New : நாவல் பிறந்த கதை – அரசூர் வம்சம்

அந்திமழை ஜனவரி 2022 இதழில் பிரசுரமானது

நாவலுக்குப் பின்னால் – அரசூர் வம்சம்             இரா.முருகன்

எண்பதுகளின் தொடக்கத்தில் இலக்கியப் பத்திரிகைகளில் புதுக் கவிதை எழுதிக் கொண்டிருந்த நான் எண்பதுகளின் இறுதியில் வெகுஜனப் பத்திரிகைகளில் சிறுகதை எழுதத் தொடங்கியதற்கு தில்லியில் இருந்து சென்னைக்கு உத்தியோக மாற்றலாகி வந்ததுதான் முக்கியக் காரணம்.

தில்லியைப் போல் வார இறுதியில் கூடி இருந்து பியர் குடிக்க முடியாத  சென்னையில் அப்போது ஒரே ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயந்திர பொழுது போக்கு, அரசாங்க சானலில் வந்த தமிழ் சினிமா தான். ஒரு அருதப் பழைய திரைப்படத்தை பார்த்தபடி நான் ஞாயிற்றுக்கிழமை மாலையில் மனதுக்குள் எழுதிய சிறுகதை அம்பி.

1930-களில் ஒரு சிறு நகர சிறுவன் மூத்த சகோதரியின் மரணத்தை எதிர்கொள்ளும் கதையில் வந்த அம்பி என் அப்பாதான். கதை எழுதும்போது மனக் கண்ணில் நான் பிறந்தே இராத 1930-களின் உலகம் நுணுக்கமாக விரிந்தது.

அப்போது உயிரோடு இருந்த அப்பா கதையைப் படித்து விட்டு சொன்னார் – ”நான் உனக்கு இதெல்லாம் சொன்ன நினைவே இல்லையே. எப்படி எழுதினே அச்சு அசலா என் பக்கத்துலே இருந்து பார்த்த மாதிரி”.

நான் ஈசி சேரில் இருந்த அவர் அருகில் போய் கையைப் பற்றிக்கொண்டு சொன்னேன் – ”அப்பா நீங்க சொல்லலே, நான் கேட்கலே. ஆனால் அந்த குடும்ப வரலாறு உங்க கிட்டே இருந்து எனக்கு மரபணுக்களில் எழுதிக் கடந்து வந்திருக்கு”.

அப்பா ”போடா உளறாதே” என்றார். ”இந்த ஊர் மட்டுமில்லை, தேவகோட்டை அருகே அரசூருக்கும், கேரளத்தில் குட்டநாட்டு அம்பலப்புழைக்கும் நம்ப குடும்ப சரித்திரத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கு, தேடிப் பார். நீ நம்பவே மாட்டே”.

அந்த வரலாற்று நினைவில், ஆறு மாதத்தில் அமைதியாகக் காலம் சென்றார் அவர்.

அப்பா மறைவுக்கு அப்புறம் லண்டன் போயிருந்தேன் பணி நிமித்தமாக. அங்கே அலுவலக நிர்வாகியான ஜெஃப் மக்கன்ஸியோடு காரில் ஒரு மாலைப் பொழுதில் தங்குமிடம் கிளஸ்டர் ரோடு திரும்பிக் கொண்டிருந்தபோது பிக்கடலி வீதியில் ஒரு பெரிய கடை அருகே காரை பார்க்கிங் கட்டணம் செலுத்தி நிறுத்தி உள்ளே போனோம்.

இதமான, மூக்கைக் குத்தும், சாக்லெட் மணம் கொண்ட இன்னும் ஏதேதோ வாடைகளில் புகையிலை விற்கும் கடை அது. என்னால் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை.

”தாங்கலே ஜெஃப் இந்த வாடை. நான் வெளியே போறேன்” என்று வெளியே வந்தபோது ஜெஃப் கேட்டார் – ”இந்த வாடையிலே நாள் முழுக்க இருந்து புகையிலை விக்கறாங்களே அவங்களை நெனச்சுப்பாரு. அதைவிடவா ஒரு நிமிட வாடை? நாலு தலைமுறையா புகையிலை விக்கற குடும்பக் கடை” என்றார் ஜெஃப்.

”என்னோட பத்து தலைமுறை புகையிலை கிட்டேயே போகாதவங்க” என்று பெருமையோடு சொன்னேன்.

இந்தியா திரும்பி என் சின்னப் பாட்டியிடம் லண்டன் புகையிலைக் கடைக்குள் நுழைந்த அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்த போது அவள் சொன்னது –

”புகையிலை தெய்வம்டா நமக்கு. மூணு தலைமுறை புகையிலை வித்தவங்க நாம். அம்பலப்புழையிலே கடை வச்சிருந்தது. என் அக்கா, அதுதான் உங்க பாட்டி, நான் ரெண்டு பேரும் புகையிலைக்கடை குடும்பத்துலே கடைக்குட்டி பெண்கள். அப்புறம் உங்க அப்பா தலைமுறை பேங்க் வேலைக்காரங்க ஆகிவிட்டாங்க”.

ஜெஃப் லண்டனில் சிரித்தது என் மனச் செவியில் கேட்டது.

இதை எல்லாம் கலந்து என் சொந்த சரித்திரத்தை நான் எழுத ஆரம்பித்தபோது ஆலப்பாடு வயசன் என்ற முதியவர் கதைக்குள் நுழைந்தார். வயது அதிகமாகி, சிறுநீர் எங்கே போகணும் என்று தெரியாமல் வீட்டுக்கூடத்தில் கழிக்கிற மனப் பிறழ்வு உள்ள ஆலப்பாட்டு கிராம கிழவரை அரசூர் வம்ச கூட்டுக் குடித்தன வீட்டில் நுழைத்தால் அவர் அசுத்தம் செய்ததை சுத்தப்படுத்தத்தான் கதையாடல் நீளும்.

அது சரிப்படாது என்று அவரை கொஞ்சம் போல் பறந்து கொல்லைக்கு மிதந்து போய் குந்தியிருக்க வைத்தேன்.

அது இருக்கட்டும். என் வேர்களைத் தேடி அம்பலப்புழை போனபோது நல்ல மழைக்காலம். ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் அருகே வரிசையாக அமைந்த பழையகால மனைகளில் எங்கள் புகையிலைக் குடும்பத்தை அறிந்தவர்கள் யாருமில்லை.

ஒரு மனையில் பாக்கு இடித்து தாம்பூலம் தயார் பண்ணிக்கொண்டிருந்த நம்பூதிரி குடும்ப மூதாட்டி ஒருத்தி நாலாவது மனையில் தமிழ் அந்தணர் குடும்பம் ஒன்று வெகுகாலம் முன் இருந்ததாகவும் அவர்கள் வீட்டுக் கிழவர் ஹடயோகம் பயின்று தண்ணீர்மேல் நடக்க முயன்றதாகவும், முக்காலியைப் போட்டு மேலே ஏறி நின்று பறக்க முயன்றதாகவும் சொன்னாள்.

ஆலப்பாடு வயசனுக்கு ஹடயோகம் சரிப்படாது. செய்தால் ஜலதோஷம் தும்மல், சளியோடு வந்து சேரும்.

’சில நூறு வருடம் மூத்த குருக்கள் மகளோடு ஆவிபோகம் செய்யும் அரசூர் குடும்பத்து இளைஞன் சாமிநாதன் எப்படி அதைச் செய்தான்’ என்பது நான் பங்கெடுக்கும் அரசூர் வம்சம் ஆய்வுக் கூட்டங்களில் தவறாமல் கேட்கப்படுவது. பதில் இதுதான் – அவன் முழுக் கற்பனை. கூடா ஒழுக்கமாக வயதிலும், உறவிலும் அங்கீகரிக்கப்படாத பெண் சிநேகம் கொண்டவன். ஆவியோடு போகம் பண்ணலாம் என்று புறப்பட்டால் முட்டிவலியே மிஞ்சும்.

ஜோசியரிடம் யார் என்ன பிரச்சனை என்று வந்தாலும் யந்திரம் உருவாக்கி அதில் தேவதைகளை கொண்டு நிறுத்தி, நிற்க இடமில்லாமல் அவை சண்டை போட்டுக் கொள்வது, பல மருந்தும் சேர்த்து சகல ரோக நிவாரணி உண்டாக்கி நோயாளிகளுக்குத் தந்து நோய் நீக்க நினைக்கும் அந்தக்கால மருத்துவனின் தொழில் கண்ணோட்டம் பற்றியது.

தேவதைகள்? இருப்பார்கள். மக்களே போல்வராக.

அம்பலப்புழை புகையிலை குடும்பத்தில் பெண் எடுத்து அரசூர் வம்சம் தழைக்கிறது. இதை நிறைவேற்றும்  எட்டு தலைமுறை முந்தைய வாழ்வரசி பெயர் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல்,   எழுதத் தொடங்கியதும் என் மனதிலும் லேப் டாப்பில் சஞ்சரிக்கும் விரல்களிலும் வந்த பெயர் பகவதி.

என் சகோதரி இந்த மூத்த குடிப் பெண்ணை அறிந்த தொண்ணூறு வயசர் ஒருவர் சொல்ல அண்மையில் கூறினாள். ஆமாம், பகவதி தானாம் அவள் பெயர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன