநாலு மணி நேரமும் காவல் இருக்கும்கறதாலே பாதுகாப்புன்னு இந்த ஏற்பாடு. போய் காரைத் திறந்து சீட், ஸ்டீரிங்க், ப்ரேக் எல்லாம் இருக்கா, அததோட இடத்தில் அதது இருக்கான்னு செக் பண்ணனும். இஸ்பிரிட்டு இருக்கான்னு டேங்கைத் துறந்து பாத்துக்கணும்.”

“இஸ்பிரிட்டா?”

”ஆமா இல்லாட்டி பெட்ரோல் ஐயங்கார் பம்புலே போய் போட்டுக்கிட்டு சீட்டு வாங்கிட்டு வந்துடணும். அப்புறம் அதை ட்ரஷரியிலே கொடுத்துட்டு வந்தா போதும். ஐயங்காருக்கு காசு போயிடும்”..

இன்னும் இருக்கிறது என்று கையமர்த்தித் தொடர்ந்தார் –

”இஸ்பிரிட் இருந்தாலும் இல்லேன்னாலும் சீட் கீழே, பானட் உள்ளே, டாங்கு ஓரம், பின்னாடி டிக்கியிலே எல்லாம் தரோவா செக் பண்ணிடணும். வெடி குண்டு, குடுக்கை ஏதும் இருந்தா உடனே பக்கத்துலே போலீஸ் ஸ்டேஷன்லே சொல்லணும். அவங்க இருக்கட்டும் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வைக்கலாம். குண்டு இருந்தா, ஆபீஸ் வாசல்லே நிறுத்தி வச்சு பிகில் ஊதி ஆர்ப்பாட்டம் பண்ணி வெளியே எடுக்கவும் செய்யலாம். குண்டு இல்லேன்னு தெரிஞ்சா கார்லே அன்னிக்கும் அடுத்த நாளும் ஒரு கான்ஸ்டபிள் கூடவே வருவார்”.

இதுலே நான் எங்கே வரேன் என்று குழம்பிப்போய்க் கேட்டேன்.

“நீர் இல்லாமலா, கல்யாண மாப்பிள்ளையே நீர் தான்.. தினம் உங்க வீட்டுக்கு வந்து உம்மை வச்சு ஓட்டிப் போகணும். கார் உள்ளாற குண்டு இருந்து வெடிச்சா நம்ம ரெண்டு பேருக்கும் கைலாச பதவி கிடைச்சுடும்.. விஷ வாயு குடுக்கை இருந்தா, எனக்கு ஏதொண்ணும் செய்யாது. மூக்கு வீக்கு எனக்கு. உமக்கு அப்படி இல்லே. ரொம்ப நாசுக்கானது. அப்படித்தான் துரை சொன்னாரு…”

சமய சந்தர்ப்பம் தெரியாமல் எனக்கு பேருவகையும் பெருமையும் ஏற்பட்டது.

பின்னே இல்லேயா? ரத்னா பாய் பொடிபோட்டு பொடி போட்டு என் மூக்கையும் வாசனை பிடிப்பதில் கூர்மையானதாக்கியிருக்கிறாள். ஆனால் இது எப்படி அந்த கேடுகெட்ட ஜூனியர் துரைக்குத் தெரியும்?

”விஷ வாயு இருந்து மூக்கிலே குத்தினா நீங்க உடனே மயக்கம் போட்டுடுவீங்க.. இல்லையோ, நாக்கு தொங்கி மூஞ்சி விகாரப்பட்டு வைகுந்தம் போயிடுவீங்க.. அப்போ நான் ஓரம் கட்டி வண்டியை நிறுத்தி..”.

போதும் என்றேன். நோட்புக் பத்தி சொல்லலியே என்று பிள்ளையாரே தகவல் பரிமாற முன்வந்தார்.
”தினம் நீங்க ஆபீஸ் போய்ச் சேர்ந்ததும், வண்டியிலே குண்டு இல்லே, விஷ வாயு இல்லே.. நான் இன்னிக்கு சவாரி வந்து இன்னும் உயிரோடு இருக்கேன்னு கையெழுத்து போடணும் தேதி போட்டு அதைக் காட்டினால் தான் பெரிய துரை, சின்ன துரைங்க வண்டியிலே ஏறுவாங்க”.

எனக்கு வகைதொகை இல்லாமல் கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். கோபத்தில் சாமியாடி, நாலு நல்ல வார்த்தையைத் துப்பித் தாண்டவம் ஆடலாம் தான். ஆனால் மாதம் பிறந்ததும் சம்பளம் கிடைக்காது. தடித்தோல் இருந்தால் சம்பளம், ப்ரமோஷன், அந்தஸ்து என்று எல்லாம் தானே வந்து சேரும். ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி நீடூழி வாழ்க. கழிந்து விட்டு குண்டி துடைத்துப் போடும் அவருடைய பட்டாளத்தின் கடைக்கோடியில் நிற்கிற இந்த படுபாவிகளும் கட்டுப்பாடில்லாமல் காகிதம் கிடைத்து வாழ்க. இப்படித் துதித்துப் போனால் நானும் ரத்னாவும் திண்டாட்டம் இல்லாமல் ஜீவித்திருக்கலாம்.

பிள்ளையாரே எங்கே கையெழுத்து போடணும்? ஒண்ணு போதுமா?
———————————————————————-
அரசூர் வம்சம் நாவலில் இருந்து

சென்னை – 1850கள்

பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது.

கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே ?

என்ன அய்யர்சாமி சமுத்திரக்கரையை வளைச்சுப்போட்டுக் கல்லுக் கட்டடம் உசரமா எலுப்பி இந்தாண்ட ஒண்ணுலே மூக்குத் தூள் அன்னாண்ட அடுத்ததிலே புகையிலைன்னு வித்துச் சாரட்டுலே ஓடற சொப்பனமா ?

கருத்த ராவுத்தன் கடகடவென்று சிரித்தான்.
————————————————————————————

என் விஸ்வரூபம் நாவலில் சென்னை 1920களில்

1927 மார்ச் 5 அக்ஷய மாசி 21 சனிக்கிழமை

கப்பலில் தெலூக்குஸ் கேபினில் சுகமாக வந்து இறங்கி தரையில் பல்லக்கு பரிவட்டம், போர்டு கம்பேனியாரின் சொகுசான மோட்டார் கார் சவாரி என்று பவனி வருகிற பெரிய மனுஷனாக இருக்கட்டும். அல்லாத பட்சத்தில் நடுவாந்திரமாக சம்பாதிச்சு பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைத்து ஒப்பேற்றி ஆஹான்னும் இல்லாது, ஓஹோன்னும் இல்லாமல் ஜீவிதத்தை நடத்திப் போகிற குமஸ்தனாக இருக்கட்டும். இல்லையோ, தெருவைப் பெருக்கி, அஞ்சு லாந்தரில் எண்ணெய் விளக்கு ஏற்றி விட்டு நடக்கிற வேலைக்கார மனுஷனாக இருக்கட்டும். அட, வேறே எதுவுமே வேணாம், தெருவில், கோவில் குளத்துப் பக்கம் நின்று ரெண்டு சல்லியும் ஒரு சல்லியும் யாசிக்கிற நித்ய யாசகனாகவே இருக்கட்டும். இந்தப் பட்டணத்தை ஒரு தடவை வந்து தரிசித்தாலே புளகாங்கிதம் சித்தமாகிறது. இங்கேயே ஏதாவது கொழுகொம்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒண்டிக் கொள்ளச் சொல்கிறது. பட்டிணப் பிரவேசம் செய்து, ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இருந்து விட்டு, என்னத்துக்காகவோ வெளியில் போய் காலம் கடத்தி விட்டு திரும்ப வரும்போது மலைத்துப் போக வைக்கிறது.

பட்டணம் ரொம்பவே மாறிடுத்து.

இன்னும் எத்தனை நூறு நூறு வருஷம் மதராஸ் இருந்தாலும் இந்த வாக்கியத்தை லட்சம் கோடி பேர் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். நானும் சொன்னேன்.

பிராட்வேயிலும் ஐகோர்ட் எதிரிலும் குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஜனத்தொகையை ஏற்றி இறக்கி சலிப்பே இல்லாமல் அததுக்காக ஏற்படுத்திய வழியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.

தலையில் முளைத்த கொம்பு பாதைக்கு மேலே இழுத்த எலக்டிரிசிட்டி கம்பியைத் தொட்டு முன்னாலே செலுத்த தபால்காரன் நடக்கிற வேகத்தில் ஊர்ந்த அவற்றைப் புளி மூட்டை போல நிறைத்துக் கொண்டு அடை அடையாக மனுஷர்கள், ஸ்திரிகள். அலிகள்.

முன்னைக்கிப்போ பெருகியிருக்கிற அதிகமான ஜனம். அதிகமான டிராம் கார்கள். டிராமில் ஏறிப்போக எந்த நேரத்திலும் காத்திருக்கும் கூட்டமும் அதிகம். அவர்கள் துப்புகிற எச்சிலும், சொல்லி மகிழ்கிற சுப வார்த்தைகளும் வெகு திவ்யம். இதெல்லாம் போக, தெருவிலும் அறுபத்து மூவர் உற்சவம் போல வருவானும் போவானுமாக தொடர்ந்து ஆள் நடமாட்டம்.

கொத்தவால் சாவடியில் காய்கறி ஏற்றி இறக்கி வெளியே கட்டி வைத்திருந்த மாட்டு வண்டிகள் ஒரு நூறோ இருநூறோ சாவடியைச் சுற்றி நுகத்தடியை மேலே ஓங்கிக் கொண்டு ஒயிலாக நிற்கிற காட்சியும், சாவடிக்குள்ளே கடை கடையாக காயும் கனியும் கிழங்கும் இறக்கி விட்டு நடக்கிற கூலிகளின் புளித்து நாறும் வசவும் இருபது வருஷத்துக்கு முன்னால் அனுபவப்பட்டதை விட இன்னும் மோசமாகப் போயிருந்தது. சுதேசித் துணிப் பையில் ராட்டினமும், மகாத்மா காந்தியும் எழுதின படத்தோடு சாவடிக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து டிராமுக்காகக் காத்திருக்கும்போது அந்தப் பையெல்லாம் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.

கண்ணில் தட்டுப்படுகிற கடையில் பத்துக்கு ஒண்ணாவது சாப்பாட்டுக் கடை. அதிலும் பிராமணாள் ஹோட்டல்களே அதிகம். மைசூர் ஓட்டல், உடுப்பி ஓட்டல் என்று கன்னடக் காரர்களோ அவர்கள் பெயரை திருடிக் கொண்டு உள்ளூர் குப்பன்களோ ஊர் முழுக்க உப்புமா கிண்டிப் போட்டுக் காப்பி கலந்து கொடுத்து காசை வாங்கி வாங்கிக் கல்லாவில் ரொப்பிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.

இந்த டிராமில் எது எங்கே போகும்? டெர்மினஸ் என்று பலகை எழுதின வண்டிகள் எங்கே இருந்து வருது, எங்கே போகிறது என்று ஒரு மண்ணும் புரியவில்லை. யாரையாவது கேட்கலாம் என்று யோசிப்பு. ஒரு மாச தாடியும், கடல் காற்றில் உலர்ந்து பொருக்குத் தட்டிப் போன உடம்புமாக நான் முன்னால் போய் நின்றால், குப்பாயத்தில் தடவிப் பார்த்துவிட்டு சில்லறை இல்லை என்பான்கள் தடியன்கள். நான் உடுத்தி இருந்த வஸ்திரமும் சொல்லும் தரத்தில் இல்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன