Eighteen times sixteenபதினாறாம் வாய்ப்பாடு

செந்தில் என்ற செந்தில்நாதன் எங்க ஆபீஸ் பையர். நால்பத்தஞ்சு வயசு கடந்தும் இன்னும் office boy தான். அதிலும் சகல் விதமான காகிதத்தையும் விழுங்கி, சீவல் பேப்பர் தயாரிக்கிற டாக்குமெண்ட் ஷ்ரெட்டர், போட்டோ காப்பியர்-பிரிண்டர் போன்ற மின்னணு சாதனங்களை இயக்க இன்னும் அவரை யாரும் ஏவுவதில்லை. ‘பாவம் அதெல்லாம் தெரியாது’ மனுஷன். எல்லா டேபிளிலும் தண்ணீர் பாட்டில் வைக்கிற காரியத்தை மனமுவந்து செய்வார் தினம் தினம்.

ஆபீஸ் கஃபேட்ரியாவில் நான் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது செந்திலும் மற்ற ஆபீஸ் பாய்களும் காலை உணவில் மும்முரமாக இருந்தார்கள்.

ஒண்ணே கால் காணி.. அப்படீன்னா..

செந்தில் தான். சரியாக சதுர அடி, ஏக்கர், சதுர மீட்டர் என்று காணியின் அளவை சொல்லிக் கொண்டிருந்தார். போன மாதம் என் நண்பர் ஒருவர் அவசரமாக டெலிபோனில் கேட்ட விவரம். நான் இந்த உலகத்து மற்ற ஜீவராசிகள் போல் கூகிளில் தேடித்தான் அவருக்குத் தகவல் அறிவித்தேன்.. இங்கே, தினசரி துடைக்க அல்லாமல் வேறு எதற்கும் கம்ப்யூட்டர் பக்கமே போகாத செந்தில் அடித்து விளாசிக் கொண்டிருக்கிறார்.

பெரிசு கணக்குலே புலி சார்.

நான் அவர்களின் உரையாடலைக் கவனிப்பதைப் பார்த்த இன்னொரு ஆபீஸ் பையன் சொன்னார் (ன் – ர் தான் – இலக்கணப்படி தப்பு, சமூக நாகரீகப்படி சரி).

பதினாறாம் வாய்ப்பாடு ஒப்பிப்பீங்களா?

நான் சிரித்தபடி கேட்டேன். எனக்கு பதினொரு பதினாறு, பனிரெண்டு பதினாறு எல்லாம் வராது.. எதோ பத்து பதினாறு நூற்று அறுபது வரை சமாளிப்பேன்.

பெரிசு பவ்யமாக எழுந்து நின்று இருபது பதினாறு வரைக்கும் சொன்னார். அதற்கு மேலும் கூடப் போயிருப்பார்..

சார், நீங்க ஏதாச்சும் டேட் கொடுங்க.. சுத்தமா என்ன நாளுன்னு சொல்வார்.

இன்னொரு ஆபீஸ் பையன் குறுக்கிட்டார்.

இருபத்தெட்டு ஆகஸ்ட் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூணு என்ன கிழமை செந்தில்?

நான் சட்டென்று கேட்டேன். எனக்குத் தெரிந்த தேதியோடு கூடிய ஒரே கிழமை.

பத்து செகண்ட் எதிர்ச் சுவரை வெறித்து விட்டு செந்தில் சொன்னார் –
‘வெள்ளிக்கிழமை சார்’.

மிகச் சரியான பதிலுக்காக நீங்களும் வென்றது ஒரு கோடி ரூபாய். இருந்தால் அட் சோர்ஸ் வரி பிடித்துக் கொண்டு கொடுக்கலாம்.

செந்தில் தோளைத் தட்டி பாராட்ட மட்டும் முடிந்தது. அடுத்த நாவலில் தேதி -நாள் கணக்கை சரிபார்க்க செந்தில் உதவியை நாடலாம்…

ஆமா, நீங்க என்ன உத்தியோகத்திலே இருக்கீங்க? பதினாறாம் வாய்ப்பாடு தெரியுமா? எங்கே, பதினெட்டு பதினாறு என்ன சொல்லுங்க பார்க்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன