யந்திரம் நிறுத்த வந்ததாக சோசியக்காரர் சொன்ன படிக்கு

வாழ்ந்து போதீரே = அரசூர் வம்ச நான்கு நாவல் தொகுதியில் நான்காவது – அதிலிருந்து அடுத்த சிறு பகுதி


அங்கே, நம்ம ஊரில், ஜோசியக்கார அய்யர் யந்திரம் நிறுத்தறேன், தேவதையை பிரதிஷ்டை செய்யறேன் என்று ஊர் சௌக்கியப்பட ஏதோ செய்கிறதாக வராகன் தட்சிணை வாங்கினால், இங்கே அதே தரத்தில் இருக்கப்பட்ட மனுஷர்கள் பாயசம் விற்றுக் காசு பார்க்கிறார்கள் போல. அதை வசூலிக்கிற வகையில் இந்த குட்டையனும் நெட்டையனுமான பனியன் சகோதரர்களும் கூடுதல் வருமானம் தேடுகிறார்களோ. நடக்கட்டும்.

 

குப்பாயத்தில் இருந்து ஒரு வெள்ளிக் காசை தாராளமாக எடுத்துப் போட்டார் ராஜா. இன்னொரு வராகனோ நாலைந்து தங்கக் காசுகளோ அவர்களுக்கு தரலாம் தான். வந்ததும், வினோதமெல்லாம் கண்டதும் நல்லபடி முடிந்தால் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பு. அவர் மனதை சிரமமின்றிப் படித்த பனியன் சகோதரர்கள் ஏதோ நிச்சயம் செய்த மாதிரி ஒரே நேரத்தில் தலையைக் குலுக்கிக் கொண்டார்கள். காணாது கண்ட சந்தோஷச் சிரிப்பும் பொங்கி வழிந்தது அவர்கள் முகத்தில்.

 

யந்திரம் நிறுத்த சிலாக்கியமான இடம்.

 

பின்னால் குரல் கேட்டுத் திரும்பினார் ராஜா. அரண்மனை ஜோசியர்.

 

இந்த அய்யரையும் கூட்டி வந்தாகி விட்டதா? என்ன கண்றாவிக்கு? எப்படிக் கூட்டி வந்தார்கள்? எப்போது?

 

மகாராஜா மன்னிக்க வேணும். சமூகம் வண்டியில் ஏறினதுமே அசதியில் உறங்கியாச்சு. அதான் கேட்க முடியலே. முன்னாடி நிறைய இடம் சும்மா தானே கிடக்கு, நானும் வரேனேன்னு கேட்டார் சோசியர் அய்யர்.

 

அவரும் காசு கொடுத்துத்தான் நூதன வண்டியில் தொத்திக் கொண்டு வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குப் புரிந்த போது இன்னொரு குரல் –

 

நானும் தான் வந்திருக்கேன். உன் பக்கத்துலேயே தான் உக்கார்ந்து வந்தேன்.

 

ஆச்சரியத்தோடு ராஜா நிமிர்ந்து பார்க்க, மாமனாரான புஸ்தி மீசைக் கிழவன் வழுவழுவென்று ஏதோ பச்சையும் மஞ்சளுமான துணியில் தைத்த பாதிரி உடுப்பும், முன்னால் வளைந்த அழகான பிரஞ்சு தேசச் சப்பாத்துமாக நரை மீசையைத் தடவிக் கொண்டு குதித்துக் குதித்து நடந்து வந்தான்.

 

மாமா, நீங்க எப்ப வந்தாப்பலே?

 

உபசாரத்துக்காகக் கேட்டார் ராஜா.

 

வங்காப்பய, நாம எங்கே போனாலும் பிடரியிலே மோந்துக்கிட்டு பின்னாடியே வந்துடறான் என்றது மனது. இந்த நூதன வாகனக் களவாணிகள் தான் கிழவனையும் சொகுசாக வண்டியில் உட்கார வைத்தோ, மேலே தாம்புக் கயிற்றால் கட்டிக் கிடத்தியோ இட்டு வந்தார்களா?

 

உருட்டி விழித்து பனியன் சகோதரர்களை ராஜா பார்க்க, அவர்கள் எங்களுக்கும் இவர் வந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உடனடியாகப் பார்வையால் வெளிப்படுத்தினார்கள். கிழவன் திடுமென்று தாண்டிக் குதித்துப் பிரவேசம் செய்ததில் அவர்களுக்கே ஆச்சரியம் என்றும் அந்தப் பார்வை சொன்னது.

 

கூத்து நடக்குன்னு சொன்னாப்பல. அதான் செத்த நேரம் இருந்துட்டுப் போகலாமேன்னு கிளம்பி வந்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன