குறுநாவல் ‘விஷம்’ காற்றாடிகளும் கணினி மொழிகளும் கணக்குத் தணிக்கையும் குண்டூசி வாங்கியதும்

அங்கிள், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா?’

 

சூழ்நிலையின் கனம் எனக்கு மெல்ல உறைக்க ஆரம்பித்தது. இது நடுராத்திரி நாடகம். போத்தி என்ற பிராந்தன். அவனும், அவனுடைய, என்னை விட உயரமான, மீசை முளைக்கிற ஆரம்பிக்கிற பையனும் நானும் மட்டுமே பாத்திரங்கள். இதில் ஒன்று குறைய ஆரம்பிக்கும் முன் செயல்பட வேண்டும். என் கம்ப்யூட்டர் அறிவும், தமிழ் நாவல்களில் பெண்ணின் அங்க வர்ணனைகள் பற்றிப் பதினெட்டுப் பேரோடு உரத்த சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்கிற கனவான்ரக விசாரங்களும், ரஞ்சனாவைக் கெட்ட வார்த்தைக் கதைகள் சொல்லிக் கன்னம் சிவக்க வைத்துக் காதலிக்கிற எதிர் கனவான் ரகத் தோரணைகளும், இங்கே கை கொடுக்காது.

 

போகிற உயிரைப் பிடித்து நிறுத்த ஒரு டாக்டர் தேவைப் படுகிறார். அவரிடம் கொண்டு சேர்க்கிற உதவியைச் சின்னப் பையன் யாசிக்கிறான்.

 

‘தெருக் கோடியில் போய் த்ரீவீலர் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து வாயேன்’

 

நான் திரும்ப யாசிக்கிறேன்.

 

‘வேண்டாம் அங்கிள்.. இந்த நேரத்தில் கிடைக்காது. உங்கள் காரிலேயே போகலாமே?’

 

பெரியவர்கள் தட்டிக் கழிக்க முற்படும்போது பையன்கள் பெரியவர்கள் ஆகிறார்கள் என்று ஜென் குருமார்கள் பீங்கான் பாத்திரங்களில் சிறிய மீனும் அரிசியும் சேர்த்துச் சமைத்த உணவு அருந்தியபடிக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

 

காரை வெளியே எடுத்து நிறுத்தி விட்டு ஹாரன் அடித்தேன். பையன் மேலே இருந்து எட்டிப் பார்த்துக் கூப்பிட்டான்.

 

நான் போனால்தான் போத்தியைக் கீழே இறக்க முடியும்.

 

கைத்தாங்கலாக, அதாவது முக்காலே மூணு வீசம் சுமந்து கொண்டு, இரண்டு மாடி இறங்கி, அவனைப் புளி மூட்டை போல பின் சீட்டில் அடைத்தபோது மணி பன்னிரெண்டு அடித்து பதினைந்து நிமிஷம்.

 

 

அத்தியாயம்3

 

 

கார் டிபன்ஸ் காலனி ஃப்ளை ஓவரைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கிறது. பின் சீட்டில் போத்தி ஏறக்குறையப் படுத்த நிலையில். என் பக்கத்தில் அவன் பிள்ளை. வெளியே நல்ல பனிமூட்டம். அதோடு ஒரு பயமும் கூடிக் கவிகிறது. சாவு பற்றிய பயம்.

 

நான் நேரடியாகச் சம்பந்தப்படாதவரை எந்தச் சாவும் சஞ்சலமடைய வைக்கிறதில்லை. அது ஒரு தகவல் அறிவிப்பாளனுக்கு நிமிஷ நேர முக்கியத்துவத்தைத் தரக் கூடியது.  போன வாரம் கரக்பூரில் இருந்து ரஞ்சனாவின் மாமா பிள்ளை வந்திருந்தான். விண்ட்மில்கள் என்ற ராட்சசக் காற்றாடிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறான். நானும், அவனும், பாதுகாப்பு அமைச்சரகத் தணிக்கைத் துறையில் குப்பை கொட்டி ரிடையர் ஆன அவன் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தோம்.  உலகத்தில் கம்ப்யூட்டர்களையும், விண்ட்மில்களையும், கணக்குத் தணிக்கையையும் தவிர வேறே எல்லா இயக்கமும் அஸ்தமித்துப் போனது. விண்ட்மில்கள் சுழலச் சுழல, பீகார் கிராமங்களில் பம்ப் செட்டு மோட்டார்கள் தண்ணீரை இறைத்துப் பொழிய,  பள்ளிக்கூடங்களில் சி பிளஸ் பிளஸ் மொழியில் கம்ப்யூட்டர் புரகிராம் சிலேட்டில் எழுதும் இளஞ்சிறாரைப் பார்த்து உலகம் வியக்க, பாதுகாப்பு அமைச்சரகம் கடைசியாக வாங்கிய ஒரு டப்பா குண்டூசியும் தணிக்கையில் விவாதிக்கப் படுகிறது. இப்படியே உலகம் நேராகப் போய்க் கொண்டிருந்தால் ஆபத்து என உணர்ந்தவளாக ரஞ்சனா தேநீர்க் கோப்பைகளுடன் வந்து, அழகியல் உணர்ச்சி இல்லாத, தொழில் மயமான உலகத்தின் அபாயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். எல்லோரும் முயன்று கொண்டிருந்தோம் ஒருவரை ஒருவர் இம்ப்ரஸ் செய்ய. நான் சூட்சும சரீரியாக வெளியே போய், யாரோ மிகப் பெரிய தலைவர் இறந்து போன செய்தியுடன் உள்ளே வருகிறேன். இவர்கள அறிந்திராத தகவலை, இவர்கள் நேரடியாகப் பாதிக்கப் படாததால் சுவாரசியமும் பரபரப்பும் ஏற்படுத்தப் போகிற தகவலை முதன்முதலாக அறிவிக்கப் போகிறவனாக என்னை உணர்கிறேன். ‘உங்களுக்குத் தெரியுமா’? அரங்கத்து ஒளி வெள்ளம் எல்லாம் என்மேல் பாய, நான் அந்த நிமிட முக்கியத்துவத்தை அடைகிறேன். தகவலைப் பகிர்ந்து கொள்கிற ஆவல் கண்களில் மினன, வியர்வை, வாய் நாற்றம்  போன்ற ‘குறைந்த அளவு சமூக தூரம்’ சங்கதிகள் பற்றிக் கவலைப்படாமல் என்னை அடுத்து வந்து எல்லோரும் கேட்கிறார்கள் .. அப்புறம் ராமு.. அப்புறம்?

 

‘போகலாமா அங்கிள்?’

 

பையனின் வாக்கியத்தில் கடைசிப் பகுதி மட்டும் கேட்கிறது. எங்கே போகலாமா?

 

சப்தர்ஜங் ஆஸ்பத்திரி.

 

நான் ரிங்க்ரோடில் காரைத் திருப்பினேன்.

 

‘டாடிக்கு ஒண்ணும் ஆகிவிடாதே’

 

சின்னப் பையன் கேட்கிறான். உள்ளபடிக்கே பதினைந்து வயதுக்காரன் ஆன அவன்  ஆனதால், நான் அவனை விட உயரமாகிறேன். பின்னால் திரும்பி போத்தியைப் பார்க்கிறேன். கீழே சரிந்து கிடக்கிறான். வேற்றாள் உபயோகித்த டாய்லெட்டில் நுழைந்ததுபோல் காரில் நெடி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன