இம்மானுவல் பெத்ரோவுக்குக் கிடைத்த பதவி உயர்வு 1605

வேகமாக வளர்ந்து வரும் மிளகு நாவலில் இருந்து –

பதவி உயர்வு கிடைத்ததும் பெத்ரோ ஜெரஸோப்பா நகரில் ஒரு அலுவலகம் திறந்தார். ஹொன்னாவர் ரதவீதி மாளிகை பார்க்க வருகிறவர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது அதற்கு முக்கியக் காரணம்.

ஒரு மாதம் முன் அவுத் என்ற லக்னோ, கல்கத்தா, திருச்சிராப்பள்ளி, திருவனந்தபுரம் நகர போர்த்துகீசிய பிரதிநிதிகள் ஒரே நாளில் வந்து சிரமமாகி விட்டது.

பகலில் ஆளுக்கு ஒரு குரிச்சி, கூட வந்தவர்களுக்கு வாசலில் பாய் விரித்து இடம் என்று ஏற்பாடு செய்ய, வீடே கல்யாண வீடு மாதிரி கோலாகலமாக இருந்தது.

ராத்திரி பெத்ரோ படுக்கையை லக்னோ பிரதிநிதியோடும், திருச்சி பிரதிநிதியோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிப் போனது. கஸாண்ட்ரா ஏக்கமும் சிருங்காரமுமாக பெத்ரோவைக் கண்ணுக்குள் பார்த்தபடி வீடு போக, லக்னோ பிரதிநிதியின் முழு இரவும் தொடர்ந்த அபானவாயு பேரொலியும், திருச்சி பிரதிநிதி மணிக்கொரு தடவை மூத்திரம் போக எழுந்து போய் வந்ததும் வெகு தொந்தரவாகி விட்டது.

பெத்ரோவுக்கு. ஹொன்னாவர் மாளிகை வசிக்க, ஜெருஸோப்பா அலுவலகம் வேலை பார்க்க என்று ஏற்படுத்திக் கொள்ளத் திட்டம். என்ன ஆனதென்றால் இரவு வெகுநேரம் அலுவலகத்தில் அதாவது ஜெரஸோப்பாவில் சந்திப்பு, லிகிதம் வாசிக்க, எழுத என்று செலவிட்டு நடு ராத்திரிக்கு வீடு திரும்ப ஹொன்னாவருக்குப் போகக் கிளம்பினால், சாரட் ஓட்டி, சிப்பந்தி, குதிரை எல்லாரும் எல்லாமும் உறக்கத்தில்.

நடு ராத்திரிக்கு கொள்ளைக்காரர்கள் சுற்றுவது உண்டோ இல்லையோ, காட்டு விலங்குகள் ஜெரஸோப்பாவுக்கு வெளியே சுற்றுவதைப் பலபேர் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

லிஸ்பனில் சீராகத் தொடங்கி, மாட்ரிட்டில் நல்ல கல்வியும் பழக்க வழக்கங்களும் சேர்ந்த ஆளுமையாக உருவாகி, மிர்ஜான் கோட்டையிலும் ஹொன்னாவரிலும் ராஜதந்திரம் கற்று தலைமை பிரதிநிதியாகப் பதவி உயர்வும் பெற்றிருப்பது சிறுத்தைப் புலி வாயில் சிக்கிச் சின்னாபின்னப்பட இல்லையே.

எனவே ஜெர்ஸோப்பா அலுவலகத்திலேயே ஒரு நாள் உறங்க வேண்டி வந்தது.

மேஜைகளை இழுத்துப் போட்டு துணிகளைக் குவித்துத் தலைமாட்டில் தலையணை போல் வைத்து கொசுக்கடிக்கு நடுவே அவர் தூங்குவதாகப் பெயர் பண்ணி அடுத்த நாள் அப்படியே வேலையைத் தொடர வெகு சங்கடமானதாகப் போனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன